Tuesday, July 17, 2018

NAALADIYAR



நாலடியார்: ஜே.கே. சிவன்

இது நமக்கு தெரிந்த ஒரு உண்மை.

ஒவ்வொரு கருப்பு நிற தலை உள்ள மனிதனும் ஒரு நாள் திடீரென்று வேதாந்தம் பேச ஆரம்பிப்பான். அது எப்போது என்று நினைவிருக்கிறதா? தனது தலையில், முகத்தில் ஒரு முதல் நரை முடி வெள்ளையாக சிரிக்கும்போது.

''வாழ்க்கை அநித்தியம்'' என்று உடனே ஆரம்பித்து விடுவான். ஆனால் குழந்தையிலிருந்தே பிரவுன், செம்பட்டை, வெள்ளை முடி வெள்ளைக்காரர்களுக்கு இந்த ப்ராப்ளம் கிடையாது. அவர்கள் கிழவயதிலும் உற்சாகத்துடன் இருப்பதற்கு இது கூட ஒரு காரணமோ?

சமண முனிவர்கள் ஒரு வேளை வெள்ளைத் தலையர்களை பார்க்காததால் என்ன சொல்கிறார்கள்? ஒருநாள் நமக்கு நரை தோன்றி விடும், இளமை சாஸ்வதம் இல்லை என்பதை உணர்ந்த அறிஞர்கள் இளமையிலே துறவிகளாக ஞானிகளாக மாறுவார்கள். பால்ய வயது சுகத்தில் திளைத்தவர்கள் வருஷங்கள் ஓடின பிறகு செய்த காரியங்களுக்கு கூலிதர, ஒரு மூங்கில் கொம்பை பிடித்து கொண்டு நடந்து தள்ளாடிக் கொண்டு எழுந்து வருவார்கள். இதற்குக் கூட ''இளமையில் கல்'' பொருத்தமாக இருக்கிறதல்லவா? இதைத் தான் கீழே நாலடி சொல்கிறதல்லவா?

'நரை வரும்!' என்று எண்ணி, நல் அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார்; புரை தீரா,
மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்.உரை

''அப்பனே ஒரு விஷயம் சொல்லட்டுமா.-- (சொல்வது நானல்ல, சமண முனிவர்கள்) இந்த நட்பு நட்பு என்கிறார்களே, அது ஒரு காகித சங்கிலி, பலமற்றது, சிநேகிதர், மனைவி யாருக்குமே நம்மை வெறுத்து விட்டது. நல்லார்களும் அருகே வருவதில்லை.. பசிக்குதே என்று மனைவியைக் கேட்டால்,

''உள்ளே ஏதாவது இருந்தா எடுத்து போட்டுக்கிட்டு சாப்பிட்டு தொலை. போதவில்லை என்றால் தண்ணி குடி'' -- இந்த வித மரியாதை'' தான் கிடைக்கிறதா?

இது தான் உறவு.

இத்தனை வருஷம் வாழ்ந்து என்னத்தை கண்டாய்? யோசித்து பார். எல்லாமே துன்பத்தை மறைக்கும் திரைகள். திரைகள் விலகிக்கொண்டே வருகிறது. வெற்றுச் சுவர் தான் மிச்சம்.

நீ ஒரு தரை தட்டிய கப்பல். இளமை இனி ஊஞ்சலாடுமா?'' அது தான் இந்த நாலடி சொல்கிறது.

''''நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;
அற்புத் தளையும் அவிழ்ந்தன; உள் காணாய்;
வாழ்தலின், ஊதியம் என் உண்டாம்? வந்ததே,
ஆழ் கலத்து அன்ன கலுழ்!உரை''

''ஆடி அடங்கி விட்டான் ஆறுமுகம். இளமைச் செருக்கு. நல்ல வழி எடுத்துச் சொன்னா காதிலே விழல்லே அப்போ. போய்யா , உனக்கு வேறே வேலை இல்லை என்றான்...

இன்னிக்கு அவன் நிலைமை என்ன? ஆசை, மோகம் இதிலே திளைச்சு கல்யாணம் பண்ணிக்கொண்டு பெருமை புகழ் என்று நினைச்சதெல்லாம் பொய்யின்னு ஆயிட்டதே. பல் போச்சு, சொல் போச்சு, கோல் தான் கால். . காது டமாரம். முதுகு கவுத்து போட்ட ''L ". பார்த்தாலே எல்லோரும் ஒரு பர்லாங்க் அப்பாலே போறாங்க. நடந்ததை இனிமே ரிப்பேர் பண்ணமுடியுமா?. அதுக்கு தான் இள வயசுலேயே, தெம்பிருக்கும்போதே நல்லதையும் நல்லவங்களையும் நம்பணும் டா ஆறுமுகம். . அவங்க காட்டின வழியிலே நடக்கணும். இதை அழகா சொல்லுது இந்த நாலடி.

''சொல் தளர்ந்து, கோல் ஊன்றி, சோர்ந்த நடையினர் ஆய்,
பல் கழன்று, பண்டம் பழிகாறும் இல்-செறிந்து
காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே-
ஏம நெறி படரும் ஆறு.உரை''

அழகு என்ன அழகு. அவளைப் பார்க்கும்போதே அவ பக்கத்திலேயே நிக்கிற அவ அம்மாவைப் பாரு. தலை இடது வலது பக்கமா கிடு கிடுன்னு ஆடிக்கிட்டே இருக்குது இல்லே. உடம்பு கூனி, குறுகி, கையிலே கொம்பு தேடுறாளே. பொண்ணு தன்னுடைய கையிலே ஒரு கொம்பு தயாரா வச்சிருக்காளே அதை தாயார் கிட்டே கொடுக்கிறா. இந்த பொண்ணும் ஒரு நாள் அவ அம்மா மாதிரிதான் ஆகப்போறவள், அம்மாவின் கை கோல் இவளிடம் வரும் என்று அறிந்தவன் வயது என்பது என்ன அதன் பாதிப்பு என்ன என்று உணர்ந்து கொள்வான்.
இந்த நாலடி இதைத்தானே சொல்கிறது?

''தாழா, தளரா, தலை நடுங்கா, தண்டு ஊன்றா,
வீழா இறக்கும் இவள்மாட்டும், காழ் இலா
மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும்-தன் கைக் கோல்
அம்மனைக் கோல் ஆகிய ஞான்று.உரை'

வாழ்க்கையை சங்கிலித்தொடர் என்றவன் வாயில் சர்க்கரை நிறைய கொட்டு. இந்த உலகம் வெறும் துன்பம் சூழ்ந்த மாயை. என்னை ஒருத்தி பெற்றாளே, அது தான் என் தாய், ஒருநாள் அவள் தாயைத் தேடி சென்றுவிட்டாள் . அவள் தாய் அதற்கு முன் அவளுடைய தாயைத் தேடி போனாளே அதற்கு முன்பு இருந்தவளும் அவ்வாறே சென்றவர்கள் தானே. இதற்கு முடிவு உண்டா? இந்த கேள்வி சமண முனிவரை வாட்டி அவர் ரொம்பவே துன்பப் பட்டிருக்கிறார். அதை எவ்வளவு நறுவிசாக சொல்கிறார் பாருங்கள் இந்த நாலடியில்:

''எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு,
தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு,
ஏகும் அளித்து, இவ் உலகு.உரை''

ரொம்பவும் வேதாந்தம் இதற்கு மேல் வேண்டாம். சமணமுனிவர்கள் யோசிக்கட்டும். பிறகு அவர்களை பின் தொடர்வோம். அவர்களது நாலடியாரை ரசிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...