Sunday, August 5, 2018

FRIENDSHIP


நான் உன் ''நண்பேன்'' டா - J.K. SIVAN
இன்று நட்பு நாளாம் . நிறைய பேர் டெலிபோனில் பேசினார்கள். ஏராளமாக வாழ்த்துக்கள். ஒரு அன்பரை நேரில் பார்த்ததில்லை பெங்களூரிலிருப்பவர். பேசினேன்.ரொம்ப மன மகிழ்ச்சியாக இருந்தது. . அவருக்கு பாட்டு ரொம்ப என்னைப்போலவே பிடிக்குமாம். பாடினேன். பாடியபிறகு தான் யோசித்தேன். இனி என் நட்பை அவர் தொடர்வாரா? சந்தேகமாக தான் இருக்கிறது.

முக நூலில் நண்பர்கள் நாள்தோறும் பெருகுகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன அப்படி ஒரு ஈடுபாடு. நான் என்ன செய்துவிட்டேன். என் பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் ஐந்தாயிரம். இன்னும் என் நட்பு தேடுகிறார்கள் முகநூல் அவர்கள் உன் நண்பர்கள் கிடையாது என்று தடுக்கிறது. ஐந்தாயிரம் வரை தான் நண்பர்களாம். ஏனாம்? தெரியவில்லை. நண்பர்களே என் நட்பை விரும்புபவர்கள் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி (SREE KRISHNARPANAM SEVA SOCIETY FB GROUP) முக நூல் குழுவில் சேருங்கள். அதிலும் நான் தானே. அதில் அதிக பக்ஷம் என்று மூடி கிடையாது. இதுவரை எட்டாயிரம் சொச்சம் சேர்ந்து இருக்கிறார்கள். எத்தனைபேர் அதில் உண்மையிலேயே என் நண்பர்கள்???
ஏதோ சும்மாவா?

''நட்பு'' மனித இனத்தால் மட்டுமே அனுபவிக்க கூடிய ஒரு உயரிய அரிய வாய்ப்பு. நட்பு வயது, ஜாதி,மதம்,ஆண் பெண், மிருகம், பறவை என பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. கடவுளோடு கூட நட்பாக இருக்கமுடியும். கண்ணன் என் தோழன் என்று பாரதியார் பாடும்போது, கண்ணன் அர்ஜுனன் என் தோழன் என்கிறான். பாண்டுரங்கன் துக்காராம், நாமதேவுக்கு எல்லாம் தோழன் தான். ராமர் சுக்ரீவனை தோழனாக இல்லாமல் சகோதரனாக கூட பாவிக்கிறார். ஆகவே ஆசிரியர்கள் கூட தோழர்கள் தான். சமீபத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் ''பகவான்'' (ரொம்ப பொருத்தமான பெயர்) எங்கோ மாற்றலாகி விடுகிறார். அதிகாரிகளிடம் சென்று மாற்றல் உத்தரவை பெற்று அடுத்த ஊர் செல்கிறார். ஆனால் அவரை வழிமடக்கி அவரது ஆண் பெண் மாணவ மாணவிகள் போகக்கூடாது என்று மறியல் செய்து நடக்கும்போது அவர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். என்ன செய்யமுடியும் அந்த ஏழை வாத்தியாரால்? அதிகாரிகள் வரை விஷயம் சென்று அவர் மாற்றல் நீட்டிக்கப்பட்டது. இது உலகமே மகிழும் கொண்டாடும் ஒரு புனித நட்பு.

நினைக்கும்போதெல்லாம் என் மனதில் உடனே தோன்றும் சிலர் பற்றி சொல்லட்டுமா? பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியார் கணபதி சொல்லிக்கொடுத்த பிசிர் ஆந்தையார் அவர்களில் ஒருவர். பாண்டி நாட்டு ஆந்தையாருக்கு சோழ அரசன் கோப்பெருஞ்சோழன் புலவர்களுக்கு வாரி வழங்குபவன் என்று சேதி தெரிந்ததுமுதல் அவனை ஒரு முறை பார்க்கவேண்டும் என்று எண்ணம். அவர் ஒருநாள் ராஜாவைப் பார்க்க உறையூர் வரும்போது சோழன் வடக்கிருந்தான். ( வடக்கு நோக்கி உண்ணாவிரதம் மேற்கொண்டு மரணம் அடைதல்). ஆந்தையாரைப் பார்த்ததும் சோழன் சந்தோஷம் அடைகிறான். ஆனால் அவன் மேற்கொண்ட விரதம் அவனை வருத்தம் அடையச் செய்கிறது. ''அடடா நான் இறக்கும் வேளையில் வந்தாயே நண்பா. உன்னுடைய பாடல்களை கேட்டு மகிழ்ந்து நான் இனி எவ்வாறு பரிசளிக்க முடியும்'' என்கிறான். ஆந்தையார்,

''நண்பா உன் நட்பு உன் பரிசை விட எனக்கு சிறந்தது. நானும் உன்னோடு இங்கு வடக்கிருக்கிறேன்''. இருவரும் உண்ணா விரதமிருந்து மேலுலகம் செல்கிறார்கள் என்று கதை முடியும்.

சீதக்காதி என்ற ஒரு தர்மிஷ்டன் தனது நண்பன் புலவன் ஒருவனுக்கு தான் இறந்தபோதும் பரிசில் கிடைக்க வழி செய்கிறான் என்று ஒரு சுவாரஸ்யமான கதை கூட உண்டு.

ஆங்கில வாத்தியார் துரை வேலு முதலியார் டாமன் பிதியாஸ் என்ற ரெண்டு நண்பர்களைப் பற்றி மரத்தடியில் மேலே தூங்கு மூஞ்சி மரக் கிளைகளில் காக்கா கூட்டம் சத்தத்துக்கிடையே சொன்னதும் நினைவில் வருகிறது. அப்போது வேங்கடநாராயணா தெருவில் தி.நகரில் கூரைக்கட்டு பள்ளிக்கூடம் தான். மேல் நிலைப்பள்ளியின் ஒரே கட்டிடத்தில் ஆபிஸ், தலைமை ஆசிரியர் அறை மட்டும் தான்.
டாமன் பீதியாஸ் கதை அபாரமானது.. கிரீஸ் நகரில் டாமன் பிதியாஸ் என்று இரு நண்பர்கள். பிதியாசுக்கு வயதான அம்மா, கல்யாணம் ஆகாத இளம் தங்கை. பிதியாஸ் கடன் படுகிறான். கடன் கொடுத்தவன் ராஜாவிடம் பிராது கொடுத்து பிதியாஸ் சிறைப்படுகிறான். நாள் குறிப்பிட்டு அதற்குள் அவன் கடனைத் தீர்க்கவில்லையானால் அவனுக்கு சிலுவையில் மரணம். டாமன் பிதியாசைப் பார்க்க வந்தவன் அவன் நிலையறிந்து தவிக்கிறான். ஆத்ம நண்பனிடம் பிதியாஸ் தனது ஒரே குறை தன் தாய் சகோதரியை சாகுமுன் ஒருதரம் பார்க்க விருப்பம், ஆனால் முடியவில்லையே'' என்கிறான். டாமன் ராஜாவிடம் ஓடி கெஞ்சி பிதியாசை விடுதலை செய்யுங்கள். ஒரே ஒரு முறை அவன் தாய் சகோதரியை பார்த்து விட்டு வந்துவிடுவான். அது வரை அவனுக்கு பதிலாக என்னை சிறையிலடைத்து அவன் குறிப்பிட்ட நாளில் வரவில்லை என்றால் எ ன்னை சிலுவையில் அறையுங்கள்'' என்று வேண்டுகிறான்.

முதலில் மறுத்த ராஜா ஏதோ மனம் கொஞ்சம் இளகி அனுமதிக்க பிதியாஸ் கிராமம் செல்கிறான்.தாயைப் பார்த்து தங்கைக்கு மணமுடித்து விடைபெற்று தனது நண்பனை விடுவிக்க ஓடிவருகிறான். வழியில், காடு, மழை, வெயில், திருடர்கள், முள், ஆற்றில் வெள்ளம் எல்லாம் அவனை தடை செய்தும் எப்படியோ அந்த கெடு முடியும் சூரியாஸ்தமனத்துக்குள் சிறைக்கு ஓடி வருகிறான்.

''என்னடா முட்டாளே உன் நண்பனை நம்பி நீ சிறையில் மாட்டிக்கொண்டு இன்னும் அரைமணியில் உயிரும் இழக்கப்போகிறாய்'' என்று எல்லோரும் கேலி செகிறார்கள். டாமனுக்கு தெரியும். நண்பன் எப்படியும் வந்து விடுவான் என்று. டாமன் சிலுவையில் அறைந்து கொல்லப்படும் முன்னர் சில நிமிஷங்களில் பிதியாஸ் ஓடிவருகிறான்.

'' நில்லுங்கள் நில்லுங்கள் டாமனைக் கொல்லாதீர்கள். இதோ நானே வந்துவிட்டேன். என்னைக் கொல்லுங்கள்'' என்று கதறுகிறான். ராஜா வேடிக்கை பார்க்க வந்தவன் மனம் நெகிழ்ந்து. இதல்லவோ உண்மையான நட்பு என்று மெச்சி இருவரையுமே விடுதலை செய்து பரிசும் கொடுக்கிறான். அந்த காலத்தில் இப்படி ஒரு அருமையான கதை.

நட்பு என்பது ஒரு கிடைத்தற்கரிய அழகான புஷ்பம். நேசத்திலும், மனம் நிறைந்த அன்பினாலும் மலரும் விசித்திர அழகிய பொக்கிஷம். மனிதனுக்கு மட்டுமே உரித்தான பாக்கியம், இறைவன் அளித்த சிறந்த பரிசு. .

நட்பில் ''உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுதலுக்கு'' இடம் கிடையாது. பொய், அநியாயம், குறை, பொறாமை, இவற்றை அணுக வொட்டாத துல்லிய நிலை தான் சிறந்த நட்பு. வளரும் தன்மை கொண்டது. காலத்தை வென்றது. ஒருவன் சந்தோஷமாக இந்த உலகில் வாழ மிகவும் இன்றியமையாதது. உயிர் சக்தி என்று கூட சொல்வேன். ஒருவனது உண்மையான செல்வம் அவன் நண்பர்கள் குழாம் மட்டுமே. சமய சஞ்ஜீவிகள் உண்மையான நண்பர்கள். அரசியல் நட்பு முற்றிலும் மாறுபட்டது. அந்த பக்கமே பார்க்கவேண்டாம்.

'' உயிரைக்கொடுப்பான் யா அவன்'' என்று எவ்வளவு பெருமையாக குரல் உயர்த்தி புகழ்கிறோம் உண்மை நண்பனைப் பற்றி. இடுப்பு வேஷ்டி நழுவும்போது எப்படி கை தானாகவே அதைப் பற்றி இழுத்து மீண்டும் இடுப்பில் இருக்கக் கட்டிவிடுகிறதோ அதுபோல் நண்பன் 'என்னடா கஷ்டம் உனக்கு நான் இருக்கும்போது'' என்று உதவுவான். வள்ளுவர் இப்படித்தான் சிறந்த நட்புக்கு ஒரு உதாரணம் ஒன்றரை அடியில் கொடுத்திருக்கிறார்.

கிருஷ்ணன் அப்படிப்பட்ட ஒரு தூய நண்பன் அர்ஜுனனுக்கு, திரௌபதிக்கு, பீமனுக்கு, குசேலனுக்கு, எண்ணற்ற பக்தர்களுக்கு, இன்னும் எத்தனை எத்தனையோ பேருக்கு உதவியிருக்கிறான். பக்தியால் உண்டான நட்பு இது.

துர்யோதனனும் கர்ணனும் எப்படிப்பட்ட நண்பர்கள். உயிரையும் கொடுத்தவன் கர்ணன். அது தியாகத்தால் வளர்ந்த நட்பு.

நல்ல நண்பர்களை அறிந்து அவர்களைச் சேர்வது ஒரு வரப்பிரசாதம். சுயநலக் கலப்பு, சந்தர்ப்ப வாதம், என்ன கிடைக்கும் என்று தேடுதல், எல்லாம் இல்லாத அபூர்வ் பிறவிகள் இன்னும் கூட இருக்கிறார்கள். நட்பைப் பெறுவது ஒரு கலை. அன்பு என்கிற ஊற்றில் விளைவது. தானாகவே இருவரிடம் இயற்கையாக பிறப்பது. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டது. எல்லையற்ற வளர்ச்சி கொண்டது. மனநிலை ,எண்ணங்கள், விருப்பங்கள், கோட்பாடுகள், ஒன்றாகவே இருக்கும் சிலரென்ன பலரும் கூட நண்பர்களாகலாம். இதில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. பரிபூரண அன்பினால் ஏற்படுவது.

அகம்பாவம், தற்பெருமை நட்பை உடைக்கிறது. இக்குணம் கொண்டவர்கள் எவரோடும் நட்பாக இருக்க முடியாது. முகமூடி போட்டுக்கொண்டவனுடைய முகம் உண்மை உணர்ச்சியை காட்ட முடியுமா.

கஷ்டங்கள் என்றும் தொடர்வதில்லை. நட்பு என்றும் நிலைப்பது. வாழ்க்கையை ஒரு போராட்டமாக பார்க்கிறோம். ஒரு பந்தயம். இந்த பந்தயத்தில் எவன் சாமர்த்தியக்காரனோ, எவன் சக்தியுள்ளவனோ அவன் மட்டுமே தப்பித்து பிழைக்கிறான். பெரிய மீன் சின்ன மீனைத் தின்று உயிர் வாழ்கிறது. நண்பனாக சிலரைக் ''காட்டிக் கொள்வது'' தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதாகும். தந்திரம். சமயத்துக்கேற்ற வேஷம். நண்பன் துன்பத்திலும் இன்பத்திலும் பங்கு கொண்டவன். இதால் என்ன? இன்பம் பெருகும், துன்பம் குறையும்.



முன் கை நீண்டால் முழங்கை தானே நீளும் என்பதன் அர்த்தம் நிறைய உதவு, உனக்கு பல மடங்கு உதவி தானே வரும் என்பது தான். நட்புக்கு வயசு வித்தியாசம் கிடையாது. ஜாதி, ஆண் பெண் பாகுபாடு உண்மையில் இல்லை. நீண்ட கால நட்பு தொடர்ந்த இன்பம் அளிக்கிறது. ஒழுக்கம் கட்டுப்பாடு, நேர்மை, நம்பிக்கை சமரச மதிப்பு, இவை ஒன்றே நட்பை வளர்க்கும். சுதந்திரமாக இயல்பாக பழகுவது நட்பு. குற்றம் குறை காண்பதல்ல.க வொட்டாத துல்லிய நிலை தான் சிறந்த நட்பு. வளரும் தன்மை கொண்டது. காலத்தை வென்றது. ஒருவன் சந்தோஷமாக இந்த உலகில் வாழ மிகவும் இன்றியமையாதது. உயிர் சக்தி என்று கூட சொல்வேன். ஒருவனது உண்மையான செல்வம் அவன் நண்பர்கள் குழாம் மட்டுமே. சமய சஞ்ஜீவிகள் உண்மையான நண்பர்கள். அரசியல் நட்பு முற்றிலும் மாறுபட்டது. அந்த பக்கமே பார்க்கவேண்டாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...