Monday, November 11, 2019

LETTER



கடுதாசு J K SIVAN

நான் இதை ஒரு படிக்காத கிராமத்தான் எண்ணமாக கொடுத்தாலும் இதில் பொதிந்துள்ள நற்போதனைகள், என்றும் எவருக்கும் கண்ணைத் திறப்பவை . அயராத உழைப்பு, தன்னம்பிக்கை , எதையும் எதிர்பாராமை, கடவுள் மேல் ஆழ்ந்த பக்தி இது போதும், உலகத்தில் வாழ.....

இந்த கடுதாசு தவளைப்பாடி தாமோதரன் பட்டணத்தில் இருக்கும் அவன் பிள்ளை தண்டாயுதத்துக்கு எழுதியது. அவனுக்கு எழுத படிக்க தெரியாததால் பனைமரத்து வீடு பாக்கியம் டீச்சர் தாமோதரன் சொல்ல சொல்ல எழுதிய போஸ்ட் கார்டு. 45 வரி நுணுக்கி நுணுக்கி. முக்காலணா கார்டிலே முந்நூறு பக்க விஷயம்.

'' டே பொடிப்பயலே தண்டு, அப்பச்சி பேசறேண்டா . .மூணு விசயம் . ஒண்ணு நானு பொசுக்குன்னு எப்போ வேணும்னாலும் போயிருவேன். அதுக்குள்ளாற, சொல்றதை சொல்லிறணும்னுட்டு இது சொல்றேன். . ரெண்டாமத்து, நான் உங்கப்பேண்டா. நான் சொல்லலேன்னா வேறே எவண்டா உனுக்கு இதெல்லாம் எடுத்து சொல்லப்போறான்? மூணாமத்து நான் சொல்றது என்னோடைய கஸ்டப்பட்ட அனுபோகம்டா . கசப்புடா. இதெல்லாம் நீனும் தெரிஞ்சுக்கோணமடா .

டேய் தண்டு, எவனையும் கடுகடுன்னு கோவிக்காதே. யாருமே உனக்கு நல்லது செய்யாட்டி போயிட்டு போவட்டும். அப்பன் ஆயி ஒண்ணு தாண்டா எப்போவும் உனக்கு உலகத்திலே நல்லது நினைக்கும், செய்யும்.

அதுமாதிரியே எவனாவது குழைஞ்சு குழஞ்சு உனக்கு நல்லது செய்ய வறானா? எதுக்குன்னு யோசிக்கணும். எதனாச்சியும் காரியம் ஆவணும்னு கூட இப்படி சுத்துவானுக. சாக்கிரதை. எவனுமே காரியமில்லாமே கழுதை மேலே போவமாட்டான்.

எவனும் எதுவுமே பர்மூண்ட் (PERMANENT ) இல்லேடா. நமக்கு தேவையானது இந்த உலகத்திலே எதுவுமில்லேடா... அலைந்து திரிஞ்சு நான் கண்டுபிடிச்ச உம்மைடா இது. இப்படி மனசை கெட்டியாக்கிக் கிட்டீன்னா எதுவும் உனக்கு தேவையில்லே, எதனாச்சும் உங் கிட்டேந்து போயிடிச்சின்னாலும் 'சர் தான் போவட்டும்''னு தோணும். கவலைப்படவே மாட்டே.

சுப்ரமணி ரெண்டு ஏக்கர் நிலம் பொய் சொல்லி அடாவடி அடிச்சு, அக்கா, தம்பியெல்லாம் ஏமாத்து னான். அவன் பொண்டாட்டி வள்ளி பேராசை புடிச்சுது .. சொல்லி குடுத்துச்சி. அப்புறம் இன்னா ஆச்சி? . ரிஜிஷ்டர் ஆபீஸ்லே நிலம் அவனுக்குன்னு காசு கீசு ஏதோ கொடுத்து மாத்திக்கிட்டான்னுவாங்க . சாமி பாக்காமயா இருக்கும். அன்னிக்கி சாயந்திரம் கோவாலு டீ கடையிலே சுப்பிரமணி மசால் வடை ரெண்டு ஒரு டீ சாப்பிட்டவன் தான். அப்பாலே தெருவிலே நுழைஞ்சவன் மேலே பிரேக் இல்லாம ஒரு தண்ணி லாரி ஏறி பூட்டான்.? இன்னாடா இது?? அக்குரும்பா இல்லே? இருக்கிறதை வெச்சு எல்லோராண்டையும் நல்ல பேரோடு இருந்திருக்கலாம்லே.

முனிம்மா உன்னை கட்டிக்கறேன்னுட்டு உன்னாண்ட வாங்கி துன்னுபுட்டு இப்போ மாரியோடு ஓடிடுச்சாமே.
சேதி காதுலே உளுந்திச்சி. அது போவட்டும்டா. அது பின்னாலே ஓடாதே. உன்னை புரிஞ்சுக்கலே அது. வுடு. மல்லிப்பூவை புள்ளையாருக்கு வாங்கி போடுறா. காலுக்கு உதவா லப்பர் செருப்பு. தூக்கி கடாசு.

இஸ்கோல் படிப்பு படிக்கல்லேன்னு மூஞ்சி தொங்கப்போடாதேடா. நானு திண்ணையிலே கூட போய் படிக்கலே. சுந்தர வாத்யார் ரொம்ப கூப்பிட்டார். '' வாடா சொல்லித்தாரேன்னுட்டு. போனேனா? அவங்க வூட்டுக்கு போவேன் ஆனா கொல்லைல மாடு கழுவி, செடி கொடி நட்டு, பாலு கறந்து, வைக்கப்போர் அடுக்கி, தென்னை மரத்திலே ஏறி தேங்கா இறக்கி, ஏத்தத்திலே தண்ணி இறைச்சேன். அவ்வளவு தான் படிப்பு.

உலகம் தாண்டா நல்லா சொல்லிக் கொடுக்கற, காசு கேக்காத வாத்யார். அதாண்ட படிடா . நிறைய தெரிஞ்சுக் கலாம்.

டேய் தண்டு, என்னாண்ட காசு இல்லேடா. நீயும் எனக்கு சம்பாரிச்சு காசு எதுவும் தரவேண்டாம்டா. என் வயித்தெ நான் கடோசி வரிக்கும் கழுவிக்குவேன். நீயும் அப்படி தாண்டா தெகிரியமா உன் கால்லயே நிக்கோ ணும். எவனையும் நம்பாதே. உன் கை கால மட்டும் நம்பு. அப்புறம் சாமியை நம்பு. அது போதும்டா. எவனை எவண்டா காப்பாத்தறது?. கிஷ்டன். அவன் தாண்டா படியளக்கிறவன் ன்னு சுந்தர வாத்யார் அடிக்கடி சொல்லுவாரு.

நாலு காசு சேந்துச்சுனா தாம் தூம் னு துள்ளாதே. எப்போவும் ஒரே சீரா இருக்கணும்டா . அதிகத்துக்கு ஆசை பட்றாதேடா.

பொய்யே பேசாதேடா. நீ சொன்னா பட்டுனு ஜனங்க நம்பணும் டா. ஒரு நா நீ பேச்சு மாறினா யாரும் நம்பமாட்டாங்க. நீ எல்லோருக்கும் நல்லது செய்டா. மீதி பேர் உனக்கு நல்லது செய்யணும் நீ பால் மாறாதேடா. வாணாண்டா அது. கிஷ்டன் சாமி படியளக்கிறவனுக்கு தெரியும் டா எவனுக்கு இன்னா, எவ்வளோ, எப்போ தரணும்னுட்டு. நிம்மதியா இப்படி இருந்தோமின்னா அப்போ தாண்டா துண்ட விரிச்சு நல்லா தூங்கமுடியும்.

சோமு நாயக்கர் டவுனுக்கு போய் தூங்கறதுக்கு நிறைய காசு கொடுத்து மருந்து மாத்திரை எல்லாம் வாங்கி முழுங்குறார். நாளெல்லாம் பொய் பேசுவாரு, ஏமாத்துவாரு? காசுன்னா சாணிலெ நீஞ்சி தேடுவார். யாருக்கும் ஒரு தம்படி கூட கொடுக்கமாட்டாரு . எப்படிடா தூங்கமுடியும்?

பட்டாளத்தான் பையன் பாபு மூட்டை மூட்டையா லாட்டரி சீட்டு வாங்கினான் . பேராசை. பணக்காரனாவணும்னுட்டு . அப்பாலே, வாய்க்கா பக்கத்துலே மூட்டையெல்லாம் கொளுத்துனான். ஒரு ரூவா கூட லாட்டரிலே விழலே. உழைச்சா தாண்டா காசு வரும். உழைச்ச காசு தான்டா நிக்கும்.

பொங்கலுக்கு ஊருக்கு வாடா. எனக்கு ஒண்ணும் வாங்கியாராதே. கன்னுக்குட்டிங்களுக்கு கழுத்து மணி வாங்கிக்குனு வா. சலங் சலங்னு ஓடும். ஊர் பள்ளிக்கூட பசங்களுக்கு பென்சில் வாங்கியா. முப்பது நாப்பது பசங்க. நீ வரச்சொல்ல, நான் இருந்தா உன்னோட நல்லா சந்தோசமா பேசுவேன். இல்லாக் காட்டி சந்தோசமா உன்னை நினைச்சுக் கிட்டேயே கிஷ்டன் கிட்டே பூடுவேன் . கவலையே படாதே. நல்லா இருடா.

இப்படிக்கு உங்கப்பன்- தாமு பிள்ளை

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...