Saturday, July 14, 2018

ORU ARPUDHA GNANI



                               ஒரு  அற்புத ஞானி....J.K. SIVAN


நான் என் வாழ்நாளில் ஏதாவது  சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறேன் என்றால் மகான்களைப்பற்றி , மஹேஸ்வரனைப் பற்றி, மஹா விஷ்ணுவின் பல அவதாரங்களை பற்றி சிந்தித்தது, எழுதியது, பேசியது என்று தான் நினைக்கிறேன். 

அப்படி எழுதிய பல புத்தகங்களில் ஒன்று திருவண்ணாமலை மஹான், ப்ரம்மஞானி ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி எழுதியது ஒன்று. அதை '' ஒரு அற்புத ஞானி'' என்று அவரைப் பற்றி எழுதிய அந்த புத்தகம் பல பக்தர்களை கவர்ந்திருக்கிறது. அவர்களுடைய ஆசியுடன் வாழ்த்துடன் மீண்டும் அந்த புத்தகத்தின் அத்தியாயங்களை இங்கே உலவ விடுகிறேன்.  புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம்.

++

வெகுநாளாகவே ஒரு ஆசை. எதற்காக தள்ளிபோய்க்கொண்டே வருகிறது என்று சொல்ல வழியில்லை. நேரம் வரவில்லை என்று தான் சொல்வேன். திருவண்ணாமலை என்று சொன்னால் உடனே எனக்கு இருவர் பெயர் தான் நினைவுக்கு வரும். இருவருமே சந்யாசிகள். இருவர் பேசுவதும் புரியாது. பித்தன் பேசுவதும் சித்தன் பேசுவதும் புரியாது என்பார்கள். பைத்தியமும் ஞானியும் ஒன்று என்று சொல்வதும் உண்டு. ஞானி பைத்தியம் இருவருக்குமே சித்தம் அவர்கள் வசம் கிடையாது என்பார்கள். ஆனால் ஒரு உண்மை. ஞானி பைத்தியம் போல் இருக்கலாம். பைத்த்யம் எல்லாம் ஞானியாகாது.

அந்த ரெண்டு மஹான்கள் ரமண மகரிஷியும் சேஷாத்திரி ஸ்வாமியும் தான். இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதால் தான் இருவருக்கும் நிறைய பொருத்தங்கள் இருந்தது போல் இருக்கிறது.

இதில் ரமணரைப் பற்றி தினமும் எழுதி வருகிறேன். சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி ஏனோ இதுவரை ஆழமாக உழைத்து எழுத முயற்சிக்கவில்லை. நேரம் வந்துவிட்டது போல் இருக்கிறது. முத்துஸ்வாமி மோகன் என்று ஒரு நண்பர். வீடு வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான புத்தகங்கள் பாழாகி விட்டன என்று சுட்ட வறட்டியை போல் ஒரு புத்தகத்தை என்னிடம் நீட்டினார். அட்டையில் சேஷாத்திரி ஸ்வாமிகள். அவரைப் பற்றி எழுதியவரோ 1939ல் சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர் குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரிகள். இந்த புத்தகத்தை என்னிடம் அளிக்கும்போது நண்பர் அவர் மனைவி மாலினி ஆகிய இருவருமே சேஷாத்திரி பைத்தியங்கள் என்று சொன்னதும் மாலினி அம்மாள் நிறைய பாடல்கள் அவரைப் பற்றி இயற்றியிருக்கிறார் என்றும் அறிந்து சந்தோஷப்பட்டேன். என்னை பார்ப்பதற்கு அந்த அம்மாளும் நண்பரோடு வந்திருந்தார். எதுவும் பேசவில்லை. பேச்சு எதற்கு. மனம் தான் பேசுகிறதே. இதை நீங்கள் எழுதவேண்டும் என்று கண்ணால் ஒரு கட்டளை போதுமே. இதோ ஆரம்பித்தாயிற்றே.

குழுமணி சாஸ்திரிகள் புத்தகத்தில்  மிக சிறந்த வகையில் ஸ்வாமிகளை பற்றி அறிய முடிந்தது. அதில் ஸ்வாரஸ்யத்தை கூட்டி சிறு குழந்தைகளும், என் போன்ற அஞ்ஞானிகளும் எளிதில் புரிந்து கொள்ள முயற்சி எடுத்து  இதை சமர்ப்பிக்கிறேன்

இதில் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் கொஞ்சம் விவரித்துள்ளேன். மூல விஷயங்களை மாற்றவே கூடாது. நடந்த சம்பவங்களை பற்றி எழுதும்போது நடக்காதவற்றை கூட்டி சொல்வது மகா பாபம். எண்ணற்ற சேஷாத்திரி சுவாமி பக்தர்கள் மனம் நோகும். அந்த தவறை நான் என்றும் செய்வதில்லை.

இது ஸ்வாமிகளின் வாழ்க்கை சரித்திரம் அல்ல. ஒரு சரித்திர புத்தகமும் இல்லை. அது தெரிந்து ஆகவேண்டியது ஒன்றுமில்லை. சேஷாத்திரி ஸ்வாமியை ரசிக்க எந்த பக்கத்திலிருந்து ஆரம்பித்து படித்தால் என்ன. தேன் கிண்ணத்தில் இனிப்பும் சுவையும் அடியிலிருந்து மேல் வரை ஒன்றாகவே தானே இருக்கிறது. இலையில் நிறைய அதிருசியான பதார்த்தங்களை பரிமாறி இருந்தால் எதை வேண்டுமானாலும் முதலில் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாமே.

''அதிகம் வெளியே தெரியாத ஒரு மஹான்'' என்ற தலைப்பில் ஒவ்வொருநாளும் இப்புத்தகத்தின் கட்டுரைவல் ஒவ்வொன்றாக  வெளிவந்தபோது எண்ணற்ற வாசக அன்பர்கள்  மகிழ்ச்சியோடு வரவேற்று,  என்னைஊக்குவித்து மேலும் மேலும் முயற்சி எடுத்து இதை எழுத வைத்தார்கள். அவர்களுக்கு எப்படி என் நன்றியை சொல்லுவேன். சேஷாத்திரி ஸ்வாமிகளின் அருள் அவர்களை அடைய பிரார்த்திக்கிறேன். கண்கண்ட தெய்வம் அவர் இன்னும் நம்மோடு  சூக்ஷ்ம சரீரத்தில் வாழ்ந்து நமது தேவைகளை பூர்த்தி செய்விக்கிறார் என்பதில் எனக்கும் எண்ணற்ற அவர் பக்தர்களுக்கும் கடுகளவும் ஐயமில்லை.

வழக்கம்போல்  இந்த ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டியின் வெளியீடும் எந்த விலையும் இன்றி பளிச் சிறுவர்களுக்கும் படிக்க விரும்பும் ஏனையோருக்கும் கிடைக்கும்.   இத்தகைய புத்தகங்கள்  எங்கள்  வெளியீடாக வருவதற்கு நாங்கள் பல ஜென்மங்களுக்கு  தாராள மனம் கொண்ட எண்ணற்ற வாசகர்களுக்கும்  தர்மிஷ்டர் களுக்கும் கடன் பட்டிருக்கிறோம். எங்களது உழைப்பு பயன் பட வைத்த எல்லோருக்கும் என்னை ஆட்டிப்படைத்து எழுதவைத்த என்  இறைவன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும்  இதை சமர்பிப்பதில் பூரண திருப்தி.

J.K. SIVAN, NANGANALLUR

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...