Wednesday, August 29, 2018

RASA NISHANTHIYAM



ரஸ நிஷ்யந்தினி -- J.K. SIVAN
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்

ராமன் யார் தெரியுமா? - 7

விஸ்வாமித்ரர் சற்று நிறுத்தினார். சிறிது நீர் பருகினார். எல்லோரையும் ஒரு தரம் பார்த்தார். அனைவரும் கண்ணாலேயே ''மகரிஷி இன்னும் சொல்லுங்கள்'' என்று கெஞ்சுவது போல் தெரிந்தது. தசரதர் அவர் கால்கள் அருகிலேயே அமர்ந்தார்.

தசரதன் கைகளால் வாய் பொத்தி விஸ்வாமித்ரரிடம் மெதுவாக சொல்கிறான்:

''மகரிஷி என் மகன் ராமன் என்ற நினைப்பு இப்போது புதிய பரிமாணம் பெற்றுவிட்டது . ராமனைப் பற்றிய மஹத்வம் நீங்கள் கூறும்போது என் செவிகளில் இன்பத் தேனாக பாய்கிறது. மேலும் மேலும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற ஆசை அதிகரிக்கிறது.''

''தசரதா , கேட்கும் உனக்கு மட்டும் அல்ல, சொல்லும் எனக்கும் அவனைப்பற்றி நினைக்க நினைக்க புது தெம்பு, உற்சாகம், சந்தோஷம் ஆறாக பெருகுகிறது. சொல்கிறேன் கேள்''

பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மனித உருவத்தில் மகரிஷி விஸ்வாமித்ரர் ஸமஸ்க்ரிதத்தில் மேற்கொண்டு ஆடிமாஸ காவேரியாக ப்ரவாஹிக்கிறார்.

61. '' ராமன் நம்மைப் போல ஒருவன் என்று நினைக்காதே. முற்றிலும் மாறுபட்டவன். நம்முடைய ஆத்மா, அங்கம் அவன்''

62. நன்றாக கல்வி கற்றவன் ராமன் என்று சொன்னால் போதுமா? உலகத்தில், இந்த பிரபஞ்சத்தில் ஞானம் என்ற உருவமற்ற ஒன்று ஒரு உருவம் எடுத்தால் அது தான் ராமன்.

63 ராமன் எங்கே என்றால் ''இதோ என்னருகே நிற்பவன், என்னெதிரில் உட்கார்ந்திருப்பவன்'' என்று சுட்டிக்காட்டி சொல்கிறாயே. ராமன் யார் தெரியுமா? ஒவ்வொரு ஜீவராசியிலும் இருந்து அதனின்றும் வேறுபடாதவன்.

64. ராமா, '' வா, போ, நில், உட்கார்'' என்று இதுவரை நீ அவனை வேறு ஒரு மனித உருவமாக எண்ணி பழகுகிறாய். என்னைப் பொறுத்தவரையில் ராமனை நான் ''நானாகவே'' பார்க்கிறேன். என்னில் அவன். அவனில் நம் போல் எண்ணற்றவர்கள்.

65. ராமன் படுக்கையில் படுத்திருந்தால் வேறெங்கும் அதே சமயத்தில் இருக்கமுடியாமல், நம்மைப் போல் அந்த படுக்கை அறையில் மட்டும் இருப்பவனா ? எங்கேயாவது உற்கார்ந்திருந்தால் அதே சமயத்தில் வேறே எங்கேயாவது தூரத்தில் போகமுடியாமல் அங்கேயே நம்மைப்போல் உட்கார்ந்திருப்பவனா? ராமன் ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுபவன் ஒரு இடத்தில் படுத்திருந்தாலும் பல இடத்தில் காணப்படுபவன் ராமன் என்று எனக்கு தெரியும்.

66. எத்தனையோ ராஜாக்கள், க்ஷத்ரிய வீரர்கள் ராமனின் நட்பை தேடுகிறார்கள் என்கிறாயே தசரதா . க்ஷத்ரியர்கள் மட்டுமா ? எனக்கு தெரிந்து சாதுக்கள், ஞானிகள், ரிஷிகள், அவனை வேதங்களில், தான தர்ம காரியங்களில் தேடுகிறார்கள், அறிகிறார்கள், காண்கிறார்கள். வேதம் சொல்வதை அறிந்து செய்தாலே அவன் தெரிவானே .

67. அதோ சில சிறுவர்கள் நிற்கிறார்களே அதில் கருநீலமாக, நீலமாக தெரிகிறானே அவன் தான் என் மகன் ராமன்'' என்கிறாயே தசரதா , ராமன் பொன்னிறத்தவன், ஸ்வர்ணமயமானவன் என்று நான் அறிவேன்.

68. ''அறியாத சிறு குழந்தை, பாலகன், அகன்ற தாமரை விழிகள் கொண்டவன்'' என்று கொஞ்சுகிறாயே தசரதா , உன் மகன் ராமனைப் பற்றி வேதங்கள் சொல்வதை ஞாபகப்படுத்தட்டுமா? அவன் கண்களின் அழகை, நிறத்தை, அகலத்தை எதனுடனும் ஒப்புமை சொல்ல முடியாது.

69. சாதாரணமானவன் உன் மகன் என்று நீ நினைக்கிறாய். இல்லை தசரதா , அவன் தெய்வீகன், அருவமானவன், உள்ளும் புறமும் தோன்றுபவன், இறப்பற்றவன். மாயையோடு சம்பந்தமில்லாதவன். நம்மைப் போல் ப்ராணன் மூச்சு விட அவசியமில்லாதவன். நம் ஞானம் அறிவுக்கு எல்லையுண்டு. அதை கடந்தவன் ராமன். தூயவன் , புனிதன் .

70. யார் ராமன் என்று யாரோ கேட்டதற்கு, ''ராமன் எனக்கு பிறந்த என் மகன்'' என்று பெருமையோடு மார் தட்டி சொல்கிறாயே. அவனிடமிருந்து தான் பிராணன், மனது, ஐம்புலன்கள், ஆகாசம், வாயு, ஒளிவகையறா, நீர், பிரபஞ்சத்தையே தாங்கி நிலை நிறுத்தும் சக்தி, பூமி, எல்லாமே பிறந்தவை.

புரிகிறதா? என்று சொல்லி பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி விஸ்வாமித்ரரைப் போல் கணீரென்ற குரலில் சொல்லி பிரசங்கம் செய்தபோது எத்தனை பேர் தசரதர்களாக அந்தக்காலத்தில், கிட்டத்தட்ட நூறு வருஷங்களும்மு முன்பு, தமிழ்நாட்டில் எங்கெல்லாமோ, ஆனந்தமாக கேட்டிருப்
பார்கள் என்று கற்பனை மனதில் ஓடுகிறது எனக்கு.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...