Thursday, August 23, 2018

NALADIYAR



நாலடியார் - J.K. SIVAN

நாலடியாரின் நீதி, உலக வாழ்வின், செல்வத்தின் நிலையாமை பாடல்கள் அநேக நண்பர்களை கவர்ந்துள்ளது என்று அறியும்போது திருப்தியாக உள்ளது. நல்ல விஷங்களை தேடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று ஒரு ஆறுதல் கிடைக்கிறது.

''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்'' என்ற P.B ஸ்ரீனிவாஸ் அருமையாக பாடிய பாட்டு நிறைய பேருக்கு பிடித்ததற்கு காரணம், அவரது குரல் மட்டும் அல்ல, கண்ணதாசனின் கருத்துக்கள், வாழ்வின் நிலையாமை பற்றிய உண்மையின் வெளிச்சம்.

இதோ நாலடியாரில் சமண முனிவர் என்ன சொல்கிறார் பாருங்கள். நிற்பதாக தோன்றுவது உண்மையில் நில்லாதது. ஒன்று சேர்ந்தது போல் கட்சி அளிப்பது வேறு பட்டது என்கிறார். அநித்தியம் அசுகம் லோகம் என்பதன் திரிபு. எதுவும் சாஸ்வதமானது அல்ல.

வாழ்நாள் மாறி மாறி சென்று கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக காலனும் நம் வீடு தேடி அழையா விருந்தாளியாக வருவான் என்று வார்னிங் கொடுக்கிறது இந்த பாடல்.
'நின்றன நின்றன நில்லா' என உணர்ந்து,
ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்
வந்தது வந்தது, கூற்று!உரை

சேதி வந்துவிட்டது. மன்னார்சாமி மண்டையைப் போட்டுவிட்டார் என்று. பல வருஷங்களாக பேசாமல் ஆவென்று வாயைப் பிளந்து, கழுத்தில் உணவுச்சாறு குழாய்வழியாக உள்ளே செல்ல, சட்டையைப்போட்டு அவனை உட்கார வைத்திருந்தார்கள். எதிர்பார்த்து பயந்த அந்த ஒருநாள் வராமலா போகும், வந்து விட்டது. ஓடுகிறார்கள் உறவினர் உற்றார் மற்றோர் எல்லாம் அவன் வீட்டுக்கு. அவன் பெருமை அருமைஎல்லாம் பேசி கன கச்சிதமாக அவனைத் தூக்கிக் கொண்டு காட்டில் புதைத்தோ எரித்தோ காரியம் முடிந்து விட்டது. பிறகு?

எல்லோரும் குளித்து சாப்பிட்டு, சாம்பாரில் உப்பு கொஞ்சம், வெண்டைக்காய் வேகவில்லை, என்று சொல்லி இன்னும் கொஞ்சம் வாழைக்காய் கேட்டு வாங்கி வயிறு நிரம்ப உண்டார்கள். இப்படி உண்டு, சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு (உண்டு உண்டு உண்டு) களிப்போரே, மன்னார்சாமி வீட்டு வாசலில் ''டொண் டொண் டொண்'' என்று அடித்த தம்பட்டம், நம் வீட்டு வாசலுக்கும் ஒரு நாள் வரப்போகிறது என்பது ஞாபகம் இருக்கட்டும் என்கிறது இந்த நாலடி பாடல்.
''கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற,
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும், மணம் கொண்டு, ஈண்டு,
'உண்டு, உண்டு, உண்டு' என்னும் உணர்வினான்-சாற்றுமே,
'டொண் டொண் டொண்' என்னும் பறை.உரை''

''ஆமாம். எனக்கு அம்மா அவள். என்னை பெற்று வளர்த்தாள். இப்போது இல்லையே. அவள் தாயைத் தேடிக்கொண்டு அவள் சென்று விட்டாள். அவள் தாய் தனது தாயைத்தேடிக்கொண்டு சென்றவள், இப்படியே ஒவ்வொரு தாயும் அவவளவள் தாயை தேடி சென்றவர்கள் தானே .... தேடி... ஓடி.. ஓடி ...

இவ்வுலகம் இப்படித்தான் நிறைய பேரை அளிக்கிறது, மறைக்கிறது... புரிந்து கொண்டு நிலையானவளை, அந்த பராசக்தியைத் தேடுவோமே..

''எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு,
தனக்குத் தாய் நாடியே சென்றாள்; தனக்குத் தாய்
ஆகியவளும் அதுஆனால், தாய்த் தாய்க்கொண்டு,
ஏகும் அளித்து, இவ் உலகு.உரை

இன்னும் நிறைய நாலடி படிப்போமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...