Thursday, July 26, 2018

AINDHAM VEDHAM




ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 

                50.  ''விளையாட்டும்  விபரீதமும்''

மனிதன் மனம்  பொறாமையால்  பாதிக்கப்படும்போது அவன்  படும் பாடு அவனுக்கு தான்  தெரியும்.   காரணமில்லாமல் கோபம் வரும். எதுவும் அருவருப்பை தரும்.   நண்பர்கள் கூட பிடிக்காது. தனிமை அவனை அனலிலிட்ட அப்பளமாக  கொப்புளிக்க வைக்கும்.  துரியோதனன் நிலை அதுவே. தூக்கம்  போயே  போய் விட்டது. மூச்சு அனல்காற்றாய் வெளி வந்தது. பற்கள் நற நற வென்று கடிக்கப்பட்டன 

''என்ன துரியோதனா, என்னுடன் கூட  பேச மாட்டேன்  என்கிறாய்''  என்று கேட்டான் சகுனி. இருவரும்  தேரில்  இந்த்ரப்ரஸ்தத்தை விட்டு  ஹஸ்தினாபுரம் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

''மாமா  இந்த யுதிஷ்டிரனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தீர்களா?  எல்லாம்  அந்த  அர்ஜுனன், பீமனின் பலத்தில்  தானே.  சிசுபாலனை கிருஷ்ணன் கொன்றபோது ஏன்  ஒருவருமே  வாயைத் திறக்கவில்லை. எதிர்க்கவில்லை?  பீமார்ஜுனர்களின் பலத்தில் பயந்துதானே.  உலகமே திரண்டு செல்வங்களை எல்லாம் வாரி  கொணர்ந்து கொட்டினார்களே  அந்த  யுதிஷிடிரன் காலடியில்.  என் நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது மாமா.  எங்காவது நெருப்பில் விழுவோமா,  விஷத்தை குடிப்போமா  நீரில் முழுகி சாவோமா? என்றிருக்கிறது.
இதுவரை  அவர்களை ஒழிக்க நான்  தீட்டிய  எல்லா திட்டங்களும் எனக்கு தோல்வியே  தந்தது. .  அவர்களை அழிக்க முயன்று தோற்றது தான்  மிச்சம்.  என் எதிரிகள் நன்றாக வாழ்வது அப்படி அலைக்கழிக்கிறது என்னை. அந்த அவஸ்தை எனக்கு தான் தெரியும்.

எனக்கு  யார்  இருக்கிறார்கள்  அப்படிஎல்லாம்  மேன்மை பெற ?  வாழவேண்டிய கௌரவர்கள்  நாம் அழிந்து கொண்டே போகிறோம். அந்த  பாண்டவர்கள்  வளர்வதா?  இப்படியும்   ஒரு மாளிகையா.  கனவிலும் என்னால் அதை  மறக்கமுடியவில்லையே.  நான்  ஏமாந்து விழுந்ததை கண்டு  கைகொட்டி சிரித்த  அந்த  பதர்கள்.....ச்சே அந்த அவமானம் என்னை சித்ரவதை செய்கிறதே மாமா?

''துர்யோதனா,  பாண்டவர்களைக்  கண்டு பொறாமை படாதே.  ஏதோ  அதிருஷ்டம் அவர்கள் பக்கம் இருக்கிறது. அவ்வளவு தான்.    இனிமேல் தான்  இப்போது தான்  உன் முயற்சிகள் இன்னும் சூடு பிடிக்கவேண்டும்.

உன்னைப் போலவே  அவர்களுக்கும் அப்பன் சொத்து  பிரித்து கொடுக்கப் பட்டது. சுய முயற்சியால்  முன்னுக்கு வந்திருக்கிறார்கள். போதாததற்கு  த்ரௌபதி  கிடைத்ததால்  துருபதனின்  ஆதரவு.  வாசுதேவன் நெருங்கிய உறவினனாகிவிட்டதால் அவன் துணை வேறு. தனஞ்ஜயன்  காண்டீவம் வேறு பெற்றுவிட்டான்.  மற்ற அரசர்கள் படபடவென்று சரிந்து அவனுக்கு  அடிமையாகிவிட்டார்கள்.  என்ன செய்ய? இதில் நீ வருந்த என்ன இருக்கிறது.   காண்டவ வனத்தீயில் அர்ஜுனனால்  உயிர்  மீண்ட  மயன்  நன்றியுனர்ச்சியால்  மாளிகை கட்டி கொடுத்தான். அதற்கு நீ  என்ன செய்ய முடியும்?

கவலையை விட்டு.  உனக்கு நான் இருக்கிறேன். சோமதத்தன், கர்ணன்,  உன் சகோதரர்கள், துரோணர், பீஷ்மர் இவ்வளவு பேர் இருக்க ஏன்  அவர்களைப் பார்த்து பொருமுகிறாய்''.

''மாமா   எனக்கு  அந்த  பாண்டவர்களை எப்படியாவது  வெல்லவேண்டும்.''

''இதோ பார்  துரியோதனா,  போர் என்று வந்தால்  அர்ஜுனன், பீமன், கிருஷ்ணன் இவர்களை  யாராலும் வெல்ல முடியாது.  ஆகவே  வேறு வழிகளைத்தேடுவோம்.  அந்த  யுதிஷ்ட்ரனை  வெல்வதற்கு என்ன வழி என்று யோசிப்போம்.''

''எப்படி மாமா  வெல்வது.  சொல்?''

"யுதிஷ்டிரனுக்கு சொக்கட்டான்  ஆடுவதில் அதிக விருப்பம் உண்டு.   அதில் சிறப்பாக ஆட  அவனுக்கு தெரியாது.   நான் அதில் நிபுணன். உனக்கே தெரியும்.  உன் அப்பாவை முடுக்கி  அவர்களை  இந்த ஆட்டத்திற்கு அழைத்து விடு. பிறகு பார் என் திறமையை.  நீ ஆசைப்பட்ட  அத்தனை  பொருள்களையும் ஏன் அவர்களையுமே உனக்கு  அடிமையாக்குகிறேன். இது எப்படி இருக்கு?''  என்றான் சகுனி.

''மாமா,   நீயே  என் தந்தையிடம் இதை ஆரம்பி. உன்னால் சமயோசிதமாக பேசி  முடிக்க முடியும்''  

பேச்சு முடிந்தது. ஹஸ்தினாபுரம் அரண்மனை வந்துவிட்டது.  திட்டம் தீட்டியாகி விட்டது. செயல் படுத்த வேண்டியது தான் பாக்கி.

ஒருநாள்  சகுனி  தக்க நேரத்தில் திருத ராஷ்ட்ரனை அணுகி  ''அரசே  உன் மூத்த மகன்  மிகவும்  வாடி  வதங்கி  நாளுக்கு நாள்  இளைத்து வருகிறான். விரைவில் நீ  அவனை இழக்கவும் நேரிடலாம்.  கண்ணற்ற உன்னால் அதைக் காண முடியவில்லை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏதோ அவன் மனதை அரிக்கிறது. என்ன விஷயம் என்று நீ கூப்பிட்டு  அவனை விசாரிக்க வேண்டாமா ?''

பிள்ளைப்  பாசத்தில் பதறினான் கண்ணற்ற திருதராஷ்டிரன்.  துரியோதனனை அழைத்து தந்தை கேட்டான்:  ''என் அருமை மகனே, உன்னைப் பற்றி கவலைக்கிடமான செய்தியை சகுனி சொன்னதும் என் மனம் பொறுக்கவில்லையே. உனக்கு என்ன குறை. நல்ல ஆடை, உணவு, அதிகாரம், பதவி, புகழ் எதில் குறைச்சல்.  எது உன்னை  இளைக்க வைத்தது. என்னிடம் சொல்வாயா?'''

''அப்பா,  உணவும் உடையுமா ஒருவனுக்கு முக்கியம்? .  அந்தஸ்து, பெருமை இல்லாத அரசன் தூசிக்கு சமானம். திருப்தி  கர்வம்  இரண்டுமே  ஒருவனை  ஆகர்ஷித்தால்  அவன்  உச்சியை எட்டுவதில்லை. யுதிஷ்டிரனின் செல்வாக்கு, பெருமை, செல்வம்  புகழ் என்னை  மங்கச் செய்துவிட்டது. பொறாமைப் பட வைக்கிறது.  நவ நிதியும் அவன் காலில் கொட்டினார்கள்.  என் எதிரியாக நினைப்பவனை  இவ்வளவு புகழுடன்  காணும்போது எனக்கு  உண்மையில் பொறாமை  இல்லாமலா இருக்கும்?  என் உடல் பற்றி எரிகிறது.''

சகுனி குறிக்கிட்டு,''  இது அத்தனை செல்வத்தையும்  நான் உனக்கு  ஈட்டித் தருகிறேன் துரியோதனா.  கவலை கொள்ளாதே. சொக்கட்டான் ஆட்டத்தில் எனக்கு இணையாக உலகில் எவரும் இல்லை. அதை வைத்தே வெல்கிறேன்.  குந்தி புத்திரன் யுதிஷ்டிரன் இந்த ஆட்டத்தில் விருப்பமுள்ளவன். அவனை வெற்றி கொள்ள என்னால்  எளிதில் முடியும். அவனை  ஆட  அழைப்பாயாக.

''அப்பா  எனக்கு சகுனி மாமாவின் திறமையில் நம்பிக்கை உள்ளது. என்னை திருப்திப் படுத்த அவரால் முடியும். நீங்கள்  உடனே  யுதிஷ்டிரனை இங்கு அழைக்க வேண்டும்.''

''இது விஷயமாக  மற்றவர்களோடு கலந்து பேசுகிறேன்''  என்றான் திருதராஷ்டிரன்.

''அப்பா,  நீ இது விஷயமாக   சிற்றப்பன்  விதுரனைக்  கேட்டால்   தப்பு, அது கூடாது என்பான்.  அவன் பேச்சை கேட்டு இந்த ஏற்பாட்டை நிறுத்தினால் என் உயிரை நான் மாய்த்துக் கொள்கிறேன். பிறகு நீ உன் சகோதரன் விதுரனோடு சந்தோஷமாக இரு '' என்றான் துரியோதனன்.

திருதராஷ்ட்ரன் உடனே  ஒரு  மண்டபம் கட்ட  ஆணையிட்டான்.  இதற்குள்  விஷயம் கசிந்து  விதுரன் காதில் விழுந்தது.  ''கலி  நெருங்கிவிட்டது. விநாசம் அணுகிவிட்டது  என்று பெருமூச்சு விட்டான். தனது சகோதரன் திருதராஷ்டிரனை சந்தித்து  ''சகோதரா  நீ  யோசித்துப்பார்.  இந்த  சூதாட்டம்  தேவையா?  சகோதரர்களுக்குள் பிணக்கு உண்டாக்கவேண்டுமா? இதை நிறுத்தவேன்டாமா?  இந்த விபரீத  சூதாட்டம்  வேண்டாமே''  என்றான்  விதுரன்.

''விதுரா, இது விளையாட்டு.  நான் அனுமதி தந்திருக்கிறேன்.  சகோதரர்களுக்குள்  எவ்வாறு  நட்பு பாழாகும்?  நீ  நான், துரோணர், பீஷ்மர்  மற்றும் அநேகர்  அருகில்  இருக்கும்போது  பிள்ளைகளுக்குள் என்ன தகராறு நேர்ந்துவிடும் "' என்று பூசி மழுப்பினான் திருதராஷ்டிரன்..

''விதுரா உனக்கு இப்போது நான்   அரசன் என்ற முறையில்  ஆணை இடுகிறேன். நீயே  தேரை எடுத்துக் கொண்டு  இந்த்ரப்ரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை  இந்த விளையாட்டுக்கு கையோடு  அழைத்து வா..........''  என்றான்  திருதராஷ்டிரன்.  

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...