Sunday, July 22, 2018

ORU ARPUDHA GNANI


ஒரு அற்புத ஞானி'' J.K. SIVAN
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்.


3. வைராக்கியம் உருவாகியது

சிறுவன் சேஷாத்திரியின் பேச்சு மட்டுமல்ல. கவிதைத் திறனும் அவனைப்போலவே வளர்ந்து வந்தது. அவனை அறிந்தோரால் வியந்து பேசப்பட்டது.

நாம் நிறைய விஷயங்களை கோட்டை விட்டவர்கள், விடுபவர்கள் இன்னமும் கூட. சேஷாத்திரிகள் சின்ன வயசிலேயே நிறைய காமாக்ஷி தேவியை பற்றி, வரதராஜ பெருமாள் பற்றி எல்லாம் கவிதை, ஸ்லோகங்கள் எல்லாம் இயற்றியிருக்கிறாராம். எல்லாமே தொலைந்து போய்விட்டதே.

ஸ்லோகங்களை எந்த வித முன்னேற்பாடும் இன்றி தானாகவே அவ்வப்போது சொல்வாராம். நமது துரதிர்ஷ்டம் ஒரு கவிதையோ, ஸ்லோகமோ கூட , சேஷாத்திரி ஸ்வாமிகள் இயற்றியது நமக்கு கைக்கெட்டாமல் போய்விட்டதே. யாருமே அவற்றை பாதுக்காக்க வில்லை. எத்தனையோ மகான்களின் அருமையான பொக்கிஷங்களை இழந்து உலகிலேயே இதில் கின்னஸ் ரிக்கார்ட் நமக்கு தான்.

சேஷாத்திரிக்கு ஒரு தம்பி பிறந்தான். நரசிம்மன் என்று பெயர். நரசிம்ம ஜோசியர் என்று பிற்காலத்தில் பிரபலமானவர். சேஷாத்திரிக்கு 7ம் வயதில் உபநயனம். தாத்தா காமகோடி சாஸ்திரி தானே அருகில் இருந்து ஏற்பாடுகள் பண்ணி, சந்தியாவந்தனம், காயத்ரி மந்த்ரங்கள் அனுஷ்டானம் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
என்ன பாக்கியம் பண்ணினவர் அவர்! ஒரு உலகம் போற்றும் ப்ரம்ம ஞானி, மஹானுக்கே ப்ரம்மோபதேசமா!
''அடே பயலே, சேஷாத்திரி, இனிமே நானே உனக்கு வேதாத்யாயனம் பண்ணி வைக்கிறேன். உனக்கு தர்க்கம், வியாகரணம், பிரஸ்தான த்ரயம். மந்த்ர ரஹஸ்யங்கள் எல்லாமே சொல்லித்தரேன். எனக்கு வயாசாயிடுத்து. கொஞ்ச காலம் தான் இருப்பேன். எனக்கப்புறம் நீ தான் சரியான பாத்திரம், இதை பாதுகாக்க'' சொல்லும்போதே காமகோடி சாஸ்திரிகளுக்கு குரல் தழு தழுத்தது. அதே சமயம் இவனே பகவானால் சிருஷ்டிக்கப்பட்ட ;பொருத்தமானவன் என்றும் மனதில் சந்தோஷம் நிறைந்தது.

காமகோடி சாஸ்திரி செய்வித்த வேதாத்யாயனம் தவிர வரதராஜர் கோவில் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் பாடசாலையில் கிரமமாக வேதம் கற்றுக்கொண்டான் சேஷாத்திரி. கதாதரீய பூர்வ உத்தரவாதத்தையும் , நியாய சாஸ்திரமும் வித்யாசார் என்கிற மத்வர் கற்றுக்கொடுத்தார். வியாகரண சாஸ்திரம் பாஷ்யம் வரை ராமச்சந்திரச்சார் என்கிற மத்வர் கற்பித்தார். எல்லோருக்குமே என்ன ஆச்சர்யம் என்றால் ஒருதடவை சொல்லிக்கொடுத்தாலே 'கப் ' என்று சேஷாத்திரி பிடித்துக் கொண்டான். கிரஹிக்கும் சக்தி அசாத்தியம்.

குழுமணி நாரயணஸ்வாமி சாஸ்திரி புத்தகத்தில் சேஷாத்திரியோடு கற்றுக்கொண்ட சில சக மாணவர்கள் பேர் இருக்கிறது. அவர்கள் வம்சத்தை சேர்ந்தவர்கள் யாரவது இதை படித்தால் தமது முன்னோர் பெயர் பார்த்து படித்து சந்தோஷப்படலாமே என்று அவர்கள் பெயரையும் கொடுக்கிறேன்.

தர்ம கர்த்தா, முதலகத்து பட்டண்ணா தாத்தாச்சார் - ரொம்ப வைராக்கியம் கொண்டவராம் இவர்.
ரிஷி தாத்தாச்சார் ,
முதலகம் சுந்திரராஜா தாத்தாச்சார்
பூனை வரதாச்சாரியார் குமாரர் சேஷாச்சார்யார்
கார்ப்பங்காடு அய்யங்கார்
தொட்டண்ணாவூர் சாமு குருக்கள்
ஒழப் பாக்கம் ராமானுஜாச்சாரியார்.
சாமா என்கிற வேகாத வரதாச்சாரியார்.
மேல்பாக்கம் குமார தாத்தாச்சார்
காவ்யமணி மண்டபம் சீமாச்சார்யார்
குண்டலம் கந்தாடை ரங்கசாமி அய்யங்கார்.

நூற்றைம்பது - இருநூறு வருஷங்களுக்கு முன்பு இந்த மாதிரி பெயர்கள் சகஜம். இப்போது சிரிக்கலாம். சிலகாலம் முன்பு தவக்களை ,என்னத்தே கன்னையா, தயிர்வடை தேசிகன், ஓமக்குச்சி.... என்ற பெயர்கள் பிரபலமாகவில்லையா?

நாலைந்து வருஷம் ஓடிவிட்டது. ஒரு நல்ல பழக்கம் சேஷாத்திரியிடம் இருந்தது.. காலை மாலை இருவேளையும் அப்பா அம்மாவை நமஸ்காரம் பண்ணாமல் சேஷாத்திரி ஒருநாளும் இருந்ததில்லை. -- குழந்தைகளே, பெற்றோர் இருப்பவர்களே, சற்று இந்த வாக்கியத்தை ரெண்டாம் தடவை படியுங்கள். பின் பற்றுங்கள் ----

ஒருநாள் அப்பா வரதராஜ சாஸ்திரி இப்படி நமஸ்காரம் பண்ணின பிள்ளை சேஷாத்திரியை எடுத்து மார்புற தழுவினார். இரு கண்களிலும் கண்ணீர். அம்மா மரகதம் திடுக்கிட்டாள்.

''எதுக்கு அப்பா அழறேள்? என்ன ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்கோ? '' என்றான் சேஷாத்திரி.

''ஆமாம், என்ன ஆச்சு உங்களுக்கு, திடீர்னு ஏன் இப்படி மாலை மாலையா அழுது, குழந்தையை கலங்க வைக்கி றீர்கள்? எனக்கு வேதனையா, கவலையா இருக்கே '' என்று மரகதமும் கணவனைக் கேட்க

''என்னமோ தெரியலைடா சேஷாத்திரி , ஒரு ஆவேசம் போல் மனசிலே பொங்கிவந்துடுத்து. உலகில், இந்த கலியுகத்தில் யார் அப்பா இப்படி தினமும் பெற்றோரை வணங்கி போற்றுவார்கள் உன்னைத் தவிர? அம்மாவை வணங்கினாலும் அர்த்தமுண்டு. தந்தையை விட தாய் சிறந்தவள். நூறுமடங்கு தாய் தந்தையைவிட குணம் அதிகம் கொண்டவள் ''பிது: சத குணம் மாதா:'' என்று ஸ்லோகம் சொல்கிறதே.''

''மரகதம், கவலையே படாதே. நீ எனக்கு வாய்த்த பதி விரதா தெய்வம். சாஸ்திரம் சங்கீதம் தெரிந்தவள். நம்ம பயல் சேஷாத்திரி மேன்மேலும் பெருமையாக வாழப்போகிறான். என் தம்பி ராமஸ்வாமி ஜோசியருக்கு புத்ர பாக்யம் இல்லை. எனவே நமது ரெண்டாம் குமாரன் நரசிம்மனை அவனுக்கு புத்திரனாக கொடுத்து விடு. எனக்கு காமாட்சியின் உத்தரவு வந்துவிட்டது. நான் புறப்பட வேண்டும். இனிமே எனக்கு பூலோகத்திலே வேலை இல்லே, நேரமும் இல்லே. கிளம்பணும். நீ இன்னும் சில காலம் சேஷாத்திரியோடு இருப்பே .''

மரகதம் அறுபட்ட வாழை போல் தரையில் வேருடன் சாய்ந்தாள்.

''ஐயோ என்ன கொடுமை இது. இத்தனை பெரிய பேரிடியை சர்வ சாதாரணமாக சொல்கிறீர்களே.''

''மரகதம், தைரியமாக இரு. சமாதானமாக இரு. வருவதை ஏற்றுக்கொள்ள திட மனசு வேண்டும். இது பகவத் சங்கல்பம். நாம ஏத்துக்கணும்''

''ஒண்ணும் அப்படியெல்லாம் நடக்காது. தைரியமா இரு '' -- எல்லோரும் மரகதத்தை தேற்றினார்கள்.

''இல்லை இல்லை, என் கணவர் ஒரு முனிவர். அவர் சொல் தட்டாது. '' என்று பயந்தாள் மரகதம்.

மறுநாள் வரதராஜர் சாஸ்த்ரிகள் வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்து நித்ய கர்மாக்களை அனுஷ்டானங்களை முடித்தார். இரவு அர்த்த ஜாமம் வரை பூஜை. ஏகாம்பரேஸ்வர் காமாக்ஷி தர்சனம். வீடு திரும்பினார். காமாக்ஷி ஜபம். உபவாசம். அதிசார நோய் (dysentery leading to dehydration ) கண்டது. உடல் நீர் சத்து வற்றிப்போய் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கடைசி நேரம் வந்து விட்டது. அந்த காலத்தில் இதற்கெல்லாம் மருந்து இல்லை. எண்ணற்றோர் இப்படி மாண்டது நாம் அறிவோம்...

'எனக்கு அதிசாரம் வந்தது ரொம்ப சந்தோஷம் மரகதம் . இதனால் நினைவு தப்பாது. கடைசிவரை பேச பகவானை நினைக்க ஞாபகம் இருக்குமே. குழந்தாய் சேஷாத்திரி, மரகதம். பயப்படாதீர்கள். யோகிகள் இந்த நோயை தான் விரும்புவார்கள். ''அதிஸா ரேது மரணம் யோகிநாம்பி துர்லபம் '' அதிசாரம் யோகிகள் விரும்பினால் கூட கிடைப்பது துர்லபம். எவ்வளவு சாஸ்திரம் கற்றாலும் அனுபவ ஞானம் முக்கியம்''
உடல் பஞ்சபூதத்தால் உருவானது. அது அந்த பஞ்சபூதத்தையே கடைசியில் அடைகிறது.

பொழுது விடிந்தது. சூரியன் ஒளி வரதராஜ சாஸ்திரி வீட்டில் புகுந்தது. அதற்குள் வரதராஜ சாஸ்திரியின் ஆத்ம ஒளி வெளியோடு கலந்தது. சேஷாத்திரி கண்களில் ஆறாக நீர். தீராத துயரம். மனதில் ஆறாத வடு.''சாஸ்த்ர ஞானம் மட்டும் போதாது. உலக அனுபவம் வேண்டும்..........'' அப்பா கடைசியாக சொன்ன இந்த வாக்கியம் மனதில் திரும்ப திரும்ப ஒலித்தது. வைராக்கியம் உருவாகும் நேரம் வந்து விட்டது.........

வயதான காமகோடி சாஸ்திரிக்கு சோகம். பெண்ணையும் பேரன்களையும் வழூருக்கு அழைத்துக்கொண்டு போனார். சேஷாத்திரிக்கு 14 வயது. சேஷாத்திரிக்கு வேதாந்த சாஸ்திரம் உபதேசித்தார். வைராக்கியம் வேதாந்தத்தோடு உடன் பிறந்ததல்லவா. எரியும் பஞ்சில் எண்ணெய் சேர்ந்தது. உபநிஷத்துகள், கீதை, ப்ரம்ம சூத்ரம் எல்லாம் பளிச்சென்று புரிந்தது. அகஸ்திய சம்பிரதாய மந்த்ர ரஹஸ்யங்களும் சேஷாத்திரிக்கு சேர்ந்தது. 15 வயசுக்குள் எல்லாம் புரிந்து விட்டது... நேரம் வந்து விட்டது........


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...