Tuesday, November 5, 2019

STORY TELLING



பழைய  நினைவு.         J K  SIVAN               

                                                      ''ஒரு ஊரிலே ஒரு ராஜா....
எத்தனையோ  குழந்தைகளுக்கு  கதை சொல்லி இருக்கிறேன்...அது எதனால் எனக்கு பழக்கமாயிற்று என்று கண்டுபிடிக்க  இன்னும்  70-75 வருஷங்கள் பின்னோக்கி போகவேண்டும்.   இப்போது நினைத்தாலும்  அந்த  ஆனந்த  நாட்கள் கண்முன்னே தோன்றுகிறது.

என்னைப்   போலவே   கதை கேட்க  சுற்றிக்கொண்டே  இருக்கும்  குழந்தைகள்   ஐந்து முதல்  15 வயது வரை உள்ளவர்கள் தான்  அந்த கதை  கேட்கும் சாம்ராஜ்யத்தில்  பிரஜைகள்.  சொந்தங்கள் அண்டை அசல் வாண்டுகள்  என்று  பத்துக்கு மேல்  எப்படியும்  தேறும்.

ரொம்ப  ஆவலாக  நாங்கள் எதிர் பார்க்கும் முதல் வார்த்தை.. ''ஒரு ஊரிலே ஒரு ராஜா... உடனே  கப் சிப்.  எங்களில் சிலர்  உடனே   வாயில் பிடித்த விறல் ஒன்றை போட்டுக்கொண்டு விடுவார்கள். அவ்வளவு ஆர்வம். ஈடுபாடு. சந்தோஷம். வாயில் விறல் போட்டுக்கொண்டால் கிடைக்கும் சந்தோஷத்தை  எந்த குழந்தையும் இதுவரை சொல்லாமல் ரகசியமாகவே இருக்கிறது.

''ஒரு ஊரிலே..... என்ற   மந்திர வார்த்தையைக் கேட்டதும் எங்கிருந்தாலும் ஓடி வந்து அருகில் உட்கார்ந்து கொள்வோம். பாட்டியோ, வேறு யாரோ கதை சொல்லப் போகிறார்கள் என்பது சொல்லாமலேயே புரிந்துவிடும். ''ஏய்  வாங்கடா, பாட்டி கதை சொல்றா.......'' இப்படி ஒரு அட்வெர்டைஸ்மென்ட் வேறு..

''எந்தவூர், எந்த ராஜா, கிழவனா, குமாரனா, தமிழில் பேசுவானா, கருப்பா, சிவப்பா?   இதெல்லாம் எங்களுக்கு அப்போது  முக்யமாக தோன்றவில்லை.  அந்த ராஜா என்ன செய்தான், அவனுக்கு என்ன ஆனது? இது ஒன்றே தான்  பெரிய  கேள்விக்குறி?   எங்கள் விறுவிறுப்புக்கு ஆதாரம்.

அப்போதெல்லாம் யார் வீட்டிலும் மின்சாரம் இல்லை. தெருவில் தான் விளையாடுவோம். தெருவில் அதிக வண்டி நடமாட்டம் இல்லை. தூரத்தில் குதிரை வண்டி வரும் சத்தம் கேட்டால் ஒதுங்கி விடுவோம்.  நிலா ஒளியிலே,  வாசலில் எண்ணெய்  தெரு விளக்கு வெளிச்சத்தில், முற்றத்தில்  ஹரிக்கன் லைட் ஒளியில், கொல்லையில்  மரத்தடி  --   இவை தான்  நாங்கள் கதை கேட்ட  ஸ்தலங்கள். மொட்டை மாடி எல்லாம் கிடையாது. எல்லாமே ஒட்டு வீடுகள்.  சின்ன  சின்ன  தட்டு ஓடு, செருகு ஓடு. மங்களூர் ஓடு அப்புறம் வெகுகாலம் கழித்து தான் வந்தது.   தட்டு ஓட்டில் இடுக்கில் தேள் பள்ளி  தேரை, வாசம் செய்யும்.  அவ்வப்போது  தொப் என்று கீழே விழு.  அதிர்ஷ்டம் இருந்தால்  தேள் கடியில் இருந்து  தப்புவோம்.  ஆட்கொண்டாருக்கு  வேண்டிக்கொண்டு  குங்கிலியம் வாங்கி போடுவதாக  பெரியவர்கள் வேண்டிக்கொள்வார்கள்.  தேள்கடி  பாம்புக்கடிக்கு எல்லாம் அப்போது மந்திரம் போட்டு குணமாவது வழக்கம்.  ஊர்க்கோடி  சத்தார் சாயபு  வீட்டில்  கயிறு கட்டி விடுவார். முடிச்சு முடிச்சாக இருக்கும். அதெல்லாம் மந்திரம். அவருக்கு மட்டுமே அது என்னவென்று தெரியும்.  மயில் தோகையால்  வருடும்போது மிருதுவாக சுகமாக இருக்கும்.   ஓரணா ஒரு சொம்பில் போடுவோம்.

 காலம் வேகமாகத்தானே  ஓடும்.   நிறைய  கதையைக் கேட்டு நானும் பெரியவனாகி,  கற்பனைக் குதிரையை தட்டி விட்டு   குழந்தைகளுக்கு  அமோகமாக  கதைகள் சொல்லி இருக்கிறேன். அது இப்போதும் என்னை விடவில்லை   அப்போதெல்லாம் என்னை சுற்றி நிறைய வாண்டுகள் என் குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்தெல்லாம் உள்ள 5 முதல் 15 வயது வரை ரேஞ்சில் (RANGE ) குழந்தைகள் பல காதைத் தீட்டிக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கும்.  இப்போது தனியாக ஒரு கம்பியூட்டர் எதிரே அமர்ந்து மனதில் தோன்றியதை  கை  விரல்கள் உலகெங்கும் சொல்கிறது....

நான்  என் இளமையில்  கேட்ட  கதைகளுக்கும்  நான்  பெரியவனாகி  சொன்ன  கதைகளுக்கும்  வித்யாசம் உண்டு. என் கதைகளில் கொஞ்சம்,  இதிகாசம், கொஞ்சம் ஆங்கில, இந்திய கதைகள், மீதி சொந்த சரக்கு. இப்படியே கலந்து கட்டியாக ஒரு உருவம் கொடுத்து கதை நீளும்.   

 நங்கநல்லூரில்  எங்கள் வீட்டு வாசல்  அப்போது ஒரு பெரிய  வேப்ப மரம் இருந்தது, அதன் கிளையில் தான்  தாம்புக்கயிறு ஊஞ்சல் கட்டி  ரயில்  விளையாட்டு விளையாடுவார்கள்.  மொட்டை மாடி போகும் வழியில் மாடிப்படி, வெயில் இல்லை யென்றால் மொட்டை மாடி, இல்லையேல்   வீட்டில்  கிணற்றங்கரைக்கு  பின்னால் தோய்க்கிற கல் அருகே (தோய்க்கிற கல் தான் என் ஆசனம்) என் ரசிகர்கள் எப்போதும் என்னை சுற்றிலும் அமர்ந்திருப்பார்கள்.

நான் சொல்லும் சில கதைகள் நாட் கணக்கில் நீளும். எனக்கே என்ன சொன்னோம் என்பது மறந்து விடும். அவர்கள் எடுத்துக் கொடுப்பார்கள். அப்பறம் அப்பாதுரை எப்படி அந்த திருடர்களை பிடித்தான்? ஓடும் ரயிலில் இருந்து எப்படி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தான். முதலை துரத்தியதா? ரயில் ஏன் பாதியில் நின்றது. எப்படி  அதற்குள் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்து  அங்கு புல் மேய்ந்துகொண்டிருந்த ஏதோ ஒரு குதிரை என்  ஹீரோவை தூக்கிக்கொண்டு  பறந்து  திருடர்களை பிடிக்க உதவியது.  எப்படி கையில் ஒரு கயிறு கூட இல்லாமல் ஆறு ஏழு திருடர்களை பிடித்து அடித்து '' கயிற்றால்''  கட்டி போட்டு  அந்த குதிரைமேல் போட்டு கொண்டுவந்தான்.........'

இதில்  ஏதாவது  ஒரு முனை,   நுனி  போதும் எனக்கு. மேலே கற்பனை தொடரும். விறுவிறுப்பு அதிகரிக்கும். அதில் குற்றம் யாரும் கண்டுபிடிக்க  அங்கே இல்லை.  கேள்வி கேட்கத்தெரியாத  குழந்தைகள் உலகத்தில் நான்...

அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை.

அப்போது டிவி இல்லை, ரேடியோ என்பது கூட  எல்லோர் வீட்டிலும் இருக்கவில்லை. இருந்தாலும் அதில் கதை கிடையாது. கதை இருந்தாலும் அதைக் கேட்க முடியாது. தொட்டால் ஷாக் அடிக்கும் வால்வ் இதயம் கொண்டம் பெரிய AC  DC  ரேடியோக்கள்.  திருப்பினால் கொரகொர சப்தம் ஒன்றே அதிகம்.  ஜன்னல் வழியாக வீட்டு கூரை, மொட்டை மாடி மீது  ஏரியல்  என்று வயர் துணி தோய்க்கும் கொடி மாதிரி கட்டி வைத்திருப்பார்கள்.     ஆன்டென்னா என்று ஒன்றை அடிக்கடி திசை மாற்றி திருப்பிக்கொண்டு இருக்கவேண்டும்.  ரேடியோவையே  வாஸ்து மாதிரி இடம் மாற்றி திருப்பி வைத்தால் பாதி பாட்டு பாடும். 

யார் வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள் வாங்கி கொடுக்கும் வழக்கமில்லை. புத்தகங்களும் அதிகம் கிடையாது. எனவே எனக்கும் என் கதைகளுக்கும் அதிகம் டிமாண்ட் இருந்தது  ஏன்  என்று இப்போது புரிகிறது.

சொல்ல சொல்ல நீண்டு கொண்டே  போகும்.   ஆகவே  மீதியை  அப்புறம்  சொல்லட்டுமா? 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...