Friday, November 1, 2019

CHENNAI PANCHA BOOTHA STHALAM



யாத்ரா விபரம்   J K  SIVAN 





                                                 
                 சென்னையில் பஞ்சபூத ஸ்தலங்கள்

இந்த பிரபஞ்சம் முழுக்க  ஐம்பூதங்கள்  எனும்   மண், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு  இதனால் உண்டானது என்று நமக்கு  வேதங்கள் புராணங்கள் சொல்கிறது.  இந்த பிரபஞ்சமே இப்படி உருவாகிய போது  அதில் உருவான நாம், மற்ற ஜீவன்கள் எல்லாமும் கூட  ஐம்பூதங்களின் சேர்க்கையில் உருவானது தானே. இந்த பஞ்சபூதங்களும் உருவானது பகவானிடத்திலிருந்து. அதனால் என்ன புரிகிறது. நாமும் பகவானால் குண்டானவர்கள், நமக்குள்ளும்  அந்த பகவான்  இருக்கிறார் என்பது திண்ணம்.  இந்த  பஞ்சபூதங்களான பகவானை சிறப்பாக  ஐந்து பூத  க்ஷேத்திரங்களாக வழிபடுவது நமது பண்பாடு காலம் காலமாக வரும் வழக்கமா பழக்கமா?  இரண்டுமே.  இந்த  பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் முக்கியமாக  சிதம்பரத்தில் ஆகாசம், திருவானைக்காவில் நீர், காளஹஸ்தியில் காற்று,  காஞ்சிவரத்தில் ப்ரித்வி, திருவண்ணாமலையில் அக்னி க்ஷேத்திரம் என்று வெகு தூரம் சென்று பார்க்க எல்லாராலும் முடியாது அல்லவா?  ஆகவே  அந்த காலத்தில் ஒவ்வொரு மண்டலத்திழும் பஞ்ச பூத க்ஷேத்ரங்கள் அமைத்திருந்தார்கள். நமது சென்னை தொண்டைமண்டல பகுதியை  சேர்ந்தது அல்லவா?  அரசமரத்தடியில்  வன்னி மரத்தடியில்  இருக்கும்  சிவலிங்கம்  இங்கே மட்டும் தான்  பார்க்கலாம்.  

சென்னையில் நமது வசதிக்கேற்ப பல நூற்றாண்டுகளாக  பஞ்ச பூத க்ஷேத்ரங்கள் ஸ்தாபித்திருக்கிறார்கள். அவற்றை அறிந்து அங்கெல்லாம் சென்று வழிபடாதவர்களுக்கு இனி அந்த கஷ்டம் வேண்டாம். அவை யாவை எங்கே என்ன க்ஷேத்ரம் இருக்கிறது என்று இந்த கட்டுரை சொல்லும். டக் கென்று ஒரு வண்டியை எடுத்துக் கண்டு ஞாயிறு, விடுமுறை தினங்களில் குடும்பத்தோடு சென்று தரிசிக்க இது உதவினால் எனக்கு என்ன லாபம் என்றால் பலரை பஞ்சபூத க்ஷேத்ரத்துக்கு அனுப்பிய  புண்யம். யமனின் எண்ணெய் கொப்பறை யிலிருந்து தப்புவேன்.

ஆகாச க்ஷேத்ரம்.    சூளை என்று ஒரு ஊர்  புரசைவாக்கத்திற்கு அருகே சூளை பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கே அவதானம் பாப்பய்யர்  தெருவில் இருக்கும்  இருநூறு வருஷ சிவன் கோவில் பெயர்  சிதம்பரேஸ்வர் ஆலயம்.அவருக்கு இன்னொரு பெயர் திருமூலநாதர்.    அம்பாள்  சிவகாமி, மற்றும் உமையம்மை. இங்கே உள்ள நடராஜர் சிதம்பர நடராஜரை போல்  உலோகத்தில் உருவானவர் இல்லை. கல்லால் செய்யப்பட்டவர்.  கிழக்கு பார்த்த சந்நிதி. சிதம்பரத்தை போலவே இங்கும்  காலை மாலை இருவேளைகளிலும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை.  சிதம்பரத்தில் இருப்பது போலவே இங்கும் ஸ்ரீ கோவிந்தராஜன் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.  ஸ்தலவிருக்ஷம்  வில்வம்.

 தெற்கே  சிதம்பரம் சென்று ஆகாச க்ஷேத்ர லிங்கம்  தரிசிக்க முடியாதவர்களுக்காக  குட்டி சிதம்பரமாக  யாரோ ஒரு புண்யவான் வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டியது.  ஒரு முக்கிய குறிப்பு. இந்த  ஆலயமும் ஹிந்து அறநிலைய  ''பாதுகாப்பில்'' இருப்பதால்  க்ஷீண நிலையில், பல வருஷங்களாக கும்பாபிஷேகம் கூட செய்யாத நிலையில், யாராவது செய்ய முன்வந்தால்,  அது தடைபட்டு  நிறைவேறாத  நிலையில் உள்ளது வியப்பில்லை.

ப்ரித்வி ஸ்தலம்.  மண்.      சென்னையில்  தங்கசாலையில்  இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தான் ப்ரித்விஸ்தலம். காஞ்சிபுரம் ஏகாம்பரேசர் காமாக்ஷி தான் இங்கும்.  பார்க்/பூங்கா  எனும் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக  இதை அடையலாம். நிறைய  வடநாட்டு மக்கள், குஜராத்திகள், மார்வாரிகள் வாழும் இடத்தில் சுபிக்ஷமாக இருக்கிறார் ஏகாம்பரேஸ்வரர்.  ஏகாம்பரேஸ்வரர் லிங்கமயம். காமாக்ஷி நின்ற திருக்கோலம். ஸ்தல விருக்ஷம் வன்னி மரம்.

ஜம்புகேஸ்வரர்  -  நீர்  ஸ்தலம்.                      
சென்னையின் நீர்ஸ்தலம்  தெற்கே  திருவானைக்கோவில்  போல்  இங்கே  புரசைவாக்கத்தில்  கங்காதீஸ்வரர் ஆலயம். அம்பாள்  பங்கஜாம்பா ள் .  பழைமையான  ஆலயம்.  ராமர் காலத்துக்கும் முன்னே, பகீரதன் இங்கே பிரதிஷ்டை செய்த சிவலிங்கம். பின்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுப்பப்பட்ட இப்போதைய ஆலயம்.  பகீரதன் வரம் பெற  1008 சிவாலயங்கள் ஸ்தாபிக்கவேண்டும். 1007 கட்டிவிட்டான். கடைசி 1008வது எங்கே கட்டுவது என்று இடம் தேடி கஷ்டப்பட்டபோது  பரமேஸ்வரன் கனவில் வந்து ''சென்னையில்  நட, எங்கே  நிறைய  புரசை மரக்காடுகள் தென்படுகிறதோ அங்கே கட்டு.'' என்கிறார்.  புரசைவாக்கம் அப்போது புரசைவனம் , புரசை பாக்கமாக இருந்தது. கங்காஜலம் பகீரதன் கொண்டுவந்ததல்லவா.  பகீரதன் கங்காஜலம் கொண்டு சிவனை அபிஷேகித்து வழிபட்ட இடம். அதனால் சிவன் இங்கே கங்காதீஸ்வரர்.

சரியான பொருத்தமான அப்புலிங்கம், ஜம்புலிங்கம் அல்லவா கங்காதீஸ்வரர்.! வடக்கத்திக்காரர்கள் ஸ்வாமியை தொட்டு வழிபடுபவர்கள் எனவே  அவர்களுக்காக பிரகாரத்தில் குறுந்தமரத்தடியில் நந்தியோடு குறுந்தமல்லீஸ்வரர் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறார். பெரிய குளம் கோவிலை ஒட்டி இருக்கிறது. நல்லவேளை இன்னும் பாழ் படவில்லை.

அக்னி ஸ்தலம்.   சென்னையிலும்  திருவண்ணாமலை போல்,  அருணாச்சலேசுவரர் + அபிதகுலசாம்பாள் திருக்கோவில் உள்ளது.  இது  சௌகார் பேட்டையில் ,பள்ளியப்பன்தெரு வில் உள்ளது. யானைகவுனி  காவல் நிலையம் வரை பஸ்ஸில்  சென்று   அண்ணா பிள்ளை தெருவழியாக நடந்தால் இந்த ஸ்தலத்தை  அடையலாம்.வடலூர்  வள்ளாளர்  அடிக்கடி வந்து  வழிபட்ட ஆலயம் இது.  சிவலிங்கம் பெரிய உருவம்.  அம்பாள்  நின்றகோலத்தில் ஆறு அடி உயரம்.  250 வருஷங்களுக்கு முற்பட்ட ஆலயம். அவசியம் சென்று பார்க்கவேண்டிய ஒன்று.

வாயு ஸ்தலம்.  காற்று :  ஆந்திர தேசத்தில்   காளஹஸ்தியில்   காளஹஸ்தீஸ்வரர்  + ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில் போல  சௌகார்பேட்டையில்,  பவளக்கார தெரு கடைசியில்  அதே பெயரில் ஒரு வாயுஸ்தலம் உள்ளதே. தெரியுமா? சென்னை உயர்நீதிமன்றம் எதிரே தெற்குவடக்காக செல்லும் பிரதான  சாலைகளில் ஒன்று பவளக்கார தெரு. அதில் உள்ள ஆலயம். யார் மீதும் இடிக்காமல்  வாகனங்களில் நசுங்காமல் நடக்கும் திறமை வேண்டும். இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.அல்லது ராயபுரம் மேம்பாலம் எதிரில் பவளக்காரத்தெரு நுழைந்தவுடன் இந்த திருக்கோவிலை அடையலாம். இங்கு காலபைரவ வழிபாடு சிறப்பானது.

நான் மேலே குறிப்பிட்ட  பஞ்சபூத ஸ்தலங்கள் ஏதோ என் வசதிக்காக தேர்வு செய்யப்பட்டவை அல்ல. பல நூற்றாண்டுகளாக ஏராளமாக பக்தர்கள் சென்று வழிபாடுபவை.  ஒரு சௌகரியம்  இந்த  ஐந்து ஸ்தலங்களும் ஒன்றை ஒன்று எங்கோ வெகு தூரத்தில் சென்று அடையவேண்டியவை அல்ல.  நெரிசலில்  ஒரு அரைநாளில் கூட  இதெல்லாமே  காலை  7 மணியிலிருந்து பார்த்து முடிக்கலாம். அல்லது மாலை நான்கு முதல் ஒன்பது மணிவரை எல்லாவற்றையும் தரிசிக்க மனதில் வழி உண்டு. தெருவில் வழி கொஞ்சம் பார்த்து தான் செல்லவேண்டும். நெரிசல் என்று சொன்னேனே.



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...