Monday, May 4, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்     J  K  SIVAN 

                                                            
   55   இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே

மஹா  பாரதம்  ஒரு  கதை சுரங்கம்.  அடாடா  வேதவியாசர் எவ்வளவு  விஷயங்களை அதில் வைத்திருக் கிறார்.  இதை கொஞ்சமாவது  உணரும் பாக்யம் எனக்கு  மஹா பாரத ஸ்லோகங்களை சின்ன சின்ன கதையாக   இரு பாகங்களில்  ''ஐந்தாம்  வேதம் '' என்று  எழுதும்போது  கிடைத்தது ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா  அனுக்கிரஹம் தான். 

மஹா கவி பாரதியார்  அதில் ஒரு காட்சியை அற்புதமாக  பாஞ்சாலி சபதமாக  எளிய  கவிதைகளாக எழுதியது தமிழர்களுக்கு ஒரு விருந்து.   அதை  ''காத்திட வா  கேசவா'' என்று  குட்டி கதைகளாக  எழுதியது எனக்கு கிடைத்த  இன்னொரு அருமையான வாய்ப்பு.

துரியோதனன் பொறாமையால் விளைந்தது  மஹா பாரத  யுத்தம். அதன் வித்து  யுதிஷ்டிரன் தலைமையில் பாண்டவர்கள் நிகழ்த்திய  ராஜ  சூய  யாகம். இந்த்ரப்ரஸ்த அரண்மனையில் நடந்த பிரம்மாண்டமான விழா. 

அங்கே  யுதிஷ்டிரன் சக்ரவர்த்தியாக  முடிசூட்டப்பட்டான் .  துரியோதனன் கலந்து கொண்டு  அரண்மனையை சுற்றி பார்க்கும்போது அதன் அழகில் அபூர்வ அமைப்பில் தரையை நீராக, நீரை தரையாக கண்டு விழுந்து அவமானப்படுகிறான். திரௌபதை முதலானோர் அவன் விழுந்ததை கண்டு சிரித்ததில் அவன் ஆத்திரம் வளர்ந்து,  மாமன் சகுனியின் துணையோடு பாண்டவர்களை அஸ்தினாபுரம் வரவழைத்து  பகடைக்காய் சூது விளையாட்டில் ஏமாற்றி  அவர்களது அத்தனை சொத்துகளையும்  பணயம் வைக்க வைத்து அபகரித்து, அடிமைகளாக்கி  வனவாசம் 13 வருஷம் ஓட்டாண்டிகளாக  போக வைக்கிறான். சபையில்  தம்பி துச்சாததனை விட்டு  திரௌபதியின்  புடவையை களைந்து நிர்வாணமாக்க ஆணையிடுகிறான்.

திரௌபதி  பாஞ்சால  தேசத்து ராஜ குமாரி.  பாண்டவர் மனைவி.  சக்ரவர்த்தினி. பாஞ்சாலி. சூதாட்டத்தில் பணயம் வைக்கப்பட்டு  அடிமையானாள். துச்சாதனன் திரௌபதியின் தலைமுடியை பிடித்து   சபைக்கு 
இழுத்து வந்தான். கண்களில் நீர் மல்க  அனைவரிடமும் மன்றாடினாள் திரௌபதை. பீஷ்மர் முதலானோர் எவரும் அவளுக்கு  இரக்கம் காட்டவில்லை. துச்சாதனன் அவளை துகிலுரிக்க   ஒரு கதியும் இல்லாத அந்த நேரத்தில் அவள் மனதில் தோன்றிய  ஒரே  நம்பிக்கை  கிருஷ்ணன்.    ''ஆபத் பாந்தவா  கோவிந்தா ''  என்ற குரல் கொடுத்தவாறு இருகரம் சிரம் மேல் கூப்பி  மயக்கமடைகிறாள் திரௌபதி. 

அழைத்ததும் வந்தது கண்ணன் அருள். திரௌபதை மானம் ஸம்ரக்ஷிக்கப்பட்டது. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது  உறுதியாயிற்று.  கண்ணன் காப்பாற்றுவான்  என்பதில் துளிக்கூட  திரௌபதிக்கு சந்தேகம் மனதில் உருவாகவில்லையே.   திரௌபதி உடலில் ஒரே ஒரு வஸ்திரம் தான் அணிந்திருந்தாள். அதை உருவ துச்சாதனனுக்கு ஒரு நிமிஷம் கூட  ஆகாது. ஆனால்  எங்கிருந்தோ ஒரு  புடவை தயாரிக்கும் ஆலையே  அவள் உடலிலிருந்து புடவை சப்ளை  செய்ததுபோல்  ஆகிவிட்டது.  இழுக்க  இழுக்க  வந்துகொண்டே இருந்து கடைசியில் இழுக்க உடம்பில் சக்தி இன்றி களைத்து தரையில்  அந்த புடவை மலை மேல் விழுந்தான் துச்சாதனன்.

இதற்கு நான் ஒரு கதை சொல்வதுண்டு.  
ஒரு கிராமத்தில் இரு தமிழ் பண்டிதர்கள் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது வாசல் தெருவில் ஒரு குடுகுடுப்பை காரன் ஏதோ பாடிக்கொண்டு பிச்சை எடுக்கிறான். 

''அத்தனத்துக்கும் ஓட்டை கைக்கும்  அம்புட்டு தூரம்  ஆனாலும் நடக்குதய்யா சேலை யாவாரம்''  

இதன் அர்த்தம் என்னவென்று இரு பண்டிதர்களும் முடியைப் பிய்த்துக்கொண்டு  யோசித்தும்  புரியவில்லை. அதற்குள் குடுகுடுப்பைக்காரன் போய்விட்டான். தினமும்  காலையில் வருவான்.  மறுநாள் அவன் வருகைக்கு காத்திருந்து நிறுத்தி அவனை கேட்கிறார்கள்.

''ஏம்பா, நேத்து நீ  பாடினியே  அதுக்கு இன்னா அர்த்தம்?''

''நேத்து நான்  என்னா பாடினேன் எனக்கு இப்போ எப்படிங்க  கவனம் இருக்கும்.
எதெது மனதில் தோணுதோ அதை பாடுவேன்''
''அதாம்ப்பா  அத்தனத்துக்கும் ஓட்டை கைக்கும்....னு என்னவோ பாடினியே  அது?''

''ஓ  அதுவா.  எங்க குருநாதர் பாடுவார் எனக்கு சொல்லிக்கொடுத்தது.  அதை நானு  சரியா பாடலேன்
னுட்டு  பீடியாலே  கையிலே சூடு போட்டாரு . அதுவும்  காபகம்  இருக்குதுங்க''   அவன் அதை மீண்டும் பாடினான்.

''அதுக்கு இன்னா அர்த்தம்னு  சொல்லு?''

''எங்க குருநாதர் சொல்லிக்கொடுத்தது தான் எனக்கு தெரியும்.  அத்தனம் னா  அத்தினாபுரம். ஓட்டை நா  துவாரம். ஓட்டை கை  அப்படின்னா துவாரகை.. இது ரெண்டு ஊரும் எங்கியோ எம்மாந்தூரத்திலே இருக்கு. ஆனாலும்  பாருங்க   துவாரகையிலிருந்து  நிறைய  சேலைங்க  அதிதினாபுரத்துக்கு  யாவாரம்  ஆய்கிட்டே இருக்குது. அம்மாம்  புடவைங்க  துரோபதை அவரை கூப்பிட்டதும் ஓடியாந்திச்சு''  என்பார்.

 திருக்கோளூர் மோர் தயிர் விற்கும்  பெண்மணி அசாத்திய  ஞானம் கொண்டவள். அவளுக்கு ஈந்த சம்பவம் நினைவில் நின்றது. அதனால் தான்  ராமாநுஜரிடம்  ''சுவாமி  நான் திரௌபதி போல்   பகவானிடம் அசாத்திய  நம்பிக்கை  எப்போதாவது ஒரு நாலாவது  கொண்டிருந்தேனா?” அப்படி இல்லாத போது  நான் எப்படி ஐயா  இந்த புண்ய க்ஷேத்ரம்  திருக் கோளூரில்  புண்ணியம் செய்தவர்களோடு சேர்ந்து  வாசம் செய்ய அருகதை பெற்றவள்?  என்று கேட்கிறாள். இது அவள் கேட்கும் கேள்விக்கு  55 வது மேற்கோளாக  வருகிறது.  இன்னும்  26  உதாரணங்கள் வேறு காட்டினாள். மொத்தம்  81. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...