Friday, May 15, 2020

PESUM DEIVAM



   பேசும் தெய்வம்      J K   SIVAN   

                                                  
          மஹா  பெரியவா  மனம்  திறக்கிறார். 


''மஹா  பெரியவா, நீங்க இப்போ எது பத்தி சந்தோஷப்படறேள், வருத்தப்படறேள்? சொல்லுங்கோ. 
மஹா பெரியவா  மனம் திறக்கிறா:  

''பேட்டைக்குப் பேட்டை, காலனிக்குக் காலனி புதுசா  என்னென்னமோ  கோயில்கள் கட்டுகிறார்கள். எங்கே பார்த்தாலும் பழைய கோயில்களையும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்கிறார்கள். புதுக்கோயில், பழைய கோயில் கும்பாபிஷேகங்களுக்காக என்னிடம் பலர் வந்து யோசனையும், பிரஸாதமும் கேட்டபடி இருக்கிறார்கள். இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

அதே சமயத்தில் என் மனசுக்கு நிரம்ப வருத்தம் தருகிற விஷயங்களும்  கேக்கறேன்.  யார் கிட்டே சொல்றது  உங்க கிட்ட சொல்லாம?    என்று  சில முறையீடுகள் . நான் பரிகாரம் தேட வேண்டுமாம். மற்றவர்கள் வேண்டுமானால் சொல்ல தயங்கலாம் . நான்  அப்படி இருக்க முடியாது.  எனக்கு எல்லோரும் சொந்தம்; ஸ்வாதீனப்பட்ட மநுஷ்யர்கள் . ஆகவே  ஒளிவு மறைவு  இல்லாமல்   நல்லது கெட்டது  என  தோண்றதை சொல்றேன்.''

கோயில்களில் சூழ்நிலை அமைதியாக, தூய்மையாக இருக்க வேண்டும். பகவத் ஸ்மரணை தவிர மற்ற நினைவுகள்  கூடாது.  ஆனால் அப்படி இல்லை. .பெரிய கோவில்களில் கூட்டமாக பக்தர்கள் வருவதாலே , எங்கு பார்த்தாலும்   ஏகப்பட்ட கடைகள் . டீக்கடை, சிகரெட் கடை எதுவுமே பாக்கியில்லை.  வருமானம் வளர்கிறது என்று  கோயில் நிர்வாகிகள்  வாடகைக்கு  இடம் தருகிறார்கள்.  சுருக்கமாக சொன்னா, ஸ்வாமி கர்ப்ப  கிரஹத்தை தவிர மத்த இடமெல்லாம்  வியாபார  ஸ்தலம். தெய்வ சாந்நித்யம் எங்கிருந்து வரும்.? நமக்கு  கிரஹிக்கும் சக்தி குறையறது.  பக்தி காணாமல் போகிறது. 


எங்கே எல்லாம் முடியுமோ அங்கெல்லாம்  காட்டேஜ்கள் ஹால்,  என்று வாடகைக்கு  விடுகிறார்கள். 
தெய்வ சம்பந்தமில்லாத, பக்தி அற்ற  காரியங்கள் நிலைத்து விட்டது.  சாந்நித்யம் எங்கிருந்து வரும்?
அபிவிருத்தியோ என்கிற பெயரில் அனாச்சாரம் வளர்கிறது. கோவில் வளாகம் உல்லாச ஸ்தலமா?

எல்லா  கோயில்களுக்கும்  ஒரே சர்க்கார் நிர்வாகம் . ஆலய  நிர்வாக ஆபீஸர்கள் ஏதாவதொரு நல்ல காரியத்தை ஆரம்பித்து முடிக்கு முன்பே வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடுகிறார்கள். 'செய்கிற காரியத்தைப் பூர்த்தி செய்து பலனைப் பார்க்கலாம்' என்கிற உற்சாகம் இருந்தால்தானே  நல்ல  ரிசல்ட் கிடைக்கும்?  என்ன  காரியம் செய்யவேண்டும் என்றே பொறுப்பெடுகாதவர்களும் உண்டு.  கேள்வி கேட்க  ஆளில்லை,

ஆலயங்களில் உட்புறமும், சூழ்நிலையும் சுத்தமாக இல்லாத வரையில், ஆஸ்திக காரியம் எவ்வளவு நடந்தாலும்   நிறைய கும்பாபிஷேகங்கள் நடந்தாலும் நாம் திருப்தி டுவதற்கில்லை. 

கும்பாபிஷேகத்துக்கு அப்புறம் சாந்நித்தியம் நிலைத்திருக்க வழி பண்ணாவிட்டால் என்ன பிரயோஜனம்? பிரஜைகள் இவ்விஷயத்தில் தீவிரமான கவனம் செலுத்தினால், அதிகாரிகளுக்கும் சர்க்காருக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து ஆவன செய்வார்கள். பொது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்துக்கு (public opinion) அந்த சக்தி உண்டு.

ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்லமாட்டார்கள் போலிருக்கிறது. அதையும் நானே சொல்கிறேன். இப்போதெல்லாம் டூரிஸ்டுகள், 45, 50 நாள் யாத்திரை கோஷ்டிகள், காலேஜ் பெண்கள், ட்ரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம் கூட்டமாகக் கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும் தரிசனத்திற்கு வந்து விடுகிறார்களோ? இப்படி செய்வது தோஷம் என்று தெரியாததாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். முன்பெல்லாம வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடுகிறார்கள்.     'ஸ்வாமிக்கு ஏது தீட்டு?' சீர்திருத்தக்காரர்கள் நான் சொல்வதை ஆக்ஷேபிக்கலாம். தீட்டு இல்லாத சுவாமி எங்கேயும் இருக்கிறார். அவரைக் கோயிலில்தான் வந்து தரிசிக்கவேண்டுமெல்பதில்லையே? சாஸ்திரப் பிரகாரம் ஸ்வாமியின் சாந்நித்தியத்தைக் கிரகித்துத் தரும் கோயில்களில், அந்த சாஸ்திரகங்கள் சொன்ன விதிப்படிதான் ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுவதால்தான் பல மகாக்ஷேத்திரங்களில், விபத்து, விபரீதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்.

'அந்த மகா க்ஷேத்திரத்தில் ஏன் இப்படிப்பட்ட விபத்து உண்டாச்சு? ஸ்வாமி சாந்நித்தியமே போய்விட்டதா?' என்று கேட்கிறார்கள். நான் மனசு நொந்து சொல்கிறேன்: ஸ்வாமி சாந்நித்தியம் இருப்பதாலேயேதான் நாம் செய்கிற அநாச்சாரத்தைப் பொறுக்க முடியாமல், தம் கருணையும் மீறி, இப்படி அவ்வப்போது ஒரு விபரீதத்தை நமக்குத் தண்டனையாகத் தருகிறார். விபத்து என்ற பேரில் சில புண்யசாலிகளைத் தம்மிடம் சேர்த்துக்கொண்டு, உயிரோடிருக்கிற நம்மைத்தான் தண்டிக்கிறார். நாம் திருந்த வேண்டும், நல்ல ஆசார ஸம்பன்னர்களாக இருக்கவேண்டும் என்று கருணையினாலேதான் தண்டனை கொடுக்கிறார்.

காட்டேஜ், எக்ஸ்கர்ஷன் எல்லாமே அநேக க்ஷேத்திரங்களில் பக்தியைவிட, உல்லாசகக் கேளிக்கைகளைத்தான் அதிகப் படுத்தியிருக்கின்றன. மொத்தத்தில், நம் வீட்டில் நம்மால் சகிக்க முடியாத அபச்சாரங்களை சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமி சந்நிதியிலும், மற்றும் பல தெய்வ சந்நிதிகளிலும் இழைக்கிறோம்.

இது எனக்கு நன்றாகத் தெரிந்தும், சொல்லாமல் வெறுமனே இருந்தேனானால், அதுவே எல்லாவற்றிலும் பெரிய அபசாரம் என்பதால் என் மனஸிலிருந்ததைச் சொன்னேன். உங்களிடம் சொல்வதாக மட்டும் நினைக்காமல், சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமியிடமே பிரார்த்தனையோடு சொல்கிறேன். அந்த அபச்சாரங்களைத் தடுத்து நிறுத்துவதில் ஆஸ்திக மகா ஜனங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க அவர்தான் அருள் செய்ய வேண்டும்!
  
பெரியவா அறிவுரையை இப்போதாவது, இனியாவது பின்பற்றுவோமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...