Monday, November 25, 2019

THIRUKKOLOOR PEN PILLAI RAHASYAM



திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்: J K SIVAN


          15 ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே

பெண்களிடம் ரஹஸ்யம் சொல்லாதே. அவர்களால் அதை காப்பாற்ற முடியாது என்று சொல்பவர்கள் ரஹஸ்யத்தை பற்றி தெரியாதவர்கள். பெண்கள் தான் ரஹஸ்யத்தின் பெட்டகம். கழுத்தை அறுத்தாலும் ரஹஸ்யங்கள் வெளியே வராது. மற்றவர் ரஹஸ்யங்களை பிடுங்குவதில் பரம கெட்டிக்காரர்கள் என்றும் சொல்லலாம்.


திருக்கோளூரில்  சாதாரண  ஒரு மோர் தயிர் விற்கும் பெண்ணிடம் இத்தனை ஞானமா?  மூக்கின் மேல் விறல் வைக்கிறோம். 

இதுவரை 14 உன்னதர்களை  உதாரணம் காட்டிய  அந்த பெண் ஸ்ரீ ராமாநுஜரிடம் இன்று ஒரு அற்புதமான ஆழ்வாரைப் பற்றி  சொல்கிறாள் . நான் விரும்பி படிக்கும் ஆழ்வார்களில் இவர் ஒருவர்.  ஒரு  மலையாள தேசத்து  ராஜா ஆழ்வாரானவர்.

கொல்லி தேசத்தில்  திருவஞ்சிக்களம் என்னும் ஊர்க்காரர்.  பெயர்  குலசேகர ஆழ்வார். வீராதி வீரர். பராக்ரமர். போரில் வெல்லமுடியாதவர். ராமன் விஷ்ணு நாராயணன் என்றால் உயிரை விட்டுவிடும் பக்திமான்.

திருப்பதி வேங்கடேசன் மேல்  அலாதி பக்தி. "எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!",என்றவர்.

                        செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
                        நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
                        அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
                        படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

திருப்பதி மலையில் குளத்தில் மீனாக,  பறவையாக, முள்ளாக, மலையாக, மரமாக  நதியாக, எப்படியெல்லாம் இருந்தால்  உன் பக்தர்களுக்கு ஏதேனும் ஒரு உதவியாக இருப்பேன் என்று யோசித்து கடைசியில் கோவில் வாசலில் ஒரு கல்லாக இருந்தால்  ''அடடா என்னை மிதித்து உன் பக்தர்கள் உன்னை தரிசிப்பார்கள், நானும் ஒரு தொந்தரவும் இல்லாமல் எப்போதும் உன் எதிரே உன்னை தரிசித்துக் கொண்டே கிடப்பேனே ''  என்று முடிவெடுத்து தன்னை கல்லாக பண்ணுமாறு வேண்டியவர். இன்றும் பெருமாள் சந்நிதியில் குலசேகர படியாக இருப்பவர்.

(இவரைப் பற்றி  என்னுடைய  ''அமுதன் ஈந்த  ஆழ்வார்கள்''   புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். வேண்டுவோர் என்னை அணுகலாம். 9840279080 வாட்ஸாப்). 

ஏனம்மா  எல்லோரும்  இந்த திருக்கோளூரில் வாசம் செய்ய விரும்பி  இங்கே வருகிறார்கள் நீ இதை விட்டு போகிறேன் என்று ஏன் சொல்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்டு  81 உன்னதர்களை பற்றி அறிந்துகொள்கிறார் அவளிடம் பதிலாக.  அவருக்கு அது தெரியும், அவரை சாக்கிட்டு  நமக்கு இந்த அருமையான விஷயங்கள் கிடைத்தது.

''ஸ்ரீ குருநாத, ராமாநுஜஸ்வாமி, நான் என்ன குலசேகர ஆழ்வாரா,   அவரைப்போல்  ஒரு நாளாவது ஒரு கணமாவது உன் திருப்பணியில், உன் பக்தர்களுக்கு சேவை செய்வதில் உன் திருமலையில் ''ஏதேனுமாகவாவது இருந்தேனா என்று கேட்டேனா, கேட்க நினைத்தேனா? எந்த விதத்தில் இந்த க்ஷேத்ரத்தில் குடிபுக அருகதை எனக்கு சொல்லுங்கள் ?  என்கிறாளே .


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...