Thursday, July 19, 2018

ADVICE

கிச்சுமாமாவுக்கு பொன்மொழி..​
J.K. SIVAN

கிச்சு மாமா எப்போதும் பொன்மொழி தேடுவார். பாக்கெட்டில் பழைய வருஷ டயரி ஒன்று நீல அட்டையில் ஏதோ கம்பெனி போட்டது. அந்த கம்பெனி அடையாளம் தெரியாமல் அதன் மேல் வள்ளி தேவசேனாபதி படம் ஒட்டி நாலு பக்கமும் குங்குமம் தடவி வைத்திருப்பார். எது சொன்னாலும் ''இருங்கோ இருங்கோ, இது அருமையா இருக்கு. எழுதிக்கிறேன் என்று இங்க் பேனாவில் எழுதிப்பார். இன்னும் சிலர் இங்க் பேனாக்கள் தான் உபயோகிக்கிறார்கள். அதில் எழுதினால் தான் பாந்தமாக இருக்கிறது என்பார்கள். சில சமயம் அது பாக்கெட்டில் நீல கரையை பதித்திருக்கும். கருப்பு இங்க் பேனா உபயோகிப்பவர்கள் எண்ணிக்கையில் கம்மி. எனக்கு கருப்பு இங்க் பேனா பிடித்து நிறைய சேர்த்து வைத்திருந்த காலம் ஒன்று.

நேற்று வந்திருந்தார். அவர் எழுதிக்கொண்டு போன விஷயம் இது தான். உங்களுக்கும் உபயோகப்படலாம்.

​1 நீ தான் எப்பவும் கரெக்ட் என்று நினைக்காதே. தான் செய்வது, சொல்வது தப்பு, சரி இல்லை, என்று ஒப்புக்கொள்பவர்கள் கம்மி. இந்த பிடிவாதம் நட்பை உறவை முறிக்கும்.
2. ​ உன்னை சுற்றி நடப்பதை கட்டுப்படுத்த உன் அதிகாரத்தில் கொண்டுவர என்ன உரிமை உனக்கு? வீட்டிலாகட்டும், வேலைசெய்யுமிடத்திலாகட்டும் உன் விருப்பப்படி ஆணைப்படி எதுவும் நடக்காது. அவமரியாதையும் அவமானமும் தான் மிஞ்சும். அன்பினாலே ஆள வந்த அழகு பூபதியாக இரேன். அது உனக்கு பயனளிக்கும்.

3. ​யாரையும் குறை சொல்லாதே. உன் அதிகாரம் எங்கும் செல்லாது. உன் எண்ணங்களை பிறர் மேல் திணிக்காதே. உன் விருப்பப்படி உன் நாய்குட்டி கூட நடக்காது.
4.​ மனம் ஒரு அற்புதமான கடவுளின் பரிசு. உன்னை நீயே புண் படுத்திக் கொள்ளாதே.​ ஆக்க பூர்வ எண்ணம் செயல் தான் உன்னை மேம்படுத்தும். காயப்படுத்தாது.

5.​ ஐயோ இதெல்லாம் என்னால் முடியாதுப்பா, -- உன் கொள்ளளவு தெரியாமல் நீயே உன்னை குறுக்கிக்கொள்ளாதே. உன்னால் எதுவும் முடியும் தம்பி. துணிந்து நீரில் குதி. தானே நீந்துவாய்.
6.​'' எல்லோரும் என்னை கறிச்சு கொட்டுகிறார்கள், அவமதிக்கிறார்கள், என்னை பிடிக்கவில்லை. சந்தோஷப்படுத்தவில்லை, நிம்மதி தரவில்லை'' -- துரியோதன மனோபாவம் வேண்டாம். உன் நிம்மதி, சந்தோஷம், சுகம், திருப்தி, உன்னிடம் உன் மனதில் தான் இருக்கிறது.
7. ​எவரையும், எந்த செயலையும், குறுகிய நோக்கோடு, குற்றம் குறை கண்டு பிடிக்காதே, சொல்லாதே. எல்லோரும் நீ அல்ல. வெவ்வேறே. ​ சரியென்று ஏற்றுக்கொள். சிரி. உன்னைசுசுற்றி எத்தனை பேர் அன்போடு என்று எண்ணிப்பார்.
8.​ மற்றவர் புகழ, கொண்டாட, ஒரு காரியம் செய்யவேண்டாம். உன் முகத்திரை திறந்துவிடும். நீ செய்தது பயனளிக்காது. ஒளிவு மறைவு இன்றி உன்னால் ஆனதை செய். உன்னை நிறையபேர் அணுகுவார்கள், புகழ்வார்கள்.போற்றுவார்கள்.
9.​ காலம் மாறுகிறது. எல்லாமும் மாறும்போது நீயும் மாறு. பிடிவாதம் உனக்கு உதவாது.

10. ​மனம் திறந்து பேசு. பழகு. உனக்கு தெரியாததை சரி என்றோ தப்பு என்றோ ஏன் சொல்லவேண்டும்.
11. ​பயம் வேண்டாம். பயம் ஒரு மாயை. மனத்தில் இடம் கொடுக்காதே. உள்ளே பயம் இல்லையென்றால் பயம் வெளியே எங்கும் எதிலும் எவரிடமும் இருக்காது.
12. ​உன் குறையை, குற்றத்தை மறைப்பது. அதை திணிக்க நொண்டிச்சாக்கு, இது உதவாது.​ உன் வளர்ச்சிக்கு இது முதல் எதிரி.
13. ​''எனக்கு எல்லாம் தெரியும்' -- உன் அனுபவமின்மையை தான் இது வெளிப்படுத்தும். வாழ்க்கை ஒரு பயணம். முடிவல்ல. புதுப் புது அனுபவங்கள் வந்துகொண்டே இருக்கும். பழசு எதையோ கெட்டியாகப் பிடித்துக்கொள்வது உதவாது.
14. ​சின்ன வயதில் நிறைய சாக்லேட் சாப்பிட்டோம், பம்பரம், கோலி, மாங்காய் திருடுவது. அப்போது பிடித்தது. இப்போது உதறிவிட்டோம். ஒவ்வொன்றாக பிடித்ததை எல்லாம் விடு. திருமந்திரம் திருமூலர் சொல்கிறார் காதில் விழுகிறதா. ''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள், ஆசை படப் பட ஆய்வரும் துன்பங்கள், ஆசையை விட விட ஆனந்தமாமே''

15.​கடைசியாக ஒன்று சொல்கிறேன். இனிமேல் தொந்தரவு பண்ணமாட்டேன். நீ மற்றவன் விருப்பத்துக்காக வாழவில்லை. உனக்காக. அதில் உனக்கும் மற்றவர்க்கும் உதவி ஏதாவது, பயன், பலன், உதவி இருக்கட்டுமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...