Wednesday, July 25, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி   -------      ஜே.கே. சிவன் 

         

  4.  இவன் ஒரு பரிவ்ராஜக யோகி 


சாஸ்திரம் சகலமும் அறிந்தும், ஞானம் நிரம்ப பெற்றும், பக்தி பூஜை எல்லாமே இருந்தும் விதியை, கர்மபலனை அனுபவிக்காமல் யாராலும் தப்ப முடியாதே. 

வயது நிறைந்த காம கோடி சாஸ்திரியாரை துக்கம் வாட்டியது. அருமையான மருமகன் மறைந்தான், மகள் விதவையானாள் . பற்றற்றவர். தபோவனம் போன்ற வழூர் ஆஸ்ரமத்தில் வாழ்ந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்றார்கள். ஞானம் பெற்றார்கள். எல்லாமே இலவசம். அவர்களில் ஒரு சிஷ்யர் பொட்டி மஹாதேவ செட்டியார். சாது. ஸர் பிடி தியாகராஜ செட்டியாரின் அப்பா. இவர் பெயரால் தான் தியாகராயநகர் (தியாகராயநகர் எனும்  T  NAGAR இவர் பெயரால் விளங்குகிறதோ?)

செட்டியார் சாஸ்திரிகளிடம் ஒரு மந்திர உபதேசம் பெற்றார். ''லட்சுமி கடாக்ஷ மந்த்ரம்'' . அந்த மந்த்ர பலனால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஒரு நாள் 4000 ரூபாயை மூட்டை கட்டிக்கொண்டு காமகோடி சாஸ்திரியாரிடம் வந்தார்.

''என்ன இது செட்டியார்''
''குருநாதா, உங்கள் உபதேசத்தால் எனக்கு பெரும் தன லாபம் கிடைத்தது''
''ரொம்ப சந்தோஷம்''
''இது என் அன்பு காணிக்கை''
''என்னப்பா இது. உன் போல் நானும் வியாபாரியா? பேசாமல் அதை எடுத்துக் கொண்டு போ'' இங்கே எதுவும் வேண்டாம்''

 இப்படிப்பட்ட ஒரு ஞானி உண்டா? அந்த காலத்தில் 150-200 வருஷங்களுக்கு முன்பு 4000 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்று மனதில் கணக்குப் போட்டு பார்த்துக்  கொள்ளுங்கள்.

நாட்கள் நகர்ந்தன. சாஸ்திரி எண்பது வயதுக்கு மேல் ஆகியும் தனது நித்ய கர்மாநுஷ்டானங்களை செய்து வந்தார்.

''வாங்கோ வேங்கடசுப்பையர்'' என்று ஒரு நாள் ஒரு பக்தரை வரவேற்றார் காமகோடி சாஸ்திரிகள்.. வந்தவர் வேறு யாரு மில்லை. வந்தவாசியில் தாசில்தார். பிரபல திருவாங்கூர் சமஸ்தான திவான் ஸர் சி.பி. ராமஸ்வாமி அய்யரின் தாய் வழி தாத்தா.

'' வந்தவாசியில் உங்க கிட்டே ராமாயணம் பாகவதம் பிரசங்கம் கேட்க வேண்டும் என்று அபிலாஷை. நீங்கள் வந்திருந்து எவ்வளவு நாளானாலும் பூர்ணமாக நடத்தி வைக்கணும் ''

''விருத்தாப்பியம் மூச்சு அடைக்கிறது. சந்தோஷமாக என் பேரன் சேஷாத்திரியை சொல்ல சொல்றேன்.
என்னைவிட நன்னா சொல்வான்.அவனை அழைத்துக்கொண்டு வந்தவாசி வரேன் ''

தாசில்தாருக்கு ரொம்ப திருப்தி.
மரகதம் சேஷாத்ரியோடு சாஸ்திரிகள் வந்தவாசி சென்றார். ராமாயணம் பாகவதம் ஒரு வருஷ காலம் தொடர்ந்து பிரசங்கம் செய்தான் சேஷாத்திரி. எத்தனை பாக்கியசாலிகள் அந்த ஊர் மக்கள்.

அதற்கப்பறம் ரெண்டு மூணு மாசம் சாஸ்திரிகளுக்கு உடம்பு சரியில்லை. குளிர் ஜுரம். ஒருவழியாக சொஸ்தம் ஆகி காஞ்சிபுரம் திரும்பினார்கள்.

ஞானி காமகோடி சாஸ்திரிக்கு தனது அந்திம காலம் வந்து விட்டது என்று தெரிந்து விட்டது. இகவாழ்க்கையை விடுத்து சன்யாசம் மேற்கொள்ளவேண்டும். பிள்ளை இல்லையே.

அப்போது காஞ்சிபுரத்தில் உபநிஷத் ப்ரம்ம மடம் ஒன்று இருந்தது. அதில் ஒரு மஹான். ஸ்ரீ க்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள் என்று ஒருவர் எல்லோருக்கும் கற்பித்து வந்தார். அவரிடம் போனார் சாஸ்திரி.

''ஸ்வாமிகளே, நீங்கள் தான் எனக்கு தீக்ஷை கொடுத்து சன்யாஸாஸ்ரமத்தில் ஏற்றுக் கொள்ளவேண்டும் '' என்று வேண்டினார் சாஸ்திரி.

''திவ்யமா''. ஸ்வாமிகள் சாஸ்திரிக்கு முறைப்படி சன்யாசம் வழங்கினார். காமகோடி சாஸ்திரிகள் இனி ''பிரம்மானந்த சரஸ்வதி''. ஸ்வாமிகளிடம் வேத சிரவணம் செய்தார். தங்குவது காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் சக்ரத்தாழ்வார் சந்நிதியிலேயே. மரகதம் ரெண்டு பிள்ளைகளோடு அங்கு சென்று அவருக்கு பிக்ஷை அளிப்பாள். மூன்று நாலு மாதங்கள் இவ்வாறு சென்றது.

அருகே தாமல் என்று ஒரு கிராமம். அங்கே பரசுராம சாஸ்திரிகள் என்று ஒரு நெருங்கிய உறவினர் இருந்தார். அந்த ஊருக்கு விஜயம் செய்ய ஸ்வாமிகளை (பிரம்மானந்த சரஸ்வதியை) சேஷாத்திரி மரகதம் ஆகியோரை அழைத்தார்.

பத்து நாள் அங்கே சரஸ்வதி உபதேசம் செய்தார். எல்லோருக்கும் பரம திருப்தி.

''இன்று நான் உங்களுக்கு கடைசி உபதேசம் செய்தவுடன் என் பூலோக கடமை முடியும்''  என்கிறார் ப்ரம்மானந்த சரஸ்வதி. அன்றிரவே விதேக முக்தி அடைந்தார்'.

 சேஷாத்திரி ஸ்வாமிகளின் மாமா நரசிம்ம சாஸ்திரி மஹா பூஜை, நாராயண பலி போன்ற சாஸ்திர வைதிக கைங்கர்யங்களை நிறைவேற்றினார்.

அருகே ஒரு கிராமமான தண்டலத்தில் ஒரு சிஷ்யர். தண்டலம் சுப்பாராய அய்யர். இவர் தான் துபாஷ் T,S . ராமஸ்வாமி அய்யர் அப்பா). 

அவர் சகல செலவுகளையும் தாமே ஏற்றார். காமகோடி சாஸ்திரியாக இருந்து பிறகு பிரம்மானந்த சரஸ்வதியாகிய சேஷாத்திரி ஸ்வாமிகளின் தாத்தாவின் அதிஷ்டான பிருந்தாவனம் இன்றும் தாமல் சர்ப்ப நதிக்கரையில் இருக்கிறதா? . 

ஒரு நாள் சென்று தேடி பார்த்து தரிசனம் செய்யவேண்டும்.

இப்போதெல்லாம் மரகதம் வாய் திறந்து பேசுவதில்லை. ஒரு சன்யாசினியாக வாழ்ந்தாள். மூணு வேளை ஸ்நானம். ஒருவேளை அல்ப ஆகாரம். பூஜை. ஜபம். ஒரே ஒரு ஆசை இன்னும் நூலாக ஒட்டிக்கொண்டிருந்தது. சேஷாத்திரிக்கு கல்யாணம் செயது பார்க்கவேண்டும். அவன் அத்தை பெண் காகினி தேவியை கல்யாணம் செய்து வைக்க ஏற்கனவே பேச்சு அடிபட்டது.  அத்தை வெங்கலக்ஷ்மிக்கும் அப்படி ஒரு எண்ணம்.

சேஷாத்திரியின்   சித்தப்பா ராமஸ்வாமி சாஸ்திரி ஜோசியர். அவரைப்   போய் பார்த்தாள் வெங்கலக்ஷ்மி .
சேஷாத்திரி காகினி ஜாதகங்களை கொண்டு போய் ராமஸ்வாமி ஜோசியரிடம் காட்டினாள். வெகுநேரம் சேஷாத்திரி ஜாதகத்தை உற்று பார்த்தார் ஜோசியர். முகம் உடல் வியர்த்தது. வார்த்தை குழறியது.

''வெங்கு,   இது வேண்டாம்டி. இவன் ஒரு பரிவ்ராஜக யோக காரன் (முற்றும் துறந்தவன்). குடும்பத்தில் ஓட்டமாட்டான். பேசாமல் காகினியை வேறு இடத்தில் கொடு''. 

வெங்கலக்ஷ்மி திடுக்கிட்டாள். ஊர் திரும்பினாள்.

எவன் ஒருவன் ஜாதகத்தில் ஒரே ராசியில் நாலோ நாலுக்கு மேலோ கிரஹங்கள் கூடி இருக்கிறதோ, அதில் ஒரு க்ரஹம் வேறு உச்சமாக இருந்தால் அவன் சன்னியாசி. அதிலும் செவ்வாய் உச்சமாக இருந்தால் சக்திஉபாசக ஆத்ம ஞானி. குரு உச்சமாக இருந்தால் வேதாந்த ஞானி. சனி இருந்தால் தத்தாத்ரேயர் போல் அவதூதன் (உடல் பிரஞை இல்லாமல் ஆடையின்றி திரிபவன்) இந்த மாதிரி ஞானிகளுக்கு என்னென்னவோ பெயர்கள் சாக்யன், ஜீவகன், பிக்ஷு, வ்ருத்தன், சரகன் என்று..

செயதி மரகதத்தை அடைந்தபோது  இந்த மற்றொரு பேரிடியை அவளால் தாங்க முடியவில்லை. தன் மகன் சேஷாத்திரி ஒரு சன்யாசியா?.

கோவிலுக்கு சென்ற சேஷாத்திரி வீடு திரும்பி அம்மா கதறுவதை பார்த்து விஷயம் புரிந்து கொண்டான். ''சித்தப்பா இராமஸ்வாமி ஜோசியர் இதை சொல்லி இருக்கவேண்டாமே'' என்று தோன்றியது. வீட்டில் புயல் வீசியது.

நாட்கள் மேலும் நகர்ந்தன. மரகதம் வீட்டுக்கு ஒருநாள் கடிதம் வந்தது. ''காகினிக்கு திருப்பத்தூர் வெங்கட்ரமண அய்யருடன் கல்யாணம் இன்னும் பத்து நாளில்''. அப்போதெல்லாம் கல்யாணங்கள் 6 நாள் 7 நாள் தொடர்ந்து விமரிசையாக நடக்கும். ஊரிலுள்ள எல்லோரும் பங்கேற்பார்கள். போகாமல் இருக்க முடியாது. நாலாவது நாள் கல்யாணத்துக்கு சென்று மரகதம் தலையை காட்டினாள் .

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...