Friday, July 13, 2018

CARNATIC MUSIC




கர்நாடக சங்கீதம்  -  ஒரு  சிந்தனை.
                             ஜே.கே. சிவன் 

கர்நாடக சங்கீதம்   ஆன்ம வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் கிருஷ்ணன் (இறைவன்)  கொடுத்த பரிசு நமக்கு, ராகமும்  தாளமும். பக்தி சங்கீதம் ஒரு நாதோபாஸனை.
இயல் இசை நாடகம்.  மூன்றும் ஜீவன்கள். நாட்டிய சாஸ்திரம் கந்தர்வ வேதம்.
''சாமவேதாதிதம் கீதம் சம்ஜக்ராஹ்  பிதாமஹ: ''   சாமவேதத்திலிருந்து பிறந்தது சங்கீதம்.  தியாகராஜ ஸ்வாமிகள் அதனால் தான்  ''நாத தனிமனிஜம் '' என்று  சாமகான ஸ்வரங்களில் சித்தரஞ்சனி ராகத்தில் மெட்டமைத்தார்.

ஸ ,ரி,க, ம, ப, த, நி,   ஸ்வரங்களை  பழமையான வேத நூல்  நாரத பரிவ்ராஜக உபநிஷத் சொல்கிறது. கிட்ட தட்ட இது மாதிரி அக்ஷரங்கள் ஸ்வரங்களாக சீனாவிலும் வெள்ளைக்காரர்கள் மத்தியிலும் இருந்திருக்கிறது.  சப்தம் வேறு மாதிரி.

பரத முனிவரும்  ''நாட்ய  சாஸ்த்திரத்தில்''  ரெண்டு 'க்ரமங்களை'' ப்பற்றி  -- ஸ்வரங்களை பற்றி --  சொல்கிறார்.  க்ரமங்கள்   84 ஜதிகள்  கொண்டதாம். ஜதி  ராகத்தோடு இணை பிரியாதது.  ஐந்தாம் நூற்றாண்டு வித்யாரங்கர்  தான்  மேளகர்த்தா ராகங்களை அறிமுகப்படுத்தினார் என்று தெரிகிறது. ராகமும் மேளமும்  சைதாப்பேட்டையும்  சான் பிரான்சிஸ்கோவும் மாதிரி வெவ்வேறு. சங்கீத வித்துவான்கள் அழகாக மேளத்தை பொருத்தமான சாஹித்யத்தோடு கலந்து ராகமாக பொழிகிறார்கள். கை தட்டுகிறோம்.

பழந்தமிழர்கள் பண்  என்று ராகமாக இசைப்பது இன்னும் சில கோவில்களில் தொடர்கிறது. 13ம் நூற்றாண்டுக்காரர்  சாரங்கதேவர்  ''சங்கீத ரத்னாகர''த்தில் தேவார திருப்பதிகங்கள் பண்ணோடு பாடுவதை பற்றி எழுதியிருக்கிறார்.

ஆண்டாள் பாசுரம், சம்பந்தர் தேவாரம் எல்லாம் கூட ராகமாக நமக்கு கிடைக்கிறதே.சங்கீத வித்துவான்கள்  திறமை கற்பனா சக்திதான்  இதற்கு காரணம்.

தெற்கே  கர்நாடக சங்கீதம் போல வடக்கே  ஹிந்துஸ்தானி சங்கீதம் தனித்து கொடி கட்டி பறந்தது.  

முகலாய ஆட்சியின்போது  ஹிந்துஸ்தானி சங்கீதம் கொஞ்சம் தனிமை இழந்து கலப்படமாகியது.  புதுப்புது வாத்தியங்கள் வழக்கத்தில் வந்தது. சரோட் , ஷெனாய், சந்தூர், சித்தார், தபலா, பஃவாஜ்,  இதிலெல்லாம் சங்கீதம் முளைத்தது. இப்ராஹிம் அடில் ஷா கூட  (1580-1627)  கர்நாடக சங்கீதம் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பரவாயில்லையே. சங்கீதம் மொழி, சமயம், மதம் எல்லாம் கடந்தது அல்லவா.  வேங்கடமஹி தனது ''சதுர்தண்டி ப்ரகாசிகை'' நூலில் (1635) 72 மேளகர்த்தா ராகங்களை சீர் படுத்தியிருக்கிறார்.

பிறகு தான் சங்கீத மும்மூர்த்திகள்  சாமா  சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர் கர்நாடக சங்கீதத்தை பக்தியின்  தூண்களாக பலப்படுத்தி  நிலை நிறுத்தினார்கள். புரந்தரதாசர்,  பத்ராசல  ராமதாஸ், பாரதியார், போன்ற எத்தனையோ பக்திமான்களால்  இன்று உலகெங்கும் மூலை முடுக்கிலெல்லாம் கர்நாடக சங்கீதம் பரவியிருக்கிறது. அற்புத வித்துவான்கள் இதற்கு முக்கிய காரணம்.  துளஜா மஹாராஜா, ஸ்வாதி திருநாள் போன்ற ராஜாக்கள் கூட  சங்கீத ஞானம் பெற்றவர்களாக இருந்து  அநேக கிருதிகள் இன்றும் பாடப்படுகிறது. தமிழில் மாயூரம் கோபாலக்ரிஷ்ண பாரதியார், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் போன்றவர்களும்  அநேக பாடல்கள் இயற்றி ஒரு கலக்கு கலக்கி, அவை  இன்றும் பக்தி ரசம்  பொங்க பாடப்படுகிறதே. 
இன்னும் அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...