Friday, July 6, 2018

ARUPATHTHU MUVAR



அறுபத்து மூவர் J.K. SIVAN குங்கிலியக்கலய நாயனார் ''கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்" காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் (இப்போது திருக்கடையூர்) என்று ஒரு ஸ்தலம். எல்லோருக்கும் தெரிந்த சிவஸ்தலம். நிறைய பேர் அங்கே தான் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் எல்லாம் செய்துகொள்கிறார்கள். மார்க்கண்டனுக்கு சிரஞ்சீவியாக என்றும் பதினாறாக சிவன் அருளிய இடம். காலனை சம்ஹாரம் செய்த கால சம்ஹார மூர்த்தி பெரியவராக நின்று காட்சி தருகிறார். பழைய காலத்தில் அந்த ஊருக்கு திருக்கடவூர் வீரட்டானம் என்று பெயர். அந்த ஊரில்ஒரு ஏழை பிராமணர் வாழ்ந்தார். குங்கிலிய கைங்கர்யம் சிவனுக்கு செய்ததால் குங்கிலியக் கலயனார் என்ற பெயர். சிறந்த சிவபக்தர். அந்த ஊர் சிவனுக்கு, அமிர்தகடேசருக்கு, அவர் ஒரு விசித்தரமான திருப்பணி செயது வந்தார். அதாவது சிறுவன் 16வயதான மார்கணடனுக்கு விதி முடிந்து மரணம் சம்பவிக்கும் நேரம். அவனைத்தேடி காலனே வருகிறான். பாசக்கயிற்றை அவன் மேல் வீசுகிறான். மார்க்கண்டன் சிவ பக்தன். ''ஐயனே நீ தான் என் உயிரைக் காப்பாற்றவேண்டும்'' என்று சிவலிங்கத்தை கட்டிக்கொள்கிறான். சிவன்மேல் யமனின் பாசக்கயிறு விழ பரமேஸ்வரன் லிங்கத்திலிருந்து வீறிட்டு எழுந்து காலனை காலால் உதைத்து, கால சம்ஹார மூர்த்தியாக காட்சி தந்து மார்க்கண்டேயனை காப்பாற்றிய க்ஷேத்ரம். சிவனின் இந்த கருணையை நினைத்து, கலயனார் அனுதினமும் விதிப்படி சாம்பிராணி போன்ற குங்கிலியத்தால் தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆகவே தான் நாயனாருக்கு அந்த பெயர். வறுமையில் வாடினாலும் இந்த குங்கிலிய தூபத்திருப்பணியை விடாமல் செயதுவந்தார் கலயனார். பணமில்லாத நேரம் வறுமை வாட்டியதால், இருந்த கொஞ்சம் பயிர் நிலம் முழுவதையும், அதில் வேலை செயதவர்களையும் துறந்து தூபப் பணி தொடர்ந்தார். அப்போதும் வறுமை விடவில்லை அவரை. வேறு வழியின்றி தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணவில்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டது. அப்படியும் விடாமல் குங்கிலிய தூப பணி எப்படி தொடர்வது?? ரெண்டு மூன்று நாள் பசி. உணவில்லை. கலயனார் மனைவி யோசித்தாள் . கணவனின் தூப பணி நிறைவேற என்ன செய்யலாம்? காசில்லையே. ''சரி எனது கழுத்தில் இருக்கும் தங்க தாலியை கழட்டி தருகிறேன். இதை விற்று வரும் பணத்தில் நெல் வாங்கி வாருங்கள். குடும்பமும் நடக்கட்டும். அதை விற்று வரும் பணத்தில் உங்களது தூப பணியும் தொடரட்டும் '' என்றாள் . மனைவியின் திருமாங்கல்யத்தை எடுத்டுக்கொண்டு விற்க நடந்த கலயனார் எதிரே ஒரு வியாபாரி வந்தான். அவனிடம் வண்டியில் நல்ல வாசனை மிக்க குங்கிலியம் பெரிய மூட்டையாக இருந்தது. கலயனார் விடுவாரா இந்த சந்தர்ப்பத்தை ? "என் ஈஸ்வரனுக்கேற்ற நல்ல மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். இது அத்தனையுமே வாங்கிவிட வேண்டும். ''தம்பி, இந்தா இந்த தங்கத்தை வைத்துக்கொண்டு உன் குங்கிலிய மூட்டை யை தந்து என் சிவனுக்கு தூப வழிபாட்டை நடத்த உதவுகிறாயா?'' என்று கேட்டார். அவனும் அவர் தந்த பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினை அவருக்கு தந்துவிட்டு சென்றான். கலயனார் பரம சந்தோஷத்தோடு குங்கிலிய மூட்டையைத் தலையில் சுமந்துகொண்டு சிவன் கோவில் களஞ்சியத்தில் மூட்டை நிறைந்த குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார். வீட்டை, மனைவியை, குடும்பத்தை, அவர்கள் பசியை எல்லாமே மறந்துவிட்டார். ஒரே சந்தோஷம் சிவனுக்கு நிறைய குங்கிலியம் வெகுநாள் தூப வழிபாட்டுக்கு கிடைத்துவிட்டதே. கோவிலிலேயே தங்கிவிட்டார். அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மயங்கி வாடிக்கொண்டிருந்தனர். ''இன்னும் காலையில் போன கணவர் வரவில்லையே. தாலியை விற்று பணம் கிடைத்து நெல்லோ அரிசியோ கொண்டுவருவார். கஞ்சியாவது காய்ச்சி பசியாறலாம்'' என்று காத்திருந்து களைத்து போனாள் மனைவி.''. இரவு நேரம். சிவன் சும்மா இருப்பானா? அவன் திருவருளினாலே குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்தான். கலயனார் வீடு முழுதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக நிரப்பினான். ''எழுந்து போய் பார்'' பரம சிவன் கலய நாயனார் மனைவிக்குக் கனவில் உணர்த்த, அவள் திடுக்கிட்டு எழுந்தாள். பார்த்தவளுக்கு தனது வீடு அடையாளமே தெரியவில்லை . எங்கும் லக்ஷ்மிகடாக்ஷம். யதேஷ்டமாக உணவு தானியங்கள். ''இறைவா, இதெல்லாம் உன் அருள் ஒன்றினால் தான்'' என்று கைகூப்பித் தொழுதாள். அவசரமாக வெளியே சென்ற கணவன் வீடு திரும்பி, குழந்தைகளோடு சேர்ந்து வயிறார சாப்பிட உணவு சமைத்தாள் . ''இரவு நேரமாகி விட்டதே. கலயா , நீ உன் வீடு சென்று உணவு அருந்தி பசி தீர்ந்து பிறகு வா'' சிவன் உத்தரவிட, கலயனார் வீடு சேர்ந்தார். செல்வமெல்லாங் கண்டு ஆச்சர்யர்த்தோடு ''இதெல்லாம் எப்படி, ஏது ?' என கேட்க, "திருநீலகண்டர் அருள் " என்றாள் மனைவி. "என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? '' என்று அதிசயித்தார். பிறகு என்ன? விடாது குங்கிலிய தூப திருப்பணி தொடர்ந்தது. ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. திருப்பனந்தாள் என்ற ஊரில் சிவலிங்கம் சாய்ந்து விட்டது என்ற சேதி வந்தது. தாடகை என்ற ராணிக்கு அருள அவ்வாறு சாய்ந்தது. சோழ ராஜா என்னவெல்லாமோ முயன்றும் லிங்கம் நிமிரவில்லை. சாய்ந்த லிங்கத்தை நிமிர்த்த வந்த யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலை கொண்டான். இதனால் சோழநாட்டுக்கு மக்களுக்கும் ஏதாவது தீங்கு விளையுமோ? ஊரெங்கும் இதே பேச்சு. கலயனார் விஷயம் கேட்டு வருந்தினார். எப்படியாவது சாய்ந்திருந்த சிவலிங்கத்தை நேராக்க வேண்டுமே என்று பிரார்த்தனையோடு திருப்பனந்தாள் சென்றார். ''பரமசிவா உன்னை நேர்ப்படுத்த எனக்கு சக்தியைத் தா'' . சிவலிங்கத்தின் மீது பெரிய வலிய கயிற்றினை ஒரு முனையை கட்டி தம் கழுத்தில் மறுமுனையைக் கட்டி இழுத்தார். கயிறு கழுத்தை இருக்கியது .சிவலிங்கம் அசையவில்லை. '' என் உயிர் போனாலும் போகட்டும். என் அப்பனை நேராக்குவதில் என் பிராணன் அர்ப்பணமாகட்டும்'' மீண்டும் மீண்டும் கயிற்றை இழுத்தார் நாயனார். கழுத்து இறுகியது. விழிகள் பிதுங்கின. மூச்சு நிற்பது போல் ஆகிவிட்டது. இன்னும் சிறிது கணத்தில் உயிர் பிரியப்போகிறது. நினைவு தப்ப ஆரம்பித்தது. ஆனால் வாய் விடாமல் ஓம் நமசிவாயா என்று சொல்லிக்கொண்டே இருந்தது. என்ன ஆச்சரியம். யானைகள் இழுத்தபோதும் நேராகாத சிவலிங்கம் கலயனார் கழுத்தில் கட்டிக்கொண்டு கயிற்றை இழுத்தபோது நேரானது . மண்ணவரும் விண்ணவரும் போற்றினார்கள். சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். திருப்பனந்தாளை விட்டு, நேரான சிவனை விட்டு நீங்க மனமின்றி சிலகாலம் அங்கே தங்கி வழிபட்டு பின்னர் திருக்கடவூர் சேர்ந்தார்.. திருக்கடவூரிலே குங்கிலிய தூபத்திருப்பணி சிறப்புடன் தொடர்ந்து ஒருநாள் சிவ பெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார். "கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் சொல்கிறார். சிவாலயங்களில் சிவசந்நிதியில் கமகம வென மணக்கும் குங்கிலியத் தூபம் இடுவது சிறந்த சிவபுண்ணியம். சிவபெருமானுடைய திருவடிகளை மெய்யன்போடு பற்று பவர்களுக்கு சிவனருள் கிடைக்கும். பேரின்பப் பெருவாழ்வு பெறுவார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...