Monday, May 4, 2020

PESUM DEIVAM



பைங்காநாடு  கணபதி சாஸ்திரிகள்   J K  SIVAN  

                                                             ஜகத்குருவின்   குரு 

இந்த கட்டுரை நான் எழுத ஒரு உந்துதலாக இருந்தது நமது முகநூல் நண்பர் ஸ்ரீ சிவகுமார் ராமபத்ரா. இலங்கையில் குடும்பத்தோடு வாழும் திருவிசநல்லூர் (திருவிசலூர்) காரர். அவரது தாய்வழி முப் பாட்டனார் தான் இந்த கட்டுரை நாயகன் '' மஹாமஹோபாத்யாய வேதாந்த கேசரி ''கச்சபி'' பைங்காநாடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள்'' (மகா பெரியவாளின் பால்ய வேதசாஸ்திர குரு). 

(Our family is very close to Periyava. My maternal great grandfather, Mahamahobhadyaya Vedanta Kesari (Painganadu) Ganapathi Sastrigal was the guru of Periyava. My mother used to relate several incidents when Periyava had visited our ancestral house in Tiruvisaloor (Kumbakonam). I am happy to note that there is a wider seeking for Periyavas blessings now. Hara Hara Sankara, Jays Jaya Sankara.(சிவகுமார் ராமபத்ரா )

துளசேந்திரபுரம் என்றால் சிலருக்கு புரியும். பைங்காநாடு என்றால் ஏதோ தமிழ்நாடு போல ஒரு தேசம் என்று நினைப்போரும் உண்டு. ஆனால் ரெண்டுமே ஒரே சின்ன ஊரை குறிக்கும். மன்னார்குடியிலிருந்து திருமாக்கோட்டை சாலையில் தெற்காக நடந்தால் இந்த ஊர் அடையலாம். 8 கி.மீ தூரம். அருமையான பூர்ண புஷ்கலாம்பா சமேத தர்ம சாஸ்தா கோவில் கொண்டிருக்கிறார். அதைத்தவிர பழங்காலத்திய பசுபதீஸ்வரர் சிவன் கோவிலும் உண்டு. உள்ளூர் காரர்களால் தான் நிறைய கோவில்களில் கொஞ்சம் முணுக் முணுக் என்று எண்ணெய் தீபம் எரிகிறது. மூர்த்திகளுக்கு வஸ்திரம், நெய்வேத்தியம், விசேஷகாலங்களில் பூஜை எல்லாம் நடைபெறுகிறது. வாழ்க்கையின் இதர தேவைகளுக்கு பக்கத்தில் உள்ள பெரிய ஊர் மன்னார்குடி தான்.

கிராமத்தில் இன்னும் சிலர் மூன்று நான்கு நூற்றாண்டுகளாக வாழ்ந்த வம்சம் இருக்கிறது. முன்னோர் பெயர்கள் வேடிக்கையாக இருக்கிறது. சுப்ரமணிய சாஸ்திரிகள் , அவர் பிள்ளை நரியஞன், பிறகு வண்டி ராமு (ரேக்ளா வண்டி )(தீவட்டி ராமு... இது போல் அடையாள பெயர்கள் சொல்கிறார்கள்.

இந்த சின்ன கிராமம் ஒருவரால் பிரசித்தி பெற்றது என்றால் அவர் ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள், மஹா பெரியவாளுக்கு இளமையில் வேத சாஸ்த்ர பயிற்சி அளித்த மன்னார்குடி பெரியவாளின் பிரதம சிஷ்யர். பிறகு கும்பகோணம் அத்வைத சபாவின் முக்கிய அதிகாரி. வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு சிலர் மட்டுமே மஹா மஹோபாத்யாய விருது பெற்றவர்கள்.அவர்களில் ஒருவர் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள். 28.4. 1871ல் அந்த கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை சுப்ரமணிய சாஸ்திரிகள் யஜுர்வேத சாஸ்திர வித்துவான். அம்மா வழி தாத்தா சுவாமிநாத சாஸ்திரி தான் ஆரம்ப கால குரு. வேதாரண்ய பாடசாலை தலைமை ஆசிரியர்.

8 வயது கணபதி சாஸ்திரி உபநயனம் முடிந்து பைங்கா நாடு வெங்கடேச சாஸ்த்ரியிடம் வேத அத்யயனம். அவரிடம் காவ்யம், நாடகம் , அலங்காரம் சாஸ்திரங்களை பயின்றார். 16ம் வயதில் 'கடாக்ஷ சதகம் ' என்னும் அம்பாள் மேல் பக்தி ஸ்தோத்ரம் ஸமஸ்க்ரிதத்தில் எழுதினர்.

மஹாமஹோபாத்யாய ப்ரம்மஸ்ரீ தியாகராஜமஹி எனும் ராஜு சாஸ்திரிகளிடம் (ஸ்ரீ மன்னார்குடி பெரியவா) சிஷ்யனாக இருந்து தர்க்கம், வியாகரணம், மீமாம்சம் வேதாந்த சாஸ்திரம் பூர்த்தியாயிற்று.
மன்னார்குடி பெரியவா ராஜு சாஸ்திரிகள், சந்நியாசி இல்லை. கிரஹஸ்தர். ''குலபதி'' என்று போற்றப்பட்டு ஏராளமான சிஷ்யர்களுக்கு இலவசமாக உணவு கல்வி போதிக்கும் குருகுலம் நடத்தி எண்ணற்ற பண்டிதர்களை உருவாக்கியவர். அவரும் ஒரு மஹாமஹோபாத்யாயர். சிறந்த சிவபக்தர். ஆச்சார அனுஷ்டானங்களில் சீலர். மஹா பெரியவாளுக்கு குரு.

90 வயது வரை வாழ்ந்த மஹான். ஞானி. அப்பய்ய தீக்ஷிதர் வம்சம் . தியாகராஜ மஹி என்று இயற்பெயர். வீடும் ஊரில் அறிந்தவர் தெரிந்தவர் அழைத்த பெயர் ராஜு சாஸ்திரி.

குரு மன்னார்குடி பெரியவா ஆக்கினையில் கணபதி சாஸ்திரி கோனேரிராஜபுரம் சென்று ''அத்வைத மஞ்சரி ''போன்ற புத்தகங்கள் .அச்சிட்டு வெளிவர உதவினார். அவ்வப்போது யாத்ரிகர்களாக பைங்காநாடு, மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு வரும்  வடநாட்டு யோகி ரிஷி முனிவர்களிடம் இருந்து வைத்ய, யோக சாஸ்திரங்களைப் பயின்றார். பழமானேரி ஸ்வாமிகளிடம் வேதாந்தத்தில் மேல்படிப்பு க்கு பயிற்சி பெற்றார்..

1892-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் துலாபார மஹோத்ஸவம் போது திருவாங்கூர் கொச்சி ராஜா ராம வர்மா வின் சமஸ்தானம் ஒரு வித்வத் சபை கூட்டி அதில் கணபதி சாஸ்திரிகள் அறிஞர்களால்''கச்சபி'' விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.

1900-ம் ஆண்டு ஹூப்ளியில் சங்கராச்சாரிய உத்சவ மண்டலி கூட்டிய சபையில் துவாரகா சங்கரமட ஆச்சார்யர் வேதாந்தத்தில் சில நுட்பமான ஏழு கேள்விகள் கேட்ட போது கணபதி சாஸ்திரிகள் அளித்த விளக்கம் சிறப்பாக இருந்ததால் ஸ்ரீ துவாரகா மடாதிபதி அவருக்கு *’வேதாந்த கேசரி ‘ விருது வழங்கினார்.

1901--1911 வரை அத்வைத சபையில் அங்கம் வகித்து அத்வைத சபையின் அதிகாரியாக பங்கேற்றார்.
1905-ல் ஸ்ரீ காமகோடி பீடத்தில் ஆஸ்தான விதவானாக பொறுப்பேற்றார்.

கணபதி சாஸ்திரிகள் காமகோடி பீடாதிபதி மஹா பெரியவாளுக்கு சிறு வயதில் காப்பியம், சாஸ்திரங்கள் கற்பிக்கும் பெரும் பாக்கியம் பெற்றவர். அப்போது தினமும் மடத்தில் பகவத் கீதை, ஞான வாசிஷ்டம், ஸூதஸம்ஹிதை பிரசங்கம் செய்தவர்.

கணபதி சாஸ்திரிகள் 40 வயது ஆகுமுன்பே, சமஸ்க்ரிதத்தில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர். வெள்ளையன் அரசாங்கம் அவர் மறைந்த பத்தே நாளில் அவருக்கு '' மஹா மஹோபாத்யாய'' விருதை வழங்கியது. கும்பகோணம் சங்கர மடத்திற்கு எதிர் வீடு. தினமும் காலை மடத்திற்கு சென்று சிறுவனாக பட்டத்திற்கு வந்த மகா பெரியவாளுக்கு பாடங்கள் கற்பித்தார். மாலையில் சாஸ்திரங்கள், சமஸ்க்ரிதம் எல்லாம் கற்பித்தார்.. வசந்தகாலத்தில் காவிரி ஆற்றங்கரை மணலில் சிஷ்யர்களுக்கு பாடம் நடத்துவார்.

ஒருநாள் இப்படி மணலில் பாடம் நடத்தும்போது கணபதி சாஸ்திரிகள், மாணாக்கரான மகா பெரியவா இடது கை விரல்களால் மண்ணைப் பறித்து குழிப்படுத்திக் கொண்டு அவர் கவனம் சிதறியதை கவனித்தார்.  சாஸ்திரிகளுக்கு  மனது  சரியில்லை.

அடுத்த நாள் காலை மடத்திற்கு சென்றபோது அங்கே மஹா பெரியவா முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். வயதில் சின்ன மாணாக்கனாக இருந்தாலும் பதவியில் மஹாபெரியவா ''ஜகத் குரு'' பீடாதிபதி அல்லவா?

''சுவாமி,   நான் இந்த  கும்பகோணத்தை விட்டு என் ஊர் பைங்காநாடு போக உத்தரவு தரவேண்டும்'' என்கிறார்
பெரியவாளுக்கு ஆச்சர்யம்.
''எதற்காக திடீர்னு இப்படி ஒரு முடிவு. என்ன காரணம்?''

“நீங்க பெரியவா. எனக்கு என் குரு கற்றுக் கொடுத்தது என்னவென்றால் ஒரு மாணவன் ஞானம் பெற ஆச்சர்யனிடம் அமர்ந்திருக்கும்போது அவன் முழு கவனமும் பாடத்தில் இருக்க வேண்டும். வேறெதிலும் மனம் சிதறக்கூடாது. எனது குரு ஆற்றங்கரையில் மணலில் பாடம் எடுக்கும்போது மணலை தொடவோ, அதன் மேல் கவனம் செல்வதோ அனுமதித்ததில்லை. கையில் கூரான கத்தி இருந்தாலும் அதை எதற்கும் உபயோகிக்க கூடாது. மனம் ஸ்திரமாக பாடம் ஒன்றிலேயே லயித்திருக்க வேண்டும். அது தான் ஸ்தித பிரஞை என்பார் எனது குரு. ஆனால்.....

''தயக்கம் வேண்டாம்  ..மனசிலே இருக்கிறதை  சொல்லுங்கோ ''  -- பெரியவா.

'' நேத்திக்கு  நான் பாடம் கற்பிக்கும்போது பெரியவா கவனம் பாடத்தில் இல்லை, மணல் மேல் இருந்தது. அது தான் காரணம்''

பெரியவா  வாய் மலர்ந்து சிரிக்கிறார். பிறகு பதிலளிக்கிறார்.

'நீங்கள் சொல்வது போல் இல்லை. என் கை மணலை அளைந்தாலும் நீங்கள் கற்பித்ததில் என் முழு கவனம் இருந்தது. நீங்கள் நேற்று சொல்லிக்  கொடுத்தது அத்தனையும் இப்போது ஒப்பிக்கிறேன் கேளுங்கோ'' கணபதி சாஸ்திரிகள் சொன்ன அத்தனையையும்  பெரியவா கடகட வென்று  திரும்ப ஒப்பிக்கிறார். .

கணபதி சாஸ்திரிகளுக்கு ஆச்சர்யத்தில் அதிர்ச்சியில் உடல் வியர்த்தது. கை லேசாக நடுங்கியது. இருகரம் கூப்பி நிற்கிறார்.

''நீங்கள் பரம ஞானி. இனி இங்கே எனக்கு எந்த வேலையுமில்லை . பெரியவா நீங்க எவர் உதவியும் தேவையில்லாமல் ஆசிரியர் அவசியமின்றி சகல சாஸ்திரங்களும் தானாகவே கற்றுக்கொள்ள முடிந்தவர். இனி நான்  தாராளமாக போகலாம் '' 

ஆனால் பெரியவா கணபதி சாஸ்திரிகள் மடத்தை விட்டு போக அனுமதிக்க வில்லை. அதற்குப்பிறகும் 10 மாதங்கள் அவர் பெரியவாளுக்கு பாடங்கள் கற்பித்தார்.

நமது மஹா பண்டிதர்களுக்கு ஒரு சாபக்கேடு. ஒன்று வம்சம் தொடராது. அல்லது ஆயுள் நீண்ட காலம் தொடராது. கணபதி சாஸ்திரிகள் சதா பரமாத்மாவின் மீது நினைவாகவும், ஆதி சங்கரர், சதாசிவப் பிரம்மேந்திர சரஸ்வதிகள் போன்ற ஞானிகளின் கிரந்தங்களிலேயே மூழ்கி பற்றற்ற ஞானிகளாக வாழ்ந்தார்கள்.

1912- ம் வருஷம் கணபதி சாஸ்திரிகளும் தனது மரணம் நெருங்குவது தெரிந்தது. ஆகவே ஆபத் சன்யாசம் பெற்றுக்கொண்டார். 41 ஆண்டுகள் வாழ்ந்த மகானின் பூத உடல் மறைந்தது. எண்ணற்ற நூல்களை இயற்றிய இந்த மகானின் சில புத்தகங்களை மட்டும் தான் அச்சாகின. பல கிடைக்கவே இல்லை. கணபதி சாஸ்திரிகள் இயற்றிய சில நூல்கள் இப்போது :இவை தான்:

வைதிக – கர்மகாண்ட கிரந்தங்கள்:
1) முகரம் (வைதீகாபரண வ்யாக்யானம் (யஜுர் வேதம் ), 2)காலஸ்வர கௌமுதீ (ஸாம வேத தொடர்புள்ளது),
3) அநியாபதேச பஞ்சாசத், 4) காயத்ரீ பாஷ்யம், 5) யக்ஞவைபவப்ரகாச:, 6)முகுரமுகமுத்ரணம், 6) ஆபஸ்தம்ப பித்ரு மேத ஸூத்ர வ்ருத்தி 7) சபிண்டீகரண விதி, 8) *சபிண்டீகரண क्षौर நிர்ணய: :(published) * 9) தீபாவளீ நிர்ணய: 10)வயோநிர்ணயம்,
11) விபூதி தாரணம்:,

*வேதாந்த கிரந்தங்கள்:*
12) ஈசோபநிஷத் விபூதி:, 13) ஈசாவாஸ்ய வ்ருத்தி, 14) கேனோபநிஷத் விபூதி:,15)நைர்குண்ய ஸித்தி,16) அதசப்தார்த்தவிசார: ,17) சாரீரக மீமாம்ச ரஹஸ்யம்,18) நி:ஸ்ரேயஸ நிஸ்ரேணி:,19)ஆச்சார்யோக்த்தி விபூஷணம், 20)மாயாநிவிருத்தி சதகம்,
21) யோகீஸ்வர தர்சன மஹிமா, 22) ஆசா தூஷணம், 23)கர்மணாம் சித்த சுத்திபிரகார:24)த்ரவ்யகுணப்ரகாச: ,
25) ஸ்ரவண விதி வாக்யார்த்த: 26) பார்த்தப் ப்ரஹரணம் (வ்யாக்யானம்)

*காவ்ய – நாடக கிரந்தங்கள்:*
27) துருவ சரிதம், 28) தடாதகா பரிணய, 29)சாரசிகாசந்தான: (நாடகம் ), 30)பிரஹசனம் (நாடகம் ), 31)ஜீவவிஜய (சம்பூ), 32) ரசிக பூஷணம் :(published), 33)அந்யாபதேச பஞ்சாசத் :(published), 34)லக்ஷ்மீவிலாச: (நாடகம் ), 35)வ்ருத்த மணி மாலா :(published), 36)பர்யாயோக்தி சதவ்யாக்யா:, 37)சாம்ராஜ்ய லக்ஷ்மீ பரிணய: (நாடகம்)

*ஸ்தோத்திர கிரந்தங்கள்:*
38)கடாக்ஷ சதகம் 39)ஸாரஸ்வத சஹஸ்ரம், 40)துரக சதகம், 41)பரமேஸ்வராஷ்டகம், 42)மஹாமாயாஷ்டகம் :(published), 43)சூர்யத்வாதசம், 44) ஸம்ஸ்க்ருதாஷ்டகம், 45) ஸுப்ரஹ்மண்யாஷ்டகம், 46)சனைஸ்சராஷ்டகம், 47)க்ருஷ்ண த்வாதசகம், 48) குருவாயுபுரேஸாக்ஷர மாலாஸ்தவ: :(published), 49) ஸ்ரீ வாதபுர நாதாஷ்டகம், 50) குருவாயுபுர நாத பஞ்சரத்னம், 51)தேசிக தண்டகம், 52)ஸ்ரீ சங்கராச்சார்யாஷ்டோத்தரம், 53) குருராஜ ஸப்ததி:, 54)ஆர்த்திஹராஷ்டகம், 55)தேவீ த்வாதச மஞ்சரீ, 56)கும்பேசாஷ்டகம், 57)தேவ்யஷ்ட ப்ராஸ:,58) மூகப் ரஸாதா தர்சன:, 59)அனந்த பத்மநாப ஸ்துதி:, 60)ஆசீர்வாத மஞ்சரி.

*தொகுக்கப்பட்ட கிரந்தங்கள்:*
61) ந்யாய ரக்ஷா மணி(appaya dikshitar) :(published) 62) ஸ்ரீருத்ர பாஷ்யம், 63)காச்யப க்ஷேத்ர மஹாத்ம்யம், 64) மஹாபாரதம் – சாந்தி பர்வம் (தமிழ்) :(published) – 240 அத்தியாயங்கள்

இன்னும்   சேகரித்த விஷயங்கள் எழுதுகிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...