Sunday, May 17, 2020

FOOD IN WAR



              படைக்கு உணவின் அளவு J K   SIVAN  

''அரசே  வடக்கே ஹஸ்தினாபுரம் சக்ரவர்த்தி தூதுவன்   உங்களைக்கண்டு சக்ரவர்த்தியின் அவசர சேதி கொடுக்க வந்திருக்கிறான் '' சேர  ராஜா வின் அரண்மனையில்  சேவகன் வந்து சொன்னான்.

''அனுப்பு அவனை இங்கே''.

பாண்டிய சோழ மன்னர்களை விட சக்தி வாய்ந்தவனாக  அரசாண்ட  சேரன் முன்   துரியோதனனின்
தூதுவன்   பணிவோடு  நின்று வணங்கி ஓலையை  அளித்தான்.   அரசனின் பார்வை மந்திரி மேல் செல்ல, மந்திரி அதை பெற்று  மொழி தெரிந்தவர்கள் அருகே நிற்க  ஓலை வாசிக்கப்பட்டது.

''கௌரவ சேனை  பாண்டவர்களை எதிர்ப்பது உறுதியாகி விட்டது.   கௌரவ அரசின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து  பாண்டவர் படையை எதிர்க்க சேரனின்  ஒப்புதலை   ஆதரவை அளிக்க  துரியோதனன் கேட்டிருந்தான்.  

இதற்கு முன்பே  பாண்டவர் அணியில் இருந்து வந்த தூதுவன் அரசனை சந்தித்திருந்தான் .  சேரன் இரு அணிகளுக்கும் நண்பன் . கிருஷ்ணனின்  நெருங்கிய விசுவாசி.  கிருஷ்ணன் அர்ஜுனன் பக்கம் என்பது தெரிந்து விட்டதே.  ஆனால் துரியோதனனும்  நல்ல  நண்பன்.  ஆகவே  ஒருவரோடு அணி சேர்வது என்பது மற்றவர்க்கு எதிராக செயல்படுவதாகும்.   நண்பர்களுக்கிடையே   விரிசல் ஏற்படுத்தும்.  யாரை இழப்பது. அர்ஜுனனையா, துரியோதனனையா? 

''ரெண்டு நாள்  தூதுவன் இங்கே தங்கட்டும்.  அதற்குள் முடிவு எடுத்து  பதில் ஓலை  தயாராக்கி அனுப்புவோம்.''   அன்றிரவு மந்திராலோசனை நடந்தது.
மந்திரிகள்  யோசனை  வேறுபட்டது. சேரன் திணறினான்.  அப்போது  அவனுக்கு ஒருமுறை கிருஷ்ணனை  ராஜ  சூய யாகத்திற்கு  முன்பு  துவாரகையில் சந்தித்து பேசியது நினைவுக்கு வந்தது.

பேச்சு வாக்கில்  கிருஷ்ணனை  அப்போது  சேரன் கேட்டான்: 

''கிருஷ்ணா, நீ  சமயோசிதன் . எனக்கு ஒரு வழி சொல்.  சோழமன்னர்களும்  பாண்டியர்களும்  ஒருவரை ஒருவர்  எதிர்ப்பவர்கள். ஆனால்  எங்கள் நண்பர்கள்.  இருவரும்  சேரநாட்டை நேசிப்பவர்கள்.  நண்பர்களுக்குள்  போர் மூளும்போது எப்படி ஒருவரை விட்டு மற்றவரை  ஆதரிப்பது.  ஒரு சாரார் நட்பு விரோதமாகாதா?

''நட்போடு இருந்து விட்டு போயேன். உதவி இருவருக்குமே செய்வது போல் ஆதரி. விரோதம் வர வழி கிடையாதே?''

கிருஷ்ணா  உன்  ராஜதந்திரம் புரியவில்லை ? எப்படி ஒருவருக்கு உதவுவது போல் மற்றவருக்கும் உதவி ஆதரிப்பது முடியும் ? 

''யுத்தம்  என்பது நேரிடையாக மோதுவது மட்டும் அல்ல.  இருவர் நேரிடையாக மோதும்போது இருவருக்கும் உதவ என்ன தேவை? சொல்?''

 கிருஷ்ணன் சிரித்தான்.  சேரன் யோசித்தான்.   புரியவில்லை என்று தலையசைத்தான். 

''உணவு,   ஆதுர  சாலை, வைத்திய மருந்துகள் ,  உணவு  பண்டக சாலை.  ஆயுத  தேர் மராமத்து,  யானை குதிரை ஒட்டகம் போன்றவற்றுக்கு  பராமரிப்பு, உணவு  நீர், வைத்யம் உதவி இதெல்லாம் இருவருக்கும் பொது தானே, ரெண்டு பக்கமும்  மோதும்போது   இதையும்   தேடும் அல்லவா?  

சேரன் புரிந்து கொண்டான். அது இப்போது பிரயோகமாகியது.  சேரனிடமிருந்து  ஹஸ்தினாபுரத்துக்கு பதில் ஓலை சென்றது.    ''சேர நாட்டிலிருந்து  ஏராளமான உணவுப்பண்டங்கள் குருக்ஷேத்ரம் கொண்டுவருவோம். சேர சமையல்கார பட்டாளம் மொத்த படைகளுக்கும் உணவு காலை முதல் இரவு வரை  மூன்று வேளையும் அளிக்கும்.  இரு  பக்கத்துக்கும் தேவையான உணவு படைகளை அடையும்.''

பாண்டவர்கள் கௌரவர்கள் இருவரும்  சேரன் முடிவை  ஏகமனதாக  ஏற்றனர்.  லக்ஷக் கணக்கான  வீரர்கள்  மிருகங்களுக்கு உணவு தயாராகி யுத்தத்தில் மூன்று வேளையும்  திருப்தியாக  இரு அணிகளையும் அடைந்தது. சேரன் அற்புதமாக  பொறுப்பேற்று பணி புரிந்தான். 

காலையில்   தேவைப்பட்ட  உணவின்  அளவு  பகலில்,   மாலையில் குறைந்திருக்கும்.  எண்ணற்றோர்  உயிரிழந்து,  மரணத்தருவாயில்,  காயமுற்று  உணவு அருந்த முடியகாத நிலை.  காலையில் எப்படி எல்லோருக்கும் போதுமான அளவு கூடவோ குறையோ இல்லாமல்  வீணாகாமல் சரியாக இருந்ததோ அதே மாதிரி இரவு உணவு   எஞ்சிய படைவீரர்களுக்கு  போதுமானதாக  இருந்தது.  கூடவோ குறைவோ இல்லை. உணவு வீணாகவில்லை. 

18  நாளும்  இப்படி  காலையில் இருந்த அளவு மாலையில் குறைந்து   போரில் எஞ்சி இருக்கும்   எல்லோருக்கும் 
நிறைவாக போதுமானதாக உள்ளதே  எப்படி?  இருபக்கமும் எவ்வளவு பேர்  இருப்பார்கள் என்று எப்படி சேரன் அறிகிறான்?

ஒவ்வொரு நாளும் காலை தயாரிக்கும் உணவு, மதிய உணவு,  மாலை இரவு உணவுகள் எப்படி  கச்சிதமாக இரு பக்கத்திலும் உயிரோடு இருக்கும் வீரர்களுக்கு போதுமானதாக மீறாமல் , வீணாகாமல் இருக்கிறதே. எப்படி இவ்வாறு அளவோடு சமைக்க முடிகிறது சேர சமையல்காரர்களால்?

சகாதேவன்  அறிவாளி. ஞானி. அவன் யோசித்தான். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உணர்ந்தான். சேரனிடம் சென்றான்.

''சேர நண்பா உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். உண்மையை கூறுகிறாயா?''

''சஹாதேவா உன்னிடம் எதையாவது எப்போதாவது மறைத்தேனா?  அதுவும்  உன்னிடம் எதையாவது  மறைக்க முடியுமா?      கேள்''

''இந்த பதினெட்டு நாளும் எப்படி உன்னால் இரு பக்கத்து வீரர்களுக்கும்  போதுமான அளவாக சமைக்க முடிகிறது. காலை இருந்தவர்  பகலில் சிலர் இல்லை.  பகலில் இருந்தவர்  இரவில் இல்லை.   இருந்தபோதும்  .எஞ்சிய இருபக்க  சேனையில் அனைவருக்கும் அளவு தாராளமாக போதுமானதாக மீறாமல் எப்படி உணவு தயாரிக்கிறாய்?

''சஹாதேவா.  தினமும் காலை  உணவை தயாரிக்க ஆரம்பிக்கும் முன் சிறிது சமைத்து நைவேத்தியம் செயது கிருஷ்ணனிடம் சமர்ப்பிப்பேன்.  பாண்டவர்கள் படைக்கு,  கௌரவ படைக்கு  என்று இரு கிண்ணங்களில் துளியளவு உணவு எடுத்து   முந்திரி பருப்புகள்  கிருஷ்ணனிடம்  சமர்ப்பிப்பேன்.  அவன் எத்தனை முந்திரி பருப்புகள் ஒவ்வொரூ  கிண்ணத்திலிருந்தும்  எடுக்கிறான் என்று கவனிப்பேன்.  ஒரு முழு முந்திரி  ரெண்டு லக்ஷம் பேர்.  பாதி முந்திரி  ஒரு லக்ஷம் பேர் என்று தீர்மானிப்பேன். கால் முந்திரி  அரை லக்ஷம் என்று கணக்கு பார்ப்பேன்.  இரு கிண்ணங்களிலிருந்து எவ்வளவு எடுக்கிறான் உண்கிறான் என்று கணக்கு பார்த்து அந்த அளவு குறைத்து  உணவு தயாரிப்பேன்.   மொத்தத்தில்  கிருஷ்ணன் எடுத்துக்கொண்டது போக  மிஞ்சுவது அன்றைய இரவுக்கு தேவையான அளவு என்று புரிந்து விடும்..  

சகாதேவன் ஒரு கணம் கண்ணை மூடி  கிருஷ்ணனை பிரார்த்தித்தான்.  எவர் இன்று உயிரிழப்பார் என்பது படைத்தவனுக்கு,  காப்பவனுக்கு,  அழிப்பவனுக்கு தெரியாமலா போய்விடும் என்று புரிந்துகொண்டான். சேரனின் சமயோசிதத்தையும் , கிருஷ்ணன் வார்த்தைகளின்றி  நிலைமையை  உணர்த்தியதும் புரிந்து கொண்டான். அவன் சிறந்த ஞானி அல்லவா? 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...