Monday, November 25, 2019

SRI VISHNU SAHASRANAMAM



ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN

ஆயிர நாமன் (170-185)

170. மகா மாயா : மாயைக்கே அதிபதியானவன். அவனை மையமாக்கி மாயம் உலகத்தை வசியத்தில் ஆழ்த்துகிறது. விஷ்ணு ஒருவனே மாயையை அடக்கி ஒரு எல்லைக்குள் வைத்திருக்கிறான்.

171. மஹோத்ஸாஹா: ரொம்பவே உத்ஸாகமாக இருப்பவர் விஷ்ணு. எவ்வளவுக்கெவ்வளவு பலமும் சக்தியுமோ அவ்வளவு பொறுமை . பதவிசு. தாயன்பு கொண்ட தெய்வம் விஷ்ணு.

172. மஹாபலா: அளவற்ற பலம் கொண்டதால் தான் எண்ணற்ற ராக்ஷஸர்களை எளிதில் அழிக்க முடிந்தவர். யாருக்காக அழித்தார் ? சாதுக்கள், தீனர்கள் , எளியோர்கள், நல்லவர்கள், ஆகியோர் க்ஷேமத்துக்காக. அல்லவா?

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை எளிதாக புரியும்படி செயது வரும் பணியில் நான் வெற்றிபெற விஷ்ணுவின் ஆசியும் அருளும் பெற வேண்டி தொடர்கிறேன்:

19.மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி:
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் ||

173. மஹா புத்தி: எங்கும் நிறைந்து புத்தியால் காணப்படுபவன்.

174. மஹா வீர்யன்: மிக பலம் வாய்ந்த வீர சக்தி கொண்டவன். எதற்கும் எவருக்கும் ஆதார சக்திமான்

175. மஹா சக்தி: அளவற்ற திறனும் திறமையும் வாய்ந்தவன்.செயல், எண்ணம், அறிவு அனைத்திலும் ஈடற்றவன்.

176. மஹாத்யுதி: அபூர்வ ஒளி படைத்தவன். பலகோடி சூரிய சந்திர நக்ஷத்ரர்களுக்கும் மேலான ''தானே'' ஒளியானவன்.

177. அநிர்தேஸ்யவபு: விவரிக்க முடியாதவன். சொல்லொணா அபூர்வ தன்மைகள் கொண்ட தெய்வம்.

178. ஸ்ரீமான்: சகல எண்ணிலடங்கா ஐஸ்வர்யன் லக்ஷ்மிதரன்.

179. அமேயாத்மா: ஜீவாத்மாக்களால் அறியவொண்ணா பரமாத்மா. ஒவ்வொரு ஜீவனின் உடல் க்ஷேத்ரமாகி அதில் உறையும் க்ஷேத்ரஞன். யாவுமானவன்.

180. மஹாத்ரித்ரிக் : எல்லாவற்றையும் தாங்குபவன். பாற்கடலில் தேவாசுரர்கள் கடையும்போது மந்திரமலையை கடையும் பெரிய மத்தாக்கி, தன்னை

ஆமையாக்கிக்கொண்டு தனது முதுகில் ஆதார பீடமாக மந்திரமலையை மத்தாக தாங்கினவன் . கிருஷ்ணனாக அவதரித்தபோது சிறுவனாக இருந்தும் இடது கை சுண்டுவிரலில் கோவர்தனகிரியை தாங்கியவன். பக்தன் மோக்ஷ சாதனையில் ஈடுபடும்போது கல்வி கேள்வி எனும் மத்தை பக்தியெனும் பாற்கடலில் மனனம் எனும் வாசுகியால் கடையும்போது, மோக்ஷம் எனும் அம்ருதம் தருபவன் விஷ்ணு.

20.மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:

181. மஹேஷ்வாசன்: சார்ங்கதரன் . சார்ங்கம் எனும் மகோன்னதமான வில்லாலை ஏந்துபவர்.

182. மஹீபர்த்தா : பூமித்தாயின் நாயகன்.பூவராஹனாக அவதரித்து பூமியை மீட்டவன்.

183. ஸ்ரீனிவாசன்: ஸ்ரீ எனும் லட்சுமிமாதாவை நிரந்தர வாசி யாக தன்னிதயத்தில் கொண்டவன்

184. சதாம்கதி : சாதுக்களின் பக்தர்களின் லக்ஷியமானவன்.நரர்கள் செல்லும் நற்கதி காட்டும் நாராயண பரகதி.

185. அநிருத்தன்: தடுக்கமுடியாதவன், எதிர்க்கமுடியாதவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...