Friday, November 1, 2019

GARUDAPURANAM



 கருட புராணம்     J K   SIVAN 

                                                                            பல வம்சங்கள் 

 அகஸ்திய சம்ஹிதையில் வரும்  கருட புராணத்தை  ஸ்ரீமன் நாராயணனே  சிவனிடம் விலாவாரியாக கூறுவதை தான் நாம் படித்து வருகிறோம். முக்கிய சம்பவங்களை விடாமல் கூடியவரை சுருக்கமாகவே  தருகிறேன்.  நிறைய பெயர்கள் விவரங்கள் நமக்கு தலை சுற்றவைக்கும். இருந்தும் சில விவரங்களை தந்தால் தான் புராணம் சுவைக்கும். தொடர்ச்சிக்கு  உதவும்.
                                                           
தக்ஷப்ரஜாபதிக்கு  24 பெண்கள்.   அவர்கள் பெயர் வேண்டுமா?  இதோ:   1 ஸ்ரத்தா ,2. லட்சுமி, 3.திரிதி  4.துஷ்டி, 5. புஷ்டி, 6.மேதா, 7.க்ரியா, 8. புத்தி, 9. லஜ்ஜா , 10. வபு  11. சாந்தி, 12. ரித்தி, 13.க்ரிதி, 14. க்யாதி,15. சதி , 16.சம்பூதி, 17. ஸ்ம்ரிதி, 18. ப்ரிதி  19 க்ஷமா 20. சௌனதி 21.அனசூயா 22 உர்ஜ்ஜா 23. சுவாஹா, 24. ஸ்வதா.

இந்த லிஸ்டில் நமக்கு முக்கியமானது  15வது  பெண்   சதி . அவளை பரமேஸ்வரன் சிவன்  மனைவியாக கொண்டார்.  தக்ஷன்  அஸ்வமேத யாகம் செய்தான். அதற்கு எல்லா மாப்பிள்ளைகளையும் அழைத்த  தக்ஷன்   சதியின் கணவன் பரமேஸ்வரனை அழைக்காமல் அவமதித்தான்.  சதி  கூப்பிடாவிட்டாலும் தந்தையின் அஸ்வமேத யாகத்திற்கு சென்றாள். அங்கே  அவளையும் சிவனையும்  கடிந்து அவமதித்து அவமானப்படுத்தினான் தக்ஷன்.  சதி அக்னியில் விழுந்து மாய்கிறாள்.   ஹிமவனுக்கும்  மேனாவுக்கும் மகளாக  கௌரி பிறந்து சம்பு வின் மனைவியாகிறாள்.  அவள் புத்திரர்கள்  குமரனும் விநாயகனும்.

சக்திவாய்ந்த மஹரிஷி  பிருங்கி , தக்ஷன் யாகத்தை அழிக்கிறார். அவனுக்கு சாபமிடுகிறார்  ''துருவன் வம்சத்தில் ஒரு மனிதனாக பிறப்பாய்''.   துருவன் வம்சத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்ள   அவசியமாகிறது

உத்தானபாதன் என்ற ராஜா  சுருசி  என்ற மனைவிமூலம்  உத்தமன் என்கிற பிள்ளையையும்  சுனிதி என்பவள்  மூலம் துருவன் என்ற பிள்ளையும் பெறுகிறான். துருவன்  நாராயணனை வேண்டி தவமிருந்து  துருவ நக்ஷத்ரமான கதை நமக்கு தெரியும்.  துருவனுக்கு ஒரு பிள்ளை  ஸ்னிஷ்டி என்று. சக்தி வாய்ந்தவன்.  அவனுக்கு  பிறந்தவன் பிராசினவர்ஹி . அவன் மகன் திவஞ்சயன், அவன் பிள்ளை ரிபு.  அவனுக்கு அப்புறம்  மனு சக்ஷுஷன் . அவன் மகன் ருரு. அவன் பிள்ளை  அங்கன். அவன் மகன் வேனன். அவன் நாஸ்திகன். பக்தி அனுஷ்டானங்கள் இல்லாதவன். ரிஷிகளால் கொல்லப்படுகிறான். அவன்  இடது தொடையிலிருந்து  குள்ளமாக கருப்பாக ஒருவன் பிறக்கிறான்.   உட்கார்  உட்கார்''  என்று ரிஷிகள் சொல்ல அந்த  ஆள்  அமர்கிறான். அவன் பெயர்  அதனால் நிஷாதன். விந்திய மலை மேல் உட்கார்ந்தவன்.  வேனனின் வலது தொடையிலிருந்து ஒருவன் உண்டாகிறான். அவன் தான் ப்ரிது. விஷ்ணு பக்தன்.  அவன் மூலம்  வேனன் விண்ணுலகம் எய்துகிறான். அந்த ராஜா  தான்  பூமியை பால் கறப்பது போல்  கறந்து  எல்லோருக்கும்  ஜீவசக்தி   அளிக்கிறான்.

ப்ரிதுவின் பிள்ளை அந்தர்தானன், அவன் பிள்ளை  ஹவிர்த்தானன். அவன் பிள்ளை ப்ராசீனவர்ஹி இந்த உலகத்தில்  பிரதான  சக்தி உள்ளவனாகிறான்.  சமுத்ரராஜனின் மகளை மணந்து,   பத்து ப்ராசீன வர்ஹிகளை பெறுகிறான்.  அவர்களுக்கு தான்  ப்ரசேதஸ் என்று பெயர். அஸ்திர தனுர் வித்தையில் நிபுணர்கள்.  பத்தாயிரம் வருஷம்  கடலுக்கடியில்  வாழ்கிறார்கள். அவர்கள் மனைவி  மரிஷா .  இந்த பிரசேதஸ்களுக்கும் மரிஷாவுக்கும் தான் தக்ஷன்  பிரிங்கிரிஷியின் சாபம் பலித்து அவள்  மகனாகிறான்.

தக்ஷன் மூலம் பிரஜைகள்  பெருகுகிறது. வருணன் மகள் மூலம் ஆயிரம் பிள்ளைகள். நாரதர் பூமியின்  முடிவு பற்றி உபதேசம் பெற சென்றவர்கள் திரும்பவில்லை.  மேலும் ஆயிரம் பிள்ளைகள் சவலகர்கள் என்று அவர்களுக்கு பெயர்கள். அவர்களும் நாரதரை தேடி போனவர்கள் முதலில் சென்றவர்களைப்போலவே  மறைகிறார்கள்.  நாரதர் மேல் இதனால் கோபம் கொண்ட தக்ஷன் அவரை ''நீயும் பூமியில் பிறப்பாய் என்று சபிக்கிறான். தனது யாகம் அழிந்ததால்  சிவன் மேல் கோபம் அதிகமாகிறது. எதிரியாகவே கருதுகிறான்.

தக்ஷனுக்கு  அசிக்னி மூலம் அறுபது அழகிய பெண்கள் பிறக்கிறார்கள். காஷ்யபர், அங்கிரஸ் , தர்மா, க்ரிஷஸ்வா , இந்து ரிஷி, வஹுபுத்ரர்,   அரிஷ்டநேமி, போன்ற  ரிஷிகளுக்கு அவர்களை மணம்
  செய்விக்கிறான். 

நண்பர்களே, வாசகர்களே, என் மீது அளவு கடந்து கோபமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நான் என்ன செய்வேன். இந்த தக்ஷன் இவ்வளவு பெண்கள் பிள்ளைகளை உற்பத்தி செய்தால்  அதற்கு நான் என்ன செய்யமுடியும்?  நிறைய மாப்பிள்ளைகள், பெண்கள், பேரன்கள் பேர்களையும்  சொல்லாமல் விட்டதற்கு நன்றி கூறுங்கள். 

காஸ்யப ரிஷி மனைவிகள்  அதிதி, திதி, தாணு, காலா, அனயூ , சின்ஹிகா,  முனி, கத்ரு ,ப்ரதா , இரா, க்ரோதா, வினதா, சுரபி, ககா. 

திதி என்பவளுக்கு  ஹிரண்யகசிபு  ஹிரண்யாக்ஷன் என்று ரெண்டு ராக்ஷசபிள்ளைகள்.  ஹிரண்யகசிபுவுக்கு நான்கு பிள்ளைகள்.   அநுஹ்லாதன், ஹிலாதன் , பிரஹலாதன்,  சங்க்லாதன்.  இவர்களில்  பிரஹலாதன்  விஷ்ணு மீது பக்தி கொண்டவன்.  பிரஹலாதனின் பிள்ளை  விரோசனன் , அவன் மகன் மஹா பலி . 
ஹிரண்யாக்ஷன் பிள்ளைகளும் பலிஷ்டர்கள்.  அவர்கள் பெயர்கள் நான் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
ஸ்வர்பானு, வைஸ்வானரன், வ்ரிஷபர்வன், விப்ரசித்தி,மாரீசன்  ஆகியோர் சந்ததிகளை பற்றியும் விரிவாக எழுத போவதில்லை. 

விநதைக்கு ரெண்டு பிள்ளைகள்.அவர்கள்  பெயர்கள்  கருடன், அருணன்.   சுரஸா வுக்கு  ஆயிரம் நாக சர்ப்பங்கள் பிறந்தது.

கத்ருவுக்கு  ஆயிரம் பிள்ளைகள்,   அவர்கள்   படமெடுத்தாடும்  விஷ நாகங்கள். அவர்களில் முக்கியமான பெயர்கள், சேஷன், வாசுகி, தக்ஷகன், ஷங்கன் ,சுவேதன், மஹாபத்மன், கும்வலன் ,அஸ்வதரன்,ஏலபத்ரன் ,நாகன், கார்கோடன், தனஞ்சயன் இன்னும் பலர். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...