Tuesday, July 31, 2018

NOSTALGIA



நான் வாங்கிய மனை. J.K. SIVAN ...

நான் செய்த காரியத்துக்கு என்னை அர்ச்சனை செய்யாதவர்கள் கிடையாது. தலை கொழுப்பு. நாலு காசு சம்பாதிக்கிறோம் என்கிற கர்வம். தான்தோன்றி தனம் . சொந்த புத்தியும் கிடையாது. சொல் பேச்சும் கேட்கறதில்லை.

''சிவா, நீ பண்ணது மடத்தனம். மனிஷன் இருப்பானா அங்கே?

நான் பதிலே சொல்லவில்லை. ஒருவேளை எல்லோரும் சொல்வது சரியோ. நான் மடையனோ? அவசர குடுக்கையோ?

''ஒரு வார்த்தை என்கிட்டே கேட்டிருந்தா நான் சொல்லியிருப்பேனோல்லியோ? பஞ்சாபகேசன் ஆதுரமாக என் தலையை தடவினார்.

''இல்லே என் பிரென்ட் சொன்னான். நல்ல இடமா இருக்கு. வாங்கிடுன்னு. வாங்கிட்டேன். இன்னும் முழுசா பணம் கொடுக்கல் லியே. மூன்று இன்ஸ்டால்மெண்ட் லே தறேன்னுதானே சொல்லிருக்கேன். வேணா இந்த முதல் இன்ஸ்டால்மென்டுக்கு தலை முழுகிடுறேன்.

''மறுபடியும் அவசரப்படாதே. வாங்கிறது தான் வாங்கினியே. இடத்தை போய் பார்த்தியா. ?''

''எங்கிருக்குன்னே தெரியாதே''
''பின்னே எப்படி செலக்ட் பண்ணே?''
''என் அத்திம்பேர் சொன்னார். இங்கே எல்லாம் நல்ல இடம் இருக்கு. நிறைய பேர் வந்து பார்த்துட்டு போறா. விலை ஏறினாலும் ஏறும். நீ வாங்கறதா இருந்தா சீக்கிரம் வாங்கிடு ''ன்னு.
''அப்புறம்?''
''என் சொந்தக்காரன் ஒருத்தன் ஏற்கனவே வாங்கி இருக்கான். இன்னும் வீடு கட்டலே . அவனை அவன் ஆபிஸ்லே போய் பார்த்து கேட்டேன்.
என்ன சொன்னான்.?''
''இப்போதைக்கு அங்கே வந்து தங்கி ஆபிஸ் போறது சௌகரியம் இல்லை. ரெண்டு மூன்று மணிநேரம் முன்னாலேயே கிளம்பினா பத்துமணிக்கு ஆபிஸ் போய் சேரலாம். மழைக்காலத்துலே எதுவும் சொல்லமுடியாது.
''நீங்க எதுக்கு வாங்கினேள் ?' என்று அவரை கேட்டேன்.
''ஆபிஸ்லே நாலைஞ்சு பேர் மொத்தமாக விலை பேசி வாங்கினா. ஒரு பிளாட் இருக்குன்னு என் பக்கத்து சீட் காரன் தொளை ச்சான். நான் அவன் கிட்டே ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அவன் பேச்சை தட்டமுடியல்லே. கடனுக்கு தான் கொடுத்து மாசா மாசம் கட்றேன் ''

சரி எல்லோரும் சொல்கிறார்களே என்று என் ''நிலத்தை '' பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றேன். பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் இறங்கி தெற்கு நோக்கி நடந்தேன். வயல்கள் . சோடா கடை குப்புசாமி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தான் எனக்கு விற்றவர். அவர் சொன்ன அட்ரஸ் தவிர மற்றதெல்லாம் இருந்தது. ரெண்டு மணி நேரத்திற்கு பிறகு, பத்து பன்னிரண்டு பேர் தவறாக அடையாளம் காட்டிய இடம் எல்லாம் அலைந்து குப்புசாமியை ரயில்வே கேட் அருகே சைக்கிளில் நிற்கும்போது பிடித்தேன். அவர் சைக்கிளில் பின்னால் அமர்ந்தேன். மிதித்துக்கொண்டு வயல் வழியே எங்கெங்கெல்லாமோ வளைந்து வளைந்து சென்றார். கொஞ்சம் தெற்கே சென்றால் ஆப்பிரிக்கா வரும்போல் இருந்தது. மனித சஞ்சாரமே இல்லாத வயல்கள் இடையே சைக்கிள் நின்றது.
''இங்கேயா ?''
''இல்லே சைக்கிள் பஞ்சர். கோபாலு வீட்டில் போய் ஒட்டிக்கொண்டு போகலாம். கோபாலு வீடு உச்சி வெயில் வேளையில் கிடைத்து அவன் வந்து பஞ்சர் ஒட்டின பிறகு இருவரும் நடந்தே போனோம். செருப்பு அறுந்தது. அதை ஏற்கனவே ரெண்டு மூன்று தடவை தைத்தாகிவிட்டது. தலையை சுற்றி ஏதோ ஒரு நிலத்தில் விசிறி எறிந்துவிட்டு வெறும் காலில் நடந்தால் எங்கு பார்த்தாலும் நெருஞ்சி முள் காலை பஞ்சர் செய்கிறது. நிறைய நடந்தபிறகு ஒரு இடத்தில் நின்றான் குப்புசாமி. எதிரே விச்ராந்தியாக ரெண்டு மூன்று எருமைகள் ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தன.

''அது தான் நான் அடையாளம் சொன்ன அந்த ஒத்தை பனைமரம் தெரியுதா? '' என்றான் குப்புசாமி.
எனக்கு பல பனைமரங்கள் தெரிந்தன.
''எந்த ஒத்தை பனைமரம்?.
'' கருவேல முள் புதர் பக்கத்திலே.''
கிட்டே போன போது வெடுக்கென்று சட்டையை பிடித்து இழுத்தான் குப்புசாமி. கீழே பாக்கமாட்டிங்களா ?''

ஒரு மஞ்சள் கட்டம் போட்ட தோலோடு பளபளவென்று ஒரு நீளமான பாம்பு என்னை லக்ஷியம் செய்யாமல் என்னை கடந்து சென்றதில் என் இதயம் நின்று விடும்போல் ஆகிவிட்டது.

சில வாத்து கூட்டங்கள் ஓட ஒரு இடத்தை காட்டினான். ரெண்டு கருங்கல் நட்டு இருந்தது. வேறு ஒன்றும் வித்யாசமாக இல்லை. இதிலிருந்து ரெண்டாவது பிளாட். நல்ல இடம். உங்களுக்கு அதிர்ஷ்டம் சார்.''

''ஏன் ?'' ஈனஸ்வரமாக கேட்டேன்.
பக்கத்திலே கோவில் வருது. அங்கே பார்க் வருது.''
எல்லாமே மரம் செடிகொடியாக பார்க்காகவே இருந்ததால் தனியாக ஒரு பார்க்கில் எனக்கு நாட்டமில்லை. தூரத்தில் நங்கநல்லூர் பிள்ளையார் கோவில் சின்னதாக தெரிந்தது. அது தான் அந்த ஊர் முதல் கோவில். (இப்போது அதற்கு கும்பாபிஷேகம்)
நான் இருக்கும் இடத்தில் இருந்து மூன்று நாலு கி.மீ. தூரத்தில் மீனம்பாக்கத்திலிருந்து மின்சார ரயில் பீச் நோக்கி ஓடியது. நடுவே எங்கோ சில சிறிய வீடுகளே இருந்தன. தூரத்தில் பல்லாவரம் மலை ஒரு பக்கம். தெற்கே தலையை சுழட்டி பார்த்தேன். திரிசூலம், மலைகள்.

கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன் நங்கநல்லூரில் நான் ஓர் பிளாட் ஓனர்.
ஒண்ணரை க்ரௌண்ட் ரெண்டாயிரம் ரூபாய்.. அடேயப்பா? இவ்வளவு விலையா ? எதுக்கு இவ்வளவு ஜாஸ்தி? பணத்துக்கு எங்கே போவது ?''
மேற்கொண்டு அப்புறம் சொல்கிறேன்.



''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...