Thursday, August 9, 2018

MANNARGUDI PERIYAVA





மஹா பெரியவா  போற்றிய  இன்னொரு பெரிய  ''பெரியவா'' --  J.K. SIVAN 

மகா பெரியவா என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. மன்னார்குடி பெரியவா????  தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள். தெரியாதவர்களும் கூடத்தான். இதோ தெரிந்து கொள்ளப்போகிறார்களே!

மகா பெரியவா ஒருவரை ''பெரியவா'' என்று சொன்னார், அழைத்தார், என்றால் அந்த ''பெரியவா'' எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும்?  அவர்தான் மன்னார்குடி பெரியவா.

மன்னார்குடி மஹா மஹோபாத்யாய  தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் ( 28.5.1815- 4.3.1903) தான் மன்னார்குடி பெரியவா.  பாரத்வாஜா வம்ச ஒரு வேத வியாசர்.  அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம்.  திருவாரூர்  கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா: மரகதவல்லி ஜானகி அம்மாள்  அப்பா:  மார்க்க ஸஹாய அப்பா தீக்ஷிதர். மன்னார்குடியில்  முதல் அக்ரஹாரத்தில்  குருகுலம் அமைத்து  ஆயிரக்கணக்கான வித்யார்த்திகளுக்கு  வேத சாஸ்திரம், அனுஷ்டானம்  கிரந்தம் எல்லாம் கற்பித்தார்.   வெளி மாநிலங்களிருந்தெல்லாம் வந்து கற்றார்கள்.  மாணவர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அநேகர் அளித்தார்கள்.   பிள்ளைகள் கற்பதில் ரொம்ப கண்டிப்பாக இருப்பார். கோபிப்பார். அதே சமயம் திரும்ப திரும்ப சொல்லித் தருவார்.  

ஒவ்வொருநாளும் வடக்கே  நடந்து  கைலாசநாதர் கோவில் அருகே தான் காவேரி ஸ்நானம்.  சிஷ்யர்கள் தெற்கே   மீனாட்சி அம்மன் ஆலய படித்துறையில் சென்று ஸ்னானம் செய்வார்கள்.  சிஷ்யன் பருத்தியூர் கிருஷ்ணா சாஸ்திரிகள் ஒருதடவை தர்க்கத்தில் விடை சொன்னதை  அவமரியாதை, கர்வம் என்று எடுத்டுக்கொண்டு தண்டித்தார். குருகுலத்தை விட்டு அனுப்பினார். கிருஷ்ணா சாஸ்திரி வெளியே சென்று ராமாயண ப்ரவசனங்கள் நடத்தினார்.

இதர சிஷ்யர்கள் மூலம் க்ரிஷ்ணசாஸ்திரியின்  பிரசங்கங்கள் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டு  தனது சிஷ்யனின் பிரசங்கத்தை நேரில் சென்று கேட்டவர் மகிழ்ந்தார். ராமனின் கல்யாண குணங்களை பற்றி பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்  கடல் மடை திறந்தாற்போல் பேசிக்கொண்டிருந்தார்.  அன்று ''ராமனின் பொறுமை'' பற்றி பிரசங்கம்.   ''என் கண்ணை திறந்துவிட்டது கிருஷ்ணன் பேச்சு ''   என்று அதிசயித்தார் சாஸ்திரிகள் .

பிரசங்கம் முடிந்து க்ரிஷ்ணசாஸ்திரிகள் தனது குருவந்திருந்ததை அறிந்து அவரை நமஸ்கரித்து பவ்யமாக கைகட்டி நின்றார்.

''அப்பா  கிருஷ்ணா, இன்னிக்கு  என் கண்ணை திறந்துட்டே. அடடா  ஸ்ரீ ராமனின் கல்யாணகுணங்களை பத்தி நீ பேசினது  அற்புதம். அதுவும் பொறுமையைப் பத்தி . அபாரம். நீ ஒரு மஹாநுபாவன். எத்தனையோ  ஜனங்களுக்கு நீ உன்னதமான சந்தோஷத்தை தரப்போறே. நாளையிலேர்ந்து மறுபடியும் வா. உனக்கு நிறைய இன்னும் சொல்லித்தரணும்''

இந்த நிகழ்ச்சி ராஜு சாஸ்திரிகளை மாற்றிவிட்டது. அவரிடம் இருந்த கோபம் மாயமாக மறைந்துவிட்டது.இறக்க குணம் நிறைந்த அமைதியான, பொறுமையான ஆச்சார்யனாகிவிட்டார்.

1864ல்  அப்பாவுக்கு  சோமயாகம் பண்ணினார். அப்பா சொல்படி அப்பாவின் சகோதரர் அப்பய்ய தீக்ஷிதர் பிள்ளை  நீலகண்ட சாஸ்திரியை  தத்து எடுத்துக்கொண்டார். இருவருமாககுருகுலம் நிர்வாகம் செய்தவர்கள். பல  சந்யாசிகள் கூட வந்து மாணவர்களாக சேர்ந்து வேத சாஸ்திரம் கற்றார்கள். அந்த குருகுலம் பிற்காலத்தில் சங்கரமடமாகியது.    இதற்குதவியவர் வேறு யாருமில்லை. பரமாச்சாரியார் தான். அந்த குருகுலத்தில் உருவான மஹான்கள்  சிலர் பெயர்களை சொல்கிறேன்:

பைங்காநாடு கணபதி சாஸ்திரி, நடுக்காவேரி ஸ்ரீனிவாச சாஸ்திரி, பழமானேரி சுந்தர சாஸ்திரி, கோஷ்டிபுரம் ஹரிஹர சாஸ்திரி, திருப்பதி வேங்கடசுப்ரமண்ய சாஸ்திரி. மல்லாரி ராமகிருஷ்ண சாஸ்திரி, 
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி, காசி ப்ரஹ்மானந்த ஸ்வாமிகள், பாலக்ரிஷ்ணானந்த  ஸ்வாமிகள்
ராமக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள், மஹாதேவ ஸ்வாமிகள்,  தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், மகாராஷ்டிரா ஸ்வாமிகள்,  சச்சிதானந்த ஸ்வாமிகள் , தென்னாங்குளம் வைஷ்ணவ, நீலகண்ட சாஸ்திரி,  யஞஸ்வாமி  சாஸ்திரி,  சுத்தமல்லி ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் யதீந்திராள்.

ஒருவரை  ''பெரியவாள்’ என சொல்வதானால்  அவர்  வித்வத்திலும், அன்பிலும், பண்பிலும்  தெய்வீகத்திலும், ஆன்மீகத்திலும் தவத்திலும் தியானத்திலும் சிறந்தவராக இருக்கவேண்டும்.  இதெல்லாமும், இன்னமும்  இன்னமும் கூட அதிகமாகவும் இருப்பதால்  தான்  நாம்  காஞ்சி முனியை '' மஹா   பெரியவா '' என்கிறோம். அவரே  இன்னொருவரை  ''மன்னார்குடி பெரியவா'' என்று சொல்லும்போது..     எவ்வளவு மரியாதைக்குறியவர் ராஜு சாஸ்திரிகள் ......!!! சேர்த்து ‘மன்னார்குடி பெரியவாள்’ என்றே அறியப்பட்டவர் மன்னார்குடி ஸ்ரீ ராஜு சாஸ்திரிகள்.

தாத்தாவிடம் சாமவேதம் கற்றார். அப்பாவிடம் காவ்யம், நாடகம் எல்லாம் கற்றார். பதினைந்து வயதில்              ஸம்ஸ்க்ரிதத்தில் எழுத படிக்க, பேச, கவிகள் இயற்ற திறமை பெற்றார். ஸ்ரீ நாராயண சரஸ்வதியிடம் மேற்படிப்பு.  ஸ்வயம்பிரகாச யதி களிடம் வேதாந்தம்.   மேல காவேரி சின்னண்ணா தீக்ஷிதரிடம்  மஹா பாஷ்யம்  கும்பகோணம் ஸ்ரீ ரகுநாத சாஸ்திரிகளிடம் மீமாம்சம் பாடம் பெற்றார்.


1887ல்  பிரிட்டிஷ் ராணி விட்ட்டோரியாவின் தங்கவிழா.  மஹாமஹோபாத்யாய பட்டம் கொடுக்க ராஜு சாஸ்திரிகள் பேர் தேர்வு  ஆனது. டில்லிக்கு கூப்பிட்டார்கள்.  தனது  நித்ய கர்மாநுஷ்டானம், பூஜைகள் தடை படக்கூடாது என்று போகமாட்டேன் எனக்கு பட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இந்திய கவர்னர் ஜெனெரல் தஞ்சாவூர் கலெக்டரை அழைத்து அவர் நேரில் வந்து பட்டத்தை அளித்ததால் பெற்றுக்கொண்டார்.

மஹா பெரியவா  கூட்டிய  அத்வைத   மாநாடுகள், சபைகளில் பிரதம பண்டிதராக பங்கேற்றவர் மன்னார்குடி பெரியவா.

ராஜு சாஸ்திரிகள் 30 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். பல ஆசிரியர்களுக்கு தனது அனுபவங்களை கொடுத்திருக்கிறார். வேத சாஸ்த்ர , ஹிந்து நீதி நெறி விஷயங்களில் வழி காட்டியாக இருந்திருக்கிறார். 
அவர் எழுதிய நூல்களின் பெயர்கள்
சத் வித்யா விலாசம்,  வேதாந்த வாத சங்கிரஹம் , உபாதிவிசாரம், ப்ரம்ம வித்யா தரங்கிணி வியாக்யானம் நியாயேது சேகரம், ஆடவைத்த சித்தி,  சாம ருத்ர சம்ஹிதா பாஷ்யம், சிவா தத்வ விவேக தீபிகா,  சிவ மஹிமா விவேக தீபிகா,  ஸ்துதி சிவ மஹிமா ஸ்துதி வ்யாக்யானம், புருஷார்த்த ப்ரபோத ஸங்க்ரஹம், துர்ஜனோக்தி நிராசம்,  காவேரி நவரத்னமாலிகா,  தியாகராஜஸ்த்வம் , தம்பரபரணீஸ்த்வம்,  காவேரிஸ்த்வம்,  தீக்ஷித நவ ரத்னமாலிகா,  தீக்ஷிதவம்சாபரணம் .

அவருடைய சிஷ்யர்கள் பைங்காநாடு கணபதி சாஸ்திரி,  பருத்தியூர் க்ரிஷ்ணசாஸ்திரிகள் ஆகியோர்  தங்கள் குருவை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். 

காலம் சென்றது.  விருத்தியாப்பியம் மன்னார்குடி பெரியவாளையும்  விடவில்லை.  1903ல்  88 வயது.
உடம்பு ரொம்ப க்ஷீணமாகிவிட்டது.  சுயமாக எழுந்திருக்க  நடக்க முடியாத நிலை.  அவர் மருமகள் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் .

எனக்கு  பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி ப்ரவசனங்களை கேட்கவேண்டும் போல் இருக்கிறதே''   என்பார்.
செய்தி கிருஷ்ண சாஸ்திரியை எட்டியது.  எவ்வளவு  குரு பக்தி  ஸ்ரத்தையான சிஷ்யன் பாருங்கள், கிருஷ்ணா சாஸ்திரிகள் உடனே புயலாக மன்னார்குடி ஓடினார்.  சிலமாதங்கள் அங்கேயே தங்கி குருவுக்கு முன்னால் அமர்ந்து  பிரத்தியேகமாக அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும்நண்பர்கள், சிஷ்யர்களுக்கு  மட்டுமாக   அவருக்கு பிடித்த ராமாயண ப்ரவசனங்கள் புரிந்தார்.  மன்னார்குடி பெரியவாளுக்கு பரம சந்தோஷம். ஆசிர்வதித்தார். 

மன்னார்குடி பெரியவா,  மார்ச் 4, 1903அன்று   88 வயதில் விதேக முக்தி அடைந்தார். நாடு நகரம் முழுதும் அவரது மறைவுக்கு வருந்தியது. 

எனக்கு ஒரு அதிர்ஷ்டம் கிட்டியது. சமீபத்தில்  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பற்றி எழுதியதில் ஒரு அபூர்வ மனிதர் நண்பராக கிடைத்தார். ஸ்ரீ சுந்தரராமமூர்த்தி, பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் கொள்ளு பேரன்,  இப்போது அவருக்கு  75-76 வயதாகிறது. நான் இன்னும் நேரில் சென்று பார்க்க நேரவில்லை. விரைவில் சந்திப்பேன். அவர் சமஸ்க்ரித விற்பன்னர், தங்க மெடல், கோப்பைகள் பெற்றவர். பருத்தியூர் வம்சமாயிற்றே. 
ஸ்ரீ வித்யா உபாசகர், 45-50 வருஷங்களாக தினமும் லலிதா ஸஹஸ்ரநாம பூஜை, நவாவரண பூஜை செய்பவர். கிட்டத்தட்ட  ஆறு ஏழுமணிநேரம் ஆகிறதாம். பம்பாயில் உத்யோகம் பார்த்தவர். கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய  ராமன் பற்றிய சிறு ஆங்கில புத்தகம் ஒன்று அனுப்பினார். விரைவில் தமிழில் அந்த அற்புத புத்தகத்தின்  விவரம் கிடைக்கும். பகவான் ராமன் ஸ்ரீ க்ரிஷ்ணனோடு சேர்ந்து அருள் புரியட்டும்.

4 comments:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...