Saturday, May 23, 2020

ANANTHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்   J K  SIVAN 
                                                             
       
  6.   ஸ்வாரஸ்ய   இண்டர்வல்  கதைகள் 


நாட்கள் எல்லா யுகத்திலும் வேகமாகத்தான் ஓடி இருக்கிறது.  இதோ ராமருக்கு சீதைக்கும் தலை தீபாவளி என்று தசரதரை குடும்பத்தோடு  அழைத்து போக   மிதிலையிலிருந்து  ஜனகமஹாராஜாவின்  மந்திரி பிரதானிகள் சீர் செனத்திகளுடன் வந்துவிட்டார்கள். ஒரு படையாக  எல்லோரும்   அயோடத்தியிலிருந்து  மிதிலை  சென்றார்கள். 

எப்படி  ராமாயணத்தில்  தீபாவளி என்று புரியவில்லை.  கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது அல்லவோ  தீபாவளி. ராமருக்கு அடுத்த அவதாரம் தானே கிருஷ்ணன்?.  என்னவோ  வால்மீகி  தான் எழுதிய   ஆனந்த ராமாயணத்தில் அப்படி எழுதியிருப்பதால்  மேற்கொண்டு ஆராய்ச்சி தேவையில்லை.  ஏற்கனவே கைகேயிக்கு ரெண்டு மகன்கள்  பரத சத்ருக்னன் என்று ஏன் வரகவி  அ . சுப்ரமணிய பாரதியார்  விளக்கம் கொடுக்காமல் மொழி பெயர்த்தார் என்று கொஞ்சம் தயக்கம். நாம் கதை படிப்போம். நல்ல விஷயம் மட்டும் மனதில் கொள்வோம் என்று மேலே தொடர்ந்தேன்.    

மிதிலையில்   தடபுடலாக  ஏற்பாடுகள்,  உபசாரங்கள்.   அங்கே சந்தோஷத்துக்கு எதிராக சில சம்பவங்கள்   நடந்தது. 

சீதை ஸ்வயம்வரத்தில் ஏமாற்றமும்  ராமர், ஜனகன் மேல்  கோபம் கொண்ட   தோற்றுப்போன 
அரசர்கள் ஒன்று சேர்ந்து படையெடுத்து பிரம்மாண்டமாக  போருக்கு ஆயத்தமாகி,   தசரதர் ஜனகர்  ஆகியோர்  வருத்தம் கொள்ள, அவர்களை சமாதானம் செய்த ராமன்  தான் ஒருவனே போதும் அவர்களை வெல்ல என்று கிளம்பி விட்டான். கூடவே ப ரத லக்ஷ்மண சத்ருக்னன்  ஆகியோரும்  தேர்களில்  ராமனைத் தொடர்ந்தனர். 

  பரத சத்ருக்னர்கள் காயமுற்று  போரில் கீழே  மயக்கமாகி  வீழ.    ராமர் வாயுவாஸ்திரத்தை பிரயோகிக்க   சூறாவளியில் அடித்துச் செல்வதை போல  எதிரிகள் மூலைக்கொருவராக  தூக்கி எறியப்பட்டார்கள். மாண்டவர்கள் பலர்.   படுகாயமுற்றோர்  சிலர்.  மற்ற சேனை வீரர்கள் மீது மோகனாஸ்திரம் பிரயோகித்து அனைவரும் மயங்கி விழச்  செய்தான்   ராமன்.      பரத  சத்ருக்னர்கள்   மயங்கி விழுந்ததை கண்டு  ராமன் லக்ஷ்மணனை அழைத்து 

''லக்ஷ்மணா,   இங்கிருந்து  சற்று தூரத்தில்  முத்கல  ரிஷி ஆஸ்ரமத்தில் சஞ்சீவினி கொடி இருக்கிறது. அதை கொண்டு வா'' என அனுப்ப,  முத்கலர்  ஆஸ்ரமத்தில்  சமாதியில் இருந்ததால்  அவர் சிஷ்யர்களிடம் விஷயம் சொல்ல அவர்கள் ஒன்றும் சொல்லமுடியவில்லை. ராமனின் உத்தரவு படி சஞ்சீவினி கொடிகளை அறுத்து லக்ஷ்மணன் கொண்டு  வருகிறான். 

முத்கலர் சமாதியில் இருந்து மீண்டதும்  விஷயம் அறிகிறார்.  யார் லக்ஷ்மணன் என்று விசாரியுங்கள் என்கிறார் . தசரதர் ராம சகோதரர்கள் அனைவருமே  முத்கல முனிவர் ஆஸ்ரமம் சென்று வணங்குகிறார்கள்.  
ராமரை  உபசரித்து  வாழ்த்துகிறார் முனிவர்.

''மகரிஷி என் மகன் ராமனைப் பற்றி ஏதோ ஒரு கவலை என் மனதில் இருந்து கொண்டே  இருக்கிறது. என்னவென்றே தெரியவில்லை. தாங்கள் ஞான சக்தியால் அறிந்து சொல்லவேண்டும்''   

''தசரதா  என்னுடன் வா '' 

அருகே உள்ள துளசி வனத்தில் முத்கலர்  தனியாக அவனிடம்   ''தசரதா  ஸ்ரீ மன்  நாரயணனே உன் மகனாக பிறந்திருக்கிறார். பிருந்தையின்  சாபத்தால்  தண்டகாரண்யம் செல்வார். பிறகு உனக்குப்பிறகு ராஜ்யத்தை ஆள்வார் அவருக்கு இரு மகன்கள். அவர்கள் மூலம் வம்ச வ்ருத்தி ஆகும்.

''அடாடா,  பிரிந்தை யின் சாபம்  ராமனுக்கா?   யார் அவள்? எதற்கு சாபமிட்டாள்?''

 பிருந்தையின் கணவன் ஜலந்தராசுரன்.  பரமசிவனுக்கும் அவனுக்கும் நடக்கும் போரில் அவன் எளிதில் மரணமடையாத காரணம்  பிருந்தையின் சக்தி. அதை அழித்தால் தான் ஜலந்தராசுரன் அழிவான் என்று அறிந்து மஹா விஷ்ணு பிருந்தையை மயக்கி அவள் சக்தியை அழிக்கிறார்.  பிருந்தையை  முனிவராக  விஷ்ணு நெருங்கும்போது  வானரங்கள், ராக்ஷஸர்கள்  தேவர்கள்   துணை இருந்ததால் அவர்களையும் சபிக்கிறாள் .  ராக்ஷஸர்களாக வந்தது  விஷ்ணுவின்  காவலர்கள் ஜெயவிஜயர். அவர்கள் சாபத்தால் ராவண கும்பகர்ணனாகிறார்கள். என்னை  ஏமாற்றியதற்கு   பலனாக   உன் மனைவியை இந்த ராக்ஷஸர்களில்  ஒருவன்  ராவணன் தூக்கி  அபகரித்து தூக்கி செல்வான். நீ  தனித்து காட்டில் தவிப்பாய். ''

தசரதா,   இப்போது நடப்பது எல்லாமே   முன்னமே  தீர்மானிக்கப்பட்டு   நடப்பது  தான் .  ஸ்ரீமன் நாராயணன் உன் மகன்  ராமனாக இலங்கை சென்று எவராலும் அழிக்க முடியாத ராவணாதிகளை வென்று  சீதையை மீட்டு  ராஜ்ய பரிபாலனம் செய்வார். இது தேவ ரஹஸ்யம் . எனினும் தந்தையாக எதிரே நிற்பதால் உன்னோடு இந்த விஷயத்தை வைத்துக்கொள்.

''முத்கல மகரிஷி,  நான் தன்யனானேன்.  நான் என்ன பாக்யம் செய்தேன் , ஸ்ரீ மகாவிஷ்ணுவே என் மகனாக பிறக்க? மஹாலக்ஷ்மியை என் மருமகளாக என் வீட்டில் வர ? நான் என்ன புண்யம் செய்ததால் இந்த பேரதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது என்று சொல்வீர்களா?'' என்ற தசரதனுக்கு  முத்கல ரிஷி தொண்டையை கனைத்துக்கொண்டு சொல்கிறார்: 

ஸஹ்யாத்ரி  மலை அருகே கரவீர நகரத்தில் தர்மதத்தன்  எனும் வேத பிராமணர் விஷ்ணு பக்தர். சதா விஷ்ணு நாமங்கள், மந்த்ரங்கள் ஜபிப்பவர் .   ஒரு நாள்  விடிகாலையில்  கோவில் சென்று பூஜை செய்ய கிளம்பும் போது  எதிரே  ஒரு  கோரமான  ராக்ஷஸி  ஹா  ஹா என்று சிரித்துக்கொண்டு அவரை தாக்கி தின்பதற்கு வருகிறாள். கையில் இருந்த  பூஜை சாமான்களை அவள் மேல் போட்டுவிட்டு  துளசி ஜலத்தை விஷ்ணு பேர் சொல்லி அவள் மேல் தெளிக்க அவள் பாபம் நீங்கி ஒரு சாதாரண பெண்ணாக மாறி அவரை வணங்குகிறாள். 

''நீ யாரம்மா  உனக்கு ஏன் இந்த ராக்ஷஸி உருவம் வந்தது?'  என   தர்மதத்தன் கேட்கிறான். 

''ஐயா என் பெயர்  கலகை . பிக்ஷு எனும்  சௌராஷ்ட்ர தேச பிராமணர் மனைவி. நான் கணவனை மதிக்காமல் அவன் விருப்பத்துக்கு எதிராக எல்லாம் செய்தேன் .  என் கணவருக்கு என் மேல்  அதிருப்தி. ஏமாற்றம். கவலை.  பிக்ஷு குருவிடம் சென்றான்:

'குருவே, என் மனைவி இப்படி ஏறுமாறாக இருக்கிறாளே,  நான் எது சொன்னாலும் அதற்கு எதிர்மாறாக சொல்கிறாள், செய்கிறாளே ?'' என்ன செய்வேன்?

'உனக்கு எது வேண்டுமோ, அதற்கு எதிராக அவளிடம் செய்ய சொல், அவள் அதற்கு எதிராக செய்வாள். உன் விருப்பம் நிறைவேறும்.''

அதன் பிறகு பல காரியங்களை இப்படி சாதித்துக் கொண்டான் பிக்ஷு.  இப்படி   பொய்யாக வாழ்வது அலுத்து விட்டது பிக்ஷுவுக்கு. வேறு ஒரு நல்ல பெண்ணாக  கல்யாணம் செய்துகொள்ள  எண்ணினான்.  இதை எப்படியோ அறிந்த  நான் விஷத்தை உண்டு இறந்தேன் . எமனுலகு கொண்டு செல்லப்பட்டு எமதர்ம ராஜன் முன் நின்றேன்.  

எமன்  என்னை பார்த்து விட்டு ''  சித்ர குப்தா  இவள் ஏதாவது நல்ல காரியம் புண்யம் செய்தவளா சொல்? 
''இவள் சரித்திரம் முழுதும் பார்த்தேன் பிரபு.  கணவனுக்கு  எதிராக செயல்பட்டு, அவனை மதிக்காது, அவன்  சொல்லை எதிர்த்து வாழ்ந்தவள்.''

இவளை பிரேத சரீரத்தோடு  ஒரு பாலைவனத்தில் கொண்டு தள்ளு. மூன்று ஜென்மங்கள் பாபச்செயல்கள் புரிந்து வாடட்டும்'' என்று தண்டித்ததால்  வாடினேன்.   மூன்று ஜென்மங்கள் முடிந்து  ஒரு செட்டிப்பெண் உடல் கிடைத்தது. அதில் வாழ்ந்து  கிருஷ்ணவேணி எனும் இந்த நதி சங்கம பிரதேசத்தில் வாழ்ந்தேன்.  சில வைஷ்ணவ  பக்தர்கள்  அங்கு வந்ததால்   வெளியேறினேன்.  பசியால் வெகுநாள் வாடி உம்மைக் கண்டேன்.. உம்மை உண்பதற்கு துணிந்தேன் ''   என்று அந்த பெண் சொன்னாள் 

இனி என்னை ரக்ஷிக்கவேண்டும்  என்று அந்த பெண் கெஞ்ச  தர்மதத்தன் யோசித்தான். அந்த பெண்ணுக்கு என்ன பதிலளித்தான்?   என்பதோடு    முதல் காண்டமான  சாரகாண்டம் நான்காவது சர்க்கம்  முடிவதால் நாமும் தர்ம தத்தனை அந்த பெண்ணோடு நிற்கவைத்துவிட்டு திரும்புவோம். நாளை அவர்களை ஐந்தாவது சர்க்கத்தில்  சந்திப்போம்.. 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...