Saturday, July 28, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி - J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

''நான் சந்நியாசி

''வாடா என் கண்ணே'' , என்று வழி மேல் விழி வைத்து வரவேற்று அணைத்து வயிறார உணவு தருபவள் தாய்.

''ஏண்டா இப்படி இளைச்சுருக்கே உடம்பு சரியில்லையா வா உடனே என்னோடு. வைத்யர் கிட்டே அழைத்துப் போகிறேன்'' என்று சொல்பவன் தந்தை. இருவருமே இல்லை. வானமே கூரை பூமியே பாய். சேஷாத்திரிக்கு யாருமே தேவை இல்லை. உலகில் பிள்ளைகள் மேல் பெற்றோரை அன்றி வேறு யாருக்கு கவலை? .

சேஷாத்திரியை பொறுத்தவரையில் அப்படி ஒருவரும் கவலையே படாமல் இருந்தால் ரொம்ப நல்லது. என் மனம் முழுதும் அந்த அருணாச லேஸ்வரர் மேல் புதைந்து விடும் என்று எண்ணித்தானோ என்னவோ ஒரு தடவை வீட்டை விட்டு சென்றவர் வீட்டுப்பக்கம் கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாசங்களாக வரவேயில்லை. எங்கோ கோவில், எங்கோ சத்திரம் . பசித்தபோது எது கிடைக்கிறதோ அது. மீதி நேரம் உபவாசம். சின்ன வயதில் இப்படி ஒருவரா?

எல்லோருக்கும் அப்பா என்று ஒருவர் என்றும் இருக்கிறாரே. அவருக்கு தனது குழந்தை மீது பாசம் உண்டு அல்லவா? சும்மா பார்த்துக் கொண்டு இருப்பாரா?

காஞ்சியில் சர்வ தீர்த்தம் கரையில் இருக்கும் விஸ்வநாத சுவாமி ஆலயத்தில் ஒருநாள் யாரோ ஒரு மஹான் வந்திருந்தார் என்று கூட்டம். வடக்கே இருந்த வந்த இளம் சந்நியாசி. நெருப்பு போல் தேகம். ஒளி. ஜடாமுடி. தேங்காய் கப்பரையே கோவணமாக தரித்து அது தான் உடலில் ஆடை! அவதூத சந்நியாசி. அருகே நான்கு சிஷ்யர்கள். தக்ஷிணாமூர்த்தியே நேராக வந்துவிட்டாரோ?

கண்களில் தீர்க்கமான வைராக்கியம், ஞானம் கொப்புளித்தது. தலையிலும் கழுத்திலும் கைகளிலும் உத்திராட்ச மாலைகள். உடலெல்லாம் வெண்ணீறு.

அவரைப் பார்த்த சேஷாத்திரி தன்னையறிமாலேயே தக்ஷிணாமூர்த்தி அஷ்டக ஸ்தோத்ரத்தை தனக்குள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு சம்பிரதாயப்படி அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். அந்த துறவியின் கண்களில் சேக்ஷத்திரியின் கண்களை சந்தித்ததும் பளிச்சிட்டன. உதட்டில் புன்முறுவல். கைகள் உயர்ந்தன

'' இங்கே வா'' என்று ஜாடை. ''மாகச: 'மாகச'' (வருத்தப் படாதே) வாய் பேசியது. தலை ஆட்டி அபயகரம் காட்டி ''உப விச :'' (உட்கார்) என்று உத்தரவு.

கரும்பு தின்னக் காசு கேட்பாரா சேஷாத்திரி. சந்நியாசி அருகே அமர்ந்தார். அவரது இரு கரம் சிரத்தின் மேல் கூப்பியிருந்தது. அரைக்கண் மூடி த்யானம். கண் திறந்தபோது தன் கண்களையே ஒரு ஜோடி கண்கள் ஊடுருவி பார்ப்பதை உணர்ந்தார். உடல் சூடானது. மின்சாரம் தலைக்கு கிர்ரென்று ஏறியது. உடல் லேசானது. அருகிலோ எதிரிலோ எதுவும் எவருமே தெரியவில்லை. எங்கோ விண்ணில், வெண்மையாக மேகக் கூட்டத்தில் பறந்து சென்று கொண்டிருந்தார் சேஷாத்திரி.........

''அட , இது என்ன பனிமலைகள் உச்சி. அதோ கண்மூடி கழுத்தில் ஒரு பெரிய நாகம் படம் விரித்து தன்னை நோக்க, ஜிலு ஜிலு என்று பனி காற்றில் வெற்றுடம்போடு, வெண்ணீறு பளபளக்க, 'ஓ' வென்ற பேரிரைச்சலோடு கங்கை ஜடாமுடியிலிருந்து துள்ளி பூமிக்குத் தாவ பிறைச்சந்திரன் ஒளி வீசி இடுப்பு புலித்தோலின் அழகை மேலும் அழகாக காட்டினான். எல்லாம் கண நேரம் தான். ....... ஏதோ குரல் கேட்டது. பூமிக்கு, காஞ்சிபுரத்துக்கு கொண்டுவந்தது..

குரல் கேட்டதும் விழி திறந்தார் சேஷாத்திரி.

''இவர் பேர் பாலாஜி சுவாமி, ஹரித்வார்லேருந்து ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை போறார். காஞ்சிபுரம் ஸ்ரீ சக்ர நாயகியை சேவிப்பதற்கு வந்தார். ஒன்றிரண்டு நாள் இங்கே இருக்கலாம்''.

தர்மகர்த்தா கிருஷ்ணசாமி தாத்தாச்சார் பிள்ளை பட்டண்ணா சேஷாத்திரி ஆரம்ப கால நண்பன் அவன் தான் எல்லோருக்கும் கேட்கும்படியாக சந்நியாசியை அறிமுகப்படுத்தினான். அவன் தான் ஸ்வாமிகளை பற்றி சேஷாத்திரியிடம் விளக்கம் கொடுத்தவன். பாலாஜி ஸ்வாமிகள் சேஷாத்திரியுடனும் பட்டண்ணாவுடனும் சில வார்த்தைகள் பேசினார். பட்டண்ணா வீடு சென்றார். சேஷாத்திரி அந்த சந்நியாசி அருகே ஆணி அடித்தாற்போல் உட்கார்ந்து விட்டார். ஐந்தாவது சிஷ்யனாக அங்கேயே இருந்து மஹானுக்கு சிச்ருஷை செய்தார். . பாதங்களை பிடித்து விட்டார். இட்ட வேலையை செய்தார். பனை ஓலையால் விசிறினார். உடல் பொருள் ஆவி எல்லாமே அர்ப்பணித்தாகி விட்டது. நான்குநாள் சென்றது. ஐந்தாம் நாள் வியாழன் குருவாரம். சர்வ தீர்த்தக் கரையில் சேஷாத்திரிக்கு உபதேசம் ஆகியது. சேஷாத்திரியின் வைராக்கியம் மஹானுக்கு பிடித்திருந்தது. சோதனைகளில் வெற்றி பெற்றார். ''ஞான சன்யாசத்துக்கு இவனே ஏற்றவன்'' என தீர்மானித்து சேஷாத்திரிக்கு முறைப்படி சன்யாசம் கொடுத்து உபதேசங்கள் அளித்தார்.

தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த இளம் சந்நியாசி சேஷாத்திரி, எதிரே பார்த்தபோது பாலாஜி அவதூதரோ, சிஷ்யர்களோ யாரும் காணோமே, எங்கே மறைந்தார்கள்? நான் என்ன கனவு கண்டேனா? இல்லையே கண்ணால் அந்த சந்நியாசியை பார்த்தேனே. என் மனதில் குடி கொண்டாரே.




.... தொடரும்....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...