Friday, November 15, 2019

STRESS MANAGEMENT



இது தான்   கை(வல்ய) வைத்தியம். J K SIVAN


மசால் வடைக்கு  ஆசைப்பட்ட எலி மாதிரி  பாவம் நிறைய  இளம் வயது ஆணும் பெண்ணும் பணம் சம்பாதிக்க,  இரவை பகலாக்கி அமெரிக்க, ஐரோப்பா நாடுகளின் வியாபார போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு  கண் பிதுங்கி மறுநாள் காலை வீட்டுக்கு வந்து தூங்குகிறார்கள்.  ஒவ்வொரு வீட்டிலும் இவர்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.   

வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் வேறு அவர்களது பகல் நேரத்தை பங்கு போட்டுக் கொள்ளும்போது, பணப்பிரச்சனை பெரியதாக தோன்றவில்லையே தவிர உடல் சீரழிகிறது. போதிய உடல் பயிற்சி இல்லை, ஒய்வு இல்லை என்பதாலும் உடல் உரலாகிறது. தூக்கமின்மை மன அழுத்தத்தை  பரிசாக கொடுக்கிறது.  நரம்பு  ரத்த அழுத்த சம்பந்த நோய்கள் ஒட்டிக்கொள்கிறது.  சம்பாதித்தது  ஆஸ்பத்திரிக்கு  போய்விடுகிறது. என்னவாழ்க்கை இது?

அருமை இளசுகளே , ஒரு சின்ன  வேண்டுகோள். செவி மடுத்து கேட்கவேண்டும்: 

உனக்கென்று அரைமணி நேரம் தினமும் ஒதுக்கிக் கொள் . உன்னுடைய வேலைக்கு உன் உடல் தூக்கம் வேண்டும் என்று கேட்கிறது. ஆகவே  கொஞ்சம்  அவசியம் தூங்கு. மற்றவர்கள் மேல் சள் புள் என்று விழாதே. உன்னையே கடிந்து கொள் . எனக்கு அமைதி வேண்டும் என்று நினைவு படுத்திக் கொள். ஆபீஸிலோ  வீட்டிலோ எங்காவது  கொஞ்சம் கை கால் இடுப்பு உடம்பு வளைத்து தேகப்  பயிற்சி செய்.  உடலில் சேர்ந்த  அழுத்த சமாச்சாரங்கள் stress chemicals இதனால் எரிந்து போகும்.  பிட்சா பர்கர் சாப்பிடும் பழக்கம் புதிதாக வேண்டாம்.  பழங்கள் பச்சைக்காய்கறிகள் ஆடு மாடு போல் கொஞ்சம் தின்னு.  ருசி முக்கியம் இல்லை.  மருந்து பின்னால் சாப்பிடும்போது ருசி பார்த்தா விழுங்குகிறாய். 

 நிறைய தாகம் எடுக்காவிட்டால் கூட தண்ணீர் குடி. நின்ற இடத்திலே ஓடு.  நின்று கொண்டே ஓடுவது எல்லோருக்கும் தெரியும். அப்போது தான் உனது  தொப்பை  உனக்கே துரோகம் பண்ணாது.   கோப  தாபங்களுக்கு துளியும் இடம் கொடுக்காதே. எவனாவது ஏதாவது சொன்னால் சிரித்துக்கொண்டே செவிடனாகிவிடு.உன் மீது பொறாமை படுபவர்களும் உண்டு. அவர்கள் எரிச்சல் மூட்டலாம். லக்ஷியம் பண்ணாதே.செய்யும் வேலையில் எது முக்கியம் எதற்கு அதிகநேரம் செலவழிக்கவேண்டும் என்று தீர்மானி. எல்லாமே உலகத்தில் முக்கியம் மாதிரி தான் தோன்றும்.  ஒரே ராத்ரியில் தாஜ் மஹால் கட்டாதே .நண்பர்களோடு சிரி, டான்ஸ் ஆடு.  உணர்ச்சிகளை மறைத்து பொய் வாழ்க்கை வேண்டாம். எது உனக்கு  மன அழுத்தம் கொடுக்கிற BP  சமாச்சாரமோ அதை கண்டுபிடித்து  கொஞ்சம் நிதானமாக ஜாக்கிரதையாக  கையாள். அடுத்தது அது எப்போது தலை தூக்கும் என்று மீன் பிடிப்பவன் போல் கவனி.  வருமுன் காப்போனாக மாறு. 

உன் வேலை  உனக்கே  திருப்தி தருகிறதா என்று சோதித்து பார். உன்னால் முடியுமென்று ஒரு வேலையை தீர்மானிக்கும்போது உனது சக்தி திறமை உனக்கு தெரிந்திருக்கட்டும். போகாத ஊருக்கு வழி தேடி பாதி வழியில் திரும்பி வரமுடியாத படி மாட்டிக்கொள்வது முட்டாள்தனம். நீ கெட்டிக்காரத் தனமாக  விஷயத்தை அணுகி  வெற்றிகரமாக முடிப்பது  மற்றவர்களுக்கு உன் மேல் மதிப்பும் மரியாதையும் கூட தரும்.

குடிக்காதே.  தண்ணீ எதையும்  தண்ணீரை தவிர.  ரத்த அழுத்த  மன அழுத்த மாத்திரைகள் கிட்டேயே போகாதே. உன்னை அடிமையாக்கிவிடும்.  ஏற்கனவே நீ உன் வேலைக்கு  அடிமை. குணத்தையே மாற்றிவிடும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை ஜாக்கிரதையாக  எதற்கு அவசியமோ அதற்கு மட்டும் செலவு செய். கடன் வாங்காதே. பெரிய 15-20 வருஷ கடன்களில் மாட்டிக்கொள்ளாதே. கையில் பணம் சேர்ந்ததும் உனக்கு வேண்டியதை  அடையலாம். அது பறந்து போய்விடாது. கடன் தொல்லையில் மாட்டிக்கொண்டால் உன் வரவு எப்போதாவது தடை பட் டால் செலவு அதற்காக காத்திருக்காது. பணத்த தட்டுப்பாட்டில், சிக்கலில் கொண்டு விடும்.  கவனமாக இரு. 

உன் நிலையை தெரியாமல் மற்றவர்கள் உன்னை பெரிய நீண்ட கால கடனில் இழுத்து விடுவார்கள். அவர்களை குறை சொல்லி பயனில்லை. நீ தான் கவனமாக இருக்கவேண்டும். உன் சம்பாத்தியத்தில் குறைந்தது 20 -25 சதவிகிதமாவது சேமிப்பாக இருக்கட்டும்.  இந்த விஷயத்தில் மனக்கட்டுப்பா டுஅவசியம். 

அவ்வப்போது குடும்பத்தோடு, நண்பர்களோடு, கொஞ்சம் கொஞ்சம் வெளியுலகத்தில் கிடைக்கும் விடுமுறைகள்,உல்லாச பொழுது போக்குகளில் நேரம் செலவழி . அது தான் பாட்டரி ரீசார்ஜ்  உனக்கு.  நீச்சல் குளத்துக்கு சென்று நீஞ்ச கற்றுக்கொள். 
பாடத்தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்  பாடு.  பிறர் அங்கீகாரம் மதிப்பு தேவையில்லை. பாட்டை கேள். கூடவே பாடு. டிவி வீடியோவில் ஹாஸ்ய பொழுது போக்கு நிகழ்ச்சி பார். கொலை கொள்ளை திருடு போலீஸ் இது வேண்டாம். 

புகை பிடிக்காதே. பிறரோடு பழகு. அவர்கள் பேச்சை ரசி . எதிர்வெட்டு, குறுக்கே பேசுவது வேண்டாம். பேச்சை குறை.   கிடைத்த நேரம் நன்றாக தூங்கு.  காற்றோட்டமாக இடத்தில் மெத்து மெத்து இல்லாத படுக்கையில் படு. உடல் வலி குறையும். அதிக தலையணை வேண்டாம். ஒன்றே ஒன்று மிருதுவாக  போதும்.  சில்லென்று  ரொம்ப  ac  வேண்டாம்.  வாரம் ஒருமுறை தோட்ட வேலை, வீடு சுத்தப்படுத்துவது கழுவது போன்ற உடல் பயிற்சி, எண்ணெய் தேய்த்து  குளிப்பது  சூடாக உடம்பு பிடித்து விடுவது போல் வெந்நீர் குளியல் சுகம் தரும்.  வெளியே சாப்பிடுவதை அதிகமாக குறைத்துக் கொள்

.விஷயங்களை எப்போதும்  ஆற அமர விசாரித்து உன்  அபிப்ராயம் சொல். யாரோ எதுவோ சொன்னால் உடனே உன் முடிவுக்கு வராதே. குதிக்காதே.கவலை படவே தேவை இல்லை.  தலைக்கு மேலே  வெள்ளம்போனால்  சாண் என்ன முழம் என்ன? என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே  நல்ல அர்த்தபுஷ்டியான பாட்டுகள் ..பிரச்சனைகள் அலைகள் மாதிரி.    பெரிசு வந்து சின்னதை தின்றுவிடும். பெரிசும் காணாமல் போகும். 
அருகே  கோவில் ஏதாவது இருந்தால் வாரம் ஒருமுறை அரைமணி நேரமாவது சென்று எங்காவது பெரிய  மண்டபத்தில், மரத்தடியில் அமைதியாக தனியாக அரைமணி நேரம் அமர்ந்து தியானம் பண்ணு . வேலையை பிரச்னை எதையும் அப்போது  நினைக்காதே. 

உன் வாழ்க்கையில்  இந்த வருஷம்  நீ  என்ன செய்யவேண்டும் என்று திட்டம் போட்டு மெதுவாக அதை நோக்கி நகர்வாயாக.. முதலில் நீ தெரிந்து கொள்ளவேண்டியது  ஒவ்வொருநாளும் பொழுது விடியும்போது அது உனக்கு  கிருஷ்ணன் கொடுத்த பரிசு. அதை எவ்வளவு ருசித்து ரசித்து பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீ தான் அணுக வேண்டும். 

டாக்டர் பீஸ்  வாங்காமல், மருந்து கொடுக்காமல்
உனக்கு  மன அழுத்தத்துக்கு  நிவாரணம் சொன்னேனே ஒரு தேங்க்ஸ் கிடையாதா? தேங்க்ஸ் எது தெரியுமா. இதை மற்றவர்களுக்கு உன் அனுபவத்தோடு சேர்த்து நீ பரப்புவது தான்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...