Saturday, May 9, 2020

MOTHER'S DAY



''அம்மா வா. ஆசை முத்தம் தா'' J K SIVAN
உலக அம்மா தினமாம் இன்று மே மாதம் 10ம் தேதி... வெள்ளைக்காரா, அம்மாவை பற்றி நினைத்து வருஷத்தில் ஒரு நாள் அவளுக்கு ஒதுக்கிய நீ சத் புத்ரன். வீட்டிலேயே இருந்தும், ஊரில் இருந்தும், உயிரோடு இருந்தும் அம்மா ஞாபகம் இல்லாதவர்களை விட நீ உயர்ந்தவன்.
அம்மா'' --- இந்த வார்த்தைக்கு மிஞ்சிய சக்தி வாய்ந்த ஒரு சக்தி வாய்ந்த சொல் கிடையாது. அம்மா ஸ்தானத்தில் ராஜாவின் அம்மாவும் பிச்சைக்காரன் அம்மாவும் ஒரே நிலைப்பாடு தான். உலகில் முதன்மையானவள் ப்ரத்யக்ஷ தெய்வம் அவள். மாத்ரு தேவோ பவ : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்: தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை..... இன்னும் நிறைய....
இன்று என் அம்மாவைப் பற்றி சில வரிகள் எழுதி நிறைய பேருக்கு பிடித்து அவர்கள் அம்மா பற்றி நினைக்க தோன்றினால் அது நான் செய்த புண்யம்:
''அம்மாவைப் பற்றி எழுதினால் யாருக்கு தான் பிடிக்காது. எத்தனை தரம் படித்தாலும் விருப்பும் விறுவிறுப்பும் பாசமும் பழைய ஞாபகமும் குறையுமா?. நமக்கு மட்டுமல்ல ஆதி சங்கரர் போன்ற முற்றும் துறந்த சந்நியாசிக்கு கூட அம்மாவை ரொம்ப பிடித்தது. அவருடைய மாத்ரு பஞ்சகம் என்ற ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் ஐந்து யுகங்களிலும் அழியாத ஒன்று . அதையே மீண்டும் சொல்கிறேன்.
''அம்மா எனக்கு சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப விருப்பமாக இருக்கிறதே''
என் கண்ணே, சங்கரா, எனக்கு இருப்பது நீ ஒருவனே. உன் தகப்பனாரும் என்னை விட்டு
ச் சென்று விட்டார். பல வருஷம் தவமிருந்து திருசூர் வடக்கு நாதன் அருளால் நீ பிறந்தாய். கண்ணை இமை காப்பது போல் உன்னை வளர்த்தது நீயும் என்னை விட்டுபிரிந்து போவதற்காகவா? இதற்கா பெற்றேன். நீ சந்நியாசியாவது நான் உன்னை உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்?
'' என் அருமை அம்மா, நீ தாய் என்பதோ நான் ஒரு நேரத்தில் உன் மகன் என்பதோ பிரிபடும் உறவோ? உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் நாம் இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம். உன் மனத்தில் இருக்கும் அந்த இறைவன் தான் என் மனத்திலும் இருப்பவன் அல்லவா? நான் எங்கிருந்தாலும் நீ தான் என் மனதில் முழுவதுமாக இருப்பாய்''.
எப்படியோ மகன் தாயின் அனுமதியை பெற்று விட்டு ஒரு நிபந்தனையுடன் சன்னியாசியானான் 7 வய து மகன் சங்கரன்..
''சங்கரா, என் குழந்தே, நீ என் மரணத் தருவாயில் என் அருகில் இருக்க வேண்டும். உன் கையால் தான் எனக்கு தகனம். செய்வாயா? சரி என்றால் நீ என்னைவிட்டு செல்லலாம் ''.
''நிச்சயம் அம்மா, அப்படியே ஆகட்டும்.
வருஷங்கள் உருண்டது. அந்த சந்நியாசி ஸ்ரிங்கேரியில் இருக்கும்போது அன்னையின் அந்திம காலம் வந்ததை உணர்ந்தார். திரிகாலமும் உணரும் ஞானி அல்லவா அவர். அம்மாவுக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது.
இறைவன் அருள் மிக்க அந்த ஞானி அடுத்த கணமே அன்னையிருந்த ஊர் கேரள தேச காலடி கிராமத்தில் தாயின் காலடியில் வணங்கி அருகே அமர்ந்தார். மடியில் இருத்தி க்கொண்ட அம்மாவின் கண்கள் மட்டுமே பேசின. கொஞ்சம் கொஞ்சமாக உடல் ஒவ்வொன்றாக சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. சிறிது நிமிஷங்கள் கசிந்தது. மரணம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது. தாய் வெறும் உடலானதை உணர்ந்த அந்த துறவி, அவளுக்கு அந்திம கடன்களை ஆசாரத்தோடு சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி? ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே? துறவிக்கு ஏது உறவு என்று எள்ளிநகையாடினர் அறியாதா அண்டை அசலார்.
துறவியின் மனத்திலிருந்து, எண்ணக் குவியல்களிலிருந்து வெடித்து வாய் வழியே கடல் மடையென ஐந்து ஸ்லோகங்கள் அப்போது வெளியேறியது . அந்த ஞானியின் மற்ற காவியங்களிலிருந்து முற்றிலும் அப்பாற்பட்ட ஒன்றே ஒன்று. இதில் தாய் பாச உணர்ச்சி பொங்கும். உறவும் நினைவும் தொக்கி நிற்கும். அதுவே இன்றும் என்றும் அழியாத காவியமாக இருப்பதைப் பார்க்கலாமா .
தாயைக் கடவுளாகவே போற்றுவதும் கடவுளைத் தாயாக நெருங்குவதும் நாம் அறிவோம். உலகியலில் ஒரு தாய்க்கு மகனாகப் பணி புரியவில்லையே என்ற ஏக்கம் எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது?. முக்கியமாக அவள் இருக்கும்போது. மனச்சாட்சியின் உறுத்தல் படிக்கும்போது நமக்கும் உள்ளே உறுத்துகிறதே. நெருடுகிறதே.
''ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:
என் அம்மா! என் தலை உன்னிலிருந்து வெளிப்படும் போது என்னமாக பல்லைக் கடித்துக்கொண்டு தாங்க முடியாத பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில் வெளியே தள்ளினாய் , வருஷக் கணக்காய் உன் அருகே படுத்து உன் ஆடையை, படுக்கையை தாராளமாக நிறைய ஈரமாக்கி நனைத்தேனே. ஒரு வார்த்தை நீ கோவித்ததில்லையே . மாறாக சிரித்து என்னை அணைத்தாய்.
என்னால் உன் உடல் இளைத்தது, சக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது. ஒரு பத்து மாச காலம் என்னமாய் நான் உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்.உலகம் என்னை பெரிய ஞானி என்று புகழ்வதால் அது ஈடாகுமா?
''குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II
என் அம்ம்மா!! திடீரென்று ஒருநாள் நான் காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய். அது எவ்வாறு உன்னை உலுக்கியது. கண்ணீர் கங்கையாய் பெருக என் குருகுல வாச ஆசான் வீட்டுக்கு ஓடிவந்தாய்.என்னைத் தேடினாய், என் ஆடையைக் கவனித்தாய். என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல் பாதம் வரை தடவிக்கொடுத்தது நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என் ஆசானும் கூட உன்னோடு அழுதது இப்போது நடந்தது போல் இருக்கிறதே. நான் என்ன செய்யமுடியும். பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக வணங்குகிறேன்.
''அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II
ஒ ! என் அம்ம்மா ! உனக்கு ப்ரஸவ வலியெடுத்த போது நீ என்ன கத்து கத்தினாய் ஞாபகமிருக்கிறதா? '' அப்பா, அம்மா ! தேவா சிவா, தெய்வமே கிருஷ்ணா, தேவ தேவா, கோவிந்தா, ஸ்ரீ ஹரி, பகவானே, முகுந்தா ''
அதற்கு ஈடாக நான் இப்போது என்ன செய்யப்போகிறேன் தெரியுமா ? என் அன்புள்ள அம்மா, பணிவோடு கண்ணீர் மல்க உன் காலில் விழப்போகிறேன்.
''ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II
என் தாயே, உனக்கு நான் என்னவெல்லாம் செய்யவில்லை தெரியுமா? தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட தரவில்லை. உன் கடைசி யாத்திரைக்கு உபகாரமாக ஒரு விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை என்று ஒன்று இருந்ததா எனக்கு? போனதெல்லாம் போகட்டும் உனக்கு நினைவு அழியுமுன்னே அந்த அந்திம நேரத்தில் உன் காதில் ''ஒ ராமா, ஸ்ரீ ராமா -- ஏதாவது ஒரு வார்த்தையாவது சொல்ல நான் இருந்தேனா? ஈடற்ற, இணை கூற முடியாத தாயே, இரக்கமற்ற என் மேல் கொஞ்சூண்டு இர க்கம் வை. என் தவறையெல்லாம் மறந்துவிடு, மன்னித்து விடு. ஏதோ கடைசி கடைசியாகவாவது உன் உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததைத் செய்தேனே. அதற்காகவாவது கருணை காட்டு..
''முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II
அம்மா, நீ நீடூழி வாழ்க. '' என் முத்தே, என் நவ நிதியே, என் கண்ணின் கருமணியே, என் ராஜா குட்டி, என்உயிரின் உயிரே,'' என்றெல்லாம் இட்டுக்கட்டி நீயாக ராகம் போட்டு என்னை தூக்கிக்கொண்டு ஆடி, கொஞ்சி பாடுவாயே, நான் நன்றிக்கடனாக இப்போது உனக்கு என்ன செய்கிறேன்?. அன்பின் ஈரத்தோடு, பாசத்தின் பனித்துளியோடு, கருணையின் குளிர்ச்சியோடு நீ பாடிய அந்த வாய்க்கு ஈரமில்லாமல் வறண்ட உலர்ந்த அரிசியைத்தான் கொஞ்சம் வாய்க்கரிசியாக போடுகிறேன்.
அந்த ஞானி, முற்றும் துறந்த துறவி, உலகம் போற்றும் அரிய அத்வைத முனி, ஆதி சங்கரர். இந்த ஐந்து ஸ்லோகமும் அவர் தாய் ஆர்யாம்பா வுக்குகொடுத்த வாக்கினைக் காப்பாற்ற காலடிக்கு வந்து அவளது அந்திம கிரியைகளை செய்யும்போது பாடிய '' மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்'' மேலே சொன்னவை.
படிக்கும் அன்பர்களே தாய் தந்தையைப் பேண தவறாதீர்கள். காலம் கடந்து சங்கரர் போல் துடிக்க வேண்டாமே. அவர் சன்யாசி அதனால் ஒப்புக்கொள்ளலாம். நமக்கு மன்னிப்பே கிடையாது. கரோனாவால் எங்கோ நகரமுடியாமல் தவிக்கும் அம்மாவைக் காண துடிக்கின்ற, காண இயலாமல் தவிக்கும் அன்பு உள்ளங்களே பகவான் கிருஷ்ணன் உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கட்டும். விரைவில் அம்மாவைப்பார்த்து ஆசி பெறுவீர்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...