Tuesday, May 5, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN

56 ''இங்கு பால் பொங்கும்'' என்றேனோ
வடுக நம்பியைப் போலே

.ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சாளக்ராமம் ஸ்ரேஷ்டமானது. ஸ்மார்த்தர்களும் சாளக்ராமத்தைநித்ய அனுஷ்டான பஞ்சாயதன பூஜைக்கு உபயோகிப்பவர்கள் தான். கர்நாடகத்தில் மைசூரில் மேல்கோட்டை திருநாராயணபுரம் அருகே சாளக்ராமம் என்கிற பெயரோடு ஒரு கிராமம் இருப்பது தெரியுமா? அங்கே ஒரு மஹான் அவதரித்தது தெரியாதவர்களுக்கு இங்கே விஷயம் கிடைக்கப்போகிறது.
(கி.பி. 1047) ஸர்வஜித் வருஷம் மாசி மாசம் புனர்பூச\ நக்ஷத்திரத்தில் (சித்திரை அஸ்வனி என்றும் சிலர் சொல்கிறார்கள்) அந்த மஹான் அவதரித்தார். அவரை “ஆந்த்ர பூர்ணர்” என்ராலும் எல்லோரும் அறிந்த பெயர் வடுகநம்பி. ஸ்ரீராமாநுஜ சரித்திரத்தை விளக்கும் 114 ஸ்லோகங்கள் கொண்ட ‘யதிராஜ வைபவம்’ எழுதியவர். அதி தீவிர ராமானுஜ பக்தர்.
ராமானுஜரின் பாதுகைகள் தான் வடுகநம்பியின் ஆராதனப் பெருமாள். உடையவரின் ஸ்ரீபாததீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் கொள்வதில்லை என்று தீர்மானமாக இருந்தவர். தம் குருநாதர் ராமாநுஜரைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் கூட நெஞசாலும் நினைக்காதவர. இவரைப் போல இன்னொருவர் இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா? நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வம் அறியாத மதுரகவி ஆழ்வார்!. ஸ்ரீ ராமானுஜருக்கு தொண்டு செய்வதே பிறந்த பயன் என்ற கோட்பாடு உள்ளவர்.
எங்காவது ஒரு பெருமாள் கோவிலைக் கண்டால் ஸ்ரீராமாநுஜர் காத தூரத்திலேயே காலணியை கழற்றி விடுவார். கோயில் தரிசனத்திற்குப் பிறகு மீண்டும் அணிந்து கொள்வார். ஆனால் வடுகநம்பி அப்படியல்ல. தனது குருநாதர் ஸ்ரீராமாநுஜருடைய பாதுகையை ஒருபோதும் பிரியமாட்டார்.
ஒரு ருசிகர சம்பவம் சொல்கிறேன். ஒரு சமயம் ஸ்ரீராமாநுஜரின் திருவாராதனப் பெருமாளான வரதராஜருடன், வடுகநம்பி தனது திருவாராதனப் பெருமாளான ராமாநுஜரின் திருவடி நிலைகளையும் ஒன்றாகச் சேர்த்து மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு குருநாதரோடு புறப்பட்டார். இதைப் பார்த்துவிட்ட ராமாநுஜர் பதறிப் போனார்.
‘வடுகா, என்னடா இப்படி செய்து விட்டாயே, அபச்சாரம் இல்லையா, இது அடுக்குமாடா ?'' ''குருநாதா, நீங்கள் பதட்டப்படும்படி நான் அப்படி என்ன செய்து விட்டேன் ?'' '' வடுகா, இதுக்கு மேலே வேறே என்னடா செய்யணும்? என்னுடைய நித்ய பூஜை ஆராதன பெருமாளோடு என்னுடைய பாதுகையையும் ஒன்றாக சேர்த்து மூட்டை கட்டி வைத்திருக்கிறாயே. இது அக்கிரமம் இல்லையா இது. அபச்சாரம் என்று கூடவா உனக்கு தோன்றவில்லை?
''குருநாதா, உங்கள் பெருமாளோடு என் பெருமாளும் சேர்ந்து இருந்ததில் என்ன தவறு? என்ன குறை?. எதுவும் தப்பு அபச்சாரம் இல்லை என்று என் மனதுக்கு தோன்றியது''. அமைதியாக திருப்பிக் கேட்டார் வடுக நம்பி. ராமானுஜருக்கோ வடுக நம்பியின் குரு பக்தியைக் கண்டு பிரமிப்பு லேசில் அடங்கவில்லை.
அப்படியென்றால் ராமானுஜரோடு நிழல் மாதிரி எல்லா பெருமாள் ஆலயங்களுக்கும் செல்கிறாரே . ஆமாம் அதனால் என்ன? ராமானுஜர் பெருமாளை சேவிக்கும் போது எல்லாம் வடுகநம்பி ராமாநுஜரையே பார்த்துக்கொண்டு அவரை மட்டுமே சேவிப்பவர் .
ஒரு நாள் ஸ்ரீ ரங்கம் ரங்கநாத பெருமாள் முன்பு ராமானுஜர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின் பாடலைப் பாடிவிட்டு வடுகா , நீயும் ரங்கநாதனின் கண்ணழகை பாரடா'' என்று சொன்னார்.
''என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே..." என திருப்பாணாழ்வார் பாசுரத்தை பதிலளித்து அவரையே பார்த்து ரசித்து வணங்கி கொண்டிருந்தார் வடுகநம்பி. என்னே குருபக்தி!.
ராமாநுஜருக்கு பால் காய்ச்சி அளிப்பது வடுக நம்பிக்கு பிடித்த முக்கிய வேலைகளில் ஒன்று.
ஒரு நாள், இராமானுஜருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் வடுகநம்பி. வாசலில் மேள தாளம் சப்தம் கேட்கிறது. நம்பெருமாள் திருவீதி ஊர்வலம் வருகிறார்.

“வடுகா, நம்பெருமாளை சேவிக்க வா” என்று ராமானுஜர் கூப்பிடுகிறார்.
''சுவாமி உம்முடைய பெருமாளை நான் சேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்காக நான் காய்ச்சும் பால் பொங்கி விடுமே. என் குருநாதருக்கு புரியும் பணிவிடை எனக்கு முக்கியம்.'' என்று பதில். வடுக நம்பியை பொறுத்தவரை ராமானுஜரே, அவருடைய நம்பெருமாள்.
ராமானுஜருடைய பாதங்களில் தனது இறுதி மூச்சை விட்ட பெருமை வடுக நம்பிக்கு உண்டு
இந்த வடுக நம்பியை நாம் இன்று நினைவில் கொண்டுவர நமக்கு உதவியவள் திருக்கோளூர் பெண் பிள்ளை.
''ஏனம்மா, எல்லோரும் இந்த க்ஷேத்ரத்தில் வந்து வசிப்பது ஒரு பாக்யம் என விரும்பும்போது இந்த ஊர்க்காரி நீ ஏனம்மா வேறு ஊர் போகிறாய்?'' என்று ஒரு கேள்வி கேட்டு விட்டார் ராமானுஜர் அவளிடம்.
''சுவாமி நீங்கள் கேட்பது ஞாயம். நான் என்ன வடுகநம்பியா?
ஆசார்யனிடத்திலோ, பெருமாளிடத் திலோ அவ்வளவு பக்தி கொண்டவளா? '' நான் வணங்ககும் என் தெய்வம் உங்களுக்காக காய்ச்சும் பால் பொங்கி விடும் என்பதால் வாசலில் நம்பெருமாள் தரிசனம் முக்கியம் இல்லை'' என்றவளா? ஒரு பக்தியும் இல்லாமல் நான் எப்படி இங்கு இருக்க முடியும்? என்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...