Saturday, May 16, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
59 நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பௌத்தம், சமணம், சாங்கிய மதங்கள் எங்கும் பரவி ஹிந்து சமயம் வலுவற்ற ஆதரவற்ற நிலையில் இருந்த போது ஒரு புதிய சக்தியாக சைவ சித்தாந்தத்தை பரப்ப ஆதி சங்கரர் தோன்றி அத்வைத கோட்பாடுகளை பரப்பி, ஷண்மத ஸ்தாபனம் செய்தார்.
அதேபோல் ஸ்ரீ வைஷ்ணவத்தின் சிறப்பை வெளிப்படுத்தி அதை தலை தூக்க செய்த பெருமை, பரப்பிய பெருமைக்குரிய ஆச்சார்யர்கள் சிலர் போற்றத்தக்கவர்கள். முக்கியமாக, நாதமுனிகள், யமுனாச்சார்யார் ராமானுஜர் போன்றோரின் பங்கு இதில் தலையாயது. ராமானுஜரின் பங்கு ஜாஸ்தி.
நாதமுனிகள் 824 ல் பிறந்தார். நான் கி.மு. கி.பி எல்லாம் எழுதுவதில்லை. வருஷம் நம்பர் போதுமே. இயற் பெயர் ரங்க நாத மிஸ்ரர். இது பின்னர் நாம் அறியும் நாதமுனிகள் ஆயிற்று. அவரது படைப்புகள் காலப்போக்கில் மறைந்தன. ராமானுஜர், வேதாந்த தேசிகர் போன்றோர் சொல்வதில் இருந்து நாதமுனிகள் பெருமை தெரிகிறது . அவர் மூலம் தான் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள் நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் என ஆழ்வார்கள் பாசுரங்கள் ஒன்றாக்கப்பட்டு நமக்கு கிடைத்து இன்றும் பெருமாள் கோவில்களில் ஒலிக்கிறது.
யாமுனாச்சார்யார் நாதமுனிகளின் பேரன். (கி.பி 916 ) ஆளவந்தார் என்றும் ஒரு பெயர். ராஜாவாக இருந்தவர். ராமானுஜரின் மானசீக குரு. இவரைப் பறி நிறைய எழுதி இருக்கிறேன். விசிஷ்டாத்வைத சாராம்சங்களை 6 நூல்களாக ராமானுஜருக்கு முன்பே எழுதியவர். ஸம்ஸ்க்ரிதத்திலும் நூல்களை அளித்த வல்லவர்.
சிதம்பரம் அருகே இருக்கும் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவிலில் தான் நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த ஊரில் உள்ள குப்பங்குழியில் அவதரித்தவர் நாதமுனிகள். நம்மாழ்வார் திருவருளால் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை மீட்டார். ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையின் முதல் ஆச்சார்யர்.. இவருக்கு முன்பாக சொல்லப்படும் மூன்று பெயர்கள் பெருமாள், பிராட்டி, விஷ்வக்சேனர் ஆகியோர் பரமபதத்தவர்கள்.அப்புறம் ஆழ்வார்கள்.
நம்மாழ்வாரை யோக சமாதியில் தரிசித்து உபதேசம் பெற்றவர் நாதமுனிகள். இந்த ஊரின் பெயர் அப்போது
வீர நாரயணபுர சதுர்வேதிமங்கலம். கல்வெட்டு சொல்கிறது. இன்றும் நமக்கு குடிநீர் தரும் பெரிய வீராணம் ஏரி இங்கே தான் உள்ளது. நாதமுனிகள் தந்தை ஈச்வரபட்டர். குமாரர் ஈச்வர முனிகள் .வடநாட்டு யாத்திரை சென்று பல வைணவ ஸ்தலங்களை தரிசித்து கோவர்த்தனபுரம் என்னும் கிராமத்தில் ‘யமுனைத் துறைவன்‘ பகவான் திருத்தொண்டில் மகிழ்ந்தார்.
ஒரு நாள், காட்டுமன்னனார் (வீரநாராயணபுரம்) கோயில் பெருமாள் நாதமுனிகள் கனவில் தோன்றி ''வீர நாராயண புரத்திற்கே வா'' என்று அழைத்ததால் திரும்பிய நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர், திருவிளக்கு கைங்கரியம், கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ஒருநாள், கும்பகோணம் ஆராவமுதன் (சார்ங்கபாணி) கோயில் சென்று தரிசித்த சில வைணவர்கள் மூலம் நம்மாழ்வார் திருவாய் மொழி பத்து பாசுரங்களை கேட்கிறார்.
ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே! --- முதல்
உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான் கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன '' ஓராயிரத்துள் இப்பத்தும்'' மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே -- வரை பத்து பாசுரங்களை கேட்டதும்.
''ஸ்வாமிகளே , நீங்கள் பாடிய பாசுரத்தில் ''ஓராயிரத்துள் இப்பத்தும் '' என வருகிறதே, அந்த ஆயிரம் பாசுரங்களும் உங்களுக்கு தெரியுமா?
''க்ஷமிக்கணும் சுவாமி. அடியோங்கள் இந்த பத்து மட்டும் தான் அறிவோம் ''
பாசுரங்களில் ”குருகூர்ச் சடகோபன்” என்று வருகிறதே?. அங்கே செல்வோம் என விசாரித்துக்கொண்டு நாதமுனிகள் திருக்குருகூர் செல்கிறார். யாருக்கும் பாசுரங்கள் பற்றி எவருக்கும் தெரியவில்லை. மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்திக்கிறார்.
''சுவாமி குருகூர் சடகோபன் பாசுரங்கள் உமக்கு தெரியுமா?''
” திருவாய்மொழியும், பிரபந்த பாடல்களும் முன்னரே மறைந்துவிட்டன, எமது குருவான மதுரகவியாழ்வார் அளித்த ”கண்ணிநுண்சிறுத்தாம்பு” என்னும் பிரபந்தம் மட்டும் இருக்குறது. இந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி, வேண்டுவன அருளுவார்”
நாதமுனிகள் விடுவாரா?
பராங்குசதாசரிடம், கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களை உபதேசமாகப் பெற்று, நேரே நம்மாழ்வாரின் திருப்புளிய
மரத்தடி சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார்.பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடல்களை ஒருமுகமாய் ஓதினார்.
''ஆஹா என்ன ஆச்சர்யம். நம்மாழ்வார், அசரீரீயாய்த் தோன்றி ''நாதமுனி. என்ன வேண்டும் உனக்கு?'' என வினவ,
''அடியேனுக்கு திருவாய்மொழி ஓராயிரம் பாசுரங்களையும் அருளவேண்டும் ''
''ஓராயிரம் என்ன, நாலாயிரம் தருகிறேன் ''
நம்மாழ்வார், நாதமுனிகளின் முன் தோன்றி, பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக ரஹஸ்யங்களை உபதேசிக்கிறார். நாதமுனிகள் யோகாசமாதியில் ஆழ்கிறார்.
காட்டு மன்னார் கோவில் வீர நாராயண பெருமாள் கனவில் தோன்றி ''நாதமுனி இங்கே வா'' என அழைக்க வீர நாராயணபுரம் திரும்பினார்.
நாதமுனிகள் ஆயிரம் பாசுரம் தேடப்போய் நாலாயிர திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் அவர் மூலம் நமக்கு கிடைத்ததற்கு எத்தனையோ ஜென்மங்கள் நாம் கடன் பட்டிருக்கிறோம். ஆழ்வார்கள் தமிழ் அமிர்தத்திலும் இனியவை.
ஒருநாள் சோழ ராஜா நாதமுனிகளை காண வந்த போது யோக சமாதியில் இருந்து, பின்னர் ராஜாவை தேடி செல்கிறார். ''வா நான் வழிகாட்டுகிறேன்'' என்று நாலுபேர் சிலர் நேரில் வந்து, போக்கு காட்டி, நாதமுனிகளை கங்கை கொண்ட சோழபுரம் வரை அழைத்துச் சென்றார்கள் . ஆனால் கடைசிவரை அவர்களை நாதமுனிகளால் காணமுடியவில்லை. களைத்து போய் நாதமுனிகள் எங்கே போவது? என்று காட்டில் அமர்ந்து அழ, வீர நாராயணப்பெருமாளே அவருக்கு காட்சிக் கொடுத்தார். பெருமாளைக் கண்ட ஆனந்தத்திலேயே நாதமுனிகள் ஸ்ரீ வைகுண்டம் புகுந்தார் என்று வரலாறு. வழிகாட்ட வந்தவர்கள் ஸ்ரீ சீதா சமேத ராம லக்ஷ்மண ஆஞ்சநேயர் ஆகிய நால்வர் என்றும் அறிகிறோம்.
இது நமக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் திருக்கோளூர் பெண் பிள்ளைக்கு தெரிந்ததால் தானே, ராமாநுஜரிடமே இதை விமர்சிக்கிறாள்? அவளுக்கு தெரியாதது என்ன மிச்சம் இருக்கிறது?
''ஸ்ரீ ராமானுஜரே , நான் என்ன நாத முனிகளைப் போல எம்பெருமானைக் காண நெடுந்தூரம் போனேனோ? எந்த விதத்தில் திருக்கோளூரில் வாசம் செய்ய அருகதை உள்ளவள் ? என்று கேட்கிறாளே .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...