Monday, July 23, 2018

LALITHA SAHASRANAMAM



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (184 -204) J.K. SIVAN

निस्तुला, नीलचिकुरा, निरपाया, निरत्यया ।
दुर्लभा, दुर्गमा, दुर्गा, दुःखहन्त्री, सुखप्रदा ॥ 50 ॥

Nistula nilachikura nirapaya niratyaya
Durlabha durgama durga dukha-hantri sukhaprada – 50

நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |
துர்லபா துர்க்கமா துர்க்கா
து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா || 50

துஷ்டதூரா துராசார சமநீ தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா
ஸமாநாதிக வர்ஜிதா || 51

சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ || 52

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (181-200) அர்த்தம்

* 184 * நிஸ்துலா -- ஸ்ரீ லலிதை ஒப்பிலாமணி. யாருடன் எதனுடன் அவளை ஒப்பிடுவது? ஹிமாச்சல கைலாச மலையை எந்த மலையுடன் ஒப்பிட முடியும். அவள் ஹிமவான் மகள் அல்லவா?

* 185 * நீலசிகுரா -- கன்னங்கரேர் என்ற கருநாக கூந்தலுடையவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர். ஆக்ஞா சக்ரத்தை கருநீல வர்ணம் என்பார்கள். பின் மண்டையில் முகுளம் பகுதியில் மேல் இருக்கும் இந்த சக்ரத்தை கேசங்கள் மறைத்து இருக்கும். இது வெளியில் பிறர் கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான் இன்றும் தலை மழித்தாலும் சிறிய சிண்டு, சிகையாவது பின் மண்டையில் மரியாதையோடு வைத்துக்கொள்வது. அம்பாள் பக்திக்கு எடுத்துக் காட்டு.

* 186 * நிரபாயா - எந்த சக்தியாலும் அழிக்கமுடியாதவள் அம்பாள் என்று இந்த நாமம் குறிப்பிடுகிறது. ஒரு அபாயமும் இல்லாதவள். பிரம்மத்தை எவரால் நெருங்கமுடியும். அதற்கு மாறுதல் எது? ஏது?

* 187 * நிரத்யயா | - காமேஸ்வரி சாம்ராஜ்ய மஹாராஜ்னி . அவள் இடும் சட்ட திட்டங்களை, எல்லையை மீறாதவள். மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக தான் இருப்பவள். என்ன ஒரு அற்புத குணம் அம்பாளுக்கு!

* 188 * துர்லபா - எட்டாத நிலையில் இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பாள் என்று இந்த நாமம் சொன்னாலும் பக்தர்களுக்கு கிட்டாதவள் அல்ல அவள். ஆத்ம விசாரம், பக்தியால் அவளை எளிதில் அடையலாம். சக்தி உபாசகர்கள் இதை நன்குணர்ந்தவர்கள்.

* 189 *துர்க்கமா -- நெருங்கமுடியாதவள். கடின சாதனையாலும் வழிபாட்டினாலும் உயரிய பக்தியாலும் அவளை லலிதாம்பாளாக தரிசிக்கலாம். காமகலாவாக குண்டலினியாகி யோக பயிற்சியால் அனுஷ்டானத்தில் உணரலாம்.

* 190 * துர்க்கா - அழகிய சிறிய ஒன்பது வயது பெண்ணாக காணலாம். துர்க்கை என்றாலே துன்பங்களை, கஷ்டங்களை நிவர்த்தி பண்ணுபவள் என்று அர்த்தம். நெருப்பு மாதிரி ஜ்வாலையாக ஜொலிப்பவள். துர்கா சூக்தம் விடாமல் சொல்வது கஷ்டங்களில் இருந்து நிவாரணம் பெற. இதில் முதல் ஸ்லோகம் ம்ரித்யுஞ்ஜய மந்த்ரம். காலனை வெல்லும் மந்திரம். த்ரியம்பகம் யஜாமஹே........ என்ற அறுத்த ஸ்லோகம். கிராமங்களில் நாலு எல்லையிலும் எல்லையம்மனை, துர்க்கையை வழிபட்டவர்கள் நமது முன்னோர்கள். ரட்சிக்கும் கடவுள் அம்பாள்.

* 191 *து:க்கஹந்த்ரீ -- பக்தர்களின் துயரங்களை, துன்பங்களை, துக்கங்களை, நீக்குபவள் அம்பாள். எல்லா துன்பத்துக்கு அடிப்படை காரணம் சம்சார பந்தம். இந்த பற்று விடத்தான் பற்றற்றவனான காமேஸ்வரன், பரமேஸ்வரனின் திருவடிகளை பற்றிக்கொள்வது. உலகவாதனைகளிலிருந்து மீள்வதற்கு.

* 192 * ஸுகப்ரதா - சந்தேகமற பக்தர்கள் வேண்டியதற்கும் மேலாக சுகத்தை, சந்தோஷத்தை அருள்பவள் அம்பாள். மறுபிறவியின்றி தப்புவதே அதி சுகமானது அல்லவா? இந்த ஆனந்தத்தை தரும் அம்பாள் ஆனந்தி.

* 193 * துஷ்டதூரா - துஷ்டனை கண்டால் தூர விலகு என்கிறோமே அதே தான். அம்பாள் துஷ்டர்களை அணுக விடமாட்டாள். நாம் பயந்து தூர ஓடுபவர்கள். அவளோ அவர்கள் பயந்து அவள் இருக்கும் பக்கமே நெருங்காதவர்கள்.

* 194 * துராசார சமநீ - சாஸ்த்ர விரோத தவறான செயல்களை புரிவது துராசாரம் எனப்படும். ஸ்ரீ லலிதாம்பாள் இத்தகைய செயல்களை புரிவோர்களை தண்டிப்பவள் .

* 195 * தோஷவர்ஜிதா- எந்த விதமான தோஷமும் தன்னை நெருங்க விடாதவள் அம்பாள்.ப்ரம்மத்திடம் எந்த தோஷம் நெருங்கும்?

* 196 * ஸர்வஜ்ஞா - சகல ஞானமும் இருப்பிடமாக கொண்டவள் ப்ரம்ம ஸ்வரூபிணி அம்பாள். அவளறியாதது என்ன இருக்கிறது? சகலமும் அறிந்தவள்,

* 197 * ஸாந்த்ரகருணா- கருணா சமுத்திரம் காமேஸ்வரி. நாம் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் தான் பத்து அடி எடுத்து நம்மை அணுகி வந்து ரட்சிக்கும் தாய் அல்லவா ? பிரபஞ்சத்தின் தாயாயிற்றே. அவள் கண்கள் தயை, அன்பு, காருண்யம் இவற்றால் நிரம்பியவை. எல்லையற்றவை.

* 198 * ஸமாநாதிக வர்ஜிதா - ஈடிணையற்றவள் சிவசக்தி. சர்வேஸ்வரியை யாருடன் ஒப்பிடுவது? ஞானமயம் அவள். ப்ரம்மணி. அர்ஜுனன் க்ரிஷ்ணனிடம் சொல்கிறானே '' நீ அகிலபுவனமும் போற்றும் சர்வ சக்தி வாய்ந்தவன் உனக்கு யாரை சமமாக சொல்வேன் ?'' அம்பாள் அதே தான்.

* 199 * ஸர்வ சக்திமயீ. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டினால் போல் அம்பாள் சர்வ சக்தி உருவானவள். தச மஹா வித்யா சக்தி உடையவள். சக்தி என்பது இங்கு அம்பாளின் தலைமையில் உள்ள இதர உப தெய்வங்களையும் (வாராஹி, அஸ்வாரூடா போன்ற மந்த்ரிணீ சக்திகள் )குறிக்கும்.

* 200 * ஸர்வமங்கலா -- புனித ஸ்வரூபி. சிவம் என்றாலே மங்களம். அவள் சிவை. புனிதத்தின் பிறப்பிடம் அம்பாள். சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே .... என போற்றுகிறோமே அவள்!

* 201 * ஸத்கதிப்ரதா -- நல்வழி காட்டுபவள் . ''உலக பந்தங்களில் சிக்காதே. முள் குத்தும். இப்படிப்போ'' என்று வழிகாட்டுபவள். தாயல்லவா? அவள் காட்டும் பாதையில் சென்றால் பிரம்மத்தை அடையலாம்.

* 202 * ஸர்வேச்வரீ -- சகல அகில புவன லோகங்களுக்கும் உண்டான ஒரே தெய்வம் ஸ்ரீ லலிதாம்பிகை.
அவளுக்கு மிஞ்சியதோ, சமமோ வேறொன்றும் இல்லாதவள்.

* 203 * ஸர்வமயீ - எல்லாமும் தானே ஆனவள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி...... இது அவளே தான். அவள் எங்கில்லை, எதில் இல்லை. சர்வம் என்பது 36 தத்துவங்களையும் கூட குறிக்கிறது.

* 204 * ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ - எல்லா மந்திரங்களுக்கும் உருவம் கொடுத்தால் அது அம்பாளின் உருவமாகத்தான் தோன்றும். சமஸ்க்ரிதத்தின் 52 அக்ஷரங்களையும் தொடுத்து மாலையாக அணிபவள் அம்பாள்.

ஒரு அம்பாள் உபாசகி, நமது முகநூல் சகோதரி, நேற்று எனக்கு ஒரு அதிசய செயதி சொன்னார்: ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அம்பாள் அனுகிரஹத்தோடு இயற்றிய ஒரு கீர்த்தனை (ஆரபி ராகத்தில் அமைந்தது) யை ஒரு தடவை ரசித்து மனமுருகி பாடினால் நவா வர்ண கடின பூஜை செய்வதன் பலன் கைமேல் கிடைக்கும் என்கிறார். இந்த அற்புத பாடலை அம்புஜம் வேதாந்தம் என்ற அம்மையார் மூலம் பலர் கற்று வருகிறார்கள் என்பது ஆச்சர்யம்: தீக்ஷிதரின்அகிலாண்டேஸ்வரி மேல் பாடப்பட்ட கீர்த்தனை இது தான்:

அகிலாண்டேஸ்வர்யை - ராகம் ஆரபி தாளம் ஆதி
பல்லவி
''அகிலாண்டேஸ்வர்யை நமஸ்தே,
அணிமாதி சித்தீஸ்வர்யை நமஸ்தே,
அனுபல்லவி:
நிகிலாகம ஸன்னுத வரதாயை
நிர்விகாராயை நித்ய முக்தாயை
ஸம்ஸார பீதி பஞ்சனாயை
சரத் சந்திரிகா ஸீதளாயை
ஸாகர மேகலாயை த்ரிபுராயை (அகிலா)

இதில் வரும் அம்பாளின் நாமங்களை தான் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அறிந்து வருகிறோம். அந்த சகோதரிக்கு உங்களோடு சேர்ந்து நன்றி. ISHALL WRITE LATER SOMETHING AMAZING ABOUT SRI MUTHUSWAMY DHEEKSHIDHAR






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...