Friday, May 22, 2020

RASA NISHYANDHINI

ரஸ நிஷ்யந்தினி    J K   SIVAN  

                                                                    
               வெயிலுக்கு  பலே  ஜோர்.....

நூறு  இருநூறு  வருஷங்களுக்கு முன்பு,  ரொம்ப  பெரிய மனிதர்கள், சிம்பிளாக ஒழுக்க  ஆசார  சீலத்தோடு  வாழ்ந்தவர்கள்.   ஒருமுறை  யாரோ  பருத்தியூர் பெரியவாளிடம் உங்களுக்கு பிடித்த  ஆகாரம் எது ? என்று கேட்டபோது நம்மைப் போல் பெரியதாக ஒரு லிஸ்ட் அவர் கொடுக்கவில்லை. ஒரு கவிதையாக  சொன்னார்: 

''பழையது ததியன்னம்  பாலும் தயிராபிஷிக்தம் 
வெடுக்கென வடுமாங்காய் காரவல்லி சமேதம் 
புளிப்பென புளி  இஞ்சி புளியோதரையின் சோறு 
நறுக்கென நார்த்தங்காய்  பாக்யவந்தோ லபந்தே.''

ஆஹா  இந்த  சம்மருக்கு  கொளுத்தும்  வெயிலுக்கு  அந்தக்காலத்தில் குளிர் சாதன பேட்டி,   பிரிட்ஜ் fridge  இல்லாமலேயே குளுகுளு என்று எப்படி சாப்பிட்டிருக்கிறார்கள்.  எழுதும்போதே  நாக்கு ஊறுகிறது.  முதல்நாள் இரவு மீந்து போன   சாதத்தில்  ஜலம் ஊற்றி   அதில் ஆடைத் தயிரை கெட்டியாக போட் டு, மேலே பாலை ஊற்றி தயிரில் வெண்ணை இருந்தால் கொஞ்சம் அதோடு கம்மென்று மணக்க, , சிறிது உப்பை போட்டு பிசைந்து    கடுகு தாளித்து வைத்திருப்பார்கள்.   வருஷாந்திர ஊறுகாயாக மாங்காய் சீசனில்  வடுமாங்காய் ஜாடிகளில்  நிரம்பி இருக்கும்.   ரெண்டு எடுத்து வெடுக்கென்று கடித்தால்   தயிர் சாதத்தை  சீக்கிரம் காலி செய்து விடலாம். .  இதைத்தவிர   காரமாக  கொஞ்சம்  ஊறுகாய்  மாங்காய்  தொக்கு மாதிரி இருந்தால் படு குஷி.  தொட்டுக்கொள்ள .    ஒரு படி மேலே போய் இன்னும் கொஞ்சம்  அயிட்டம் .  

 புளி  இஞ்சி என்று ஒரு  அற்புத விஷயம்.  ஒரு ஸ்பூன் இருந்தால்  ஒரு தட்டு தயிர் சாதம் காணாமல் போய்விடும். இதற்கெல்லாம் மேலாக ஒரு  அம்ருதம் இருக்கிறதே அதன் பெயர் தான்  காய்ந்த நார்த்தங்காய். ஒரு துண்டு இலையில்   இருந்தால் போதும்.  தயிர் சாதத்தின் ஜாதகத்தில்  எல்லா பொருத்தங்களும்  சேர்ந்த ஜோடி அது. 

என் வீட்டில்  இதெல்லாம்  எப்போதும் இருக்கும்.  பருத்தியூர் பெரியவா சொல்ல மறந்து போன  ஒன்று  கருப்பாக மொறு மொறு வென்று  வறுத்த மோர்மிளகாய்.    தயிர் சாதத்துக்கு பலே ஜோர் நண்பன்.. 

இதோடு வீட்டில் புளிக்காய்ச்சல் என்று  நிறைய பண்ணி வைத்திருப்பார்கள்.  பல நாட்கள் கெட்டு போகாது    இரவோ பகலோ  .எந்த நேரத்தில்  அதிதி, விருந்தினர்கள் வந்தாலும்  உடனே தயார் செய்யும் திடீர் அயிட்டம்  அது. புளியோதரை பண்ணுவதை பற்றியே  நானூறு பக்கங்கள் எழுதலாம் போல் தோன்றுகிறது.  அதற்கு சைடு  டிஷ் ஆக சுட்டப்பளம், இல்லை என்றால்  தக்காளி  வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்க உதவும். பிரிட்ஜ் , fridge ,குக்கர், மிக்சி, கிரைண்டர் இல்லாத  காலங்களில் என்ன சமயோசிதம். 

வாழ்க்கையில்  நாலு பேருக்கு நல்லது பண்ணியவனுக்கு இப்படி யோகமாக  அமையும்.  சாஸ்திரிகள் சஷ்டி ஏகாதசி விரதம் இருப்பவர்.  ராமாயண பட்டாபிஷேகம்   நடந்த போதெல்லாம் மேலே சொன்ன பிரசாதங்கள் அனைவருக்கும் உண்டு.   சாஸ்திரிகளே  நேரில் பரமாறுவார், விநியோகம் பண்ணுவார்.  இந்த  பிரசாதம் எத்தனை புண்யவாங்களுக்கு  அவர் கையால்  கிடைத்ததோ?  அது அவர்கள் செய்த பாக்யம். 

இனி சாஸ்திரிகளின் ரஸ நிஷ்யந்தினி  அடுத்த 5 ஸ்லோகங்கள் ரசிப்போம்:  46-50.

46 अयं कालवश्य इति त्वम्; अयमकालवश्यः। शीलवश्यश्चेत्यहम्।
அயம்  காலவஸ்ய  இதித்வம்;   அயமகாலவஸ்ய;  சீலவஸ்யஸ்சேத்யஹம் 

46 ராமன் உன் மகன். எல்லோரையும் போல காலத்தின் பிடியில் அகப்பட்டவன் என்று நீ கருதுகிறாயே. அவன் யார் என நான் அறிவேன். காலத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவன். பக்தர்களின் சீலத்திற்கு , பக்திக்கு மட்டுமே கட்டுப்பட்ட பக்தவத்சலன்.

47. इममस्मिन् कोसलपुरे स्थितं मन्यसे त्वम् 'अमुम् आदित्यवर्णं तमसः परस्तात्' इत्यहम् ।
இமமஸ்மின்  கோசலபுரே  ஸ்திதம் மன்யஸே  த்வம் ; அமும்  ஆதித்யவர்ணம் தமஸ;  பரஸ்தாத் இத்யஹம் ;

நீ நினைக்கிறபடி இந்த ராமன் வெறும் கோசலை ராஜ்யத்தை மட்டும் ஆண்டு கொண்டு சுற்றி சுற்றி வருபவனா? எனக்கு தான் தெரியுமே. அவன் இந்த கரிய பிரபஞ்சத்தில் பொன்னொளி வீசும் ஆதித்யன்.   சூரியன்.

48. अयं प्रजापतिश्चरति कोसलपुर इति त्वम् अयं 'प्रजापतिश्चरति गर्ने अन्तः' इत्यहम् ।
அயம் ப்ரஜாபதிசச்சரத்தி கோஸலபுர  இதித்வம் ;  அயம்; ப்ரஜாபதிஸ்சரதி கணேம்  அந்த:  இத்யஹம்
48. என் மகன் ராமன் இந்த கோசல நாட்டின் பிரஜைகளுக்கு அதிபதி என்று உனக்கு பெருமை அல்லவா. ? இல்லை தசரதா. அதைவிட பெரிய பெருமை உனக்கு இருப்பதை நீ அறியவில்லை. நான் அறிவேன். ராமன் இந்த பிரபஞ்சமனைத் திலுமிருக்கும் சர்வ ஜீவன்களின் நாடி, அவர்கள் இடையே நடமாடுபவன். உறவு கொண்டவன்.

49. अयं पाणिपादादिकरणैः कार्यकर्तेति त्वम् अयम् 'अपाणि पादो जवनो गृहीता पश्यति अचक्षुस्स शृणोत्यकर्णः' इत्यहम्।

அயம்  பாணிபாதாதிகரணை ; கார்யகர்த்தேதி த்வம் ;  அபாணி  பாடோ  கவனோ  க்ருஹிதா  பஸ்யதி அசக்ஷுஸ்ஸ  ஸ்ருணோத்யகர்ண  இத்யஹம்  

49. ஏதோ தனது கைகளாலும், கால்களாலும் உழைப்பவனா உன் மகன் ராமன் ? கைகளின் உதவி இன்றியே எதையும் கொள்பவன். கால்களின்றியே எங்கும் வேகமாக நகர்பவன், கண்களில்லாவிடிலும் எல்லாவற்றையும் காண்பவன், காதே வேண்டாம் அவனுக்கு எதையும் கேட்க, மொத்தத்தில் நம் போல் மனிதன் அல்ல ஸ்ரீ ராமன்.

५०. अयमेकदेशवर्तीति त्वम् अयम् 'आकाशवत् सर्वगतश्च नित्यः' इत्यहम् ।
அயமேகதேசவர்த்தாதி த்வம்   ஆகாசாவத்  சர்வகதஸ்ச நித்ய:  இத்யஹம் 
50. அவன் இங்கே இதோ உன் முன் நிற்கிறான் என்றா நினைக்கிறாய் தசரதா ? அவன் என்ன ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுபவனா? எங்கும் எதிலும் எப்போதும் நிறைந்தவன் என நான் அறிவேன்.

ஆஹா விஸ்வாமித்ரர் என்னமாக ராமனின் ப்ரபாவத்தை விளக்குகிறார். பருத்தியூரார் தானாக சொல்வதில்லை இதெல்லாம். ஒவ்வொரு காரணத்தின் பின்னாலும் வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள், புராணங்களின் தத்துவங்கள் பொதிந்திருக்கின்றதை கற்றோர்கள் அறிவார்கள்.

மேலும் ஸ்ரீ க்ரிஷ்ண ஸாஸ்திரியை அனுபவிப்போம். இப்போது தானே பாதி கேட்டிருக்கிறோம். இன்னும் பாதி இருக்கிறதே. மொத்தம் நூறு அல்லவோ சொல்கிறார்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...