Wednesday, May 6, 2020

PARUTHTHIYUR KRISHNA SASTRI





ரஸ நிஷ்யந்தினி J K SIVAN
ராமன் யார் தெரியுமா?
மஹா பெரியவா போற்றிய பருத்தியூர் பெரியவா
போன கட்டுரையில் பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ணசாஸ்திரிகளின் ஆரம்ப குரு ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் அப்பா ஸ்ரீ சேங்காலிபுரம் வைத்யநாத சாஸ்திரி என்கிற முத்தண்ணா வாள் பற்றி குறிப்பிட்டேன். அவரது அடுத்த குரு பற்றி பிறகு சொல்கிறேன். அதற்கு முன் சில விஷயங்களை மறப்பதற்கு முன் அங்கங்கே செருகுகிறேன் . இது சினிமா கதை இல்லாததால் , கண்டினுயிட்டி, கிளைமாக்ஸ் தேடவேண்டாம். லைட்டில் எந்த பக்கமும் தித்திப்பு தான்.
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ராமாயண சாஸ்திரிகள் என்று தான் பெயர். அவர் மூச்சு பிரியும் வரை அவர் எண்ணம் செயல் எல்லாமே ராமா ராமா தான். எவ்வளவு தான தர்மங்கள், எத்தனை இடங்களுக்கு இந்தியா முழுதும் போக்குவரத்து இப்போது போல் இல்லாத காலத்திலேயே சென்று ப்ரவசனங்கள் நடத்தி இருக்கிறார். ஆயிரம் ரெண்டாயிரம் பக்த கோடிகள் (இப்போது கணக்குப்படி லக்ஷக்கணக்கானோர்) சிலையாக மணிக்கணக்கில் அம்ருத பானம் செவிவழியாக பருகியவர்கள். ராமாயணம் இப்போது போல் அரைமணி, முக்கால்மணி, ஒருமணி நேரம் அல்ல. வருஷக்கணக்கில் சொல்வார்கள். நடுநடுவே கோலாகலமாக கொண்டாட ஜனனம், பட்டாபிஷேகங்கள், கல்யாணங்கள் வரும். சீதா கல்யாணம், சுக்ரீவ பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகம் கடைசியில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் எல்லாம். சீர் வரிசைகள், ஆச்சர்ய சம்பாவனைகள், தோடாக்கள் , சால்வைகள், வேஷ்டி புடவைகள், அரிசி, பருப்புகள், நெய் ,எண்ணெய் முதலான வருஷாந்த்ர மளிகை சாமான், பொற்காசுகள், முத்து நவரத்ன மாலைகள் எல்லாம் குவியும். இது தான் ப்ரவசன கர்த்தாவின் வருஷாந்தர வரும்படி. அதை அப்படியே கோவில் கட்ட, புனருத்தாரணம் செய்ய, அன்ன தானம் செய்ய, வேத பரிபாலன, பாடசாலைக்கு என்று வாரி வழங்குவார்கள்.
என் தாய் வழி தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள் இப்படி வாழ்ந்த ஒரு கம்ப ராமாயண ப்ரவசன கர்த்தா. அவர் முன்னோர்கள் ஸ்ரீ ராமனைப் பாடியே வாழ்ந்தவர்கள். அருணாச்சல கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளை பாடி ஜமீன்கள், சமஸ்தானங்களில் சம்பாவனை, பரிசு பெற்று அதில் வாழ்ந்த குடும்பங்கள்.
நான் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் ''ரஸ நிஷ்யந்தினி'' ஸ்லோகங்களை எனக்கு தெரிந்தவரை தமிழில் விளங்கியதை கண்ணுற்ற பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரி வம்சத்தில் இப்போது அமெரிக்காவில் இருக்கும் அவரது கொள்ளுப்பேரன் பெயர்த்திகளில் ஒருவர் ஸ்ரீமதி சந்திரிகா ராமன் கெளஷிக் , என்னோடு தொடர்பு கொண்டார். நேரில் இன்னும் பார்த்ததில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பருத்தியூர் பாரம்பரியத்தை விடாது காத்து வளர்த்து ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளை பற்றிய நூல்களை வெளியிட்டு ஒரு அற்புத நூல் ஒன்று எனக்கு பரிசாக அளித்தார்.
''ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸர்வம் ராம மயம் '' எனும் அந்த புத்தகத்தில் அற்புத விஷயங்கள் பலவற்றை தேடிப்பிடித்து ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள். இந்த நூல் விற்பனைக்கல்ல. சாஸ்திரிகள் வாழ்க்கை, பருத்தியூரில் அவர் நிர்மாணித்த ஆலயம், அதன் பராமரிப்பு, அவரது ப்ரவசனங்கள் பற்றி, அவர் அடைந்த கபால மோக்ஷம் பற்றியும் சொல்கிறது. பருத்தியூர் குடும்பம் பெரிசு. நிறைய வாரிசுகள். ஒற்றுமையாக இந்த விஷயத்தில் ஈடுபட்டு ஸ்ரீ சாஸ்திரிகளின் (1842-1911) நூற்றாண்டு விழா மலராக இந்த புத்தகம் வெளிவந்தது பகவான் ஸ்ரீ ராமன் அனுக்கிரஹம், ஸ்ரீ க்ரிஷ்ணசாஸ்திரிகள் ஆசீர்வாதம்.
ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் முன்னோர்கள் சப்தரிஷிகளில் ஒருவரான பாரத்வாஜர் வழி வந்தவர்கள். கோத்ரம். வடமர்கள். ராமபக்த வம்சம். என் தாத்தா ஆத்ரேய கோத்ர ராம பக்த குடும்பம். தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டியர்களுக்கு பிறகு, மராத்தி ராஜாக்கள், நாயக்க மன்னர்கள் பக்தியை, சாஸ்த்ர, சம்பிரதாயங்களை, சங்கீதத்தை போற்றி வளர்த்தார்கள் என்பதால் பல இடங்களிலிருந்து தமிழகத்துக்கு சாஸ்திர , சங்கீத விற்பன்னர்கள் குடியேறினார்கள். இப்படி அவர்கள் தஞ்சம் புகுந்ததால், அவை தஞ்சாவூர், ''வந்து வசி'' த்ததால் வந்தவாசி, கோவில்கள் செல்வம் நிறைந்த காஞ்சி போன்ற புண்ய க்ஷேத்ரங்களில் அற்புத ஞானிகள், மஹான்கள் நமக்கு கிடைத்தனர். வடக்கே காளிதாசன் போன்றோர் கூட காஞ்சி பற்றி அறிந்து ''.... நகரேஷு காஞ்சி..'' என்று போற்றும் பெருமை வந்தது.
நர்மதை பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே வந்த பாரத்வாஜ கோத்ர வடமர்கள் வந்தவாசி காஞ்சியிலிருந்து தஞ்சாவூர் பக்கம் நகர்ந்தார்கள். கிருஷ்ண சாஸ்திரிகள் முன்னோர்கள் குடமுருட்டி கரையில், கோதண்டராமபுரம் என்ற கிராமத்தில், ( சேங்காலிபுரம் வழி) வாழ்ந்தார்கள். பருத்தியூரில் கோதண்டராமர் கோவில் சோழர்காலத்தில் இருந்ததால் கோதண்டராம புரமோ? என்று சம்சயம்.
பல தலைமுறைகள் காலப்போக்கில் விவரம் அறியப்படாமல் மறைந்துவிட்டன. அண்ணாவாள் சிவபக்தர், அய்யாவாள் விஷ்ணு பக்தர் என்று அந்த குடும்பத்தில் இரு சகோதரர்களை தஞ்சாவூர் மஹாராஜா அழைத்து பரிசளித்தார். அவர்கள் தலைமையில் தான் காஞ்சிபுரத்திலிருந்து காமாக்ஷி அம்மன் ஜாக்கிரதையாக திப்பு சுல்தான் ஆட்களிடமிருந்து சேதப்படாமல் தஞ்சாவூர் கொண்டுவரப்பட்டு பங்காரு காமாக்ஷி இன்றும் நமக்கு காட்சி தருகிறாள். ஏற்கனவே இது பற்றி ஒரு கட்டுரையில் எழுதினாலும் மீண்டும் விவரமாக ஒரு முறை எழுதுகிறேன்.அற்புதமான விஷயம். விவரமாக எழுதுகிறேன்.
பருத்தியூர் ராமர் தான், பருத்தியூர் பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளின் மூச்சு. 1842ல் காடகம்பாடியில் பிறந்தது முதல் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளிடமிருந்து அறிந்த ஒரே பாடம் ஸ்ரீ ராம சரித்திரம். மணலில் கோவில் குளம் கட்டி விளையாடும் காலம். விக்கிரஹங்கள் என்று சின்ன சின்ன பொம்மைகளை சப்பரம் கட்டி ஊர்வலம் இழுத்து வருவது, பூஜை அபிஷேகம் அலங்காரம் பண்ணுவது போல் தான் விளையாட்டுகள் அப்போதெல்லாம். BARBY DOLL பிறக்காத காலம். நானே விளையாடி இருக்கிறேனே.
கிருஷ்ணனுக்கு ஏழு வயதிலே உபநயனம். பனையோலை ஏட்டுச்சுவடியில் தான் எழுதுவது படிப்பது. குடும்பத்துக்கே இஷ்ட தெய்வமான ஸ்ரீ ராமனை நேரில் பார்க்க இளம் வயது முதல் ஆசை.
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை தரிசிக்க குடும்பம் ஒரு முறை போனபோது சிறுவன் கிருஷ்ணனுக்கு ரங்கநாதன் திருப்தி அளிக்கவில்லை
.''என்னடா கிருஷ்ணா யோசிக்கிறாய்? - அப்பா ராமேசேஷ சாஸ்திரி.
''''ராமன் மாதிரி இல்லையே, நாம் வணங்கும் ராமனை நேரில் பார்க்க முடியுமா?
''''ஆஹா நிச்சயம், விடாமல் பிரார்த்தனை பண்ணினால் தோன்றுவான்''
ஸ்ரீரங்கம் கடைத்தெருவில் ராமசேஷன் நண்பர் அருணாசலம் செட்டியார் பார்த்துவிட்டு குசலம் விசாரிக்கும்போது அவர் பலசரக்கு கடையில் குடும்பம் தேவையானவற்றை தேடுகிறது.
''கிருஷ்ணா இங்கே வா அழகான ராமர் பார்''
அண்ணா வெங்கு எதையோ பார்த்துவிட்டு கூப்பிட்டான்.அது ராமர் சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய களிமண் பொம்மை செட்.''
''அது வேணுமே'' ஏக்கமாக அதை பார்த்தான் கிருஷ்ணன். செட்டியார் தனியாக செட்டிலி ருந்து பிரித்து ராமரை மட்டும் தர தயாரில்லை. செட் வாங்க முடியவில்லை.
அன்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அப்பா ராமசேஷ சாஸ்திரி மனதில் கிருஷ்ணன் கேட்டது வட்டமிட ஒரு கனவு. ரங்கநாதர் தோன்றி
''ராமசேஷா, நீங்கள் குடும்பமாகவே ராம பக்தர்கள். உன் பிள்ளை கிருஷ்ணனை பற்றி கவலை படாதே. உன் ஊருக்கு அருகே சேங்காலிபுரம் இருக்கிறதே அங்கே வைத்தியநாத தீக்ஷிதரிடம் அவனை அனுப்பு''
ராமேசேஷனுக்கு தீக்ஷிதரையோ அவர் இருக்கும் இடமோ தெரியாதே. துல்லியமாக ரங்கநாதன் சொல்கிறானே.ஸ்ரீரங்கத்தை விட்டு அவர்கள் ஊருக்கு கிளம்பு முன் ஒரு அதிசயம். அதோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
கடைக்கார செட்டியார் ''சாஸ்திரி அய்யா '' என்று கத்திக்கொண்டு வருகிறார்
''என்ன செட்டியாரே ?''''
ஐயா உங்க பிள்ளைங்க ராமர் பொம்மை மட்டும் கேட்டுது. எனக்கு தனியா செட்டு பிரிச்சு கொடுக்க முடியல. மீதி செட் விக்காது. அந்த பையன் கிருஷ்ணன் கண்ணுலே ராமர் மேலே காந்தம் மாதிரி பார்த்த பார்வை என் மனசை தொட்டிச்சு. ''ரங்கநாதா இன்னிக்கு நல்லா வியாபாரம் நடந்தா, அந்த பையனுக்கு இந்த ராமர் பொம்மை செட்டை கொடுக்கணும்'' னு வேண்டிகிட்டேன். நம்ப மாட்டீங்க. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தவங்க நிறையபேரு என் கடைக்கு அதிசயமா கும்பலா வந்து என்னன்னவோ சாமான்லாம் வாங்கி அள்ளிக்கிட்டு போய்ட்டாங்க. கடையே காலியாயிடுச்சி. இந்த ராமர் செட் பொம்மைகளை தனியா எடுத்து வச்சிட்டேன். அதை தர தான் ஓடிவந்தேன்''.
''அட்டை பெட்டி கைமாறியது. ராமன் கிருஷ்ணனிடம் வந்தான். அதுவரை மணலில் ராமர் செய்து விளையாடிய கிருஷ்ணன், பின்னல் பருத்தியூர் பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளாக ராமர் கோவில் கட்டிய விவரம் அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...