Saturday, May 2, 2020

U VE SA




மஹா  பாவி  யார்? -- J .K. SIVAN


இன்று நீங்கள்  இதைப் படிக்கும்போது கதையாக படிப்பீர்கள். உண்மையில் இது கதை இல்லை. நடந்தது. இன்று நேற்றல்ல . கிட்டத்தட்ட 100-150 வருஷங்களுக்கு முன்பு.  இதை படிக்கும்போது நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது,  பெண்களுக்கு கல்வி அறிவில்லாத காலம். மாமியார் மருமகள் எலி-பூனை உறவு. அவ்வளவு தான். இனி தொடரும். 
இந்த நிகழ்ச்சி சொன்னவர் கும்பகோணத்தில் இருந்தார்.  அவருக்கு  அங்கே  ஒரு வக்கீல் குமாஸ்தாவை  தெரியும். அந்த வ கு. சுறுசுறுப்பானவர்.  வேலையில் கெட்டி.  அப்பா  இல்லை. அம்மா மட்டும்.  பிள்ளை மேல் அம்மாவுக்கு அளவுக்கு மீறிய  பாசம். அன்பு. அவரும் அம்மா கோண்டு . பிள்ளை சாப்பிடாமல் அம்மா சாப்பிடமாட்டாள்.    இதெல்லாம் வ.கு. வுக்கு   கல்யாணம் ஆகும் வரை. கிழவி எங்கோ ஒரு பெண் பேசி கல்யாணம் ஆச்சு. 
மாட்டுப்பெண் வந்த நிமிஷத்திலிருந்து வீட்டு அமைதி காணாமல் போனது. குட்டி களங்கங்கள், கோள்  சொல்லுதல்  வளர்ந்தது.  வ.கு வின்  ரெண்டு காதிலும்   ஒருபக்கம் அம்மாமேல் மனைவி,  இன்னொன்றில் மனைவி மேல் அம்மா சொல்லும் குறைகள்.  வீட்டில் சந்தோஷம் செத்துவிட்டது.  வ.கு  வீட்டில் இருக்கும்போது ஒரு மாதிரி,  அவர் இல்லாதபோது வேறு மாதிரி மாமியாரும் மருமகளும் நடந்து கொண்டார்கள்.    மனைவிக்கு  மாமியாரை பிடிக்காதவர்கள்   உத்திகள் சொல்லி கொடுத்து சண்டை மும்முரமாயிற்று.  மாமியாரும்  மருமகள் மேல் அதிகாரம் செலுத்த அது  முழுமையாக செல்லுபடியாக வில்லை.  மாட்டுப்பெண் அதிகாரம் வலுத்தது. 
ரெண்டுபேருமே  வ.கு. விடம்  ஒருவர் மேல் இன்னொருவர்   கம்பளைண்ட்  தனித்தனியாகவோ   சண்டைபோட்டுக்கொண்டோ சொன்னார்கள்.  அவன்   வக்கீல் குமாஸ்தாவாக இருந்தும் நியாயமாக தீர்ப்பு சொல்ல  முடியவில்லை.   அவனுக்கு  மனைவி மேல் கொள்ளை ஆசை.  அம்மா மேல் பாசம். இருதலைக் கொள்ளி  என்றால் வ..கு. தான்.  எப்படி இந்த  கலகத்தை தடுப்பது, நிறுத்துவது என்று  யோசித்து  மண்டை காய்ந்து  முயற்சிகள்  வீணாயின. 
"இனிமேல் ஒரு க்ஷணம்  உங்க அம்மா இந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க முடியாது. என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். என்றைக்கு உங்கள் அம்மாவை அனுப்புகிறீர்களோ, அன்றைக்கு என்னை அழைத்துக் கொண்டு வரலாம்"  -  மனைவி  நோட்டீஸ் கொடுத்தாள் . வேறு வழியில்லாமல் வீட்டில் ஒரு தடுப்பு சுவர், தட்டி  கட்டி, அம்மாவுக்கு தனியாக ஒரு இடம். சமைத்து சாப்பிட. 
இந்த ஏற்பாடுகூட  மருமகளுக்கு பிடிக்க வில்லை. " அவள் கை  ஓங்கியது.  அவள்  இந்த வீட்டிலேயே இருக்க கூடாது. என் கண்ணில் படவே கூடாது" என்று கூப்பாடு போட்டாள்.  
ரெண்டு தெரு தள்ளி ஒரு வீட்டில் சின்ன இடம் பிடித்து அம்மாவை அங்கே  வ.கு. ஜாகை வைத்தான்.  சாமான்களை அனுப்பி அவள் தனியாக சமைத்து சாப்பிட ஏற்பாடு பண்ணினான். ரகசியமாக அவளை போய் பார்த்து வந்தான்.  கிழவிக்கு கடுங்கோவம். பிள்ளை மேல்.   துரோகம் பண்ணிவிட்டான் என்று புலம்பினாள். .
கொஞ்ச நாளில்   அம்மாவுக்கு  சாமான்கள்  அனுப்புவதும்  பெண்டாட்டி  அதிகாரத்தால்/உபதேசத்தால் நின்றது.   கிழவி தன் தலையெழுத்தை நொந்துகொண்டு கும்பகோணத்திலேயே தெருத்தெருவாய் அலைந்து உபாதானம் (பிச்சை)  எடுத்து வயிறு வளர்க்க ஆரம்பித்தாள். 
"நான் எத்தனையோ கஷ்டப்பட்டு அவனை வளர்த்தேன். இப்போது அவனுக்கு முன்னாலே பிச்சையெடுத்துச் சாப்பிடும்படி ஆகிவிட்டது தலை விதி" என்று அவள் அழுதுகொண்டே உபாதானம் வாங்கினாள். இரக்கப்பட்டு ஊரார் ஏதோ கொடுத்து காலம் தள்ளினாள். அவள் பிள்ளையை  ஊரில் தூற்றாதவர் ஒருவர் பாக்கியில்லை.  வ.கு. வோ. தினமும்   காவேரி  விடியற்காலம் ஸ்நானம் , நித்யானுஷ்டானம்  பூஜை எல்லாம் விடாமல் செய்தான்!!!!

"அப்படியாவது சமர்த்தாய்ப் பிழைத்தால் நல்லதாயிற்றே; அவளுக்கு ஒன்றுமே தெரியாதே. அவனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவாளே!" என்று கிழவி இரங்குவாள். தாய்ப்பாசம் கொஞ்சமும் குறைய வில்லை. 
ஒரு சமயம்  வ.கு.வுக்கு   ஜுரம்.   படுத்துவிட்டான்.  அம்மாக்கு  விஷயம் காதுக்கு எட்டியது.   பிள்ளையை பார்க்க  துடித்தாள். 'பெற்ற மனம் பித்து' அல்லவா? வீட்டிற்குள் நுழைய முடியாதே.  அவமானப்படுத்தினால்  பரவாயில்லை என்று பிள்ளை வீட்டுக்கு சென்றாள்;  தெரு வாசல் திண்ணையில் உட்கார்ந்தாள். உள்ளே போக அவளுக்கு மனம் துணியவில்லை. பயம் பாதி; 'அவள் முகத்தில் விழிக்கக் கூடாது' என்ற எண்ணம் பாதி. உள்ளே போய் அவள் பிள்ளையைப் பலர் பார்த்து வந்தனர். அவர்களை  எல்லாம்  பார்த்து, " அவனுக்கு இப்பொழுது எப்படி யிருக்கிறது?" என்று  ஒருவர் விடாமல் திருப்பி திருப்பி கேட்டாள் .
"உள்ளேதான் வந்து பாரேன்" 
"நான் எதற்கு வரவேண்டும்? அவள்தான் இருக்கிறாளே. அவளிடம் சொல்லுங்கள்: அவனுக்கு வேண்டியதைப் பண்ணிப் போட அவளுக்குத் தெரியாது. வாய்க்கு ருசியாகச் சமையல் பண்ணத் தெரியாது. மருந்து குழைத்துக் கொடுக்கத் தெரி யாது. மருந்து காரமாக இருக்கும். தேன் நிறைய விட்டுக் குழைத்துக் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று சொன்னாள் கிழவி.

தன் பிள்ளைக்கு அபாயம் ஒன்றும் இல்லை யென்று தெரிந்து கொண்ட பிறகே அன்று அவள் உபாதானம்/ தனது பசிக்கு  பிச்சை  எடுக்கச் சென்றாள்.கொஞ்ச நாளில்  வ.கு.வுக்கு உடம்பு குணமாகிக்கொண்டிரு
ந்தது. ஒவ் வொரு நாளும் அநதக் கிழவி அந்த வீட்டுத் திண்ணைக்குப் போய் அயலார் மூலமாக விஷயத்தை விசாரித்து அறிந்து வந்தாள்.

நண்பர்களே  மேலே  உள்ள  இந்த விஷயத்தை சொன்னவர் ஒரு நாள்  அந்த  தெரு வழியே  போனார். கிழவி திண்ணையில் இருந்தாள். அங்கே வந்த ஒருவரிடம் அவள் பேசிக் கொண்டிருந்தாள்; "அவனுக்கு அதிகக் காரம் கூடாது. ஜ்வரம் கிடந்த உடம்பு. வாய்க்கு இதமாகவும் பத்தியமாகவும் பண்ணிப் போடச் சொல்லுங்கள்: மோர்க் குழம்பு பண்ணினால் அவள் தேங்காய் அரைத்துவிட மாட்டாள். நிறைய அரைத்துவிடச் சொல்லுங்கள். அப்படிச் செய்கிறதனால் அவள் அப்பன் வீட்டுச் சொத்து ஒன்றும் குறைந்து விடாது. நான்தான் மகாபாவி. அவனுக்கு ஏற்ற படி பண்ணிப்போடக் கொடுத்து வைக்கவில்லை" என்று அவள் கூறியது  அவர்  காதில் விழுந்தது.

'நான்தான் மகாபாவி' என்ற போது அவளுக்குப் பேச முடியாமல் குரல் தழுதழுத்தது.  தடுமாறியது. அந்தத் தடுமாற்ற‌த்தில் அவளுடைய அன்பின் நிலை யும் பெற்ற மனத்தின் இயல்பும் வெளிப்பட்டன. அந்த ஒரு கணத்தில் என் கால்கள் கூட மேலே செல்லாமல் தடுமாறின என்கிறார்.  

"'மகாபாவி'   என்று இவள் சொல்லிக் கொள்கிறாளே.  உண்மையில் யார் பாவி?" என்று என்னை நானே கேட்டுக்கொண்டு மேலே நடந்துசென்றேன் என்று சொன்னவர்  வேறு யாருமில்லை  மஹா மஹோபாத்யாய டாக்டர்  உ.வே. சாமிநாதையர். தமிழ் தாத்தா. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...