Monday, November 18, 2019

THULASI DAS

துளசி தாசர்       J K  SIVAN 

                                                                            திருப்பு முனை....

அக்காலத்தில் பெண்கள் அதிகம் தனியாக பிரயாணம் செய்ய மாட்டார்கள். குடும்பத்தோடு சேர்ந்து தான் எங்கும் போவார்கள்.  முகலாய ஆட்சியில்  எந்த நேரம் என்ன ஆகுமோ என்று நிர்கதியாக பகவானை பிரார்த்தனை பண்ணிக்கொண்டு வாழ்ந்த காலம்.  இப்போது மாதிரி  சண்டை போட உரிமை கேட்க, கட்சியா, கழகமா, சங்கமா,  கோர்ட்டா  என்ன பாதுகாப்பு  ஹிந்துக்களுக்கு? கஷ்டங்களை யாரிடம் சொல்ல வழி??   

இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள்  அக்பர்  சக்கரவர்த்தி துளசிதாசை '' என்னோடு வா''  என்று எங்கோ அழைத்துக் கொண்டு போய்விட்டார்.  சக்கரவர்த்தி சொல் தட்ட முடியுமா? வீட்டில் தனியாக அவர் மனைவி மம்தா மற்றும்  வயதான  மாமனார்  மாமியார்.

அந்த நேரம் பார்த்து ஒரு ஆள் வந்தான்.

லொட்டு லொட்டு என்று கதவை தட்டவே, பயந்து கொண்டே கொஞ்சமாக கதவை திறந்து பார்த்த துளசிதாசர் மனைவி  மம்தா  ''யார்  நீங்கள் என்ன வேண்டும்?'' என்கிறாள்.

''அம்மா,   நான்  உங்கள் ஊரிலிருந்து வருகிறேன். உங்கள் தாயார்  ரொம்ப சீரியஸ் ஆக படுத்துவிட்டார். உங்களை ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கடைசி ஆசை என்பதால்  '' உங்களை கூட்டி வர என்னை அனுப்பினார்.

இந்த செயதி கேட்டதும் அந்த பெண் அழமாட்டாளா?  இல்லை...  அவள் கோபாவேசம் கொண்டாள் . கத்தினாள். அந்த ஆள்  பயந்து போனான்.   ''ஐயோ  தாயே,  நான் சொன்னது பொய். துளசிதாஸ் எங்குமே உங்களை பிரிந்து இருப்பதில்லை, தனியாக அனுப்புவதில்லை.  ஆகவே  உங்களை எப்படியாவது பார்க்க  இந்த மாதிரி சொன்னால் ஒருவேளை உங்களை அனுப்புவாரோ என்று தோன்றியது. அதனால் இந்த நாடகம் '' என்றான்.

''ஓஹோ.. அப்படியா.  என் கணவர்  அக்பர் சக்ரவர்த்தியோடு வெளியே சென்றிருக்கிறார். அவர் வருவதற்குள் நான்  அம்மா வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு உடனே  திரும்புகிறேன்'' என்றாள்  மம்தா. கணவர் திரும்பி வர   மூன்று நான்கு நாட்களாக ஆகலாம் என்று நினைத்தாள்  மம்தா.

 மாமனார் மாமியார் அனுமதியோடு தனது தாய் வீட்டுக்கு செல்கிறாள். அன்று மாலையே துளசிதாஸ் வீட்டுக்கு திரும்பியதால்  எங்கே  மனைவி மம்தா என்று தேடுகிறார். 

தனது தாய்  தந்தையிடமிருந்து அவள் தனது தாய் வீட்டுக்கு சென்றதை  அறிகிறார்.  அவரால்  ஒரு நிமிஷம் கூட மம்தாவை விட்டு பிரிந்திருக்கமுடியாதே .  இரவு பத்து மணியாகி விட்டது.  அவருக்கு படுக்கையில் தூக்கம் வரவில்லை.  மம்தாவின் தாய்  யமுனை  நதியின் அக்கரையில் 10 மைல் தூரத்தில் இருக்கிறாள்.இரவில் மழையில், ஆற்று வெள்ளத்தை  கடந்து மம்தாவின் தாய்வீட்டை அடைகிறார்.  இருளில் கதவு பூட்டி இருக்கிறது. உள்ளே  தூங்குகிறார்கள்.  மச்சு வீடு.  அங்கே  பால்கனி மாதிரி தாழ்வாரம் திறந்திருக்கிறது. அதை அடைந்து உள்ளே போகலாம். எப்படி மாடிக்கு போவது.  வீட்டின் அருகே ஒரு மரம். அதில் ஒரு கயிறு மாதிரி ஏதோ வேர் தொங்குகிறது போல் இருக்கிறதே. அதை பிடித்துக் கொண்டு ஏறுவோம்''ஏறிவிட்டார். உள்ளே நுழைந்துவிட்டார். 

நள்ளிரவில் வீட்டில் யாரோ மேலேறி நுழைந்ததை வேலையாட்கள் பார்த்து கத்த , எல்லோரும் எழுந்து விட்டார்கள். துளசி தாஸ்!!  மம்தா  ஆச்சர்யத்தோடு ஓடி வருகிறாள்.    
''ஏ அழகு சுரங்கம், என்னை விட்டு பிரிய  எப்படி உன்னால் முடிந்தது. ஒரு வினாடி கூட உன்னை விட்டு என்னால் பிரிய முடியவில்லையே!?' 10மைல்  தூரம் இருட்டில் நடந்து வந்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக மரத்தில் கயிறு தொங்கி இருக்க அதை பிடித்து மேலே ஏறி உள்ளே குதித்தேன்.

''ஐயோ, யமுனையில் பெரு வெள்ளம், அதை நீந்தி வந்திருக்கிறீர்கள். என் மேல் இருக்கும் மோகம், அவ்வளவா?  மரத்தில் கயிறு எதுவும் கிடையாதே.? எதை பிடித்து மேலே ஏறினீர்கள்.?  வேலையாட்கள் அதற்குள்  தீபங்கள் ஏற்றி கொண்டு வந்து விட்டார்கள்.  எங்கே அந்த  கயிறு காட்டுங்கள்? என்று பால்கனி அருகே இருக்கும் கிளையை நோக்குகிறாள் மம்தா.  ஐயோ  பெரிய  மலைப்பாம்பு  தீனி எதையோ விழுங்கிவிட்டு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை கயிறு என்று பிடித்து ஏறி இருக்கிறார் துளசிதாஸ். அவரும் அதன் வயிற்றில் போயிருக்கவேண்டியவர்.  துளசி தாசரும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
'' நீங்கள் பெரிய  வித்வான் என்று எல்லோரும் சொல்கிறார்கள். உங்கள் அறியாமையை என்ன சொல்வது?
உங்களால் எப்படி வயதான பெற்றோரை விட்டு இப்படி அகாலத்தில் வர மனது இடம் கொடுத்தது? சொத்து சுகம், உறவு, பந்தம், பதவி படிப்பு பணம், இதெல்லாம் மறந்து இந்த பெண்ணின் மேல் கொண்ட வெறும் மோஹம் மட்டும் தானே காரணம்?  வெறும்  ஏட்டு சுரைக்காயா  நீங்கள் ? வாழ்க்கை என்ன என்றே  இன்னும் புரியவில்லையா? அந்த பாம்பு உங்கள் நல்லகாலம் உங்களை கடிக்கவோ, விழுங்கவோ இல்லை. உயிர்  தப்பித்தீர்கள். வாழ்க்கை எவ்வளவு அநித்தியம்? கேவலம் ஒரு ரத்தமும் சதையும் கொண்ட பெண் நான் என்னை தேடி இவ்வளவு ஆபத்துகளை தாண்டி வந்திருக்கிறீர்கள்!  உலகில் பலர் இவ்வாறு தான் அழி கிறார்கள். இந்திரன் கண்மூடித்தனமாக  அஹல்யாவை தேடி சாபம் பெறவில்லையா ?  சீதையின் அழகில் மயங்கிய  ராவணன்  கடைசியில் தன் உயிரையே இழக்கவேண்டி வந்தது.   தீயின் ஒளியை  பழம் என நம்பி விட்டில் பூச்சிகள்  மாய்கிறது. ஆத்மா, கடவுள் என்று ஒருவன் உள்ளே இருப்பதையே  மறந்தவர்கள். நிஜத்தை, சத்தியத்தை தேடாமல்  நிழலை தேடுபவர்கள்.  துன்பத்தில்  ஆழ்ந்து  உழல்பவர்கள். 
ஸ்ரீ ராமனை தேடாமல்  போயும் போயும்  என்னை தேடினீர்களே'. அது என் துர்பாக்கியம் '.... என்கிறாள் மம்தா. 

 ''சரியான வேளை,  நேரம்,  ஒரு  திருப்பம் ''   எல்லோர் வாழ்க்கையிலும் ஒருநாள்  வரும். அது தான்  மாற்றத்தை உண்டுபண்ணும். துளசிதாசருக்கு  அந்த மாற்றம்  மம்தாவின் பேச்சால்  அப்போது தான் வந்தது. அது இறைவன் அருள்.  

''அம்மா   நீ சொல்வது உண்மை, சரி, என்று மனைவி மம்தாவை வணங்குகிறார்  துளசிதாசர். ''குழந்தை நெருப்பு என்று தெரியாமல் எரியும் தணலில் சிவப்பில் மயங்கி தொட முயலும்போது தாய் தடுத்து காப்பாற்றுகிறாள். நீ ஏன் தாய். என்னை சரியான வழியில் திசை திருப்பிவிட்டாய்.

துளசி தாசர்  தனிமையை நாடி அன்று சென்றவர் தான்.  தனது முன் ஜென்மங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மனத்திரையில் ஓடின. தான்  வைஷ்ணவன் வால்மீகி என்று தெரிந்துவிட்டது.  நான் இங்கே  ஒரு காரியார்த்தமாக அனுப்பப்பட்டவன்... என் உதடு  இனி ராமனையே  ஸ்மரிக்கும்.  நான் எல்லோரையும் ராமனை அறிய  செய்யவேண்டும்.  என் கடமையை உணராமல்  புலன்கள் வசம் வலையில் சிக்கியிருந்தவன் மீட்கப்பட்டேன்.   காசிக்கு  அப்போது ஆனந்தவனம்  என்று பெயர்.... அங்கே சென்றார்.
பாகீரதியில் அமிழ்ந்து ஸ்னானம் செய்தார்.   அவரது உணவு வெறும்  பழங்கள்,காய்கள் , மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள்.  தினமும் பாகீரதி ஸ்னானம். ஸ்ரீராம த்யானம். 
''ஜானகி ரமணா, அயோத்யா வாசனை, உன்னை எனக்கு காட்டு '' கையில் உள்ள செம்பில் மீந்த ஜலத்தை செடிகளுக்கு கொட்டுவார்.  

வருஷங்கள் பன்னிரண்டு ஓடிவிட்டன. 

வழக்கம் போல் காட்டில் ஸ்நானம் செய்ய சென்ற துளசிதாசர் . வழக்கமாக மீந்து போன ஜலத்தை மரத்தின் வேரில் ஊற்றும் இடத்தில் ஒரு  ராக்ஷஸன். கைகட்டி நிற்கிறான். 
துளசி தாசர் அவனைப் பார்த்ததும் அசந்து நிற்கிறார்.......

தொடரும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...