Saturday, July 28, 2018

MAHA PERIYVA


   
           எனக்கு நீங்க தான்  பாலாஜி...
                                J.K. SIVAN 

நான் இப்போ சொல்லப்போற  ரெண்டு அனுபவங்களும் மூணு  நாலு வயசுலே நடந்தது.  நினைச்சாலே  நடுங்கறது.  ஆசை, பேராசை, இன்னும் என்னவெல்லாமோ மனுஷனை  ஆட்டி படைக்கிறது.  சொல்றேன்:

எங்க வீட்டிலே ஒரு ராத்திரி, ஒரு   ''மர நாய்'''(வால்  அடர்த்தியா  தேவாங்கு மாதிரி இருக்கும்) நுழைஞ்சுடுத்து. ஒரு தாமிர சொம்புலே வெல்லம்  இருந்ததை பார்த்துட்டு தின்பதற்கு ஆசையாய்  சொம்புலே  தலையை உட்டுட்டு தவிச்சுது. தலை வெளியே வரலை. கண்ணு தெரியாம பயத்துல அங்கேயும் இங்கேயும் ஓடி இடிச்சுண்டு கஷ்டப்பட்டது. சத்தம் கேட்டு யாரோ திருடன் வந்துட்டான் என்று எல்லோரும் ஓடிவந்தா. கையில் கொம்பு எடுத்துண்டு எல்லோரும் வந்து எங்க சமையலறை கதவை திறந்து பார்த்தா. விஷயம் புரிஞ்சுது. ஒரு கயிறால அதை ஒரு தூணிலே கட்டிபோட்டுட்டு, சொம்பை இழுத்தா. மரநாய் ஒருபக்கம் இழுத்தது. இப்படியே அல்லாடி, கடைசியிலே தலை வெளியே வந்தது. அப்புறம் அதை ஏதோ ஒரு மரத்துலே கொண்டு விட்டுட்டா.
ஒரு நாள் ராத்திரி திருடன் பயம் எல்லோருக்கும். யாருமே  தூங்கவில்லை.  மரனாய்க்கு வெல்லம் தின்ன ஆசையால் வந்த வினை.
ரெண்டாவது விஷயம்.   என் கையிலே ஒரு தங்க காப்பு ஸ்க்ரூ கழண்டு போய்  தொளதொளன்னு ஆடினதாலே, தெருவிலே போன ஒருத்தன் கிட்டே அதை கழட்டி விடுன்னு சொன்னேன்.  அவன் நான் சரி பண்ணி தரேன்னு சொல்லிட்டு  ரெண்டு காப்பையும் கழட்டிண்டு போய்ட்டான்.

''எங்கேடா உன் கையிலே தங்க காப்பு எதுவும் காணோம்? என்று அம்மா கேட்டா.  

''ஒரு மாமா  ரிப்பேர் பண்ணிண்டு இதோ வந்து தரேன்னு சொல்லி எடுத்துண்டு போனா''

அந்த ஆள்  கிட்டே உங்க பேர் என்னன்னு  கேட்டேன்.

 ''பொன்னுசாமி ''  

'' ஓஹோ  என் கையிலே இருந்த  ''பொன்'' அதை உடைய ''சாமி'' இடமே போய் சேர்ந்துட்டுது ன்னு அப்போது தெரியல. வீட்டிலே எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் ஓடி தேடினா  அவனோ காப்போ , இன்னிவரைக்கும் கிடைக்கலே.

இந்த ரெண்டு  அனுபவமும்  என்ன சொல்றது?  ஆசைப்பட்டு ஆபத்தில் மாட்டாதே.  சுகமாக காப்பு அணிய ஆசைப்பட்டு தெரியாதவன் கிட்டே  உதவி எதிர்பார்த்து ஏமாந்தது. அப்பா அம்மா கிட்டே சொல்லாமே குறுக்கு வழியிலே லாபம் தேடினா கிடைக்கற பலன்.

நான் இப்போ ரொம்ப விஷயம் தெரிஞ்சவன்னு எல்லோரும் என்கிட்டே  ஆலோசனை அறிவுரை, புத்திமதி ஆசிர்வாதம் கேட்கிறா. ஆனா யாருமே  சுயநலத்திலேருந்து தப்பினதில்லே என்று தெரிகிறது. 

அப்படியும் நான் தெரிஞ்சுண்ட ஒரு உண்மை. இந்த உலகத்திலே  இன்னும் கூட சில ஆத்மாக்கள் கொஞ்சமும் சுயநலம் இல்லாம  பரோபகாரத்துக்காகவே வாழ்ந்திண்டிருக்கா. ஆத்ம பலத்தால் எல்லோரையும் க்ஷேமமாக இருக்க வைக்கிறா என்கிற  உண்மைதான்.

1907லே  நான் திண்டிவனத்தில்  ஒரு கிருஸ்துவ பள்ளிக்கூடத்தில் படிச்சேன்.  அப்போ இருந்த காமகோடி மட சங்கராச்சார்யர்  கலவை என்கிற ஊரிலே சித்தி அடைஞ்சதா செய்தி வந்தது.  அந்த பெரியவாளோட இருந்தவன்  என் ஒண்ணு விட்ட சகோதரன்.  அம்மாவோட சகோதரி  பிள்ளை. காஞ்சி மடத்தில் வேதம்  படிச்சுட்டு அங்கேயே அப்போது இருந்த பெரியவாளாலே  பீடத்துக்கு வந்திருந்தவன்.  அவளுக்கு அவன்  ஒரே பிள்ளை. அவன் சன்யாசியா  பீடாதிபதியானதிலே அவளுக்கு  துக்கம்.  ஆறுதல் சொல்ல ஒருத்தரும் இல்லை. எங்க அப்பா திண்டிவனத்தில்  பள்ளிக்கூட  மேற்பார்வையாளர்.  கலவைக்கு போய்  சகோதரிக்கு  எங்கம்மா   ஆறுதல் சொல்ல கிளம்ப ஏற்பாடாச்சு.  ஆனா  அப்பாவுக்கு   திருச்சிலே அவசரமா வேலை வந்துடுத்து. அதனாலே  மாட்டு வண்டி கட்டிண்டு  திண்டிவனத்திலிருந்து 60 கி.மீ. தூரம் அவராலே கலவைக்கு போகமுடியலே. நானும்  அம்மாவும்   காஞ்சிபுரம் போனோம் .   பெரியவாளுக்கு  10வது நாள் பூஜை காரியம் விஷயமாக மடத்தில் எல்லோரும் பிசியாக இருந்தா.  காஞ்சி மடத்தில்  ஒரு மேஸ்திரி.  அவர்தான் சாமான்லாம் வாங்கறது . ஒரு  மாட்டு வண்டிலே  ஓட்டிண்டு  போவார். சிரிச்சுண்டு பேசுவார் என்னோடு.  

''நீ என்னோடு  வண்டிலே  வா. உங்கம்மா மத்தவா எல்லாம்  வேறே வண்டிலே  பின்னாலே வருவா''  என்று சொன்னார்.  போனேன்.   வண்டிலே போகும்போது அவர் என்ன சொன்னார் தெரியுமோ?  ''நீ இப்போது என்னோடு கலவை மடத்துக்கு வர்றியே அதோடு சரி. அப்புறம் நீ அங்கேருந்து திரும்பமாட்டே''    . 

''ஓஹோ  என்  அம்மா சகோதரி பையன் அங்கே மடாதிபதி என்கிறதாலே நான் சௌகரியமா  அங்கேயே வசதியோடு தங்கி படிப்பேன் என்று சொல்றார் போல இருக்கு.''  எனக்கு பதிமூணு வயசு. அதுக்கு மேலே தோணலை.

அப்புறம் தான் மெதுவா விஷயம் வெளியே வந்தது.  அந்த பூர்வாஸ்ரம   என் சகோதரனுக்கு  ஜுரம் அதிகமா போய் கட்டுக்கடங்காம  ஜன்னி வந்துடுத்து.  அதுக்கு தான் என்னை தனியா எங்கம்மா கிட்டேருந்து பிரிச்சு  கலவைக்கு கொண்டுபோறா. என்னை திண்டிவனம் வந்து அழைச்சுண்டு போகணும் தான் எண்ணம். நல்லவேளை நான் காஞ்சிபுரத்திலேயே கிடைச்சுட்டேனாம்.  கையை காலை கட்டிண்டு நான் ஒன்னும் தோணாமல் ''ராம ராம '' ன்னு ஜபம் பண்ணேன். அப்புறம் என்ன.   என் ஒண்ணு  காமகோடி பீடாதிபதி  சகோதரன் தேக வியோகம் ஆகி  நான் பட்டத்துக்கு வந்துட்டேன்.   தனது சகோதரிக்கு ஆறுதல் சொல்ல வந்த என் அம்மாவுக்கு  எல்லோரும் ஆறுதல் சொல்லும்படியா  ஆயிடுத்து.

நான் சந்யாச உடை பெற  எந்த தவமும் பண்ணலை. எந்த குருவிடமும் நீண்ட நாளா இல்லை. ஒரே நாளில் எல்லாம் எனக்கு இப்படி ஆயிடுத்து. பகவத் சங்கல்பம்.  கலவைலே அப்போ  தும்முளூரு ராம கிருஷ்ணய்யா, அடையபலம் பசுபதி அய்யர் என் குரு கிட்ட படிச்சவா இருந்தா. அவா தான் என்னுடைய சன்யாச வாழ்க்கையை ஆரம்பிக்க உதவப்போறா . அடையபலம் பசுபதி அய்யர் தான் வேதாந்த ப்ரகரணம்  ஆதி சங்கரருடைய  நூல்களை எனக்கு கற்றுக்கொள்ள உதவியது. ஆற்காட்லே  நீதி மன்றத்திலே ரிட்டையர் ஆனவர்.  என்னோடு நாள்கணக்கில் உட்கார்ந்து நான் கற்றுக்கொள்ள உதவினார்.  நான் சின்னவன் இல்லையா. என்னை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி என் உத்யோகத்தில் நான் நல்லபடியாக பேர் எடுக்க உதவியவர்.    எல்லோருக்கும்  வேதாந்தம் உபநிஷத் சொல்லி கொடுப்பார்.  தெருவிலே போறவாளை  கூப்பிட்டு அவர்கள் கவலையை துக்கத்தை கேட்டு உதவுவார். 1926 நான் சங்கர பாஷ்ய பாடம் முடிக்கிறவரை  இருந்தார்.  18 வருஷ காலம். '' என்னோடு இருங்கோ''  என்று நான் கேட்டதால்,  கும்பகோணம் கொசுவை கூட  பொருட் படுத்தாமல் என்னோடு  இருந்தார். 

கடலூரில் சில மாசம் கடைசியில் இருந்தார். படுத்த படுக்கையா.  நான் கடலூர்  விஜயம் பண்ணின சமயம். நான் வரேன்னு கேள்விப்பட்டு மெதுவா வந்து மடத்து  யானையை தடவிக்கொடுத்தார். அன்னிக்கு ராத்தி ரியே  விதேக முக்தி.  எல்லோரிடத்திலும் அன்போடு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். பலனெதிர்பார்க்காத உள்ளம்.

1923லே  திருச்சி போன சமயம்   ஒரு பத்து பன்னிரெண்டு வயசு பொண்னு அவளுடைய தம்பி ஏதோ பொய்  சொன்னான் என்று அவனை திட்டிண்டு திருத்திண்டு இருந்தா. அவன் நல்லவனா வளரணும்னு என்ன அக்கறை அவளுக்கு என்று அந்த நிகழ்ச்சி என் மனசிலே பதிஞ்சுடுத்து. 

கேரளாலே சில நம்பூதிரிகள்  ஒரு ரூம் லே பேசிண்டு இருந்தா. ஒருத்தர் சாளக்ராம பூஜை பண்றவர். பாதிலே இப்படி பேசினதாலே, சம்புடத்தை மூடிட்டார்.  பேசிண்டு பூஜை  பண்ணா அபச்சாரம். இன்னிக்கு அந்த தப்பை பண்ணமாட்டேன் நாளைக்கு தனியா பண்ணிக்கிறேன் என்று சொன்னது ஞாபகம் இருக்கு. 

1929லே  இது போல தான் ஒரு சந்நியாசி மராத்தி இந்தி மட்டும் பேசறவர் தன்னுடைய தண்டத்தை எங்கோ ராமேஸ்வரம் ரெயில்லே  விட்டுட்டார். இன்னொண்ணு  கிடைக்கறவரைக்கும்  உபவாசம் இருந்தார். நான் அவருக்கு ஸம்ப்ரதாயமாக ஒரு பூஜையோடு ஒரு தண்டம் குடுத்தேன். அதிலிருந்து என்னை குருவா ஏத்துண்டவர் (அவருக்கு 80 வயசுக்கு மேலே)  1954ல் சித்தியாகிற வரை என்னோடு இருந்தார்.  1929லே  சாதுர்மாஸ்யம் சமயம் எனக்கு மலேரியா ஜுரம். யாரும் தொடக்கூடாது.  சந்யாசிங்கிறதாலே அவர் என்னை தொட்டு சிஷ்ருஷை செய்தது ஞாபகம் வருது. சுள்ளுன்னு கோபம் வரும். அதிகாரமா பேசுவார்.  ஒரு நாள் தவறாம எனக்கு பாதபூஜை பண்ணவர். அப்போ கண்லே  ஜலம் ப்ரவாஹமா பெருகும்.

ஒரு தடவை காஞ்சிபுரத்தில்  அவருடைய சொந்தக்காரர் ஒருத்தர்  யாத்திரை எல்லாம் முடிஞ்சு என்னையும் அவரையும் பார்க்க வந்தார். நான் அவர்கிட்டே அனுப்பினேன். வந்தவரை பேசி அனுப்பிவிட்டு  எங்கிட்ட ''ஏன் நீங்க அந்த பெரியவரை 100 வயசுக்காரரை பார்த்து பேசலே. உங்களை தெய்வமா நினைச்சு தரிசனம் பெற வந்தார். இன்னொரு தடவை வந்தபோது பார்க்கலாம் ''என்றேன்.  கொஞ்சநாள்லே திருப்பதி யாத்திரை போனபோது  அந்த வயசானவர் வந்தார். தேவஸ்தானத்த்துக்காரா அவரை பாலாஜி தரிசனத்துக்கு உதவி பண்றேன் வாங்கோ ஏன்னு கூப்பிட்டா.  ''எனக்கு இவர் தான் பாலாஜி''   ன்னு என் கால்லே  விழுந்து நமஸ்கரிச்சார்.  பாலாஜியை  பாக்கவேண்டியதில்லை ன்னு போய்ட்டார். இன்னும் ரெண்டு பேர். இவரை போலவே.ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாது. 30 வயசுக்கு மேலே வித்யாஸம் இருக்கலாம். ஆனா அவா நடந்துண்டதும்  மேலே சொன்ன மாதிரி தான். என் கால்லே  விழறதிலே அத்தனை ஆனந்தம் அவாளுக்கு. பகலும் ராத்தரியும் என்னைப்பத்தியே பேச்சு வழிபடறது. என் குறைபாடு பத்தி ஏதாவது  சொன்னாகூட காதிலே வாங்கமாட்டா. உங்க கிட்டே குறைபாடு இருந்தா அதுக்கு பகவானை வேண்டிக் கிறோம். சரியாப்போயிடும் எங்களுக்கு நீங்க தான் தெய்வம்.....என்பார்கள்.

எனக்கு என்ன தெரிஞ்சுதுன்னா  பகவான் சில ஆத்மாக்களை பிறர்க்குன்னு படைக்கிறான்.''

++++

மேலே நான் சொன்னது யார் பேச்சு ?  மகா பெரியவா,   தானே தனது வாழ்க்கை பத்தி சொன்னது. பவன்'ஸ் ஜர்னல் லே வந்தது.  முதல்லே இதை படிச்ச ராஜாஜி  பவன்'ஸ் ஜர்னல் ஆசிரியரை கூப்பிட்டு இந்த அற்புத கட்டுரையை வெளியிட்ட உங்களுக்கு கோடி நமஸ்காரம் என்று சொன்னாராம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...