Monday, July 30, 2018

ORU ARPUDHA GNANI


ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

6 ''என் பிள்ளை இவன்''

நான் எனது என்பதே ஒரு மைல் தூரத்துக்கு இருக்கக்கூடாது என்று எல்லோருக்கும் போதிக்கும் சில காவிகள் தங்களது படம், பெருமை, கடவுள் சக்தி என்று பீற்றிக்கொள்ள பத்திரிகை, வெளிநாட்டு பயணம், பணம், மற்றும் மீடியாவை தேடும் காலத்தில், இப்படியும் ஒருவரா என்று வியக்க வைக்கிறார் சேஷாத்திரி ஸ்வாமிகள். எவருமே அருகில் வரக்கூடாது. சொந்தம் கொண்டாட கூடாது. எங்கும் ஒரு இடத்தில் நிலைத்திருக்க மாட்டேன். வசதி வேண்டாம் என்று இருந்தவர். அவரது வாழ்க்கை அசாத்தியமானது. உண்மையான காமாக்ஷி ஸ்வரூபம். சர்வ மந்த்ர தவ சக்தி உடைய ப்ரம்ம ஞானி.

'' எதற்கு நெற்றி நிறைய குங்குமத்தை அப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று யாரோ ஒரு பக்தர் கேட்டார் ஸ்வாமிகளிடம்.

''அசடே, நான் யாரா டா? தெரியலே உனக்கு. உன் அம்மாடா . சாக்ஷாத் பார்வதி தேவி'' என்பார் சேஷாத்திரி ஸ்வாமிகள்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடாச்சல முதலியார். அதிகாலையிலேயே எழுந்து சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே சிவகங்கை குளத்துக்கு நடந்து சென்று அங்கே ஸ்நானம் செய்து அன்றாட நித்யானுஷ்டானங்களை முடிப்பது அவர் வழக்கம். குளத்துக்கு எதிரே தான் பழைய ஆயிரங்கால் மண்டபம்.

ஒருநாள் இப்படி குளத்தில் ஸ்நானம் செயது கொண்டிருந்த போது மண்டபத்தில் ஏதோ சப்தம். காலை வேளையில் இங்கென்ன சப்தம்? முதலியார் சுற்று முற்றும் பார்த்தார்.

குளத்தங்கரையில் முதலியார் ஈர வஸ்திரங்களை சுற்றியபடியே மண்டபத்தை அடைந்தார். அங்கே ஒரு பக்கத்தில் சில சிறுவர்கள் கையில் கற்கள் வைத்துக்கொண்டு அங்கிருந்து மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த பாதாள லிங்க கோயிலுக்குள் வீசிக்கொண்டி ருந்தார்கள்.

சுற்றி முற்றும் பார்த்த முதலியார் பாதாள லிங்க கோயிலுக்குள் எட்டிப் பார்த்தார். அதிலிருந்து ''ஹா ஹா'' என்று இடி முழக்கம்போல சிரித்துக் கொண்டு சேஷாத்திரி ஸ்வாமிகள் வெளியே வந்தார்.

வந்தவர் கையில் ஒரு குச்சி வைத்துக் கொண்டிருந்ததால் அதால் அந்த சிறுவர்களை ஓட ஓட விரட்டினார். சிறுவர்கள் அவரை தான் தாக்கிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு முதலியாரிடம் வந்தார். ''வா என்னோடு, என் பிள்ளையைப் பார்த்திருக்கியா, வா காட்றேன் ?''

''என்ன சாமி இது ? உங்களுக்கு ஏது சாமி புள்ளை ? கல்யாணமாகாத ஒத்தை கட்டை நீங்க '' முதலியார் சிரித்தார்.

ஸ்வாமிகள் முதலியாரின் கைகளை பிடித்து வலுவாக தர தர வென்று இழுத்துக் கொண்டு அந்த இருட்டு பாதாள லிங்க கோவிலுள் சிறிய படிகளில் நடந்தார்.

''எதற்காக இவர் என்னை வேகவேகமாக இப்படி இழுத்துக் கொண்டு இந்த குகையில் இறங்குகிறார். என்ன விளையாட்டு இது?''

முதலியாருக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னவென்று தான் பார்க்கலாமே. ஏதோ காரணம் இல்லாமலா இருக்கும்?

''லிங்கத்துக்கு பின்னாலே பார் ''

ஒரு தலை தெரிந்தது.

என்ன ஆச்சர்யம்! ஒரு சிறு பிள்ளை பாதாள லிங்கத்துக்கு பின்னால் அமர்ந்தவாறு தவத்தில் ஆழ்ந்திருந்தான்.

யார் இவன்? இதுவரை பார்த்ததில்லையே?'' முதலியார் வியந்தார்.

''இது தான் என் குழந்தை! நன்னா பார்!. ஸ்கந்தன் இவன். என் பிள்ளை'. இனிமே நீ பார்த்துக்கோ '' என்று சொல்லிக்கொண்டே ஸ்வாமிகள் வெளியே ஓடிவிட்டார்.

முதலியார் அந்த சிறுவனைப் பார்த்தார். கண்கள் மூடியிருந்தது. உடல் கற்சிலையாக அசைவற்று இருந்தது. கால்களை மடக்கி அமர்ந்திருந்தான். உடம்பெல்லாம் என்னன்னவோ வித பூச்சிகள். அவனது துடைகளை பூச்சிகள் அரித்து சில அங்குலங்கள் ஆழமாக துளையாக்கி அதிலிருந்து ரத்தம் பீறிட அவற்றை உண்டு கொண்டு எண்ணற்ற ஜந்துக்கள்.

இவன் யார் எப்படி இதற்குள் வந்தான்? கர்ப கிரஹத்தில் எப்படி நான் நுழைந்து அவனை அணுகுவது ?

அதிர்ச்சி அடைந்த முதலியார் இருட்டிலிருந்து படியேறி வெளியே வேகமாக வந்தார். கண்ணில் பட்ட சிலரை அழைத்து வந்தார். எல்லோருமாக அந்த சிறுவனை அப்படியே தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவனுக்கு அப்போதும் உலக நினைவே இல்லை.

அந்த சிறுவனே பிற்காலத்தில் ரமண மஹரிஷியாக உலகமே போற்ற திருவண்ணாமலைக்கு தனிச் சிறப்பு வாங்கித் தந்த மஹான்.

எப்படி சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு இந்த பாதாள குகையில் சிவலிங்கத்திற்கு பின்னால் இருட்டில் அமர்ந்திருந்த ரமணனை தெரிந்தது?

அவனை துன்புறுத்திய சிறுவர்களை அடித்து துரத்தி அவனைக் காத்து, முதலியாரைப் பிடித்து அவர் பொறுப்பில் ரமணனை விட்டு, வெளியே கொணரச் செய்த தாயன்பை எந்த வார்த்தையால் நான் விளக்குவேன்?
-
ஓஹோ.. ''நான் தான் உனது அம்மாடா, பார்வதி'' என்று சொன்னது இந்த அர்த்தத்தில் தானா??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...