Wednesday, November 27, 2019

SHEERDI BABA



மனிதருக்குள் ஒரு தெய்வம்   J K   SIVAN 
ஷீர்டி  சாய் பாபா 

                                                        சிம்லா  விஜயம் 

பாபாவை நன்றாக அறிந்தவர்கள் அவரது எல்லையற்ற கருணை, பரிசுத்த ஹ்ருதயம், தன்னலமற்ற சேவையை உணர்வார்கள். குழந்தை மனம் அவருடையது.

கிருஷ்ணப்ரியா என்ற அருமையான பெயர் கொண்ட ஒரு பெண்மணி நாக்பூரில் வசித்தாள்.   தீவிர கிருஷ்ண பக்தை என்பதால் அந்த பெயரை பெற்றிருக்கலாம்.   அவள் உண்மைப்பெயர்  என்னவோ?   அடிக்கடி  ஷீர்டி வந்து பாபாவை தரிசிப்பாள் .  ஒரு தடவை சிம்லா சென்ற போது அங்கே  வீட்டில்  கிருஷ்ணனுக்கு பூஜை செய்துகொண்டிருந்தாள். பாபா என்று  கிருஷ்ணனை கூப்பிடுவாள்.  

அங்கே தான் அவளுக்கு  அன்று  பாபா பூதவுடலை நீத்து  விண்ணேகினார் என்று  மனதில்  காட்சியாக தெரிகிறது. .விஜயதசமி, 1918,   மதியம்  2.30 மணிக்கு.  அடுத்த நாள்  ஏகாதசி திதி.

ரெண்டு வருஷம் முன்பே,  பாபா  அணுக்க தொண்டர்  காகாஜியிடம்  ''அண்ணன்  இன்னும் ரெண்டே வருஷம் தான் இருப்பான். அவன் டைம் அதோடு  ஓவர் ''  என்று  சொல்கிறார். காகாஜி போன்ற  இன்னொரு   பாபா  பக்தரை எல்லோரும்  ''அண்ணன்''  என்பார்கள். அவரும் உடல் நிலை சரியின்றி இருந்தார். அவரைப்பற்றி  தான்   பாபா  சொல்கிறார் என்று  காகாஜி நினைத்தார். பாபா  தன்னைத் தான்  ''அண்ணன் '' என்கிறார் என்று கருதவில்லை. 

28.9.1918 அன்று  பாபாவுக்கு  நல்ல  ஜுரம். உடம்பு நெருப்பு மாதிரி கொதிக்கிறது.  அதற்கு ரெண்டு நாள் முன்னர்  தானே  தெருக்களில் சில வீடுகளில் உஞ்சவிருத்தி எடுத்து உணவு கொண்டு வந்தார்.  மத்தியானம்  பக்தர்களை எல்லாம் சந்தித்தபோது  ''என்னை  இந்த  சத்திரத்திலிருந்து   பூட்டிவாடாவுக்கு  கொண்டு செல்லுங்கள்  அங்கே  எனக்கு  ஓய்வாக, அமைதியாக இருக்க   இயலும்'' என்கிறார்.

பூட்டிவாடா என்கிற அந்த இன்னொரு சத்திரம்  பூட்டி என்பவர் கட்டிய  இடம். அங்கே அழகான  ஒரு கிருஷ்ணன்  கோவில் கட்டி  இருந்தார்  பூட்டி.   அதில் கிருஷ்ணன் விக்ரஹத்தை பாபா தனது கையால்  ஸ்தாபிக்க வேண்டும் என்று பூட்டிக்கு ஆசை. ''முரளிதரன்''  என்று கிருஷ்ணனுக்கு  பெயர்  வைத்திருந்தார் . என்ன காரணமோ  அன்று வரை பாபா முரளிதரனை ஸ்தாபிக்கவில்லை. 

''நீங்கள் இருவரும் போய்  சாப்பிட்டு விட்டு வாருங்கள்''  என்று காகாஜி, பூட்டி  இருவரையும் அனுப்புகிறார். பாபாவுக்கு ஜுரம் கொஞ்சம்  விட்டிருக்கிறது போல் இருக்கிறது என்று இருவரும் சாப்பிட செல்கிறார்கள்.  தலைகாணி அடியில்  ஒன்பது  ஒத்தை ரூபாய்  காசுகள் பாபா  வைத்திருந்தார்.   அருகே  லட்சுமி பாய் மட்டும் இருந்தாள் . அவளை  ''கிட்டே வா''  என்று ஜாடை காட்டி அவளிடம்  அந்த ஒன்பது காசுகளை  கொடுக்கிறார்.  

''ஷ்யாமை வரச்சொல்''  என்றதும் அவன் பாபா  அருகே வந்து அமர்கிறான்.  ஷ்யாம்  தோளில்  பாபா  சாய்ந்து கொள்கிறார். அதுதான் பாபாவின் கடைசி செயல் பூலோகத்தில்.  அடுத்த கணம் அமரரானார்.

இதெல்லாம்  எங்கோ சிம்லாவில் இருக்கும்  கிருஷ்ண ப்ரியாவிற்கு தெரியவந்ததும் துக்கம் அவளை வாட்டியது. கதறினாள். நல்ல குளிர் காற்று மழை தூறல்.

மறுநாள் காலை கதவு ஜன்னல் எல்லாம் மூடிவிட்டு வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறாள்.  

அந்த நேரம்  அடுத்த வீட்டு வாசலில் ஒரு உயரமான நீண்ட அங்கி அணிந்த  துறவி நிற்கிறார்.''இது தான்  மாதாஜி கிருஷ்ண ப்ரியா வீடா?'' என்று அந்த வீட்டில் கேட்கிறார்.

சிம்லாவில்  இருக்கும்  கிருஷ்ணப்ரியா வீடு அவருக்கு  தெரியும்.  மற்றவர்களுக்கும்  தான் வந்தது தெரியவேண்டும் என்பதற்காக  அப்படி விஜாரிக்கிறாரா? அந்த வீட்டுக்காரர்  ஒரு வேலையாளிடம்  குடை கொடுத்து அந்த துறவியை  கிருஷ்ணப்ரியா வீட்டுக்கு அனுப்புகிறார்.   கதவு தட்டப்படுகிறது.

கிருஷ்ண பிரியா கதவை திறந்தால்  எதிரே பாபா  நிற்கிறார்.   அவளுக்கு ஆச்சரியம்.  கண்களை நம்பமுடியவில்லை. எப்படி  நேற்று  ஷீர்டியில் காலமான பாபா  சிம்லாவில் இன்று காலை என் எதிரே நிற்கிறார்??

''பாபா''..தழுதழுத்த துக்கம் தோய்ந்த குரலில் ...'' நீங்களா   நேற்று..........?????   அதற்குள் இவ்வளவு தூரம்  எப்படி நடந்து ஷீர்டியிலிருந்து சிம்லா  வந்தீர்கள்.   நடக்கவே மூன்று நாளாகுமே '' என்னென்னவோ  வாய் குழறி பேசுகிறாள்.

''பெண்ணே... நான் எதற்கு நடக்கவேண்டும்?  நான்தான் எங்கும்  இருக்கிறேனே.  என்னை நீ கிருஷ்ணனாக வழிபாட்டாய்.  என்னை பற்றி உனக்கு அவ்வளவு தான் தெரியுமா?   ரொம்ப குளிருகிறது.  முதலில்  உள்ளே போய் கொஞ்சம் சூடாக  டீ  போட்டுக்கொண்டு வா.''

அவள் தந்த தேநீரை பருகுகிறார்.  ''பசிக்கிறது''  என்கிறார்.  வீட்டில் சப்பாத்தியும் ,  அவருக்கு பிடித்த கத்திரிக்காய் சப்ஜியும்  இருந்தது.   

தருகிறாள்.  திருப்தியாக சாப்பிட்டு விட்டு கை கழுவி அவள் கொடுத்த துண்டில் கை  துடைத்துக் கொள்கிறார். 

''எதற்கு இவ்வளவு தூரம் உன்னை பார்க்க வந்தேன் தெரியுமா?  நான் எதற்கு வந்தேனோ அந்த காரியம் முடிந்து விட்டது. நான் போகிறேன்'' 

 சாதாரணமாக பாபாவிடம் பேசவே பக்தர்கள் தயங்குவார்கள்.  பயப்படுவார்கள்.  சட்டென்று கோபம் வந்து கைத்தடியை தூக்கி அடிப்பார்.  எதிர்த்து ஏதாவது யாராவது பேசினால் பிடிக்காது.   கிருஷ்ண ப்ரியா அவரை ஒன்றும் கேட்காமல் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.ஒரு மல்லிகைப்பூ  மாலையை அவளிடம் கொடுத்து விட்டு  செல்கிறார்.

வாசலில் வெகு தூரம் அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். கடைத்தெரு வீதி . சிம்லா   மலைப்பாதை வீதிகளில் பக்கத்தில்  ரம்யமான இயற்கை வளம் கொழிக்கும்  பள்ளத்தாக்குகள் . வீதியில்  பணியாளர்கள் தெருவில் ஏதோ ரிப்பேர் செய்து கொண்டிருந்தார்கள்.   பாபா  மலைப்பாதை ஓரமாக நடக்கிறார். ஒரு இடத்தில் பக்கத்தில் பள்ளத்தாக்கை நோக்கி காலை எடுத்து வைக்கிறார். வேலையாட்களில் ஒருவன் இதை பார்த்தவன் ஓடி அவரை கீழே பள்ளத்தில் விழாமல் தடுக்க நெருங்குகிறான். அங்கே  யாரையும் காணோம். பாபா  எங்கே  மறைந்தார்?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...