Sunday, July 29, 2018

MAYA


கனவா, நினைவா,  மாயையா ?  J.K. SIVAN

 உத்தவர்  ஒரு  சிறந்த  கிருஷ்ண பக்தர் மட்டுமல்ல,  கிருஷ்ணனின்  ஒன்று விட்ட  சகோதரன் கூட. கிருஷ்ணனின் அப்பா  வசுதேவரும்  உத்தவரின் அப்பா  தேவபாகரும் சகோதரர்கள்.  பார்க்ககூட  உத்தவர்  கிருஷ்ணனை போலவே இருப்பார்  என்பதால்  அநேகர்  அவரை கிருஷ்ணனாக  நினைத்து  பேசுவார்கள். உத்தவர்  கிருஷ்ணனையும்  பலராமனையும்  அழைத்துக்கொண்டு   கோகுலத்திலிருந்து  மதுராவுக்கு கிளம்பினார்.  போகும்  வழியெல்லாம்  உத்தவரின்  மண்டையை    கவலை  பிடுங்கி தின்றது.  அந்த  ராக்ஷசன் கம்சன் இந்த  சிறுவர்களை  கொன்று விடுவானே எப்படி தப்புவது  என்ற  கவலை  அவர்  மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது.  யமுனா நதியை  கண்டதும் கொஞ்சம் கவலை  நீங்கியது.  நீரில் அமிழ்ந்து குளித்து  கொஞ்சம்  சிரம பரிகாரம் எடுத்துகொள்வோம். கவலை கொஞ்சம் நீங்கட்டும் என்ற  எண்ணம்  அவருக்கு. 


கிருஷ்ணனுக்கு  உத்தவர்  மனதில்  ஓடிய  எண்ணங்கள் புரிந்து விட்டது.  சிரித்து கொண்டே 

"உத்தவா,  வாயேன்  கொஞ்சநேரம் இந்த  குளிர்ந்த யமுனையில்  நீராடலாம்.  பிரயாண களைப்பு  உன் மனக்  கவலை  எல்லாம்  தீருமே!!" 

மூவரும்  யமுனையில் இறங்கி  நீராடினார்கள்.

 "உத்தவா அதோ  அந்த  மரத்தின்  கிளையிலிருந்து குதித்தால்  குளிர்ந்த நீரின் உட்பகுதி உன் உடல் களைப்பை நீக்கும்." என்று  கிருஷ்ணன் ஒரு ஆழமான இடத்தை காட்டினான்.

உத்தவர் நீரில்  அந்த  ஆழமான பகுதிக்குள்  குதித்தார்.   அது  அவரை  வெகு ஆழத்திற்கு  இட்டு சென்றது. என்ன  ஆச்சர்யம்.  அங்கே  ஒரு  அடர்ந்த வனம் தென் பட்டது.  ஒரு காட்டுப்பிரதேசம் அது.  அந்த  காட்டரசன் இறந்து விட்டானாம். நிறைய  மக்கள்  கூட்டம்  அவன் உடலை  அலங்கரித்து தூக்கி செல்கிறார்களே. உத்தவர்  அந்த  ஊர்வலத்தின்  முன்னே இப்போது  நிற்கிறார்.    மக்கள்   எல்லோரும்  கை தட்டி  மகிழ்ந்து அவரை  சூழ்ந்து கொண்டு ஆடுகிறார்கள்,  பாடுகிறார்கள்.  என்ன இது? யார்  இவர்கள்?  ஒன்றும் புரியாமல்  திகைத்து நிற்கிறார்  உத்தவர்.  

கூட்டத்தில் ஒருவன்  கொஞ்சம் பொறுப்புள்ளவன், அவர்களை விலக்கி விட்டு  உத்தவர்  முன்  வந்தான் 

“மகாராஜா  வருக  வருக  எங்களை  ஆண்டு அருள்க" என்று   உத்தவர் காலடியில்  விழுந்து வணங்கினான்.

"யார் நீங்கள் எல்லோரும், எதற்கு  என்னை  அரசன்  என்கிறீர்கள், எனக்கு ஒன்றும் புரியவில்லையே” --  உத்தவர்

"அரசே  நீங்கள்  கடவுளால் எங்கள் அரசராக அனுப்பப்பட்ட  எங்களைக்  காத்து  ரட்சிக்க  வந்த காட்டரசன்".

“அய்யா,  ஏதோ   தவறு நடந்திருக்கிறது. நீங்கள் யாரையோ எதிர்பார்த்து என்னை  தவறாக அந்த மனிதராக  நினைக்கிறீர்களோ என்று  தோன்றுகிறது "

"இல்லவே இல்லை, எல்லாம் சரியாகவே  தான் நடந்திருக்கிறது. எங்கள்  குல வழக்கப்படியே,  எங்கள்  ராஜ நீதி  தர்மத்தின் பிரகாரமே,  சரியாகவே  நடைபெற்றிருக்கிறது. புரியும்படியாக சொல்கிறேன். எங்கள்  வழக்கம் என்னவென்றால்  அரசன் இறந்துவிட்டால், அவன் உடலை  மறுநாள்  அலங்கரித்து இடுகாட்டுக்கு  எடுத்து
செல்லும்போது யார் முதலில் எதிர்ப்படுகிரார்களோ புதிதாக,  அவரே  எங்கள்  அடுத்த  அரசர் ஆவார். அப்படித்தான் இப்போது நீங்கள் அரசராகிவிட்டீர்கள்". 

எவ்வளவோ  உத்தவர் மறுத்த போதிலும்  விட வில்லை அந்த காட்டுவாசிகள். 
கிட்டத்தட்ட நூறு வருஷம்  உத்தவர்  அந்த காட்டரசனாக இருந்து ஒருநாள் இறந்தார். 
மறுநாள்  அவர்  சவ ஊர்வலம் தொடங்கிய போது  கிருஷ்ணன் எதிரில் வந்தான். 

“ உத்தவா, எத்தனை  நேரம்  நீரிலேயே  மூழ்கி விளையாடுவாய்.  மதுரா செல்லவேண்டாமா, கம்ச மாமாவை  பார்க்க வேண்டாமா?” 

கனவிலிருந்து மீண்டவர் போல் ஆனார்  உத்தவர்  அந்த  குளிர்ந்த நீரில் குளித்துகொண்டிருந்த போதிலும்  உடல் பனிக்கட்டி போல் உருகி வியர்வை வெள்ளம் அவரை மேலும் மூழ்கடித்தது 

“இத்தனையும் கனவா நினைவா,  கிருஷ்ணனின்  மாயா ஜாலமா.?   நிச்சயம்  இது மூன்றாவது தான். சந்தேகமில்லை. நான்  எதற்காக  இந்த கிருஷ்ணனின் உயிரை  பற்றி கவலை பட்டேன். எல்லா உயிரும் அவனால் அல்லவோ காக்கப் படுகிறது.  சரியான முட்டாள் நான்”   --உத்தவன் தனக்கு தானே முணு முணுத்தான்.



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...