Tuesday, July 17, 2018

DISCUSSION

கருப்பையில் ஒரு கருத்தரங்கம்
J.K. SIVAN

எங்கோ ஒரு அம்மா. நிறை மாத கர்ப்பிணி. படுத்துக்கொண்டிருக்கிறாள். அவள் வயிற்றுக்குள் ரெண்டு சிசுக்கள். அவளுக்கு தெரியுமோ தெரியாதோ? இன்னும் சிலநாளில் பிரசவம் ஆகப்போகிறது. அதுசரி. அவள் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரிந்து விட்டதே. ரெண்டு சிசுக்களும் ஒன்றுடன் ஒன்று பேசுகிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. இந்த பேச்சிலிருந்து உங்களுக்கும் அப்படியே ஒரு சந்தேகமும் இருக்காது.

ஒரு சிசு: ''நீ நண்பனா, சகோதரனா , சகோதரியோ, யாரோவா? தெரியவில்லை. என்னைப்போலவே நீயும் இங்கே இருக்கிறாயே, நாம் இங்கிருந்து வெளியே போனால் இப்போது போல் சுகமாக வாழ்வோமா?

''ஏன் சந்தேகம். நாம் வெளியே போனால் ஏதோ ஒரு விதமான நமக்கு தெரியாத வாழ்க்கை இருக்காதா? அதற்கு பழகிக் கொள்வோம்?

“'முட்டாளே, இந்த இடத்தை விட்டு நாம் வெளியே போனால் அவ்வளவு தான். முடிந்துவிடுவோம். வாழ்வே கிடையாது. என்ன வாழ்க்கை நமக்கு அப்புறம் கிடைக்கும் என நீ நினைக்கிறாய் ?

''எனக்கு என்ன தெரியும்? ஆனால் இதுபோல் நிச்சயம் இருட்டாக இருக்காது. நமக்கு கால் என்று ஏதோ இருக்கிறதே அதால் நடக்கலாம். வாய் என்று ஒன்று இருக்கிறதே அதால் சாப்பிடலாம். மீதி உடம்பின் பல பாகங்கள் உபயோகமாகலாம். இப்போது அது பற்றி ஒன்றும் தெரியாது.”

''நீ உளறல் திலகம். காலால் நடப்பதாம், வாயால் சாப்பிடுவதாம்? பேத்தல். இப்போது நடக்கிறோமா? கால் எதற்கு நமக்கு? வாயாலா நீ சாப்பிடுகிறாய்? ஏதோ ஒரு குழாய் நமக்குள் செல்கிறது. நமக்கு வேண்டிய சத்து தருகிறது அது வெளியே கிடைக்குமா சொல்? இந்த குழாய் சின்னதாக அல்லவோ இருக்கிறது வெளியே அது போதுமா நமக்கு ஜீவிக்க? எனவே தான் சொல்கிறேன் இதை நாம் வெளியேறினால் அவ்வளவு தான். ஜீவிக்க முடியாது. நோ லைப்''

''அப்படி சொல்லாதே. ஏதோ வெளியே நமக்கு இல்லாமலா இருக்கும். இங்கு போல் அங்கிருக்க போவதில்லை. வாஸ்தவம். ஒருக்கால் அங்கே போனால் இந்த தொப்புள்கொடி நமக்கு தேவையிருக்காதோ என்னவோ?

''புரியாமல் பேசாதே முட்டாளே. வெளியே வாழ்க்கை வாழமுடியும் என்றால் ஏன் அங்கிருந்து ஒருவரும் இங்கே வரவில்லை? நம்மை டெலிவரி செய்துவிட்டால் அவ்வளவு தான். அது தான் வாழ்வின் முடிவு. எங்கும் ஒரே இருட்டாக தான் இருக்கும், சப்தம் இருக்காது. எல்லாம் மறதி மறதி மறதி தான். ”

“எனக்கு தெரியாது. ஆனால் நாம் நமது அம்மாவை பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. அவள் நம்மை பார்த்துக்கொள்ளமாட்டாளா?”

''அம்ம்மாவாவது, ஆட்டுக்குட்டியாவது? அம்மா என்று ஒருவள் இருக்கிறாள் என்று நீ நம்புகிறாயா? சிரிக்கப்போகிறார்கள் வெளியே சொல்லாதே. அம்மா இருக்கிறாள் என்கிறாயே எங்கே அவள்? எனக்கு காட்டு?

''அம்மா நம்மை சுற்றி இருக்கிறவள் . எங்கும் எப்போதும் நம்மோடு இப்போது இருப்பவள். நாம் அவளே தான். அவளுக்குள் நாம் இருக்கிறோம். அவள் இல்லை என்றால் உலகம் இல்லை, நாம் இல்லை.”

''நீ ஏதேதோ சொல்கிறாய். நாம் இதுவரை அம்மாவை எங்கே பார்த்தோம்.? அம்மா என்று ஒருவள் இருக்கிறாள் நம்மை காக்கிறாள் என்பது உன்னுடைய அற்புத கற்பனை.அப்படி யாரும் கிடையாது ''

''''சேச்சே உனக்கு புரியவில்லை. நீ கொஞ்சம் அமைதியாக இரு. யோசி. அவள் இருப்பது புரியும். ஏதோ அசைவு உனக்கு தெரியும். அவள் நடக்கிறாள், உட்காருகிறாள், ஓடுகிறாள், பாடுகிறாள், நம்மை சுமந்து. அவள் குரலும் கூட இங்கே மெல்லிதாக கேட்கும். நம்மை கண்ணே என்று கூப்பிடுவது எனக்கு கேட்கிறதே. உனக்கும் கேட்காதா?

மேலே சொன்ன இரு சிசு பேச்சில் அம்மா என்ற வார்த்தையை கடவுள், இறைவன், கிருஷ்ணன் என்று வைத்து படியுங்கள் நமக்கு கடவுள் என்கிற அம்மா இருக்கிறாரா இல்லையா என்று புரியும். MKT பாகவதர் பாடிய ''கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து காக்கும் தயாளன்.....'' வார்த்தைக்கு அர்த்தம் புரியும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...