Wednesday, July 18, 2018

kudhambai siththar



  குதம்பை சித்தர்.   ஜே.கே. சிவன் 

 நான் எதையாவது சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றால் மற்றவருக்கு எப்படி அதை விளக்க முடியும்? ஆகவே நிறைய  ஆத்ம விசாரம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. நிறைய மகான்களை படிக்கவேண்டியிருக்கிறது.  தூக்கம் போய் விட்டது.
அப்போது தான் சித்தர்கள் புரிவார்கள்.  அவர்கள் சொல் அர்த்தம் கொடுக்கும்.  ஆனால் குதம்பை சித்தர் வாக்கு தலையை சொரிய வைக்காது.  சட்டென்று உள்ளே புகும். அற்புத எழுத்து.  மொத்தம் மூன்றடி. ரெண்டாவதும் மூன்றாவதும் ஒன்றே.   பள்ளிக்கூடத்தில் வாத்தியார்  பையன்களிடம்  ''என்ன புரியறதா?''  என்று ரெண்டு மூன்று தடவை அந்த காலத்தில் கேட்பார்.  குதம்பை சித்தர் மகா பெரிய வாத்தியார்.

''அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.''


சூரியன் பிம்பம் உத்ரணி ஜலத்திலும் அதே ஒளியுடன் கண்ணைக் கூசி பிராகாசிக்கும். அதுபோல அப்பாலுக்கு அப்பால் உள்ள பிரபஞ்சம் கடந்த பரமாத்மன் நம் ஒவ்வொரு ஜீவாத்மாக் குள்ளும்  இருக்கிறான் என்று மண்டையில் அடிக்கிறாற்போல் சொல்கிறார் குதம்பை சித்தர்.

''ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி.
'நமது ஜீவனுக்கு உற்ற துணையாம் அந்த பரமாத்மாவை, பேரன்பை,போற்றிப்  பாடடி பெண்ணே  என்கிறார் 

''தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.''

பகவான்  ஜோதி ஸ்வரூபன். சதா சர்வகாலமும் ஒளிவிடுபவனை  தீபமாக கண்டு வணங்குகிறோம். அவனது நினைவு ஒன்றே மனதில் ஆழப்பதிந்துவிட்டால்  மரணத்துக்குப் பின்னும் அவன் வாசனையாக தொடர்வான். அவனையே அடைய வைப்பான். 

அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.

ஜீவாத்மா பரமாத்மா இரண்டுமே ஒன்றே, அவனே தான் நாம்  என்பதை தான்  மஹா வாக்கியங்கள்  தத்வம் அசி, அஹம் ப்ரம்மாஸ்மி  என்று சொல்கிறது.  அவனை சரணாகதி அடைந்து பரகதி பெறுவோம்.

விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி.

பகவானையும் அவனது  சங்கல்பங்களையும், செயல்களையும் நினைத்தால் அதைவிட பேராச்சர்யம் ஒன்றுமே இல்லை. அதை நினைப்பதே நமக்கு ஆச்சர்யமாக போய்விடுகிறதே.

விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.

இந்த பிரபஞ்சத்துக்கு காரணமாக நிற்கும் அந்த பரம்பொருளை புரிந்துகொண்டவன் கண்களால் காண்பது எதுவும் அந்த பரமனே. அது தான் கண் செய்த பாக்யம்.

பத்தி சற்றில்லாத பாமர பாவிக்கு
முத்திசற்று இல்லையடி குதம்பாய்
முத்திசற்று இல்லையடி.

குப்புசாமி, கோவிந்தசாமிக்கு  பணம் தண்டல் பண்ணவே நேரம் இல்லை . அகட  விகட சாமர்த்தியங்கள் பண்ணி ஊரை ஏமாற்றி  காரில் சவாரி செய்பவனுக்கு  பகவானை நினைக்க நேரம் ஏது ?  கடைசியில்   மோக்ஷமா கிட்டும். நாம் தான் பார்க்கிறோமே  படும் கஷ்டங்களை. இன்னும் நிறையவே இருக்கிறதே. 

எல்லாப் பொருளுக்கு மேலான என்தேவைச்
சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.

உலகத்தில் இருக்கும் எந்தப்  பொருளும்  தராத சுகத்தை, இன்பத்தை, சந்தோஷத்தை, அந்த பகவான் திருநாமங்கள் தருகிறதே. உணரவேண்டாமா? இது தானே நிலையானது. சாஸ்வதமானது.

இன்னும் குதம்பை சித்தரை நிறைய ருசிப்போம். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...