Tuesday, August 7, 2018

ARUPATHTHU MOOVAR



அறுபத்து மூவர்    J.K. SIVAN 



மூர்த்தி நாயனார் 
              இனி  அடுத்த பாண்டியன் நீயே 


இன்று நான்  எனது அடுத்த அறுபத்து மூவர் தொகுப்பில் மூர்த்தி நாயனார் பற்றி எழுத அமைந்ததும் அந்த ஈசன் செயலே.

நமது  தேசம் எத்தனையோ அரசர்களை அரசாங்கங்களை அனுபவித்து விட்டது.  வெளி தேசங்களிலிருந்து வந்து நம்மை ஆண்டவர்கள் அவர்களது கலாச்சாரம், மதம் ஆகியவற்றை இங்கே நிறைய கலந்து விட்டு சென்றார்கள்.  நமது தேசத்திலேயே  அநேகர் சக்தி உள்ளவர்களாக தோன்றி ஒற்றுமை இன்றி தம்மை தாமே அழித்துக் கொண்டவர்களும் உண்டு. அவர்களில் சிலர் தாம் அனுசரித்த மதத்தை ஆதரித்து  ஹிந்து சனாதன தர்மத்தை முற்றிலும் அழிக்கவும் முயன்றும் அந்த முயற்சி இன்றுவரை பயனளிக்கவில்லை. அளிக்காது.


அப்படி நமது தேசத்திலேயே பிறந்து நம்மை ஆண்ட  அரசர்கள், அரசாங்கங்களில்  சில தமது போக்கில் பலாத்காரத்தை செயல்படுத்தி   ஆன்மீகத்தை, பக்தர்களை,  கடவுள்களை,  அவதூறாக தூற்றி,  துன்புறுத்தும்போது  நாட்டு மக்கள்  சக்தியற்று  துன்புற்ற காலமும் உண்டு.  ஹிந்து கோவில்கள் புறக்கணிக்கப்பட்டன. அவற்றை ஆக்கிரமித்து நெடுங்கால பாரம்பரிய சொத்துகள் மறைந்தன. விகிரஹங்கள் மண்டபங்கள் ஆலயங்கள் நொறுக்கப்பட்டன. அராஜகம் தலைதூக்கியபோதெல்லாம் ஆன்மீக மனங்கள் இறைவனை கண்ணீர் மல்க வேண்டின: 

'' இதுவும் உன் செயலா?   நீயே  இதற்கு ஒரு வழி செய்யவேண்டும்'' .   வேண்டுதல் பலனளித்தது. அரசன் அன்று  கொல்வான்  தெய்வம் நின்று கொல்லும்''   என்பது நிரூபணமானது.  இதை மனதில் சரியாக புரிந்துகொண்டு  லே செல்வோம்.

பாண்டிய நாட்டில்  மதுரையில் ஒரு வணிகர் மூர்த்தி நாயனார். அறுபத்து மூவரில் ஒருவர். சிறந்த சிவபக்தர். மதுரை சுந்தரேஸ்வரர் மீது அளவற்ற பக்தியும் பாசமும் கொண்டவர்.    தனக்கென ஒரு சேவையை மேற்கொண்டார். இதுவரை எவரும் செய்யாத ஒரு சிறந்த சேவை.  தினமும் தானே  சந்தனக் கட்டையை கல்லில் அரைத்து சந்தனம் தயாரித்து சொக்கநாதனுக்கு  சந்தன காப்பு  கமகமவென நறுமணத்தோடு கண்ணைக்கவர அவன் அருள் பாலிக்க வேண்டும் என்ற முடிவு. அந்த திருப்பணியை  விடாமல் புரிந்துவந்தார்.

சில காலம் சென்றது.  பாண்டிய நாடு போரில் கர்நாடக வடுகமன்னன் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள முடியாமல் தோற்று ஆட்சி மாறியது.  வடுகன் ஹிந்து மதத்தை வெறுப்பவன். சமணமதத்தை பின் பற்றுபவன். சொக்கநாதர் கோவில் மற்றும் அநேக ஆலயங்கள் பராமரிப்பு நிர்வாகம் இழந்தன.  ஹிந்து சனாதன ஆஸ்திகர்கள் அவமதிக்கப்பட்டு துன்புறுத்த பட்டார்கள்.  மூர்த்தி நாயனாரும் தப்பவில்லை. 

''யார் அந்த மூர்த்தி நாயனார் ?  அவனுக்கு எவரும் சந்தனக்கட்டைகள் தர கூடாது.''  அரசன் ஆணையிட்டான். 

எங்கெங்கோ தேடியும் சந்தனக்  கட்டை கிடைக்கவில்லை.

''சுந்தரேஸ்வரா உன்னை எப்படி நான் சந்தனக்காப்பு இல்லாமல் காண்பேன். எங்கும் சந்தனம் இல்லை யென்றால் ஒரே வழி,  என் உடலையே சந்தனக் கட்டையாக அரைத்து என் பணியை தொடர்கிறேன்'

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்  சந்தனக் கல் முன்னே நின்ற மூர்த்தி நாயனார்  தனது முழங்கை யை  கல்லில் தேய்த்து சந்தனம் போல் அரைக்கத  தொடங்கினார்.  வலியை லக்ஷியம் பண்ணவில்லை.  முழங்கை சதை தேய்ந்து பிய்ந்து எலும்பு தேய ஆரம்பித்தது. விடவில்லை. ரத்தம் பெருக்கெடுத்து  சந்தனத்திற்கு பதிலாக குங்குமகுழம்பு  உருவாகியது.   

''நிறுத்து''

சொக்கநாதர் எதிரே நின்று   கண்கள் தாரையாக நீர் வார்க்க  தனது கை எலும்பை தேய்த்து கொண்டிருந்த மூர்த்தி நாயனாரின் கையை தடுத்தார். கண் திறந்த நாயனார்  கதறினார்:

''சொக்கேசா,  என்னை என் தடுத்தாய்?' நான் எதனால் என் எலும்பை தேய்த்தேன்.  உனக்காக சந்தனக்  கட்டை எங்கும் கிடைக்காமல் தானே. ஏன் ?  ஒரு  அராஜக பக்தியற்ற அரசனால் தானே  நாட்டில் அனைவரும் துன்பமடைகிறோம்.  ஏன் எங்களை இப்படி சோதனைப் படுத்தினாய்?  மீண்டும்  சைவம் தழைக்காமல் போய்விடுமோ?  உனக்கு சேவை செய்ய எவரும் இனி கிடையாதோ?  ''

''மூர்த்தி. கவலை கொள்ளாதே, இனி இந்த பாண்டியநாடு உன் வசமே ஒப்படைக்கப்படும். நீயே  பாண்டிய னாகி நல்லாட்சி புரிவாய்''   புன்சிரிப்போடு சுந்தரேஸ்வரர் மறைந்தார். 

''பகவானே,   நான் அரசனா? என்ன சோதனை இது ?'' 

மூர்த்தி நாயனார் கை பழையபடியாகியது.. ஒரு அதிசயமும் காத்திருந்தது.

அன்றிரவே சமண அரசன் திடீரென்று மரணமடைந்தான். மந்திரி பிரதானிகள் கலந்தாலோசித்து பாரம்பரிய வழக்கப்படி  பட்டத்து யானையின் கண்ணை கட்டி, தும்பிக்கையில்  மலர் மாலை கொடுத்து  அது எவர் கழுத்தில் மாலையை விடுகிறதோ அவரே அடுத்த அரசர் என்பது முடிவானது.   ஒரு நல்ல நாளில் கண் கட்டப்பட்டு மலர் மாலையுடன் யானை  மேளதாளங்களுடன்  மக்கள் மந்திரி பிரதானிகள் சூழ  புறப்பட்டது.
எங்கெல்லாமோ சுற்றி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை அடைந்தது.  வாசலில் அன்று வழக்கப்படி மூர்த்தி நாயனார் கண்களில் நீருடன் சந்தனம் அரைக்க வழியின்றி மலர் மாலைகளுடன் ஆலயம் சென்றபோது   எதிரே கூட்டத்தில் ஒரு யானை ஆலயம் நோக்கி வருவதை கண்டு  ஓரமாக ஒதுங்கி நின்றார்.  யானை நேராக மூர்த்தி நாயனாரை  நோக்கி வந்தது. தும்பிக்கையை  உயர்த்தி மலர்மாலையை அவர் கழுத்தில் சூட்டியது.  அவரைத் தூக்கி  தன் மேலே அமர்த்திக் கொண்டது.  எல்லோரும்  வியந்தார்கள்.  

''இப்படி ஒரு நல்லவர் பக்தர் இனி நமக்கு அரசர்'' என்று மகிழ்ந்தார்கள். மந்திரி பிரதானிகள் நாயனாரை வணங்கி ''மஹாராஜா நீங்கள் பதவி ஏற்று இந்நாட்டை ஆளவேண்டும் எங்களை ரக்ஷிக்க வேண்டும்'' என்று கெஞ்சினார்கள். 

''சொக்கேசா,   இதுவும் உன் திருவிளையாடலா. நீ சொன்னதை நிறைவேற்றி விட்டாயா.  சரி. உன் ஆணையை ஏற்கிறேன்.  மந்திரிகளே , பிரதானிகளே, நான் அரசனாக வேண்டுமானால் ஒரு நிபந்தனை''

''அப்படியே மஹாராஜா.  தாங்கள் கட்டளையை ஏற்கிறோம் ''

''இனி பாண்டியநாடு மீண்டும் சைவ ஒளி, ஒலி பெறவேண்டும். எங்கும் பக்தர்கள் நிம்மதியாக வழிபட வசதிகள் வேண்டும். ஆலயங்கள் நன்றாக பராமரிக்கப்படவேண்டும்.  நல்லவர் கண்காணிப்பில் இயங்கவேண்டும். நான் தைல சுகந்த வாசனை திரவியங்களோடு அபிஷேகம்  ஏற்கமாட்டேன். திருநீறு ஓன்றே அணிவேன். எனக்கு  ராஜாவின் மணிமகுடம் வேண்டாம். ஜடாமகுடம்  ருத்திராக்ஷம் என்  உடை.  ''

பாண்டியனது  மூர்த்தி நாயனார் என்ற பாண்டிய ராஜாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று எங்கும்  பக்தி மிளிர்ந்தது. மக்கள் அனந்தமாக தெய்வ பக்தியுடன்,   மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்பெற்று நீண்டகாலம் வாழ்ந்தார்கள்.  ஒரு நாள் சிவன்  மூர்த்தி நாயனாரை தன்னுடன் கைலாசத்தில் இருத்திக் கொண்டான்.

  




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...