Thursday, August 23, 2018

YATHRA VIBARAM



யாத்ரா விபரம் 19.8.2018 J.K. SIVAN





அசாத்திய சிவன்

கூவம் என்றால் இன்னும் பிறக்காத சிசேரியன் குழந்தை கூட சென்னையின் பிரதான சாக்கடை தானே என்று சொல்லும்படியாக நாம் மாற்றியமைத்த ஒரு அற்புத ஆறு தான் கூவம். அந்த பெயரில் ஒரு அழகான கிராமம் சென்னையிலிருந்து சென்றால், திருவள்ளூர் அரக்கோணம் பாதையில் உள்ளது. கூவம் நதியின் உற்பத்தி ஸ்தானம். ஒரு பெரிய குளமாக சுத்த நீரோடு காட்சி அளிக்கிறது.

கூவம் கங்கையை விட புனிதமானது என்றால் சிரிப்பவர்களுக்கு ரேஷனில் சர்க்கரையை கிடைக்காது. கூவ புராணம் ஸ்கந்தபுராணத்தில் வருகிறது. ஸநத்குமார சம்ஹிதை காளிகா காண்டத்தில் சிவனிடமிருந்து உற்பத்தியான நதி என்கிறது. துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் தமிழில் இதை எழுதியிருக்கிறார். கூவம் திருபுவனமாதேவி பேர் ஏரி என்று கூட பெயர் கொண்டிருந்ததாக சோழன் கல்வெட்டில் தெரிகிறது.

அருமையான மனித பிறவியை கடவுள் கொடுத்தாலும் அக்கிரமம் நிறைந்த அருவருப்பான ஜந்துவாக நாம் ஆகிவிடுவதில்லையா, அது போல் தான் இந்த அழகிய கூவம் நதி நம்மால் இப்படி ஆகிவிட்டதோ.சாக்கடையை பற்றி ஞான சம்பந்தர் பாடியிருப்பாரா? மூன்று பாடல்கள் மாடலுக்கு தருகிறேன்.

சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடந் திருவிற் கோலமே.

உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடந் திருவிற் கோலமே.

விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்
சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே

இருபது கி.மீ. தூரத்தில் திருப்பாச்சூர் வாசீஸ்வரர் ஆலயம் திருத்தணி சாலையில் உள்ளது. சென்னை பூந்தமல்லீ, சாரி, பூவிருந்தவல்லி சாலையில் பேரம்பாக்கம் போக சவீதா இன்ஜினியரிங் காலேஜ் பக்கம் திரும்பினால் கூவம் வரும். இந்த ஊர் சிவன் ஆலயம் 276 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 14வது.சென்னையை சுற்றி இருக்கும் பஞ்ச பூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலம்.

ஒரு க்ஷேத்ரம் போகவேண்டுமானால், நேரமோ, தூரமோ முக்கியமில்லை, மனம் ஒன்றே காரணம்.

இந்த க்ஷேத்ரத்தின் விசேஷம் சிவலிங்கம் -- தீண்ட திருமேனி. சிவாச்சாரியார்கள் லிங்கத்தை தொடாமல் அர்ச்சனை அபிஷேகம் செய்வார்கள். சிவனின் பெயர் திருபுராந்தகேஸ்வரர். திருவிற்கோல நாதர். அம்பாள் திரிபுர சுந்தரி, திரிபுராந்தகேஸ்வரி. அம்பாள் முன்பு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட க்ஷேத்திரம். அம்பாள் சிவன் இருவர் சந்நிதியும் கிழக்கு பார்த்திருக்கிறது.

வெளிப்பூக்கள் எதையும் ஸ்வாமிக்கு இங்கே அர்ச்சனை செய்வதில்லை. பிஞ்சிவாக்கம் என்கிற ஊரின் நந்தவனத்திலிருந்து வருகிற பூக்கள் மட்டுமே ஸ்வாமியின் அர்ச்சனைக்கு. ஒரு குச்சியால் பூக்கள் எடுத்து ஸ்வாமிமேல் அர்ச்சிப்பார்கள். கையால் தொடுவதில்லை. ஸ்வயம்பு லிங்கம். திருமஞ்சன அபிஷேக குழி என்று ஒரு கோவிலிலிருந்து அபிஷேக ஜலம் வருகிறது. அதை தான் ஆவுடையாருக்கு அபிஷேகம் செய்ய உபயோகிக்கிறார்கள். சிவன் தவத்தில் இருக்கிறார்.

நல்ல மழை வரும் என்பதற்கு அறிகுறி சிறுவன் வெண்மையாக ஸ்படிகம் போல் காட்சி தருவது. மழை பொய்த்து விடும் ஜாக்கிரதை என்று காட்ட சிவன் சிவப்பாக காட்சி அளிக்கிறார். இந்த அதிசயம் வேறெங்கும் இல்லை. சந்தனம் விபூதி தரிப்பதில்லை.

தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி போன்ற ராக்ஷஸர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்று தேவர்களை மக்களை வாட்டிவதைத்தபோது, சிவன் அவர்களை அழிக்க ஒரு அஸ்த்ரத்துடன் தேரில் கிளம்புகிறார். பூமி தேர், சூரிய சந்திரர்கள் ஸாஹக்ராம், ப்ரம்மா தேரோட்டி, மேருமலை வில், வாசுகி நாண் , விஷ்ணு தான் அம்பு.
ராக்ஷஸர்களை சம்ஹரிக்க கிளம்பிய சிவன் பிள்ளையாரை முதலில் நினைக்கவில்லை. தேரின் அச்சு முறிந்தது... அது நடந்த இடம் தான் அச்சு இறு பாக்கம், இப்போது அச்சரபாக்கம். அச்சு முறிந்து தேர் விழுந்த இடம் கூவம். . அச்சிறுத்த விநாயகர் இந்த ஆலயத்தில் இருக்கிறார்.

சிவன் தேரை விட்டு இறங்கி வில்லை ஊன்றி நின்ற இடம். வில்லின் அடி நுனி பூமியில் ஆழமாக பதிந்து நீர் ஊற்று பெருகியது. கூவம் ஆறு. கூபம் என்றால் வடமொழியில் ஆழமான கிணறு..நீரூற்று. கூபம் கூவமானது. சிவன் வில்லோடு நின்றதால் திரு வில் கோல நாதர். திருவிற்கோலநாதர். திருவிற்கோலம் எங்கே இருக்கிறது என்று அங்கே போகும்போது யாரையாவது கேட்காதீர்கள், கன்யாகுமரி பக்கம் கையை காட்டுவார்கள். தெரியாவிட்டால் கூட தவறாக அடையாளம் காட்டுவது நமது பண்பு. கூவம் என்றால் புரியும். பச்சை கலரில் பெரிய பெயர் பலகை இருக்கிறது.

திரிபுராந்தகேஸ்வரர் பற்றி ஒரு கதை உண்டு. தர்மசீலன் எனும் பிராமணன் சிவபக்தன். தன்னிடமிருந்து பொருள்களை எல்லாம் விற்று சிவனடியார்களை உபசரித்து ஆகாரம் வழங்கி ஏழையாக போனான். ஒன்றும் இல்ல நிலையில் எட்டு நாள் பட்டினி. அப்போது ஒரு சிவனடியார் வந்து ''ரொம்ப பசியாக இருக்கு ஆகாரம் கொடு'' என்கிறார். கூவம் தெருக்களில் சென்று யாசகம் கேட்டு ரெண்டு படி அரிசி வாங்கி மனைவி அதாஉ கஞ்சியாக்கி சிவனடியார் மனதார உண்டு வாழித்தி செல்கிறார். தர்மசீலனும் மனைவியும் மீதி கஞ்சியை பருக உட்காருகிறார்கள் அப்போது இன்னொரு வயதான சிவனடியார் வீட்டில் நுழைந்து உணவு கேட்க மீதி கஞ்சியை அவருக்கு அளிக்கும்போது பசி மயக்கத்தில் தர்மசீலன் சுருண்டு விழுகிறான்.

அந்த புது சிவனடியார் அவனை எழுப்பியபோது தர்மசீலன் பார்த்தது திருபுராந்தகேஸ்வரரை. அவனை ஆசிர்வதித்து இன்றுமுதல் என் ஆலயத்தில் உனக்கு ஒரு கலயம் என்றும் அக்ஷய பாத்திரமாக பசி தீர்க்கும் என்று அருள்கிறார்

சோழர்கள் காலத்தில் இந்த ஊரின் என்பர் மதுராந்தகநல்லூர், அப்புறம் த்யாகஸமுத்ர நல்லூர், 2ம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு இருக்கிறது.

ஆலயத்தின் சிற்ப வேலைப்பாடுகள் அபூர்வமானவை. அச்சிறுத்த விநாயகர், நடராஜர், ஆறுமுகர், தக்ஷிணாமூர்ததி, லிங்கோத்பவர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாலமுருகன், துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர் நவகிரஹ சந்நிதிகள் சிறந்த முறையில் சிற்ப சாஸ்திர விற்பன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டவை.

உத்சவமூர்த்தியாக சிவன் கையில் வில்லுடன் நிற்கிறார். எங்கும் காணமுடியாத சிவன். இந்த ஆலயத்தில் முதலில் திருபுரசுந்தரியை தொழுது விட்டு பிறகு தான் சிவனை தரிசிக்க வேண்டும். சிவனின் வலதுபக்கத்தில் அம்பாள் சந்நிதி கொண்டிருப்பது இன்னொரு விசேஷம்.
இந்த ஆலய குளத்தில் மீன்களோ தவளைகளோ இல்லை. ஆலயத்தின் அருகே ருத்ராக்ஷ மரம் இருக்கிறது.
.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...