Sunday, November 17, 2019

ADVICE



இதெல்லாம் கூடாது J K SIVAN

பாலு வருகிறான் என்றால் கண்ணில் படாமல் ஓடுபவர்கள் அதிகம். திண்ணையை காலி பண்ணி வீட்டுக்குள் போய் கதவை தாழிட்டுக் கொண்டு விடுவார்கள். அவனோடு பேசுகிற ஆள் கிடைக்காததால் யாராவது மாட்டிக் கொண்டால் லேசில் விடமா ட்டான்.

அவனைக் கண்டால் ஏன் ஓடவேண்டும்? கையில் கத்தி கபடா ஏதாவது? ''சேச்சே''அது இருந்தால் எவ்வளவோ பரவாயில்லையே. அவன் நாக்கு எனும் பயங்கர ஆயுதம்.

எல்லோரையும் ஒருமையில் பேசுவது, எழுத, சொல்ல, கூசும் அடைமொழி களை பார பக்ஷமில்லாமல் எல்லோ ருக்கும் வாரி அளிப்பது என்பது பிரதான காரணம்
.
அவனை யாரும் தங்கள் சம்பந்தப்பட்ட விசேஷங்களுக்கு கூப்பிடுவதில்லை. மறந்தால் போல விட்டுவிடுவார்கள். எங்கே என்ன பேசுவான், யாரைப் பற்றி என்ன சொல்வானோ, என்கிற பயம் எல்லோருக்கும் அவனை பார்க்கும்போது ஏற்படும்.

அவனிடம் இன்னும் சில பழக்கங்கள்
வாய் நிறைய புகையிலை குழம்பு. ரத்த ஏரி எந்த நேரமும் நிரம்பி கரை உடைத்து உங்கள் சட்டை மேல் இறங்கலாம்... எல்லோரையும் தொட்டு தொட்டு பேசுவான். வீட்டுக்கு அழைத்தால் நேரே சமையல் அடுக்குள் வரை வந்துவிடுவான். மூடி இருக்கும் உணவு பண்டங்களை திறந்து பார்த்து ஏதாவது இருந்தால் கையால் எடுத்து சாப்பிடுவான். அதோடு மட்டுமா? இதில் உப்பு குறைவு, சாம்பார் கெட்டியாக இருக்கவேண்டாமா ? போதுமா??

சினிமா நடிகைகள் நடிகர்கள் அரசியல் வாதிகளின் அந்தரங்க வாழ்க்கை குறிப்புகள் நீங்கள் கேட்காமலேயே யார் அருகில் இருக்கிறார்கள் என்று கூட கவனிக்காமல் சொல்லுவான். அருவருக்கும் சங்கதிகள் சொல்லுவான். தான் அறிந்த அவிஸல் ஜோக்குகள் சொல்வதில் அவனுக்கு நிகர் அவனே. ஒஹோ என்று கோட்டை சிரிப்பு. தானே தனது ஜோக்கை சொல்லிவிட்டு சிரிப்பான்..

எல்லோரிடமும் ஏதோ ஒரு சண்டை. சச்சரவு எப்பவும் இருக்கும். . எவருடனும் ஒத்துப்போகாத ஜென்மம் அவன். அவன் அப்பா வைத்தீஸ்வரன் சீக்கிரமே மாரடைப்பில் மரணடைய இவன் தான் காரணம் என்று ஊரில் பேசிக்கொள் வார்கள்.

ஹெட்மாஸ்டர் பிள்ளை வெங்கிட்டு விஷயம் தெரியாமல் பாலுவைப் பார்த்து பேசிவிட்டான். அப்புறம் என்ன. பாலு போட்ட திட்டப்படி, '' எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்கு போய் விட்டு வரும் வழியில் பங்கஜா விலாஸில் சாப்பிடு வோம். ஆளுக்கு எத்தனை என்று பங்கு போட்டு பில் கட்டுவோம்'' என்று பாலு சொன்னதை நம்பி ஹெட்மாஸ்டர் பிள்ளை நூற்றம்பது ரூபாய் கொண்டு போனான். ஆறு ஏழு பேர் பாலுவோடு வந்திருந்தார்கள். அவர்கள் யார் என்றே வெங்கிட்டுவுக்கு தெரியாது. பாலு சொன்ன ஒப்பந்தத்தை நம்பி எல்லோருக்கும் ராஜா டாக்கீஸில் பால்கனி டிக்கெட் வாங்கி ''MGR படம் ஒன்று பார்த்து விட்டு பங்கஜா விலாஸில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு யாரையும் காணோம் '' வெங்கிட்டு தான் ஆர்டர் பண்ணியதால் சினிமா டிக்கெட் காசு போக பங்கஜா விலாஸ் ஹோட்டல் பில்லையும் சேர்த்து கையில் இருந்த ரூபாய் எல்லாம் போக பாக்கி 21 ரூபாய் மறுநாள் காலை தருகிறதாக ராமுடு அய்யரிடம் சொல்லிவிட்டு தனியனாக வீடு வந்த வெங்கிட்டு அதற்குப்பிறகு பாலுவை பார்க்கவில்லை. ஊரில் பங்கஜா விலாஸ் ஒன்று தான் பெரிய ஹோட்டல். ஹெட்மாஸ்டரின் நண்பன் ராமுடு அய்யர் என்பதால் மானம் கப்பலேறவில்லை.

பின்னர் சில காலத்தில் பாலு தன்னுடைய வித்தைகளை ஒரு அரசியல் வாதி மேல் காட்ட அவன் இவனுக்கு எத்தன் என்பதால் ஏதோ ஒரு கஞ்சா கேசில் பாலுவை சிக்க வைத்து பாலு சில காலம் சிறைவாசம் இருந்தான் என்று கேள்வி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அல்லவா?

எதற்காக இந்த பாலுவின் கதை?

அந்த மாதிரி கெட்ட பழக்கங்கள் வேண்டாம் என்பதற்காக. . யாராவது பேசும்போது கேட்கவேண்டும் தவிர குறுக்கே அபிப்ராயம் சொல்லக்கூடாது என்றும் தெரிந்துகொள்ள. எது யார் பேசினாலும் நம்முடைய அபிப்ராயம், வாதம் தான் சரி என்று நிர்பந்திக்க கூடாது. எவரையும் கடின தகாத, அவமதிக்கும் வார்த்தைகளால் புண்படுத்தக்கூடாது. கனி இருப்ப காய் கவர வேண்டாம் என்று ஞாபகபடுத்த. பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணமே மனதில் எழக்கூடாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...