Tuesday, July 10, 2018

KANCHI TEMPLE



தூதனுக்கு ஒரு கோவில் - J.K. SIVAN

காஞ்சிபுரத்தில் கோவில்கள் பல இருந்தாலும் அடிக்கடி என் அடி மனதில் லிருந்து மேலெழும்புவது ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருக்கோவில் தான். அழகான அமைதியான திவ்யதேசம். 108ல் காஞ்சியில் 14 இருப்பதில் முக்கியமான ஒன்று. ஆழ்வார்கள் அறிந்த பெயர் திருப்பாடகம். பாடகம்: பெருமை வாய்ந்தது.அப்படி என்ன பெருமை என்றால் இங்கே பெருமாள் ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் அரண்மனையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவ தூதனாக எடுத்த விஸ்வரூபம்.

வாக் சாதுர்யத்தால் கிருஷ்ணன் எப்படியாவது பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் பெற்று தந்துவிடுவானோ. அவனை கொன்றுவிட்டால் பிரச்னை தீர்ந்து விடுமே. --துரியோதனன் சதி திட்டம் ஒரு பொய்யாசனத்தில் கிருஷ்ணனை அமர்த்தி, அது பூமிக்கடியில் ஆழத்தில் இறங்கி விழுந்து நிராயுதபாணியாக தூதனாக வந்த கிருஷ்ணனை அங்கேயே தீர்த்துக்கட்ட பலம் வாய்ந்த மல்லர்கள் தயாராக இருந்தார்கள். பொய்யாசனத்தில் அமர்ந்த கிருஷ்ணனிடம் துரியோதனன் சதித்திட்டம் பலனளிக்கவில்லை. ஒரு நிலையில் கிருஷ்ணன் தனது விஸ்வ ரூபத்தை துரியோதனனுக்கு வெளிப்படுத்துகிறார். திருமங்கை ஆழ்வார் இதை பெரிய திருமொழியில்

''அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை
அஞ்சிடாதே இட அதற்குப்
பெரிய மாமேனி ஆண்ட மூடுறுவப்
பெருந்திசை அடக்கிட நிமிர்ந்தோன்.... என்கிறார்.

பெருந்தேவனார் எழுதிய மகா பாரதத்தில்

''வஞ்சனை ஒன்று மணியாசனம் தன்னை
அஞ்சன வண்ணன் அறிந்தருளிச் செஞ்சுடரைப்
பூண்டான் பொறியதிரப் பொன்முடிமேல் அண்டமுற
நீண்டான் விழித்தான் நெருப்பு ''

துரியோதனனுக்கு விஸ்வரூபம் காட்டிய கிருஷ்ணன் அதை கண்ணிழந்த திருதராஷ்டிரன் ஒரு க்ஷண நேரம் காண அருள் புரிந்தான்.

'' கிருஷ்ணா, பரந்தாமா, உன் திவ்ய தரிசனம் கண்ட என் கண்கள் இனி வேறு எவரையும் காணவேண்டாம் எனக்கு கண் பார்வையே வேண்டாம் '' என்கிறான் திருதராஷ்ட்ரன்.

பின்னர் பரிக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் மஹாபாரத சரித்திரத்தை வைசம்பாயனரிடம் கேட்கும்போது கிருஷ்ணனின் விஸ்வரூபம் காணவேண்டுமே என்கிறான்.

''நீ காஞ்சிபுரம் போ. அங்கே அஸ்வமேத யாகம் செய்'' என்கிறார். அவன் அவ்வாறே செய்ய கிருஷ்ணனின் விஸ்வரூபத்தை திருப்பாடகத்தில் காண்கிறான். நாமும் இப்போது எந்த யாகமும் தியாகமும் செய்யாமலேயே இந்த ஆலயத்தில் 30 அடி உயர, கம்பீர, தாமரை முக, கரிய திருமேனியோடு, சாந்த வதனத்தோடு அருளும் பாண்டவ தூத பெருமாளை தரிசிக்கிறோம். நீண்ட கிரீடம், காத்திடுகளில் குண்டலம், கழுத்தில் ஹாரம், நிறைய ஆபரணங்கள், மோதிர விரல்கள். வலது திருவடி மடங்கி இருக்க, இடது திருவடி கீழே தொங்க, வலது கரம் அபய ஹஸ்தம், இடது கரம் வரத ஹஸ்தம்.

கிருஷ்ணனுக்கு துரியோதனனின் மேல் வந்த கோபத்தில் அவன் ரோமங்களிலிருந்து அக்னி கொழுந்து விட்டது என்கிறார் வியாசர். சிற்பி இதை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறான். கிழக்கு பார்த்த கிருஷ்ணன்.

பல்லவர்கள் கட்டிய 8ம் நூற்றாண்டு கோவில். குலோத்துங்கன், ராஜாதிராஜ சோழன் கால கல்வெட்டுகள் உள்ளன. படிக்கமுடியாது. நாலு நிலை ராஜகோபுரம்.

யஞ மூர்த்தி என்ற ஸ்மார்த்தர் அத்வைதி, ராமானுஜரோடு வாதித்து, கடைசியில் வைணவம் தழுவி அருளாளர் எம்பெருமானார் என்ற பெயர் சூடி, இந்த ஊரில் வாழ்ந்து மறைந்தவர்.

இங்கே கல்வெட்டுகளில் கிடைக்கும் ஒரு சில விஷயங்கள்:

ராஜகேசரி முதலாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் கிராம வியாபாரி ஒருவன் ஓரிருக்கை கிராமத்தில் இந்த கோவில் நந்தவன பராமரிப்பு தோட்டக்காரர்களுக்கு நிலம் தானம் அளித்தான். அந்த 2000 குழி நிலம் 11 கழஞ்சு மதிப்பு கொண்டது. இன்னொரு கல்வெட்டு மற்றொரு வியாபாரி, 2 கழஞ்சு, ரெண்டு மஞ்சாடி, மதிப்புக்கு, கோவில் பூசாரிக்கு தினமும் 2 மலி தயிர், வழங்குவதற்காக அளித்த தானம் பற்றி சொல்கிறது. கோவில் விளக்கு தீப கைங்கர்யத்துக்காக ஒருவன் 32 பசு தானம் கொடுத்தது பற்றி இன்னொரு கல்வெட்டு சொல்கிறது.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...