Sunday, August 12, 2018

AHAM VEDHMI



ரஸ நிஷ்யந்தினி - ஒரு 200 வயது புத்தகம்
J.K. SIVAN
அயோத்தியில் எவருமே சந்தோஷமாக வாழ்ந்த காலம். இக்ஷ்வாகு குலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்திருக்கிறார்களாமே! தசரத மஹாராஜா வீராதி வீரன், சக்கரவர்த்தி, எவரும் வெல்லமுடியாத மஹா வீரர். அறுபதினாயிரம் வருஷம் ஆண்டவராமே. அடுத்த வாரிசு வந்துவிட்டதாம். முதல் பிள்ளை அவ்வளவு அழகனாம் ராமன் என்று பெயராம். மூன்று தம்பிகள் அவனுக்கு பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் . ஒவ்வொரு நாளும் திருவிழாவாகவே காட்சி அளித்தது. இன்று நேற்றல்ல பன்னிரெண்டு வருஷங்களாக. தசரதன் அவ்வளவு மகிழ்ச்சியில் இருந்தான். செல்வத்தை வாரி வழங்கினான். கொள்வார் இல்லாததால் கொடுப்பார் இல்லை என்பார் கம்பர். தானம் செய்வது புண்யம். ஆனால் தானம் செய்ய முடியாதே? ஆச்சர்யமாக இருக்கிறதே? தானம் செய்ய முடியாதா? என்ன சொல்கிறீர்கள். ஆமாமய்யா, யாருக்கு தானம் செய்வீர்? எல்லோரிடமும் எல்லாமே நிறைந்து இருக்கிறதே, எதை எவரிடம் பெறுவது??? இந்த நிலை அயோத்தியில்.

அயோத்தியில் ஒரு ரிஷி வருகிறார் என்று செயதி. சாதாரண ரிஷி அல்ல, கோபமே உருவான விஸ்வாமித்ரர்.அவர் தசரத மஹாராஜா அரண்மனைக்கு வந்துவிட்டார். தசரதன் ஓடோடிசென்று அவரை வரவேற்கிறான். வணங்குகிறான். தனது ஆசனத்தை விட்டு எழுந்து அவர் அருகே நிற்கிறான்.

கம்பீர ராஜரிஷி. கௌசிகன்.சகல வித உபசாரங்களையும் பெற்று விஸ்வாமித்ரர் மெதுவாக பேச்சை ஆரம்பிக்கிறார்.

''தசரதா, உன்னை பார்க்க எதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியுமா ?
''தாங்கள் பார்க்க விரும்பினால் நான் ஓடி வந்திருப்பேனே மகரிஷி.
''இல்லை உன்னிடம் ஒரு விஷயம் பேச வந்தேன்.
''தங்கள் சித்தம் என் பாக்யம் மகரிஷி சொல்லுங்கள் காத்திருக்கிறேன் ''
''தசரதா நான் காட்டில் ஒரு யாகம் நடத்தப்போகிறேன். சில ரிஷிகளும் என்னோடு அதில் பங்கு கொள்கிறார்கள். அந்த வனத்தில் சில ராக்ஷஸர்கள் நடமாட்டம் அதிகம், ரிஷிகளின் யாகத்தை கெடுக்க முயல்பவர்கள்.''
''ஓ அப்படியா, நான் என் சேனையை அனுப்பட்டுமா ''
சிரிக்கிறார் விஸ்வாமித்ரர். '' தசரதர் நீ பேசுவது குழந்தைப் பேச்சு. உன் மகன் ராமனை லக்ஷ்மணனோடு சேர்த்து என்னோடு அனுப்பு அது போதும்''
''மகரிஷி .... மகரிஷி...''
''என்ன தயங்குகிறாய் தசரதா.''
'' மகரிஷி ராமனும் லக்ஷ்மணனும் சிறுவர்கள் பதினாறு வயது கூட ஆகாத பாலகர்கள். எவ்வாறு அவர்கள் பயங்கர ராக்ஷஸர்களை சமாளிக்கமுடியும். அவர்களுக்கு பதில் நானே உங்களோடு வருகிறேன்.''
விஸ்வாமித்ரர் நினைத்ததை முடிப்பவர்.
'' உன்னால் முடியாததை உன் மகன் ஒருவனே முடிப்பவன். நீ அவனையே என்னோடு தயங்காமல் அனுப்பு.''
கலங்கிய தடுமாறிய வியர்த்துக்கொட்டிய தசரதன் சுற்று முற்றும் நீரில் மூழ்கியவன் உதவியை எதிர்பார்ப்பது போல் பார்க்கும்போது அவனுக்கு வசிஷ்டர் அருகே இருந்து தெம்பு கொடுக்கிறார்.
''தசாரதா, கொஞ்சமும் யோசிக்காதே, உன் மகன்கள் ராமனையும் லக்ஷ்மணனையும் விஸ்வாமித்ர ரிஷியோடு அனுப்பு, அவர் உன்னைவிட ஜாக்கிரதையாக அவர்களை பார்த்துக் கொள்வார்'' என்று ஊக்கமளிக்கிறார்.

அப்போது நிலைமையை புரிந்து கொண்ட விஸ்வாமித்ரர் தசரதனுக்கு ராமன் யார் என்பதை எடுத்துரைக்கிறார்.

''தசரதா, ''என்'' மகன் என்று நீ அறியும் உன் ராமன் யார் தெரியுமா? அவன் இந்த பிரபஞ்சத்துக்கு ''அப்பன்''
என்பது எனக்கு தெரியும்.

நீ அவனை '' சிறு வயது'' குழந்தையாக, சிறுவனாக பார்க்கிறாய். எனக்கு அவன் காலமே காணமுடியாத அனாதி பரமன் என்று தெரியும். அவனுக்கு வயதெது? வயதேது?''

''என் பிரார்த்தனையால் யோகத்தால், வேண்டுதலால் விரதத்தால் பிறந்த மகன் என்று நினைக்கிறாய், தசரதா, எனக்கு ல் அவன் இந்திராதி தேவர்களின் பிரார்த்தனையால் , அவர்கள் தவத்தால், மஹான்கள், யோகிகள் வேண்டுதலால் உனக்கு மகனாக பிறந்தவன் என்பது தெரியும்.

''ஏதோ கௌசலையிடம் பால் குடித்து, போஷாக்குடன் உணவளிக்கப்பட்டு வளர்ந்தவன் ராமன் என்று நீ நினைக்கிறாய். எண்ணற்ற முன்னோர்கள் விரதமிருந்து தவப்பயனாக, தேவர்களின் யாக பலனாக, விரத பயனாக பிறந்தவன் ராமன் என்பது எனக்கு தெரியும்.

''கோசலையின் மணி வயிற்றில் ராமன் பிறந்ததாக நீ எண்ணுகிறாய். அவள் கருவில் அவள் சுமந்தது இந்த பிரபஞ்ச ஜீவன்களை எல்லாம் '' என்று நீ அறிவாயா ?
நான் மேலே சொன்னது ஒரு இருநூறு வருஷ அற்புத நூலிலிருந்து . ''ரஸ நிஷ்யந்தினி'' என்ற 100 ராமாவதார 100 காரணங்களை ''அஹம் வேத்மி'' என்ற வார்த்தையின் அர்த்தமாக விஸ்வாமித்ரர் தசரதனுக்கு சொல்வது போல் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதி இருக்கிறார்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...