Tuesday, May 19, 2020

ANANDHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்   J K SIVAN

சிவ தனுசு முறிந்தது.
திருமணங்கள்  படிந்தது.

நமக்கு  அகலிகை  கல்லாக சபிக்கப்பட்டு ஸ்ரீ ராமன் பாத ஸ்பரிஸம் பட்டவுடன்  சாப விமோசனம் அடைந்தாள் என்று  தானே  தெரியும்.  தெரியாத விஷயம் என்ன?  கௌதமர் ''அகல்யா, நீ இந்த கணமே  ஒரு ஆறாகப்  போ'' என்று சபித்தார். அதனால் அவள் ஆறாக ஓடி கடலில் கலக்கிறாள்.  வனவாசத்தில் ராமர்  ஆற்றைக் கடக்க  அதில் பாதத்தை வைத்தவுடன்  ஆறு காணாமல் போய்விட்டது. எதிரே  அகலிகை வணங்கி நின்றாள். கௌதமரை சென்று அடைந்தாள்.சாப விமோசனம் ஆயிற்று..    இது எப்படி இருக்கு?  இது அதிக பிரபலமாக வில்லை.[
விஸ்வாமித்ரர்  ராமலக்ஷ்மணர்கள்  கங்கையை கடக்க  கரையில்  நிற்கி றார்கள் .  ஓடக்காரன்  படகை  கரை அருகே கொண்டு  வருகிறான்.   ராமர்  அதில் ஏறுமுன் ஓடக்காரன்  ராமரை வணங்கி ஒரு வார்த்தை சொல்கிறான்:

''மஹாராஜா, ஒரு விண்ணப்பம். உங்கள் பெருமை அறிந்துகொண்டேன். தாங்கள் பாதங்களை  கங்கை ஜலத்தால் நன்றாக கழுவி விடுகிறேன் அப்புறம் நீங்கள் என்னுடைய படகில் ஏறுங்கள். ''

''என்னிடம் இவ்வளவு பக்தியா?'' என்று ராமர் வியப்புடன் அவனை பார்க்கிறார்.

''மஹாராஜா,  தாங்கள் பாத  தூசி, தூளி பட்டால் ஒரு கல் கூட  பெண்ணாகிவிடும் என்று அறிந்ததால் எனக்கு பயம், . என்னிடம் இருப்பது இந்த ஒரே படகு.  வீட்டில் மனைவி வேறு இருக்கிறாள். ஒருவேளை உங்கள் கால் தூசி பட்டு என் படகும் பெண்ணாகி விட்டால்  எனக்கு  ரெண்டு வித கஷ்டம். ஒன்று படகு போய் வேலை  இல்லாமல் போய்விடும். படகு ஓடவில்லை யானால்  , வரும்படி இல்லை.
அடுத்தது இன்னும் பெரிய  கஷ்டம். உங்கள் கால் தூசி பட்டு  படகு பெண்ணாகி விட்டால்  ஒரேவீட்டில் ரெண்டு பெண்களை என்னால் சமாளிக்க முடியாது.''
ராம லக்ஷ்மணர்கள்   அனைவரும் ஓடக்காரனின்  சாதுர்யத்தில் மகிழ்ந்தனர்.   கங்கையை கடந்து   அக்கரை  சென்றனர். 
மிதிலை ராஜ்யத்தில் ஒரு உபவனத்தை  அடைந்தார்கள்.  ஜனகன்  விஸ்வாமித்ரர் வரவை பற்றி கேள்விப்பட்டு  அவரை உபசரித்து  அரண்மனைக்கு அழைக் கிறான்.
''ஜனகா நான் மட்டும் அல்ல. என்னோடு தசரத மஹாராஜா வின் புத்திரர்கள் ராமனும் லக்ஷ்மணனும் வந்திருக்கி றார்கள். அது உன் பாக்யம். தக்க உபசரிப்புடன் அவர்களை  வரவேற்று அழைத்துச்  செல். ராமனே   உன் சிவதனுசை முறித்து  சீதையை மணக்கப் போகிறான். உன் மகள் ஊர்மிளையை லட்சுமணனுக்கு மணம்  முடித்து வை. 
இரு  மாப்பிள்ளைகள் மரியாதையோடு வரவேற்கப்படவேண்டாமா?
அரச மரியாதைகளோடு ராம லக்ஷ்ம ணர் கள் ஜனகன் அரண்மனை  செல்ல  அங்கே   சீதா ஸ்வயம்வர கோலாகல விழா.  ராவணன்  புஷ்பகவிமானம் ஏறி  இலங்கையிலிருந்து வந்தான்.
பரசுராமரின்  தனுர் வித்தையை கண்டு மகிழ்ந்து சிவபெருமான் திரிபுரங்களை வென்ற தன்னுடைய தனுசை  கொடுக்க அதைக் கொண்டு பல ராக்ஷஸர்களை வென்ற பரசுராமர் அந்த சிவ தனுசை  ஜனகர் அரண்மனையில் வைத்துவிட்டு சென்றார். அதை சீதை குழந்தை பருவத்தி லேயே எடுத்து விளையாடி னாள். .  எவராலும் வளைக்க முடியாத அந்த தனுசை  எடுத்து வளைத்து நாண்  ஏற்றுபவன் எவனோ அவனே தனது மகள் சீதைக்கு மணாளன் என ஜனகர் தீர்மானித் தார்
அந்த தனுசு மிகவும் வலிமையானது. எளிதில் யாராலும் தூக்க முடியாததது. ஐநூறு  எருதுகள் பூட்டிய வண்டியில் கஷ்டப்பட்டு ஏற்றி  சபை நடுவே  கொண்டு வரப்பட்டது.  ஸ்வயம் வரத்துக்கு வந்த பல அரசர்கள் வில்லையும் வண்டியையும் பார்த்துட்டே  போட்டியில் இருந்து  ஒதுங்கினார்கள்.
வீராவேசத்தோடு  வில்லைத்  தூக்கி நிறுத்த முயன்ற ராவணன் வில்லின் கனத்தை தாங்கமுடியாமல்  வில்லே மேலே போட்டு க்கொண்டு விழுந்தான். அவனை மெதுவாக அப்புறப்படுத்த உதவி தேவைப்பட்டது .
அதற்குள்  விஸ்வாமித்திரரின் மந்திரி  உரத்தக்குரலில்  ''இன்னும்  யாரேனும்  இந்த ஸ்வயம்வரத்தில்  பங்கு பெற்று  வில்லில் நாணேற்ற தயாரா?'' என்று வினவ
விஸ்வாமித்ரர்  ராமனைப்  பார்க்க அவன் மெதுவாக எழுந்தான். சபை  நடுவே வில் அருகே சென்றான்.
''இந்த  விளையாட்டு சிறுவன்  இங்கு   எதற்கு வந்தான்?   ஏளனமாக பல கண்கள் நகைத்தன. .பேசின.
''ராவணனை வேடிக்கை பார்க்க வந்திருக்கலாம் ''
அரண்மனை ஸ்த்ரீகள் உப்பரிகை மேலிருந்து கூட்டமாக ராமனின் அழகை ரசித்தனர். சீதை கண்களில் ஆனந்தம். அவள்  தோழி துளசி.
''துளசி, அப்பா  ஏன் இவ்வளவு கடினமான போட்டி வைத்திருக்கிறார். ..தெய்வங்களே, ராமன்  சிவதனுஸை எடுத்து நாணேற்றி எனக்கு மணாளனாக வேண்டும் '' என்று வேண்டிக்கொண்டாள் 'பின்னர்  பதினான்கு வருஷங்கள் நான் இவரைப்  பிரிந்து வனவாசம் செய்யப் போகிறேன் என்று  நீங்கள் அறிவீர்கள். ஆகவே தெய்வங் களே என் மேல் கருணை கொண்டு என் விருப்பத் தைநிறைவேற்றுங்கள்.''
ராமர்  சிவதனுசை ப்ரதக்ஷிணம் வந்தார். அப்பா தசரதன் அம்மா கௌசல்யா, குரு விஸ்வா மித்ரரை  மனதால் வணங்கி னார் . சிவனை துதித்தார். குனிந்து இடக்கையால் சிவ தனுசை தூக்கி நிறுத்தி வலக்கையினால் நாண்  ஏற்றி னார். இந்த நிகழ்வை நூறு பக்கங்கள் எழுதலாம். ஆனால்  சபையோர்  தமது கண்களை நம்ப முடியாமல்  ஆச்சர் யமாக பார்க்க  கம்பர் ''எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்'' என்று தந்தி பாஷையில் சொன்னதை நினைவு கூர்வோம்.
அவமானமடைந்த ராவணன் இந்த நேரத்தில் எவர் கண்ணிலும் படாமல் எழுந்து வெளியேசென்று புஷ்பக விமானத்தில்  ஏறி இலங்கை பறந்தான். எல்லோரும் மகிழ, வாழ்த்த  சீதை  ராமனுக்கு மாலையிட்டாள் . லக்ஷ்மி தேவி  நாராயணனை அடைந்தாள்.  ராமர்  விஸ்வாமித்ரரை வணங்கினார்.  ஜனகரிடமிருந்து தசரதருக்கு சேதி போயிற்று. மட்டற்ற மகிழ்ச்சியோடு தசரதர் குடும்பம்,  ராஜ்யாதிகாரிகளோடு மிதிலை சென்றார்.  ராமலக்ஷ்மணர்களைப் போலவே  இன்னொரு  ஜோடி இருப்பதை பார்த்து அதிசயித்த ஜனகர்
''விஸ்வாமித்ரரே  எல்லாம்  இறைவன் செயல். என் குமாரத்திகள்  சீதை,  ஊர்மிளையைப்  போலவே,  என் சகோதரன் குசத்வஜனுக்கு   அழகிய இரு மகள்கள் இருக்கிறார்கள். என் பெண்களைவிட அழகிகள், செல்வத்தில் சிறந்தவர்கள்.  பெரியவள்  மாண்டவி, சிறியவள் ஸ்ருத கீர்த்தி, அவர்களை ராம லக்ஷ்மணர்களை போலவே  இருக்கும்  பரத சத்ருக் னர்களுக்கும் திருமணம் முடிக்க விருப்பம்''. நீங்கள் நடத்திவைத்து எங்களை கௌரவப்படுத்தவேண்டும்.''' அவ்வாறே  தசரதரிடமும்  இந்த விருப்பம் தெரிவித்து அவர்களும் சம்மதிக்க,  திருமணத்துக்கு  நாள் நிச்சயித்து  ஏற்பாடுகள் ஆயிற்று.
ஆனந்த ராமாயணம் இன்னும் ஆனந்தமாக  தொடரட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...