Sunday, November 24, 2019

MOBILE PHONE

                                                                      

      ஏன் எங்களை மட்டும்  மாட்டி விட்டாய்?..   J K  SIVAN 

கெட்ட பழக்கம் எது?   எதையாவது செய்து அதனால்  புத்தி  கெட்டுவிடுவது தான்  கெட்ட பழக்கம் என்று சொல்லலாம்.  ஒரு காரியத்தையே  பிரயோசனம் இல்லாமல் திரும்ப திரும்ப செய்ய வைத்துவிடுவதாலும் அது கெட்ட பழக்கமாகிறது.  

அப்படியென்றால் எல்லோரிடமும் இருக்கும்  கெட்ட பழக்கம், எதை பார்த்தாலும்  மொபைல் போனில் அகப்பட்டதை எல்லாம் படிப்பது, பார்ப்பது, அதை மற்றவர்களுக்கு அனுப்புவது.  ஒருநாளைக்கு எனக்கு 200 க்கு குறையாமல் ஏதெல்லாமோ வருகிறது, அழித்து விறல் சின்னதாக குறைந்து போகிறது. இது எனக்கு கெட்டபழக்கம் ஆகிவிட்டது.  வீட்டில் யாரிடமும் பேச நேரம் இல்லை. எப்போது பார்த்தாலும் என்ன  போனை நோண்டிக்கொண்டே இருக்கிறீர்கள்? என்ற வார்த்தை அடிக்கடி காதில் விழுகிறது.  படிக்காமலேயே மொத்தமாக அழித்தும் போனில்  இடம் அடைத்துக் கொண்டு STORAGESPACE  சிகப்பாக முழுதுமாக நிரம்பி விடுகிறதே. 

கண்ணால் பார்க்கும்போதே அழிந்து போகிறமாதிரி ஏதாவது ஒரு APP   ஏன்   யாராவது கண்டுபிடிக்கக்கூடாது?    மனதால் நினைக்கும்போதே எல்லாம் அழிந்து போகிறமாதிரி கிடைத்தால் சிலர்  அனுப்பும்  விஷயங்களிலிருந்து தப்புவது ரொம்பவே சௌகர்யம்.

இதைக் காட்டிலும் ரொம்ப கொடுமையான கெட்ட பழக்கம் அப்படி நமக்கு வரும்  வாட்ஸாப்ப் விஷயங்களை நம்புவது. மற்றவரையும் நம்ப வைப்பது. ஈ மெயிலில்  இந்த தொந்தரவு இல்லை என்று சொல்லமுடியாது.  அதிலும் ஆபத்து இருக்கிறது.  ஆனால் இவ்வளவு இல்லை 

முக்கால்வாசி இந்த செய்திகளில் சில நகத்தை கடிக்க வைப்பதால் இன்னொரு கெட்டபழக்கமும்  சேர்ந்து விடுகிறது. 

நகத்தின்   இடுக்கில்  உள்ள அழுக்கு உள்ளே போய் நமக்கு  சில பாக்டீரியா பழக்கமாகிவிடுகிறது என்று நகம் கடிக்காத டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படி வாட்சப்பினால்  மொத்தத்தில்  நாம்  உருப்படியாக  உழைக்கும் நேரம் குறைந்து விட்டது. சமையல் அறையிலும் சேர்த்து என்று சொல்லியாகவே வேண்டும்.

போனில் வந்த வாட்ஸாப்ப் விஷயம் பற்றி நண்பிகள், நண்பர்களுடன் வாதம் செய்வதால் நண்பர்கள் விரோதிகளாகிறார்களோ? அடிக்கடி இப்படி வாதிப்பவர்களது போன் வந்தால் எடுப்பதில்லை என்பதால் விரோதம் தானே வளரும்? பதினைந்து நிமிஷமாவது இந்த செய்திகள் குறைந்த பக்ஷம் வாதிக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி முடிவு.

மொபைல் போன் மூலம் வளரும் இன்னொரு கெட்ட பழக்கம் தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்வது. SELFY.  இதை நண்பர்களுக்கு அனுப்பி  வாட்ஸாப்ப்  முகநூலில்  போட்டு  பயமுறுத்துவதால்  இதய நோய் டாக்டர்களுக்கு கொண்டாட்டம்.

 அமேரிக்கா ஆஸ்திரேலியா , ஐரோப்பா -   இந்திய நேரங்கள் வித்தியாசம் வேறு  ஒரு முக்கியமான விஷயம்.   இரவு அங்கே பகலாக இருப்பதால்  இரவெல்லாம்  போனில்  வாட்ஸாப்ப் CHAT  பண்ணுபவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறார்கள். ஊர் உலகம் உறவு பற்றி எல்லாம்  கொள்ளை கொள்ளையாக வம்பு அடிப்பதால்  கண்ணும் நேரமும்  காசும்  கெடுவதால்  இ.பி.கோ. வில் இதற்கு தண்டனை சீக்கிரம்  உண்டு என்று ஷரத்து ஒன்று போடப்படலாம் என்று காற்றுவாக்கில்  பேச்சு.

 ஒரே வடிவேல்,, செந்தில் கவுண்டமணி காமெடி களை , நூறு பேர் அனுப்பினால் எப்படி சிரிப்பதாம்?  கோபம் தான் வருகிறது. அந்த நடிகர்கள் மேலும் அதை அனுப்பியவர் மேலும்.  சிலர்  நமக்கு  நண்பர்கள் இல்லாவிட்டாலும்  எப்படியோ நமது போன் நம்பருக்கு இதெல்லாம் அனுப்புகிறார்கள், இதில் அவர்களுக்கு என்ன லாபம் என்று  தெரியவில்லை.    ஆனால் என்போல்  ஏமாந்தாங்குளி பெறுநர்கள்  கொடுக்கும் சாபம் அவர்களை துன்புறுத்தும் என்பது நிச்சயம்.   அழிக்க அழிக்க அழியாத அரக்கன் இந்த வாட்ஸாப்ப் அவிஸல் ஜோக்குகள்.  எனக்கு எதற்கு சுடலை, சுட்லர்  ஜோக்குகள்?.   இதனால் யார் பேசினாலும்   ......... அவர்  தப்பு தப்பாக பேசுகிறது போலவே  மன நிலை பாதிக்கப் படுகிறது  நமக்கு  நல்லதில்லையல்லவா?

மொபைல் போனில் இன்னொரு ரொம்ப கொடுமையான ஆபத்து,  ர் யாரோ  குட் மார்னிங், குட்  ஈவினிங், குட் நைட்  களைப்பில்லாமல் தினமும்  சொல்வது. நல்ல மார்னிங், ஈவினிங் எல்லாமே    கெட்டுவிடுகிறது இதனால்.  நண்பர்களே  மொபைல் கண்டுபிடிக்கும் முன்பே  எல்லா நேரமும் நல்ல நேரம் தானே. யார் இதை குறிபிட்ட நேரமாக குறைத்தது?

முன்பெல்லாம்  இந்த படத்தை  உற்றுப்பார்த்துவிட்டு  உடனே  12 -15 பேருக்கு அனுப்பாவிட்டால் கெடுதி விளையும். அனுப்பினால் நல்லது நினைத்தது நடக்கும் என்று  பயமுறுத்தும்  செய்தியை நம்பி அது சொன்னபடியே   நடந்தததால்   என்ன ஆயிற்று ?  அந்த இருபது  பேரும்  அவர்கள் அனுப்பின இன்னொரு செட்   இருபது பேரும்  அதே செய்தியை  படத்தை  நமக்கு அனுப்பிவிடுகிறபோது விடிவு ஏது ?

பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் முதல்,  தெருவில், பொது இடங்களில் நடக்கும், வண்டிகளில் பார்க்கும் ஆண்கள் பெண்கள்,  வேகமாக கார் ஓட்டும் நபர்கள் வரை  மொபைல் போனின் அடிமைகளாக இப்படி சிக்கலில் மாட்டிக்கொள்வது நாட்டுக்கு நல்லது இல்லை.  குடும்பத்தில் ஓவ்வொருவரும்  நேரில் பேசிக் கொள்வதை விட வாட்சப்பில் பேசிக்கொண்டால் தான்  கவனிக்கிறார்கள். பதில் சொல்லுகிறார்கள்..

''கிருஷ்ணா,  நீ மொபைல் போன் கண்டுபிடித்து வாட்சப்பை அதில் நுழைத்திருந்தால்  கௌரவர்கள் நூறுபேறும், அவர்களை சேர்ந்தவர்களையும் ஒரே நாளில் கொன்றிருக்கலாம். 18 நாள் எதற்கு எவ்வளவோ ரத்தம் அம்புகள், யானைகள், குதிரைகள் , ரதங்கள் காலையிலிருந்து சாயந்திரம் வரை யுத்தம் ... சேதம்.? 

ஏன் இப்படி நீ பண்ணவில்லை? அதுவும் உன் மாயமோ? கலிகாலத்தில் எங்களுக்காக இதை பிரத்யேகமாக வைத்திருந்து இப்போது நைஸாக  வெளியே விட்டிருக்கிறாயோ? 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...