Thursday, July 12, 2018

8.7.18 TOUR 1



 யாத்ரா விபரம் - J.K. SIVAN  
                                         
         


                அனுமனும் சனியும் 
                         
ஜூலை  8, 2018  காலை  8.30 மணிக்கு  சித்தலப்பாக்கம் ஸ்ரீ வைகுந்தம் ஆலயத்தின் நிர்மாண ஏற்பாடுகளை அறிந்து கொண்டு  பார்வையிட்டு,  அவர்கள் தான்  காலை ஆகாரம் முடித்துக்கொண்டு,  பசுக்களிடம் விடைபெற்று செங்கல்பட்டு சென்றோம்.   செங்கல்பட்டு  பிரதான சாலையிலிருந்து,  பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில்  உள்ளே சென்றால் கிராமம் தான் தென்படுகிறது. குறுகலான தெருக்கள். வெகு அருகிலேயே கோதண்டராமர் கோவில். பெருமாள் கோதண்டராமர், தாயார்  பெருந்தேவி தாயார். நிச்சயம் ஒரு பழங்கால கோவில்.

ஞாயிற்றுக்கிழமை காலை  ஒன்பது மணி ஆகியும் ஏன் நிறைய பேர்  ஆலயம் வரவில்லை. அவ்வளவு முக்கியமான காரியங்கள் எல்லோருக்குமேவா?  பட்டாச்சாரியார் அழகாக  தரிசனம் செய்வித்தார். ஏற்கனவே ஓரிருமுறை தரிசித்த ஆலயம்.

பிரகாரம் சுற்றி  வந்தால் தனியாக ஒரு ஆஞ்சநேயர் சந்நிதி.  அங்கே தான் ஒரு விசேஷம் காத்திருக்கிறது. ''சனி பகவானை அடக்கிய  ஆஞ்சநேயர்''  என்று சந்நிதியில் மேலே எழுதியிருக்கிறதை  காணலாம்.

நிற்கின்ற ஆஞ்சநேயர்  காலடியில் நசுங்கியவாறு எப்படியாவது தப்பிக்க முயலும் சனீஸ்வரன்.
சனீஸ்வரன் தன்னை விட்டுப்  போகாமல் இருக்க தனது காலடியில் மிதித்துக்கொண்டிருப்பது போல் ஹனுமன் விக்கிரஹம் அபூர்வமாக உள்ளது. அங்கே சென்றால் நீங்கள் ஆஞ்சநேயர் சனி இருவரையும் தரிசிக்கலாம்.

அவனை  தனது காலின் கீழ் பிடித்து அமுக்கி  வைத்துக்கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர். யாராக இருந்தாலும்  சனீஸ்வரன் ஒரு ஏழரை ஆண்டுகள் பிடித்துக் கொள்வது எல்லோருக்கும் தெரிந்தது தானே.   ஹனுமாருக்கும் இப்படி ஒரு நிலை.   ஆனால்  சனீஸ்வரன் அவரை தனது பிடியில் கொண்டுவர  முயன்றபோது  வெகு முக்கியமான சஞ்சீவி பர்வதத்தை கொண்டு வரவேண்டிய காரியத்தில் ஹனுமான் ஈடுபட்டிருந்தார்.

ராம ராவண யுத்தத்தில்  மேகநாதனால்   தாக்குண்ட லக்ஷ்மணனையும்  மற்றவர்களையும்  மூர்ச்சையிலிருந்து விடுவிக்க  உயிர்ப்பிக்க சஞ்சீவி மூலிகை உடனே கொண்டு வரவேண்டும். இந்த நேரம்  பில் வசூலிக்க வருவது போல்  சனீஸ்வரன் வந்து  ஆஞ்சநேயர்  முன்  நின்றான்.  நிற்கிறான்.

'என்ன சனீஸ்வரா இந்த பக்கம்  என்ன விஷயம்?  என்றார்  ஆஞ்சநேயர்.

'உன்னைத்தேடி தான் ஹனுமான் வந்திருக்கிறேன்''
.
''சீக்கிரம் சொல்லப்பா  என்ன விஷயமாக வந்தாய்?''

''உன் ஜாதக கணக்குப்படி, நான் உன்னை கொஞ்ச  காலம்  என் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் அதற்காக வந்தேன்.

''ஓ..  அது உன் கடமை  அல்லவா. ஏழரை வருஷம்  எல்லாரையும்  பிடிப்பது தானே  உனக்கு  இடப்பட்ட  வேலை?''

''ஆமாம். அதனால் தான் நீ இப்போது முதல் ஏழரை ஆண்டுகள்  என் பிடியில்'' என்றான் சனீஸ்வரன்.

''சனீஸ்வரா, நான் உன்னை மதிப்பவன். நீ உன் கடமையை செயகிறாய்.  ஆனால் நான் இப்போது உன்வசம் என்னை ஒப்புவிக்கும் நிலையில் இல்லை .  ரொம்ப அவசரமாக சென்றுகொண்டிருக்கிறேன்..நீ அப்புறம் வா, பேசுவோம்,  நான் பிடிபடுகிறேன். உன் கடமையை நீ செயகிறாய் . நான் என் கடமையை இப்போது முக்கியமாக செய்து  கொண்டிருக்கிறேன். பிறகு வாயேன்'' -- ஆஞ்சநேயர்.

''இல்லை இப்போதே என் கடமையை நான் செய்யவேண்டுமே '' - சனீஸ்வரன்

''சரி அப்படியானால் என்னோடு வா, சீக்கிரம் என் வேலை முடிந்தது நீ என்னைப் பிடித்துக்கொள்ளலாம்.''என்றான் ஹனுமான்.

நீயோ  வாயு புத்திரன்  வாயுவேகம்  மனோவேகம்.  உனக்கு ஈடாக  நான்  எப்படி பின்னால்  உன்னை தொடர்ந்து வரமுடியும் சொல்?'' என்றான்  சனீஸ்வரன்.
'
''அப்படியென்றால்  நானே  உன்னைத் தூக்கி செல்கிறேன்.   நீ என்னைப்  பிடித்துக்கொள் நானும் என் வேலையை செய்கிறேன். நீயும் உன் வேலையை செய்யலாம்.  என்னோடு வா.  என்னை  நீ பிடித்தாலும் நான் உன்னை பிடித்தாலும்  பிடிப்பு ஒன்று தானே'' என பதிலளித்த  ஆஞ்சநேயர் சனீஸ்வரனை  வாலால் இருக்கமாக  சுருட்டிக்   கட்டி தூக்கிக்கொண்டு பறக்கிறார்.

சனீஸ்வரன் நகர்வதே  மெதுவாக. அதனால் தான் அவனுக்கு சனைச் சரன்  என்று பெயர். அவனைப் போய்  ஜெட் வேகத்திற்கும் பல மடங்கு  அதிகமாக ஆகாய மார்க்கமாக  தூக்கிக் கொண்டு ஹனுமான் பறந்தபோது அவனுக்கு மூச்சு திணறியது.

''ஆஞ்சநேயா ,  போதுமப்பா ,என்னை விட்டு விடப்பா. என்னால் உன் வேகத்தை  தாங்கமுடியவில்லை. நான் அப்புறம் வருகிறேன்''  என்று சனீஸ்வரன்  கெஞ்சினான்.
,
''இல்லை சனீஸ்வரா.  நீ செய்வதும் நியாயம் தான்.  ஒரேயடியாக என்னை பிடித்து விட்டுப்போ. எதையுமே தள்ளிப்போடுவது நல்லதல்ல.  இன்ஸ்டால்மென்டில் வேண்டாம் '' என்று ஹனுமான் சொல்ல,

''ஐயய்யோ , என்னால்  தாங்க முடியவில்லை.   இப்போதே இங்கேயே  என்னை  இறக்கி  விடப்பா  நான்  போகிறேன்''  என்றான்.   அப்போது  ஆஞ்சநேயர் செங்கல்பட்டு  பக்கம்  வந்துகொண்டிருந்தார்.  எனவே  கீழே  இருந்த  ராமர்  கோவிலில் சனிஸ்வரனை   தன்னுடைய  காலின் கீழ் வைத்து  நகராமல்  மிதித்துக்கொண்டிருக்கிறார்.   இதை  நீங்கள்  பார்த்து   ரசிக்கலாம்.  ஆனால்  ஒரூ சேதி கேள்விப்பட்டேன்.
சனிஸ்வரனை  நேருக்கு  நேராக  பார்க்காமல்  பக்கவாட்டிலிருந்து பார்க்கவேண்டுமாம்.  அவன்  பார்வையை  நாமாக  நம்  மீது பட  வைத்துக்கொள்வானேன்!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...