Sunday, May 17, 2020

ANANDHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்   J K   SIVAN  


                        விறுவிறுப்பான  சம்பவங்கள் 

அயோத்தி மன்னன் தசரதனுக்கு ஒரு பழக்கம்.  இரவிலும் வேட்டையாடுவது.  சப்தம் வந்த திசையில் அம்பை செலுத்தி  இலக்கை வீழ்த்தும்  ஸப்த வேதி எனும்  மந்திர சக்தி அறிந்து அதில்  தசரதன்  நிபுணன்.  ஒரு இரவு  வேட்டையாட போனவன் எங்கோ யானை நீர் குடிக்கும் சப்தம் கேட்டு  அந்த திசையில் கூறிய  அம்பை செலுத்த, அது  ஸ்ரவணன் எனும் இளம் துறவி மார்பில் பாய்கிறது.   ஸ்ரவணன்   வயதான  குருட்டு
 பெற்றோரை ஒரு காவடியில் வைத்து சுமந்து செல்பவன்.  அந்த இரவு  அவர்களுக்கு  குடிக்க நீர்  கொண்டுவர   காட்டில்  குளத்தில் தனது   குடத்தை கவிழ்த்து நீர் மொண்டான். அதன் சப்தம் எங்கோ தசரதன் காதில்  யானை நீர் குடிப்பதைபோல் கேட்டது.  ஆகவே  அம்பை செலுத்தினான்.  ஸ்ரவணனின்  '' ஹா '' வென்ற சப்தம் கேட்டு ஓடிய தசரதன்   தவறை  உணர்ந்து   ஸ்ரவணன்  கேட்டபடி   ஜலத்தை குருட்டு பெற்றோருக்கு எடுத்துச் சென்று  அவர்கள் நீர் குடித்தபிறகு தான்  தவறுதலாக ஸ்ரவணனை கொன்றதை சொல்லி, அவர்கள் விருப்பப்படியே  அவர்களுக்கு அக்னி பிரவேசம் செய்து வைத்து அவர்கள் இட்ட சாபம் பெறுகிறான். ''புத்ர சோகத்தால் நாங்கள் மடிவது போல் நீயும்  மடிவாய்''.

மிகுந்த வருத்தத்தோடு தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் நடந்ததை சொல்ல, அவர்  அஸ்வமேத யாகம் செய்ய  வைக்கிறார். 

நெடுங்காலமாக  புத்ரபாக்யம் இல்லாத தசரதன்   விபண்டக மகரிஷி  புத்ரன் ரிஷ்யஸ்ரிங்கரை  அழைத்து புத்ர காமேஷ்டி யாகம் செய்கிறான்.   இந்த ரிஷ்யஸ்ரிங்கர்  வருகையால் தான் பஞ்சத்தில் அடிபட்ட ரோமபாதன் ராஜ்யத்தில்   ஜோ  என்று முன்பு ஒரு காலத்த்தில்  மழை பெய்தது.  

தசரதன் வளர்த்த  ரிஷ்யஸ்ரிங்கர் முன்னின்று நடத்திய  புத்திரகாமேஷ்டி  யாக குண்டத்தில் அக்னி  புறப்பட்டு ஒரு பாயச குடத்தை தருகிறான். தசரதனின்  மூன்று மனைவியரும் அதை பருகுகிறார்கள். 

இதுவரை  சொன்னது ஆனந்த ராமாயணத்தின் ஸார காண்டம்  முதல் சர்க்கம்.
 இனி 2வது சர்க்கம். 

பூமியில்  ராவணனின் அக்கிரமம், எண்ணற்ற துன்பம் பற்றி  பிரம்மனிடம் முறையிட, அவளை அழைத்து நாராயணனிடம் சென்று விஷயம் சொல்லி,   ''நானே  மனிதனாக அவதரிப்பேன், தேவர்கள்  வானரங்களாக, துந்துபி மந்தரை எனும் கூனியாக  பிறப்பாள்  என்கிறார் நாராயணன்.

பாயசம் பருகிய  தசரதன் மனைவியர் நான்கு குழந்தைகளை பெறுகிறார்கள்.  கௌசல்யாவின் மகன் ராமன்,  சுமித்ரையின் மகன் லக்ஷ்மணன், கைகேயின் மகன்கள்  பரத , சத்ருக்னர்கள்  சந்தோஷமாக வளர்கிறார்கள். கல்வி கேள்வி சாஸ்திரங்கள் பயில்கிறார்கள்.  ஐந்தாறு  வயதில் வசிஷ்டர்  உபநயனம் செய்விக்கிறார். ரிஷிகளிடம்   வேத அத்யயனம் பெற்று  ஆறுமாத காலம்  தீர்த்த யாத்திரை  சென்றார்கள் என்று  சொல்லி  ரெண்டாம் சர்க்கம் முடிகிறது. 

இனி மூன்றாவது சர்க்கத்தில்  பரமேஸ்வரன்  பார்வதிக்கு  ஆனந்த ராமாயணத்தில் என்ன சொல்கிறார்? 

ஒரு நாள்  விஸ்வாமித்ரர்  தசரதன் அரண்மனை வருகிறார்.  ராம லக்ஷ்மணர்களை தன்னோடு காட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பி, தசரதன் வசிஷ்டர் ஆலோசனை, அனுமதியுடன் தேரில்  அவர்களை ஏற்றி விஸ்வாமித்ரரோடு அனுப்புகிறான். வழியில் அநேக  வித்தைகளை  விஸ்வாமித்ரர்  ராம லக்ஷ்மணர்களுக்கு உபதேசிக்கிறார். அதில் முக்கியம்   பசி தாகம் அடக்கும்  பலா அதிபலா மந்திரம். 
ராமலக்ஷ்மணர்கள் காட்டில் அநேக  அரக்கர்களை கொல்கிறார்கள். தாடகை எனும்  ராக்ஷஸியை ராமன்  வதம் செய்கிறான்.  அவள் பிள்ளைகள்  மாரீசன்,  சுபாகு எனும் ராமாயணத்தில் முக்கிய பெயர்கள்.   கோபத்தோடு  யாகத்தை கெடுக்க வந்த மாரீசன் ராமபாணத்தால் நூறு காத தூரம் தூக்கி எறியப்பட்டு ஒரு கடலில் எங்கோ விழுகிறான் .அடுத்த பாணத்தில் சுபாகு மூச்சு விட மறந்துபோய் மாள்கிறான்.
விஸ்வாமித்ரர் நடத்திய ரண  யக்ஞம் தடங்கல் இல்லாமல் முடிகிறது.    ரிஷிகள் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கும்போது  மிதிலையில்  ஜனகராஜன் மகள்  ஸ்வயம்வரம் என்கிற சேதி சொல்கிறார்கள். 

இதைக் கேட்ட  விஸ்வாமித்ரர்  ராமலக்ஷ்மணர்களை அங்கே கூட்டி செல்கிறார்.  வழியில் ஒரு ஆஸ்ரமம் எதிரே ஒரு பெரிய  கல் பாறை. 

ராமா இது என்ன தெரியுமா சொல்கிறேன் கேள்:   பிரம்மன்  அழகிய ஒரு பெண் படைத்தான். அவளுக்கேற்ற  கணவனை தேடினான். இந்திராதி தேவர்கள் அந்த பெண் அழகில் மயங்கினர் . பிரம்மன் பூமி யில் அவளுக்கேற்ற கணவன் கௌதமன் என்கிற  ரிஷி என்று முடிவு செய்து  அவருக்கு அகலிகை
  மனைவியானாள். இந்திரன் அகலிகையை மறக்கவில்லை.  ஒருநாள் கௌதமரைபோல்  வேடமிட்டு கௌதமர் ஆசிரமத்தில் நுழைந்தான். ஆஸ்ரமத்தில்  இந்திரனின் தவறான எண்ணம் செயல் ஞானதிருஷ்டி மூலம் அறிந்த  கெளதமர்  அவனை  சபிக்க, அவன் தனது தவறுக்கு வருந்தி பிரஹஸ்பதியிடம் நடந்ததை சொல்லி  அவன் உடல் முழுதும் பார்ப்பவர்கள் கண்ணுக்கு ''கண்'ணா க தோன்றுகிறது. ஆயிரங்கண்ணன், சஹஸ்ராக்ஷன் என்று இந்திரன் பெயர் பெறுகிறான்.   கோபம் தணியாத கௌதமர் மனைவி அகல்யாவை ''கல்லாக போ''  என்று சபிக்கிறார். ஏமாற்றப்பட்ட எனக்கு சாப விமோசனம் எப்போது  ஏற்பட்டு மீண்டும் உங்களுக்கு பணிவிடை செய்வேன் ?'' என்ற  அகல்யாவிடம்  '' ஸ்ரீமந்  நாராயணன் ராமராக அவதாரம் செய்து இந்த பக்கம் வரும்போது அவர்  பாத தூசி  உன் மேல் பட்டு மீண்டும்  உரு பெறுவாய்''  

''கௌதமர் மேரு மலைக்கு தவம் செய்ய சென்று விட்டார். இந்த ரிஷிபத்னிக்கு மீண்டும் உருவம் கொடு என்று விஸ்வாமித்ரர் முடிக்க, ராமர் அந்த கற்பாறையை மூன்று முறை வலம் வந்து அவரது பாத ஸ்பரிசம் பட்டு அகலிகை எழுந்து வணங்கி வாழ்த்தி கௌதமரை அடைகிறாள். 

இன்னும்  ஆனந்தராமாயணம் வரும்.   

   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...