Friday, July 20, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம். ஜே.கே. சிவன்
49. '' பொறுமையின் எல்லை''

சிலருக்கு பொறாமை, இயலாமை, மற்றவரின் புகழ், பெருமை, இதனால் விளையும் அசூயை ஆகியவை தூக்கமில்லாமல் செய்துவிடும் என்பது அந்தகாலத்திலிருந்து இன்று மாலை வரை தொடர்ந்து நிகழ்வது. இதில் ஒன்றிலே தான் உலகமே மாறவில்லை என்று அடித்து சொல்லமுடியும்.

இந்த்ரப்ரஸ்தத்தில் ஜேஜே என்று உலகமுழுதும் திரண்டு வந்த அரசர்கள் மத்தியில், சிசுபாலன் கிருஷ்ணனையும் பீஷ்மரையும் அவமதித்தது அனகாரிகமாக கூச்சலிட்ட போது ''அடடா எவ்வளவு அழகாக திட்டமிட்டு ஓவ்வொன்றையும் ஏற்பாடு செயது நடத்தும் இந்த மகா பெரிய ராஜசூய யாகத்தில் கிருஷ்ணனுக்கு இவ்வளவு அவமதிப்பா?'' என்று யுதிஷ்டிரன் கலங்கியபோது பீஷ்மர் சொல்லிய ரகசியம் இது தான்.

''சிசுபாலன் விசித்ரமானவன். அவன் விருத்தாந்தம் உங்களில் பலர் அறியமாட்டீர்கள். சேடி ராஜ வம்சத்தில் சிசுபாலன் பிறக்கும்போது மூன்று கண்கள், நான்கு கைககளோடும் அவதரித்தான். அவன் குரல் கழுதையின் குரலாக கர்ண கொடூரமாக இருந்தது. அவனது பெற்றோர் உற்றோர் மற்றோர் இதனால் மிக்க ஏமாற்றமும், துக்கமும், பயமும் வேறு கொண்டிருந்தார்கள். இவன் பிறப்பின் சகுனமே சரியில்லையே. இவனால் என்ன ஆபத்து நேரிடுமோ என்று கவலைப் பட்டனர். அவனை அப்புறப்படுத்தி காட்டில் தனியாக வீசி எறிந்து விடலாம் என்று ஜோசியர் களும் மற்றும் சில பெரியோர்களும் அரசனுக்கு யோசனை சொன்னார்கள். அப்போது ஒரு அசரீரியின் குரல் கேட்டது.

''ஹே அரசனே, கவலைப் படாதே உன் மகனைப் பற்றி. அவன் ஒரு மாவீரனாகப்போகிறவன். அதி பலசாலி. அவனால் உனக்கு பாதுகாப்பு. அவனைகொல்ல முயற்சிக்காதே. அவனை கொல்ல ஒருவனால் மட்டுமே முடியும். அவனும் பிறந்தாகி விட்டது. ''

அரசனின் மனைவி தைர்யமாக அந்த அசரீரியை கேட்கிறாள்:

''நீங்கள் யாரோ தெரியவில்லை. தெய்வமோ, தேவரோ, ராக்ஷசனோ, எவராயினும் கேட்கிறேன். என் மகன் இவ்வளவு அவலக்ஷணமாக பிறந்தாலும் அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டும். என் மகனைக் கொல்ல ஒருவன் வளர்கிறான் என்றதால் அவன் யார் எங்கு இருக்கிறான் என்று சொல்லவேண்டும். ஒரு தாய் எனக்கு எவ்வளவு கவலை இருக்கும் அல்லவா? ''
அசரீரி பதிலளித்தது: ''எவன் மடியில் உன் பிள்ளை இருக்கும்போது அவனது மூன்றாவது கண்ணும், உபரியான இரு கைகளும் மறைகிறதோ அவனால் தான் உன் மகனுக்கு மரணம் சம்பவிக்கும்''

அன்றிலிருந்து சிசுபாலனின் தாய் வருவோர் போவோர் மடியில் எல்லாம் அவனைக் கிடத்தினாள். எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

அவளது அண்ணன் பிள்ளைகள் பலராமனும் கிருஷ்ணனும் ஒருநாள் சேடி அரண்மனைக்கு வந்தபோது அவர்கள் மடியிலும் சிசுபாலன் கிடத்தப் பட்டான். கிருஷ்ணன் மடியில் சிசுபாலன் இருந்தபோது அவனது உதிரி இரு கைகளும் மூன்றாவது கண்ணும் மறைந்தது.

சிசுபாலனின் தாய், கிருஷ்ணனின் அத்தை, கிருஷ்ணனை அணைத்து மகிழ்ந்து அதே சமயமும் திகைத்தும் நின்றாள். மெதுவாக ''கிருஷ்ணா எனக்கு ஒரு வரம் கொடு''என்றாள் .

''என்ன அத்தை?''

''எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது அப்பா. நீ தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றவேண்டும்''

''என்ன பயம். தைரியமாக சொல்லுங்கள் அத்தை. என்னால் முடிந்ததை செய்கிறேன் '

"என் மகன் சிசுபாலன் என்ன தவறு செய்தாலும் நீ அவனை பொறுத்துக்கொள்ளவேண்டும். அவனைக் கொன்று விடாதே''

' இவ்வளவு தானா அத்தை. இதோ பார் உன் பிள்ளை நூறு தரம் என்னை அவமதிக்கட்டுமே துன்புறுத்தட்டுமே அவனாகவே என்னை எதிர்த்தாலொழிய நான் அவனைக் கொல்ல மாட்டேன். போதுமா?'' என்றான் கிருஷ்ணன்.

பீஷ்மர் இவ்வாறு சிசுபாலன் பூர்வோத்திரம் பற்றி சொல்லி ''பீமா, நீ பேசாமல் இரு. கிருஷ்ணன் ஒருவன் தான் அவனுக்கு எமன்'' என்றார்.

சிசுபாலன் அதற்குள் உரக்க கத்தினான். ''ஹே பீஷ்மா நீ யாரை வேணுமானாலும் புகழ்ந்து கொள். கிருஷ்ணனைத் தவிர..''

சிசுபாலனின் வார்த்தைகள் முற்றி அவன் பீஷ்மனையும் பாண்டவர்களையும் இழிவாக பேசி அவர்களைக் கொல்வேன் என்று அரற்றினான்.

''ஏன் கிருஷ்ணனை விட்டுவிட்டாய். முடிந்தால் அவனையும் சேர்த்தே கொல்லேன்'' என்றார் பீஷ்மர்.

''ஜனமேஜயா, அப்பறம் என்ன ஆயிற்று தெரியுமா'' என்ற வைசம்பாயன ரிஷி '' மேலே சொல்கிறேன் கேள்'' என்றார். ஜனமேஜயன் ஆர்வத்தால் நகங்களை கடித்து துப்பிக்கொண்டிருந்தான்.

வெறி தலைக்கேற சிசுபாலன் அந்த அரசவையில் கிருஷ்ணனைப் பார்த்து '' ஹே, கிஷ்ணா. தைர்யமிருந்தால் வா என்னோடு போரிட. உனக்கும் உன்னைச் சேர்ந்த பாண்டவர்களுக்கும் இன்று தான் நீங்கள் பார்த்த கடைசி சூர்யோதயம்''. அவையில் பலர் அதிர்ந்தனர். சிலர் கொக்கரித்தனர்.

கிருஷ்ணன் எழுந்தான். அமைதியாக எல்லோரையும் வணங்கி பேசினான்:

''அரசர்களே, யுதிஷ்டிரன் அழைப்பை ஏற்று வந்திருக்கும் மகா ஜனங்களே, இந்த சிசுபாலன் என்னை அவமதித்து, அவதூறாக பேசிய தெல்லாம் கேட்டீர்கள். என்னை ஜன்ம வைரியாக அவன் கருதி என்னை கொல்லவும் எழுந்துவிட்டான். அப்படியிருந்தும் அவனுக்கு எந்த தீங்கும் என்னால் நேர நான் இதுவரை அனுமதிக்கவில்லை. துவாரகைக்கு தீமூட்டினான். நான் எதிர்க்கவில்லை. என் அத்தை மகன் என்பதால் அவள் வேண்டுகோளுக்கு இணங்கி நான் அவளுக்குக் கொடுத்த வாக்கை மதித்து அவன் 100 முறை என்னை அவமதித்ததையும் இகழ்ந்து தூற்றியதையும் பொறுத்தேன். இப்போது அவனாகவே என்னை யுத்தத்துக்கு உங்கள் அனைவர் எதிரிலும் அழைத்தும் விட்டான். எனவே இந்த சிசுபாலனை நான் வதம் செய்யும் நேரம் வந்துவிட்டது.''

அடுத்த கணமே துல்லியமாக இருந்த வானத்திலிருந்து பேரிடி சத்தம் கேட்டது. ஜோ வென்று மழை பெய்தது. சூறாவளியாக காற்று சுழன்றது. கிருஷ்ணன் அமைதியாக நின்றான். கிருஷ்ணனின் கையிலிருந்து புறப்பட்ட சக்ரம் சிசுபாலன் சிரத்தை துண்டித்தது. சிசுபாலனின் உடலிலிருந்து வெளிப்பட்ட ஒரு பேரொளி கிருஷ்ணனை வலம் வந்து வணங்கி கிருஷ்ணனுள் ஐக்கியமானது. எவராலும் வெல்ல முடியாதவன் என்று பேர் வாங்கிய சிசுபாலன் கண நேரத்தில் கிருஷ்ணனால் வதம் செய்யப்பட்டதை கண்ணால் கண்ட அரசர்கள் பலர் நடுங்கினர். அவன் நண்பர்கள் கோபப்பட்டனர்.

யுதிஷ்டிரன் சிசுபாலன் மகனை சேடி அரசனாக அபிஷேகம் செய்வித்தான்.

இடையூறுகள் நீங்கி யுதிஷ்டிரனின் ராஜசூய யாகம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்து அனைத்து அரசர்களும் வாழ்த்தி விடைபெற்றனர்.

கிருஷ்ணன் யுதிஷ்டிரனை வாழ்த்திவிட்டு குந்தியை சந்தித்து ''அத்தை திருப்தியா, உன் மகன் ராஜாதி ராஜனாக அகில உலகும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ராஜசூய யாகம் நிறைவேற்றிவிட்டானே. நான் விடைபெறுகிறேன் '' என்று கிருஷ்ணன் துவாரகைக்குப் புறப்பட்டான். துரியோதனன் சகுனி மற்றும் சிலர் மட்டுமே இந்த்ரப்ரஸ்தத்தில் இன்னும் இருந்தனர்.

வியாசர் விடை பெறு முன் யுதிஷ்டிரன் மற்ற பாண்டவர்கள் பெண்கள் அனைவரும் அவரை வணங்கி ஆசி பெற்றனர்.

அப்போது யுதிஷ்டிரன் '' குருநாதா, சில தீய சகுனங்கள் தோன்றும் அவை வரப்போகும் உற்பாதங்களுக்கு அறிகுறி என்று நாரதர் ஏதோ சொன்னார்.அதை பற்றி நீங்கள் எனக்கு அறிவுரை வழங்கவேண்டும்.'' என்றான். வியாசர்.

''யுதிஷ்டிரா, நான் கவனித்தேன். சில தீய சகுனங்கள் தோன்றின. அவை சிசுபாலனை கிருஷ்ணன் வதம் செய்த மறுகணமே குறைந்து செயல்பட்டன. இந்த அரசவையில் கூடியிருந்த சில க்ஷத்ரியர்களும் அவர்கள் வம்சங்களும் அழிய ஏது இருக்கிறது. நீயே அதற்கு காரணமா
கவும் இருக்கலாம். அந்த பேரழிவு அர்ஜுனனாலும் பீமனாலும் கூட ஏற்படலாம் என்று அறிகுறி உள்ளது''.

திகைத்து நின்ற யுதிஷ்டிரனிடம் விடைபெற்று வியாசர் தனது சிஷ்யர்கள் புடைசூழ கைலாசம் நோக்கி சென்றார்.

துரியோதனன் சகுநியுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து இந்த்ரப்ரஸ்தத்தை அணு அணுவாக ஆராய்ந்தான். அந்த அழகு, சித்திர சில்ப நேர்த்தி, அவனை மயக்கியது. தனது ஹஸ்தினாபுரம் அரண்மனை இது போல் இல்லையே என்று மனம் வெதும்பியது.

ஒருநாள் இவ்வாறு ரசித்துக்கொண்டே சுற்றி வந்தபோது அந்த மாளிகையின் ஒரு விஸ்தாரமான ஒரு மண்டபம் தென்பட்டது. அதன் அற்புத வேலைப்பாடுகளை கவனித்துகொண்டு வந்த துரியோதனன் எதிரே ஒரு தடாகம் இருப்பதை உணர்ந்து தனது ஆடைகளை கழற்றி அதில் இறங்க காலை நீட்டினான். பிறகு தான் தெரிந்தது தடாகம் போல் தோன்றிய தரை என்று. மிகவும் வெட்கமாக போய் விட்டது அவனுக்கு. ஆடைகளை அவசர அவசரமாக அணிந்து மேலே தொடர்ந்தான். மாளிகையின் வேறு ஒர் இடத்தில் தாமரை இதழ்கள் பதித்து பளிங்கு நீர் நிரம்பிய ஒரு குளம் போல் ஒரு இடம் கண்டான். ஏற்கனவே பட் ட அனுபவத்தால் ''ஆஹா என்ன அழகாக இந்த மண்டபத்தின் தரை ஒரு ஒரு பளிங்கு குளம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது என்று நடந்தவன் தொபுகடீர் என்று அந்த நீர் நிலையில் விழுந்தான். ஆம் அது உண்மையிலேயே ஒரு நீர் நிலை. ஆடைகள் நனைந்து கிரீடம் தலையிலிருந்து எகிறி விழ அவன் விழுந்ததை அருகில் நின்ற பீமன் கண்டு உரக்க வேறு சிரித்து விட்டான். பணியாட்கள் ஓடிவந்து அவனை மீட்டு வேறு வஸ்த்ரங்களை துரியோதனனுக்கு அளித்தார்கள். துரியோதனன் கவனித்தான். அர்ஜுனன் நகுல சகாதேவர்கள் உடன் இருந்தவர்கள் வேறு சிரித்து விட்டார்கள். அவமானம் துரியோதனை பிடுங்கித் தின்றது.

மீண்டும் வேறு ஒரு இடத்தை நீர் நிலை என்று கருதி அவன் ஆடைகளை உயர்த்திக்கொண்டது வேறு அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. துரியோதனனுக்கு எரிச்சல் அதிகமானது. ஒரு இடத்தில் கதவு திறந்திருக்கிறது என்று நினைத்து பளிங்கு சுவரில் மண்டையை முட்டிக்கொண்டான். வேறு இடத்தில் கதவு மூடியிருக்கிறது என்று நினைத்து வேறு ஒரு இடம் நகர்ந்தபோது அவனை அந்த நுழைவாயிலுக்குள் அழைத்து சென்றார்கள். ஒரு பளிங்கு மாளிகையின் வாயில் மூடியிருக்கிறது என்று கைகளால் அதை திறக்க முயன்று அந்த திறந்திருந்த அறையில் அவன் தடுமாறி விழுந்தது...

மேலும் மேலும் அனைவர் எதிரிலும் தான் அவமானப் பட்டது துரியோதனன் மனதை ரொம்பவும் உறுத்திற்று. ராஜ சூய யாகத்தில் யுதிஷ்டிரனுக்கு வந்த மலை மலையான சீர் வரிசைகள், புகழ், பேர், எல்லாம் அவனை நிம்மதி இழக்கச் செய்தது. தூக்கம் இழந்த துரியோதனன் ஒருநாள் ஹஸ்தினாபுரம் திரும்பிச் சென்றான். வழியெல்லாம் சகுனி கேட்ட எந்த கேள்வியும் பதில் பெறவில்லை. துரியோதனன் மனம் பாண்டவர்களின் மீதுள்ள அசூயையை ராஜசூய யாகத் தீ அதிகமாகவே வளர்த்து விட்டதே.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...